நிமிர்ந்து நில் - விமர்சனம்

எஸ் ஷங்கர்

Ratingச 3.5/5

நடிகர்கள்: ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார், சூரி

இசை: ஜிவி பிரகாஷ்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: கே எஸ் சீனிவாசன்

இயக்கம்: சமுத்திரக்கனி


காதல், நட்பு என்ற வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருந்த இயக்குநர் சமுத்திரக் கனி முதல் முறையாக ஷங்கர் ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு, சமூகக் கேடுகளை சாடல் என்ற ரூட்டைப் பிடித்திருக்கிறார்.

நாசர் நடத்தும் ஆசிரமத்தில் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஜெயம் ரவி ஒரு மிஸ்டர் பர்பெக்ட். சட்டம் ஒழுங்கை மதிக்காத மக்களையும், லஞ்சத்தில் மூழ்கிவிட்ட சமூகத்தையும் கண்டு பொங்குகிறார்.

சிக்னலில் மடக்கும் போலீஸ்காரர் ரூ 100 லஞ்சம் கொடு இல்லையேல் நீதிமன்றத்துக்குப் போ என்கிறார். ஜெயம் ரவி நீதிமன்றம் போகிறார். தன்னிடம் லஞ்சம் கேட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் ஜெயம் ரவியைப் புரட்டி எடுக்கிறார்கள்.

நிமிர்ந்து நில் - விமர்சனம்

சரி, இந்த அமைப்பையே ஆட்டம் காண வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஒரு திட்டம் தீட்டுகிறார். அதாவது இல்லாத ஒரு கற்பனை மனிதனுக்காக அரசு அடையாள அட்டைகள், சான்றிதழ்களை உருவாக்குகிறார், சில நல்ல அதிகாரிகள் துணையுடன். இதற்காக யார் யாருக்கெல்லாம் லஞ்சம் தரப்பட்டதோ அதையெல்லாம் வீடியோவாக்கி கோபிநாத் மூலம் சேனலில் ஒளிபரப்பி அம்பலப்படுத்துகிறார்.

இதில் சமூகத்தின் பல மட்டத்தில் பெரும் பதவிகளில் உள்ள 147 பேர் சிக்குகிறார்கள். அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். தண்டனையும் பெறுகின்றனர். மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வருகிறது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் ஜெயம் ரவியை பழிவாங்க கிளம்புகிறார்கள்.

நிமிர்ந்து நில் - விமர்சனம்

ஜெயம் ரவி அவர்களின் பகையை முறித்து எப்படி நிமிர்ந்து நிற்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் நிஜமான ஹீரோ சமுத்திரக்கனியின் பட்டையைக் கிளப்பும் வசனங்கள். முன்பெல்லாம் கதை வசன ரிக்கார்ட் அல்லது கேசட் போடுவார்களே... அப்படி இந்தப் படத்தின் வசனங்களுக்காகவே ஒரு சிடி போடலாம். சாம்பிளுக்கு சில:

'இந்த நாட்ல உண்மையை உண்மைன்னு நிரூபிக்கவே இருபது வருஷமாவது ஆகும்...'

நிமிர்ந்து நில் - விமர்சனம்

"இலங்கைல கொத்துக் கொத்தா தமிழர்கள் செத்துக்கிட்டிருந்தப்போ நாம ஐபிஎல் மாட்ச் பாத்துக்கிட்டிருந்தோம். அங்க நடந்தது இங்க நடக்க எவ்வளவு நாளாகிடப் போகுது'

'உன்னை மாதிரி வாழ்து கஷ்டம்.. அதான் உன் கூடவாவது வாழலாம்னு வந்துட்டேன்'

திரைக்கதையை இடைவேளை வரை அப்படி ஒரு இறுக்கமும் விறுவிறுப்புமாகச் செதுக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி, அதன் பிறகு இப்படித் தடுமாறியது ஏன் என்று புரியவில்லை.

நிமிர்ந்து நில் - விமர்சனம்

படத்தின் இன்னொரு பிரச்சினை பாடல்களும் இசையும். இந்த மாதிரி கதைகளுக்கு பாடல்கள் ஏன் என்ற கேள்வி முன்னிலும் வலுவாக எழ ஆரம்பித்துவிட்டதை இசையமைப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரி, பின்னணி இசையாவது கை கொடுக்கிறதா என்றால்... ம்ஹூம்.. ஜிவி பிரகாஷையும் சேர்த்துச் சுமக்கிறது சமுத்திரக்கனியின் திரைக்கதை!

சரத்குமார் பாத்திரத்தை இன்னும் கச்சிதமாக உருவாக்கியிருக்கலாம்.

ஜெயம் ரவி இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார் பார்ப்பவர் மனதில். அத்தனை கடின உழைப்பு.. மிக இயல்பான நடிப்பு. அப்பாவி அரவிந்துக்கும் ஆந்திர நரசிம்ம ரெட்டிக்கும் அவர் காட்டியுள்ள வித்தியாசம்.. ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்படும் அத்தனைப் பேருக்கும் பாடம்!

நிமிர்ந்து நில் - விமர்சனம்

ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் தடுமாறியதில் கனியின் பங்கை விட ஜெயம் ரவி அன்ட் குடும்பத்தினர் பங்கு நிறைய இருந்திருக்கும் போலிருக்கிறது. சமுத்திரக்கனி மாதிரி படைப்பாளிகளை சுதந்திரமாக இயங்க விட்டால், இன்னும் அழுத்தமான படைப்புகள் கிடைக்கும் என்பதை ஜெயம் ரவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமலா பால் இந்தப் படத்தில் உண்மையிலேயே அழகாக நடித்திருக்கிறார். சூரிக்கு நகைச்சுவையோடு நடிப்பைக் காட்டவும் வாய்ப்பு. இந்தப் பாணியை தொடர்வது அவர் கேரியருக்கு நல்லது.

ஒரு நேர்மையான அதிகாரிக்கு வால்டர் பெயரை வைத்திருக்கிறார் கனி. வால்டர்கள் நிஜத்திலும் இப்படி இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்து வைத்திருப்பாரோ!

லாஜிக் மீறல்கள், தடுமாறும் பின்பாதி சில எதிர்மறையான விஷயங்கள் படத்தை பின்னுக்கு இழுத்தாலும்... நிமிர்ந்து நில் நிச்சயம் தவற விடக்கூடாத படம்தான். காரணம் இந்தப் படத்தின் நோக்கம். நாம திருந்தினால் நாடு திருந்தும் என்பது எத்தனை அப்பட்டமான உண்மை!

சீமான் எப்படி தம்பி என்ற படத்தை தன் வசனங்களால் தூக்கி நிறுத்தினாரோ, அப்படி இந்தப் படத்தையும் நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி, நல்ல நோக்கம் மற்றும் அனல் தெறிக்கும் வசனங்களால்!

 

ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன்! - ஜெயம் ரவி

சென்னை: சாக்லேட் பாய் இமேஜ் பிடிக்கவில்லை. ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன், என்றார் நடிகர் ஜெயம் ரவி.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலாபால் நடித்த படம் நிமிர்ந்து நில். இந்தப் படம் சில தடங்கள்களுக்குப் பிறகு வெளியானது. ஆனால் நல்ல பெயரையும் வசூலையும் சம்பாதித்துள்ளது.

ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன்! - ஜெயம் ரவி

இதைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை ரெசிடென்ஸி ஓட்டலில் நடந்தது.

இதில் இயக்குநர் சமுத்திரக் கனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஜெயம் ரவி பேசும்கையில், "நான் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களாக தேர்வு செய்து நடிப்பதற்கு காரணம், எனக்கு இருக்கிற சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைப்பதற்காகத்தான்.

‘பேராண்மை', ‘அமீரின் ஆதிபகவன்' ஆகிய படங்களில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் அந்தப் படங்களை ஒப்புக் கொண்டேன். நிமிர்ந்து நில் படம் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியுள்ளது.

ஆக்ஷன் படங்கள் மட்டுமில்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நடிப்பதற்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல. நல்ல கதை இருந்தால் மட்டும் போதும்," என்றார்.

 

கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!

திருப்பூர்: கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!  

இக் கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் கோச்சடையான் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.

கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வரச் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட சிறப்பு குழுவை திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

 

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா!... ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் ஹீராவாக நடிக்கும் இரண்டாவது படத்துக்கு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஜீவி பிரகாஷ் குமார் பென்சில் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா!... ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் வேறு படங்களில் நடிப்பது குறித்து சொல்வேன் என்று கூறி வந்தார் ஜீவி பிரகாஷ்.

இந்த நிலையில் ஆதிக் என்பவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தின் நாயகி இன்னும் முடிவாகவில்லை. பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் ஜீவி பிரகாஷ்தான். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குநர் மேஜர் ரவியின் உதவியாளராக இருந்தவர் ஆதிக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இளையராஜா எனும் வயதை வென்ற 'இளைஞரி'ன் வேகத்தைப் பார்க்கும்போது.

எண்பதுகளில் நாம் பார்த்த அதே வேகத்தோடு இந்த 2014லிலும் இசையைத் தந்து கொண்டிருக்கிறார் மனிதர். அதுவும் ஐந்து மொழிகளில்...

இந்த ஆண்டு மட்டும் அவரது இசையில் வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா... 20!

இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!

ஒரு ஊர்ல, நாடி துடிக்குதடி போன்றவை கடந்த ஆண்டு வந்திருக்க வேண்டியவை. அவற்றையும் சேர்த்தால் 22 படங்கள்.

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் 'உன் சமையல் அறையில்' படத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இசையமைக்கிறார் ராஜா. பாடல்களை மூன்று படங்களுக்கும் ஒரே மாதிரி போடாமல், மூன்றுக்கும் தனித் தனியாகவே இசையமைத்துத் தந்திருக்கிறார் இளையராஜா என்கிறார் பிரகாஷ் ராஜ்.

தெலுங்கில் பாபா சத்ய சாய் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு மெகா படங்கள் ராஜாவின் இசையில் வரவிருக்கின்றன. மேலும் இரு படங்களுக்கு இசையமைக்க சம்மதித்துள்ளார், இவை 2015 கணக்கு!

எம்சும் பெண்குட்டியும், மார்த்தாண்ட வர்மா, காதா, சாம்ராஜ்யம் 2 போன்றவை ராஜாவின் இசையில் வரும் மலையாளப் படங்கள். சத்யன் அந்திக்காட்டின் அடுத்த படத்துக்கும் ராஜாதான் இசை.

கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் படம் தவிர, மைத்ரி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்துக்கும் ராஜா இசையமைக்கிறார்.

தமிழில் ராஜராஜ சோழனின் போர்வாள், வேலு பிரபாகரனின் கலைஞனின் காதல், ஸ்ரீ ராமாநுஜர், மேகா, திறக்கப்படாத கதவு, மூங்கில் காடு, பாலா இயக்கும் படம், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம், மகேந்திரனின் புதிய படம் போன்றவை ராஜாவின் இசையில் உருவாகி வருகின்றன.

இந்தியில் பால்கியின் புதிய படத்துக்கும் ராஜாதான் இசை என்பது நினைவிருக்கலாம்.

 

'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'

சென்னை: நேற்று முழுக்க சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பிஆர்ஓக்களிடையே கேட்கப்பட்ட கேள்விதான் இது.

கேட்டவர்கள்... தமிழக போலீசின் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

சிலர் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி வைத்தார்கள். சிலர் அவர் முதலியார்தான் என்றார்கள். இன்னும் சிலர் இல்லையில்லை வேளாளர்தான், நல்லா தெரியும் என்றார்கள்.

'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'

ஆனால் யாருமே எதற்காக இந்தக் கேள்வி என திருப்பிக் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை தங்கள் நண்பர்கள் குழுவுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.

எதுவுக்கு இயக்குநர் சுந்தர் சி சாதி பத்தி கேட்கிறார்கள் போலீசார்? திமுகவுல சீட் கிடைக்காத கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா... அல்லது சுந்தர் சி வேற ஏதாவது கட்சிக்காக பிரச்சாரம் பண்ணப் போறாரா?

-இப்படியெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, 'எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியாதுங்க. மேலிடத்துல விசாரிச்சு ரிப்போர் தரச் சொன்னாங்க.. பத்திரிகைகாரங்களுக்கு நல்லா அவரைப் பத்தி தெரியுமேன்னு விசாரிச்சோம், அவ்வளவுதான்,' என்றார்.