வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் தனக்கும் தனுஷுக்கும் மோதல் என்று வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் வேல்ராஜ்.
‘வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தின் இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா நடிக்கின்றனர். ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை வேல்ராஜ் இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்து வருகிறார். இவர் சில நாட்களாக படப்பிடிப்பு செல்லாததால், படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து வேல்ராஜ் கூறும்போது, "நான் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன். சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருந்ததால் வேலையில்லா பட்டதாரி 2 பட ஷூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை. தனுஷுக்கு சொல்லிவிட்டுத்தான் என்னுடைய உதவியாளரை வைத்து தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினேன்.
நான் கலந்துக் கொள்ளாததால் படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளது. அது முற்றிலும் வதந்தி. மேலும் ஒளிப்பதிவு பொறுப்பை என் உதவியாளரிடம்தான் கொடுத்திருக்கிறேன்," என்றார்.