பவன் கல்யாண் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம்-இலியானா சேர்ப்பு


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சிரஞ்சீவி மகனை இயக்கப் போகிறார் முருகதாஸ்


சிரஞ்சீவியை வைத்து தாகூர் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அவரது மகன் ராம் சரண் தேஜாவை இயக்கப் போகிறார்.

தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு இநத்ப் படம் பெரும் பிரேக் கொடுத்தது.

பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்.

தமிழில் சமீபத்தில்தான் முருகதாஸின் 7ஆம் அறிவு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்து விட்டு ராம் சரண் தேஜா படத்திற்குப் போகிறார் முருகதாஸ்.
 

'ராமர்' படத்தைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா படத்தில் நயனதாரா?


ராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்த நயனதாரா மீண்டும் ஒரு புராணப் படத்தில் நடிக்கப் போவதாக தெலுங்கு தேசத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயனதாராவைக் கல்யாணம் செய்வதற்காக காத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த நிலையில் நயனதாரா நடித்த கடைசிப் படம் என்ற தகவலோடு அவர் தெலுங்கில் நடித்த ராம ராஜ்ஜியம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு நயனதாரா நடிக்க மாட்டார். பிரபுதேவாவை மணந்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மேலும் ஒரு புராணப் படத்தில் நயனதாரா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த முறை ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் ராவணன் கதை குறித்த படம் இது என்று கூறப்படுகிறது. நாகார்ஜூனாவை ராவணனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்திலும் நயனதாராவையே சீதையாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரை அணுகியுள்ளாராம். இதுகுறித்து நயனதாராவும் சிந்தித்து வருவதாக தெரிகிறது.

ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராம்கோபால் வர்மா இயக்குகிறார். ராவணன் வேடத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்ஜியம் படம் வெற்றிகரமாக ஓடுவதால் ராவணன் பற்றி புராணபடத்தை எடுக்க முன் வந்துள்ளனர்.

இதில் நடிக்குமாறு கேட்டு நயன்தாராவை அணுகியுள்ளனர். இந்த படத்தில் நடித்த பிறகு திருமணத்தை நடத்தி கொள்ளலாமா? என்ற யோசனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

ராவணன் படத்தோடு தனது திரையுலக வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது.

'அவர்' என்ன சொல்வார் என்று தெரியவில்லை!
 

ராணாவில் நடிக்க மாட்டார் தீபிகா படுகோன்?


ராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

 

6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்


எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.

இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை.இதுதான் இங்கு ஹைலைட்.

இதை தமிழிங்கிலீஷ் பாடல் என்று கூறி விட முடியாது. நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்டியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம் (ஓஹோ...) என்கிறார் தனுஷ்.

தமிழர்கள் அத்தனை பேரும் இதைக் கேட்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். ஆனால் பாலிவுட்டில்தான் இதை மாய்ந்து மாய்ந்து கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் தமிழில் கலக்குகிறார்கள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறதாம். நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.

ரூம் போட்டு சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்...!

புல்லரித்துப் போன அமிதாப்!

இதற்கிடையே, இந்த கொலை வெறிப் பாடல் அமிதாப் பச்சனையும் அசரடித்து விட்டதாம். இதுகுறித்து அவர் புல்லரித்துப் போய் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடமிடுகின்றன.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ்தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.