7/7/2011 3:30:54 PM
நடிகர் பிரபுதேவாவுக்கும் அவரது மனைவி ரம்லத்துக்கும் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. நடிகர் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல், திருமணம் என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்தாண்டு ரம்லத் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நயன்தாரா மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு 6 மாத காலமாக பிரபுதேவாவும் ரம்லத்தும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். பின்னர் இருவரும் சுமூகமான முடிவுக்கு வந்து, முழு சம்மதத்துடன் பிரிவது என்று தீர்மானித்தனர். தங்களுக்கு விவாகரத்து கோரி இருவரும் சேர்ந்து, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் 3 வீடுகள், கார் மற்றும் ரொக்கப் பணம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இருவர் தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி பாண்டியன் முன்னிலையில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. பிரபுதேவாவும் ரம்லத்தும் தனித்தனியாக வந்து ஆஜராயினர். இருவரும் நீதிபதி அறைக்கு வந்து நீதிபதியிடம், தங்களின் திருமண போட்டோ, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவை சரியானவை என்று சாட்சியம் அளித்தனர். சுமார் 2 மணி நேரம் சாட்சி விசாரணை நடந்தது. பின்னர் ஜூலை 7ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி வழக்கு இன்று முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டையும், அண்ணா நகரில் உள்ள வீட்டையும் ரமலத்துக்கு பிரபுதேவா கொடுக்க வேண்டும். அதோடு ஐதராபாத்தில் உள்ள மூன்று வீடுகளையும் கொடுக்க வேண்டும். அந்த வீடுகளை குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு, ரம்லத் அந்த குழந்தைகளுக்கு தர வேண்டும். குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம் ஆகியவற்றிற்கான செலவை பிரபுதேவாவே மேற்கொள்ள வேண்டும். இதுதவிர ரமலத்துக்கு ரொக்கமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பு நகலை பிரபுதேவாவின் வக்கீல் சத்யாவும், ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தமும் நீதிபதியிடம் பெற்றுக் கொண்டனர். பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைத்திருப்பதை அடுத்து, நயன்தாராவை கைபிடிப்பதில் பிரபுதேவாவுக்கு இருந்த சிக்கல் தீர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தினர் கூறினர். விரைவில் பிரபுதேவா நயன்தாரா திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.