ராஜேஷ் கன்னாவின் உயிலை அவரது பெண் 'பார்ட்னரிடம்' ஒப்படைக்க தடை!

மும்பை: மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணாவின் சொத்துகள் பற்றிய உயிலை அவரது பெண் பார்ட்னரிடம் ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவின் முதல் மனைவி நடிகை டிம்பிள் கபாடியா. இருவருக்கும் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா என இரு மகள்கள் உள்ளனர்.

ராஜேஷ் கன்னாவின் உயிலை அவரது பெண் 'பார்ட்னரிடம்' ஒப்படைக்க தடை!

டிம்பிள் கபாடியாவை ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டார் ராஜேஷ் கன்னா. பிறகு தனது கடைசி காலம் வரை அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே, ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

அதே நேரம், டிம்பிள் கபாடியாவுடனும் சுமூகமாகிவிட்டார்.

மும்பையில் ராஜேஷ் கன்னாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் ராஜேஷ்கன்னா வசித்த மும்பை கடற்கரையில் உள்ள ஆசீர்வாத் பங்களா ரூ.90 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பணம் ராஜேஷ் கன்னாவின் வாரிசுகளான ரிங்கி கன்னா, டுவிங்கில் கன்னாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அதை விலைக்கு வாங்கிய தொழில் அதிபர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இறப்பதற்கு முன் ராஜேஷ்கன்னா உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயில் மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

உயிலின் நகலை தன்னிடம் ஒப்படைக்க கோரி ராஜேஷ் கன்னாவின் பெண் பார்ட்னர் அனிதா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், 'நான் ராஜேஷ் கன்னாவின் வாழ்க்கை துணைவியாக அவரது இறுதி காலம் வரை வாழ்ந்தேன். எனவே உயிலின் நகலை கேட்க உரிமை இருக்கிறது' என்று கூறி இருந்தார்.

இதற்கு ட்விங்கிள் கன்னா எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ராஜேஷ் கன்னாவின் வாரிசு அனிதா அல்ல. அவரிடம் உயிலை ஒப்படைக்கவும் கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மனுவை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா விசாரித்து, அனிதாவிடம் ராஜேஷ் கன்னாவின் உயில் நகல் வழங்க இடைக்கால தடை விதித்தார்.

வழக்கு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேநேரம் வரும் 4-ம் தேதி திங்கள் கிழமை வரை அந்த உயிலை தருமாறு கேட்கப் போவதில்லை என்று அனிதா தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளனர்.

இதற்கிடையே ராஜேஷ் கன்னா உயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ட்விங்கிள் கன்னா மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்! - ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர்

சென்னை: தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்! - ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர்

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர்.

அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது.

எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறது. இப்போது மட்டுமல்ல, முதல்வர் அம்மா அவர்கள், எப்போதெல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பாதுகாக்க போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அதைக் குற்றம் சாட்டுவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக வைத்துள்ளது.

தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இந்த துணைத் தூதரகத்தை உடனடியாக மூடக் கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் சென்னையில் உள்ள அந்த தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்.

இதில் தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.

திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

 

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார்

சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருதினை, தமிழக ஆளுநர் ரோசைய்யா வழங்குகிறார்.

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார்

இதற்கான விழா இன்று மாலை 7.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பழம்பெரும் இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராம் மற்றும் ஆர்.சி. சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

தமிழக கவர்னர் ரோசய்யா, கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டிப் பேசுகிறார். இயக்குனர் எஸ்பி முத்துராமன் கமலை வைத்து 10 படங்கள் எடுத்துள்ளார். ஆர்.சி. சக்தி, உணர்ச்சிகள், மனிதனில் இத்தனை நிறங்களா போன்ற படங்களில் கமலை இயக்கியுள்ளார்.

 

காதல், நகைச்சுவை ட்ராக்கிலிருந்து ஆக்ஷனுக்கு தாவிய ஆர்யா!

சில ஆண்டுகள் வரை காதல் ரோமியோவாக வந்து கொண்டிருந்த ஆர்யா, ஒரு மாறுதலுக்கு ஆக்ஷனில் இறங்குகிறார் மீகாமனில்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

காதல், நகைச்சுவை ட்ராக்கிலிருந்து ஆக்ஷனுக்கு தாவிய ஆர்யா!

‘மீகாமன்' கடல் சார்ந்த படம் என்பதால், படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் மற்று கடல் சார்ந்த இடங்களில்தான்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

பொதுவாக ஒரு படத்தில் ஹீரோவுக்கு சரிக்கு சமமாக ஒன்று அல்லது இரண்டு வில்லன்களிருப்பார்கள். ஆனால் மீகாமனில் நிலைமை வேறு. இதில் ஏழு வில்லன்களுடன் ஆர்யா மோத வேண்டும்.

இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக முன்கூட்டியே ஒத்திகைப் பார்த்துக் கொள்கிறாராம் ஆர்யா. கடும் உடற்பயிற்சி, முடிந்தவரை காரைத் தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்வது என ரொம்ப மெனக்கெடுகிறாராம்.

 

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

இத்தாலிய குறும்படப் போட்டியில், ஈழத்து தமிழ் திரைக்கலைஞர் ஈழன் இளங்கோவின் மொழிப்பிறழ்வு எனும் படத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது "MISINTERPRETATION" "மொழிப்பிறழ்வு" எனும் குறுந் திரைப்படம்.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந் திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது இந்தப் படம்.

இப்படத்தில், ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்துருபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்லவேண்டிய கோணத்தில் இருந்து, சரியான கதை தெரிவுடனும், தெளிவுடனும், கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் காட்சிகள் அமைத்து இருந்தார் இயக்குனர் ஈழன் இளங்கோ.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

இது காலத்துக்கு தேவையான கதை. ஈழத்து உறவுகளின் உண்மையை கொண்டுவந்து வெளி நாட்டவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார் என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது மொழிப்பிறழ்வு படம்.

சிறந்த ஒளிப்பதிவு, பின்ணணி இசை, காட்சி அமைப்பு என்று தமிழ் சினிமாவைத் தாண்டி வேறு கோணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்து கலைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுக் கலைஞர்களையும் இந்தப் படத்தில் இயக்கியுள்ளார் ஈழன் இளங்கோ.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

ஈழன் இளங்கோ, பிரான்ஸ் நாட்டில் இயக்கி நடித்த 'தொடரும்' எனும் ஈழத்து மக்களின் பிரிவுளையும் தேடல்களையும் சித்தரிக்கும் மற்றுமொரு குறுந் திரைப்படம் இதே போட்டியில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய வேறு பல படைப்புகள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல் தமிழ் திரைப்படமாக இவர் இயக்கிய "இனியவளே காத்திருப்பேன்" சர்வதேச தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக வெளிநாட்டு, இந்திய கலைஞர்களைக் கொண்டு முழு நீள திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். விரைவில் அதுபற்றிய விவரங்களை வெளியிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கல்கண்டில் கதாநாயகனாகும் நாகேஷ் பேரன் கஜேஷ்

கல்கண்டு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ்.

‘ராட்டினம்' படத்தை தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கல்கண்டில் கதாநாயகனாகும் நாகேஷ் பேரன் கஜேஷ்

கதாநாயகியாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். டி.பி.கஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மதன் கார்க்கி, விவேகா, யுகபாரதி, அண்ணாமலை ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு கண்ணன் இசையமைக்கிறார். கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.எம்.நந்தகுமார் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இவர், ‘தென்னவன்,' ‘ஜாம்பவான்' ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "இது, ஒரு கவித்துவமான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்,' என்றார்.

 

இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன! - இசைஞானி இளையராஜா

ஈரோடு: இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன என இசை அமைப்பாளர் இளையராஜா கூறினார்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து இளையராஜா பேசியதாவது:

இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன! - இசைஞானி இளையராஜா

கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில் கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.

எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம். வீட்டில் இருந்த பழைய ரேடியோவை ரூ.400-க்கு விற்பனை செய்து சென்னைக்கு எங்களது தாயார் அனுப்பி வைத்தார்.

ஆர்மோனிய பெட்டி, தபேலா, கித்தார் ஆகியவற்றை மட்டும் வைத்துகொண்டுதான் சென்னைக்கு கிளம்பிச் சென்றோம். அதை வைத்துதான் இசை அமைத்தோம். தானாக இசை அமைத்து டியூன் போடும் கலைஞர்கள் இக் காலத்தில் பிறக்கப் போவதில்லை.

தன்னை மட்டுமே தம்பட்டம் அடிக்க வேண்டும். மற்றவர்களை திட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது பொது நிகழ்ச்சி மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமேடை நிகழ்ச்சியைத் தவிர்த்து வருகிறேன். கல்வி என்பது புத்தகத்தில் இருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பரந்து கிடக்கிறது. எதில் இருந்தும் படிக்கலாம். வாழ்க்கையே கூட படிப்புதான். இதயம் ஒரு கோவில் போன்றது. ஆனால், நாம் தான் அதை சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இதயம் என்னும் கோவிலை நல்ல நூல்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுத்தலாம்.

நான் பாடிய, இசை அமைத்த பாடல்கள் எல்லாம், நான் பாடுவதற்கு, இசை அமைப்பதற்கு முன்பே இருந்தவை. அதனால்தான் எனக்கு தானாக வருகிறது. சப்தம், நாதம் இல்லாமல் உலகம் இல்லை.

உண்மையைச் சொன்னால் நமது நாத மண்டலம் நாசப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. சுத்தமான இசை மூலம் நாத மண்டலத்தைச் சரிப்படுத்த முடியும்.

திரைப்படங்களில் பல கவிஞர்களின் பெயரில் வந்த பல பாடல் வரிகள் எனக்குச் சொந்தமானவைதான். இப்போது வரும் இசை நமது மூளையை மழுங்கச் செய்யும் வகையில்தான் இருக்கிறது. எனவே, சுத்தமான இசையைக் கேட்க பொதுமக்கள் முன்வர வேண்டும்," என்றார்.