ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்


என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து '3' படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.
 

கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்


இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.
 

அனுஷ்காவை அடுத்து சமந்தாவுக்கு அடிபோடும் கோலிவுட்


நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குப் படமான தூக்குடு ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி ரோலில் நடித்தாலும் யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தவர். அடுத்ததாக அவர் முரளி மகன் அதர்வாவுடன் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சமந்தாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதையடு்தது அவர் தெலுங்கு பக்கம் போய் பார்க்கலாம் என்று ஹைதராபாத் கிளம்பினார். அவர் அங்கு போன நேரம் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. அதிலும் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்த தூக்குடு சமந்தாவை தூக்கிவி்ட்டுள்ளது. இந்த படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தாவை கண்டும், காணாததுமாய் இருந்த கோலிவுட் தற்போது தூக்குடு ஹிட்டானவுடன் அவருக்கு குறிவைத்துள்ளது. இதுவரை சமந்தாவை சீண்டாத பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் ரெண்டு படத்தில் அறிமுகமானார். வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் போய் பெரிய நடிகை ஆனார். தற்போது அவருடன் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 

ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!


இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
 

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...