சினிமாவைப் பற்றி தெரிந்த ரசிகர்களுக்காக கோலிவுட் கிங் என்ற புத்தம் புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிவரை வந்து கோலிவுட் கிங் பட்டத்திற்கான சரியான பதிலை சொல்ல முடியாமல் பட்டத்தை இழந்தார் விஜயகாந்த் ரசிகர் ஒருவர்.
ரசிகர்களின் ரசனைகள், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இருக்கிறது கோலிவுட் கிங் நிகழ்ச்சி. 40க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அஜீத், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் கலந்து கொண்டு சினிமா பற்றிய வெங்கட் பிரபுவின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக சிம்ரன் பங்கேற்றார். சிம்ரன் சினிமாவை விட்டுச் சென்று சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவரைப் பற்றிய பல தகவல்களை வெங்கட் பிரபு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சிம்ரன் ரசிகர்கள் இன்றைக்கும் அதே ஆர்வத்துடன் சிம்ரனை வரவேற்றனர். வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து ‘முன்தினம் பார்த்தேனே' பாடலைப் பாடி சிம்ரனை அசத்தினார் லயோலா கல்லூரியின் மாணவர். துள்ளாத மனமும் துள்ளும் படத்தை 87 தடவை பார்த்தேன் என்று கூறினார் அந்த ரசிகர்.
இதைக்கேட்டு உள்ளம் பூரித்த சிம்ரன், தமிழ் ரசிகர்களுக்கே உள்ள தனிச்சிறப்பு உண்டு. தமிழ் ரசிகர்கள் உண்மையான, நேர்மையான ரசிகர்கள் என்று போட்டுத்தாக்கினார்.
நிகழ்ச்சியின் இடை இடையே சினிமாவைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வேறு சொன்னார்கள். முதல் மரியாதை படத்தில் முதன் முதலில் நடிக்க எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைதான் தேர்ந்தெடுத்தாராம் பாரதிராஜா. அவர் பாடல்கள் பாடுவதில் பிஸியாக இருக்கவே அந்த வேடத்தில் சிவாஜி நடித்தாராம். இது அநேகம் பேருக்கு தெரியாத செய்தியாக இருக்கலாம்.
சினிமாவைப் பற்றியும், சினிமாவை நேசிக்கும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இடையே பாடல் ஒன்றின் சில வரிகளைப் பாடி அசத்தினார் வெங்கட் பிரபு.
40க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் ‘ரெட் கார்பெட்' சுற்றில் 5 பேர் பங்கேற்றனர். தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஐவரில் இரண்டு பேர் மட்டும் வெற்றி பெற்று கோலிவுட் கிங் சுற்றுக்கு சென்றனர்.
கேப்டன் விஜயகாந்தை அறிமுகப்படுத்திய இயக்குநர் யார் என்ற கேள்விக்கு எம்.ஏ.காஜா என்ற பதிலை கூறி கோலிவுட் கிங் கேள்விக்கான பதிலை சொல்வதற்கான தகுதியை பெற்ற்றார் ஒரு ரசிகர்.
இளையாராஜா கதை எழுதிய படம் எது என்பதுதான் கோலிவுட் கிங் பட்டத்திற்காக வெங்கட் பிரபு கேட்ட கேள்வி. அதற்கு ‘தாய் மூகாம்பிகை' என்ற தவறான பதிலை கூறியதால் அவர் கோலிவுட் கிங் பட்டத்தை இழந்தார்.
பாரதிராஜா இயக்கிய நாடோடித் தென்றல் படத்தின் கதைதான் இளையராஜா எழுதியது என்று சரியான விடையை கூறினார் வெங்கட் பிரபு. பட்டம் கிடைக்காவிட்டாலும் கடைசி வரை விளையாடியதற்காக அந்த ரசிகர் அவர் ஏற்கனவே ஜெயித்த பணம் 11ஆயிரத்து 500 ரூபாயுடன் ஹோம் தியேட்டர், கேமரா என்ற கிப்ட் வழங்கப்பட்டது.
சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை காணலாம்.