தீபாவளிக்கு விஜய் படமும் வருது!

தீபாவளிக்கு விஜய் படமும் வருது!  

இது என்ன புதுக்கதை என்கிறீர்களா... விஜய் - மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் டீசரை வரும் தீபாவளியன்று வெளியாகிறது.

தலைவா படம் வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தாலும், அதில் விஜய் ரசிகர்களுக்கே திருப்தியில்லை. எனவே ஜில்லாவை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

நேசன் இயக்கும் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக விஜய்-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். பூர்ணிமா பாக்யராஜ், சூரி, மங்காத்தாவில் நடித்த மகத் ஆகியோரும் உள்ளனர்.

அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல், குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள ஜில்லாவுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

பாடல்கள் மட்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியிடத் திட்டமிட்டுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ்.

இந்த தீபாவளிக்கு அஜீத் படம் மட்டும் வருகிறதே என்ற ஆதங்கத்திலிருந்த விஜய் ரசிகர்களுக்கு, விஜய் பட டீசர் அதே நாளில் வெளியாவது மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

 

உத்தம வில்லன்... கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால்!

உத்தம வில்லன்... கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால்!

ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரிமாண்டமாக தயாரிக்கிறது.

நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் தமிழில் முதல் முறையாக இயக்கும் படம் இது. ஏற்கெனவே கமலை வைத்து கன்னடத்தில் இயக்கிவிட்டார் ரமேஷ் அரவிந்த்.

படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால் என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் காஜல் என்பது நினைவிருக்கலாம்.

ஏன் இந்த மாற்றம்?

"முதலில் அவர்கள் தேதி கேட்டது செப்டம்பரில். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் இப்போது படம் நவம்பர் - டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்," என்கிறார் காஜல்.

 

பவர் ஸ்டார் சீனிவாசன் முன் ஜாமீன் மனு!

பவர் ஸ்டார் சீனிவாசன் முன் ஜாமீன் மனு!

மதுரை: தவறான எண் கொண்ட டாடா சுமோ விற்ற வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமான டிராக்டரின் பதிவு எண்ணை, டாடா சுமோ காரின் பதிவெண் எனக் கூறி விற்பனை செய்திருப்பதாக திருத்தங்கல் போலீஸார் 2007 மே 30-ல் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

ஜோதிலிங்கம் என்பவர் டாடா சுமோ காரை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு விற்றதாகவும் பிறகு அந்த கார், பாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால், பவர் ஸ்டார் சீனிவாசனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பவர் ஸ்டார் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

 

ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்!

ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்!

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்.

தலைவா படப் பிரச்சினைக்குப் பிறகு விஜய்யின் இமேஜ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலைக் குறிவைத்து இயங்கிய அவருக்கும் அவரது மக்கள் இயக்கத்துக்கும் இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பிறந்த நாள் மற்றும் ரசிகர் மன்ற விழாவை நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி. போட்ட பந்தல் பிரிக்கப்பட்டது. அடுத்து தலைவா படத்தையே வெளியிட முடியவில்லை.

இந்த அளவு வெளிப்படையாக சிக்கலில் சிக்கினாலும், எதையும் செய்ய முடியாமல், சினிமா நூற்றாண்டுவிழாவுக்குப் போய் முதல்வரைப் புகழ்ந்துவிட்டு வந்தார் விஜய்.

இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரைச் சந்திக்க நேரம் கேட்டு நச்சரித்தார்களாம்.

தமிழகத்தில் அந்தச் சந்திப்பை நடத்தினால் சிக்கல் என்று நினைத்த விஜய், முதலில் தனது ஜில்லா பட ஷூட்டிங்கை ஆந்திராவுக்கு மாற்றியவர், அங்கு வைத்து சில நிர்வாகிகளை மட்டும் வரவழைத்து ஆலோசனை நடத்தினாராம்.

இந்த நிலை நீடித்தால் நம்மை கேலிப் பொருளாக்கிவிடுவார்கள்.. ஏதாவது செய்தாக வேண்டும் என மன்ற நிர்வாகிகள் கூற, நிச்சயம் செய்யத்தான் வேண்டும் என்று ஆமோதித்தாராம் விஜய்.

என்ன செய்யப் போகிறார்?

 

கலைஞர் டிவியில் காமெடி சீரியல் மடிப்பாக்கம் மாதவன்

கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய காமெடி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. நளினி, ராம்ஜி நடிக்க உள்ள இந்த சீரியலுக்கு ‘மடிப்பாக்கம் மாதவன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் ஒருவர் அல்லது இரண்டு பேரை வித்தியாச பேர்வழிகளாக தொடர்களில் காண்பிப்பார்கள். இந்த தொடரிலோ ஒட்டுமொத்த குடும்பத்தினருமே வித்தியாசமான பேர்வழிகளாக இருக்கிறார்களாம்.

கலைஞர் டிவியில் காமெடி சீரியல் மடிப்பாக்கம் மாதவன்

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடி செய்யும் கலாட்டா காமெடி தான், காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் திரைக்களத்தோடு அமைத்திருக்கிறார்களாம்.

இந்த தொடரில், பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் ராம்ஜி, நளினி, மதுமிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‘ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி ஜோடியாக வந்து கலக்கியவர் மதுமிதா. மடிப்பாக்கம் மாதவன் ரசிகர்களை சிரிக்கவைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

கலைஞர் டிவியில் காமெடி சீரியல் மடிப்பாக்கம் மாதவன்