செக் மோசடி: நீதிமன்றத்தில் சரணடைய நடிகைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


டெல்லி: ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் சரணடையுமாறு பழைய நடிகை சொர்ணாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் 1996ம் ஆண்டு சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்த செக் கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து சொர்ணா மீது சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா மோசடி வழக்கு தொடர்ந்தார். அப்போது சொர்ணா கோர்ட்டில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். மீதிப்பணத்தை செலுத்தாததால் அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டில் சொர்ணா அப்பீல் செய்தார்.

அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி, சொர்ணாவின் ஜெயில் தண்டனையை 3 மாதங்களாகக் குறைத்து உத்தரவிட்டார். மீதிப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சொர்ணா அப்பீல் செய்தார். அங்கு மனு தள்ளுபடியானதால் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் போத்ராவுக்கு தர வேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து விட்டேன். நான் இதில் பாதிக்கப்பட்டுள்ளேன். பெண் என்பதால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிபதி சுதந்திரகுமார் இந்த மனுவை விசாரித்தார். சொர்ணாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் 4 வாரளுக்குள் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்பீல் மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
 

காதலிக்கிறேன், ஆனால் திருமணமாகவில்லை: வித்யா பாலன்


யுடிவி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலிப்பதாக நடிகை வித்யா பாலன் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகை வித்யா பாலனுக்கும், யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. பினனர் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டு தேன் நிலவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வந்தது.

நானோ படப்பிடப்புகளில் பிசியாக இருக்கிறேன். என்னைப் போய் காதலிக்கிறாள், கல்யாணம் முடித்து விட்டாள் என்கிறார்களே என்று கேட்டார் வித்யா பாலன். ஒரு வழியாக தற்போது சித்தார் ராய் கபூரை காதலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கு சித்தார்த்தை பிடித்திருக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். மணப்பெண்ணாக ஆசையாகவும் இருக்கு. ஆனால் எனக்கு ஒன்றும் ரகசியமாக திருமணம் ஆகவில்லை என்றார்.

அன்மையில் வித்யாவும், சித்தார்த்தும் ஜோடியாக கோவா சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றிய வித்யாவை பார்த்தவர்கள் தான் அவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று வதந்ததியை பரப்பினர்.

புது வீடு வாங்கி வித்யாவும், சித்தார்த்தும் அதில் குடியேறவிருக்கின்றனர் என்பது தான் வித்யா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி.

ஒரு வேளை ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ வந்த பிறகு கல்யாணம் செஞ்சுக்குவாங்களோ, என்னவோ…!

 

தனுஷ், ரிச்சாவுக்கு 'அவுட்'-ஆர்யா, அனுஷ்கா 'இன்'!


செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ், ரிச்சாவுக்கு பதில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர்.

செல்வராகவனின் அடுத்த படம் இரண்டாம் உலகம். இதில் தனுஷ், ஆண்ட்ரியா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தனுஷுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு ஆண்ட்ரியா வெளியேறினார்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

பின்னர் நடந்தது தான் உங்களுக்கே தெரியும். செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

ஆண்ட்ரியா விலகியதை அடுத்து ரிச்சா தான் கதாநாயகி என்றார்கள். இவராவது நிலைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. அவரும் போய் விட்டார். அதேசமயம்,தனுஷும் மாறி விட்டார்.

இரண்டாம் உலகத்தில் நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரண்டாம் உலகம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அடுத்த மாதம் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

 

பாலிவுட்டில் புழங்கும் 'அண்டர்வேர்ல்டு தாதாக்கள்' கறுப்புப் பணம்!


மும்பை: சட்டவிரோதமாக தாங்கள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை மறைமுகமாக பாலிவுட் படங்களில் முதலீடு செய்வதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தாதாக்கள் பல கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவர்கள் பெரிய தொழில் அதிபர்கள், முன்னணி நடிகர்- நடிகைகள், சினிமா பிரமுகர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் மும்பையில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்கென்று தனியாக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துக் கொள்வது சகஜமாக உள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறான். ஆனால் அவனது கூட்டாளிகள் இன்னும் மும்பையில் இருந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடு படுகிறார்கள். இவர்களில் சிலர் இந்திப் படங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். தாதாக்கள் கையில் பல கோடி பணம் புரள்கிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள், நிலங்கள் என தாவூத்தின் பணம் பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் இந்த கறுப்பு பணம்தான் திரைப்படங்களாக வெள்ளையாகின்றன என்பது தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் பெயரில் படங்கள் எடுக்க இந்த தாதாக்கள் பணம் தருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பல மும்பை தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளில் வெளி நாட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் சினிமா படங்களில் தாதாக்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல் சில அரசியல்வாதிகளும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை சினிமா படங்களில் முதலீடு செய்து வெளியே கொண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் மத்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை தடுக்க முடியவில்லை. சட்ட விரோத பண முதலீடு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியாரிடம் கடன் பெற்று படம் எடுக்கும்போது 100 சதவீதம் வரை வட்டி வசூலிப்பதாகவும், இந்த அண்டர்வேர்ல்டு டான்கள் குறைந்தவட்டிக்கு தருவதால் கறுப்புப் பணத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது பாலிவுட் என்று திரையுலகினர் சிலர் கூறியுள்ளனர்.

 

மிஸ்டர் பீன்: ஓய்வு பெறுகிறார் ரோவன் ஆட்கின்சன்


மிஸ்டர் பீன் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன்.

மிஸ்டர் பீனைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ” மிஸ்டர் பீன்”. அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56).

ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நம்ம வாண்டுகள் பையை ஒரு பக்கமும், ஷூவை மறுபக்கமும் வீசிவிட்டு அவசர, அவசரமாக உட்கார்வது டிவி முன்பு தான். காரணம் இந்த மிஸ்டர் பீன். இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன்.

இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின.

இத்தனை பிரபலமான தொடரில் இனி மிஸ்டர் பீனாக நடிக்கப்போவதில்லை என்று ரோவன் ஆட்கின்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் இனிமேல் மிஸ்டர் பீனாக நடிக்க மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. மிஸ்டர் பீன் கதாபாத்திரம் வயதாகாமல் அப்படியே இருப்பது. அதனால் இனியும் நான் மிஸ்டர் பீனாக நடிப்பது சரியல்ல. மிஸ்டர் பீன் எப்பொழுதும் இளமையாக இருந்து தான் நான் பார்த்துள்ளேன். எனவே, வயதாகும் நான் இதில் நடிப்பதில் உகந்தது அல்ல என்றார்.

 

3 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் ரஜினி, கமல் வருகை! பரபரப்பில் படக்குழு


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படப்பிடிப்புக்கு திடீர் என்று வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். இதனால் படக் குழுவினர் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் பணிபுரிகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்தில் தனுஷும், கமல்ஹாசன் மகள் ஸ்ருதியும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கமல், ரஜினி குடும்பங்கள் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருவதால் ஸ்ருதி தனுஷுடன் பிரண்ட்லியாக இருக்கிறார். என்ன இருந்தாலும் தோழியின் கணவராச்சே.

3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். மகள் எப்படி படத்தை இயக்குகிறார் என்று பார்க்க ரஜினியும், ஸ்ருதி எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்க்க கமலும் ஆர்வமாக உள்ளனர். இன்னொரு பக்கம் மருமகனின் நடிப்பை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து ரசிக்க ரஜினிக்கு ஆசை. இதனால் ரஜினியும், கமலும் ஒன்றாக சேர்ந்து வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் வந்து அசத்தவிருக்கின்றனர்.

இந்த விஷயம் யூனிட்காரர்களுக்கும் தெரிந்துவிடவே, எப்போ வருவார்கள் ரஜினி, கமல் என்ற எதிர்பார்ப்புடனேயே பணிபுரிகின்றார்களாம்.

ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலே மக்கள் டிவியை விட்டு ஒரு இன்ச் நகராமல் பார்ப்பார்கள். அப்படி இருக்க இருவரும் ஒன்றாக ஷூட்டிங் பார்க்க வந்தால் படக்குழுவினருக்கு எவ்வளவு குதூகலமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
 

'காஞ்சனா பேய்' பயத்தில் பள்ளி மாணவன் தற்கொலை!


ஈரோடு: சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ள தமிழ் சினிமா காஞ்சனா படத்தைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன், பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

ஈரோடு ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன். பதினைந்து வயது சிறுவனான இவன், அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளவரசனும் அவனது நண்பர்களும் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற திரைப்படம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

அன்று முதல் பேய் பயத்தில் தவநித்த இளவரசன், இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டானாம். அவனை அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்க கோவிலுக்குப் போய் திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்குக் கொடுத்துள்ளனர்.

தற்கொலை

கடந்த 4ம் தேதி இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தீக்காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசனுக்கு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தான்.

இதுகுறித்து இளவரசனின் அப்பா தண்டபாணி கூறுகையில், "காஞ்சனா திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பின்னர் சி.டி.யை வாங்கி வந்து வீட்டில் உள்ள டிவியில் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தான்.

பின்னர் ஏதோ ஒரு உருவம் தன் கண்முன்னால் வந்து நிர்ப்பாதாக எங்களிடம் சொன்னான்,

பள்ளிக்கூடத்திலும் யாரிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்துள்ளான். அதற்கு தலைமை ஆசிரியர், "உன் அப்பாவையோ, அம்மாவையோ நாளைக்கு கூட்டிக்கொண்டு வா....", என்று சொல்லியனுப்பியுள்ளார்.

எங்களிடம் 'என்னைக் கொன்று விடுங்கள், எனக்கு பயமாக உள்ளது' என்றும் கூறி அழுதான். சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், தனியறையில் படுத்திருந்த இளவரசன் நடு ராத்திரியில் எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டான்," என்றார் கண்ணீருடன்.

இளவரசனின் தீக்குளிப்பு பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

படங்களைத் தடை செய்ய வேண்டும்

சிறார்களின் மனங்களைப் பாதிக்கும் வகையிலான, இதுபோன்ற படங்களை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட கதைகளுடன் கூடிய படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினியின் ராணா... உற்சாகத்தில் கோலிவுட்!


வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தி கோடம்பாக்கத்தை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட சரித்திரப் படம் ராணா. ரஜினியின் கனவுப் படம் இது. ரஜினியே எழுதிய கதை இது.

கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் பிரதான நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கியது. இதில் பங்கேற்ற கையோடு ரஜினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் அவர் சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார். ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பிய அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

மீண்டும் ராணா படப்பிடிப்பை தொடங்குவது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார் ரஜினி.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ராணா படப்பிடிப்பைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது கோடம்பாக்கத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்தப் படம் மூலம் பல ஆயிரம் கலைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒருபக்கம், மறுபக்கம் திரைப்பட வர்த்தகத்தில் இருக்கும் தேக்க நிலை நீங்குவதற்கான வாய்ப்பு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி இது," என்றார் பெப்சி அமைப்பச் சேர்ந்த ஒரு நிர்வாகி.

ராணா படப்பிடிப்பை மூன்று கட்டங்களாக 200 நாட்களுக்கு நடத்த இயக்குநர் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஏவிஎம்மில் நடக்கிறது. சில தினங்களில் வெளிநாடு செல்லும் படக்குழு, மீண்டும் இந்தியா திரும்பி, ஆக்ரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.

படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். இப்போது பாடல்களை மாஸ்டரிங் செய்யும் பணியையும் துவங்கிவிட்டாராம்.
 

பாலிவுட் ரஜினிகாந்த் சல்மான் கான்: சினிமா வர்த்தக நிபுணர்கள்


பாலிவுட்டின் ரஜினிகாந்த் சல்மான் கான் என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான வாண்டட், தபாங் மற்றும் பாடிகார்ட் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதிலும் பாடிகார்ட் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளதாம். படம் ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து வர்த்தக ஆய்வாளர்கள் சல்மானை தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ஒப்பிடுகின்றனர்.

இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாலிவுட் திரையுலக வர்த்தக நிபுணர் கோமல் நாத்தா கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை அன்று சல்மான் படங்கள் ரிலீஸ் ஆகின. அனைத்தும் ஹிட்டானதற்கு பண்டிகை, சல்மான் மற்றும் அவரது அதிரடி ஆக்ஷன் தான் காரணம். பொதுவாக ரம்ஜான் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் வசூல் வெகுவாக குறைந்துவிடும். ஆனால் பாடிகார்ட் 6-வது நாளில் கூட வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றார்.

வர்த்தக ஆய்வாளர் சஞ்சய் கை கூறுகையில், பாடிகார்ட் ரிலீஸ் ஆகும் நாளில் அனுராக் கஷ்யப் தனது படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள போல் படத்தின் வெளியீட்டுத் தேதி கூட மாற்றப்பட்டது. வேறு நாளில் வெளியிடுவதால் நல்ல வசூல் கிடைக்கும். ஆனால் தற்போது வேறு எந்த படமும் ஓடும் வாய்ப்பில்லை. முதன்முறையாக ஒரு படம் பட்டி, தொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடுவது இப்போதுதான் என்றார்.

படம் வெளியான சில நாட்களிலேயே வசூலை அள்ளிக் குவித்துள்ளதால் நிபுணர்கள் சல்மானை ரஜினிகாந்துடன் ஒப்பிடுகின்றனர். சல்மானுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி உயிருக்கு உயிரான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதுவே சல்மானின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
 

போஸ் கொடுத்தேன், ஆனால் டாப்லெஸ்ஸாக இல்லை: காஜல்


எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தேன். ஆனால் டாப்லெஸ்ஸாக இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்கும் காஜல் அகர்வாலுக்கும் அவ்வளவு ராசி. அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். லேட்டஸ்ட் சர்ச்சை எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக அதாவது அரை நிர்வாணமாக போஸ் கொடுத்தது. அந்த படம் பத்திரிக்கையின் அட்டையில் வந்துள்ளது.

தனது டாப்லெஸ் படத்தைப் பார்த்த காஜல் கொதித்து விட்டார். அடப்பாவிங்களா நான் ஆடையுடன் தானே போஸ் கொடுத்தேன். இப்ப என்னவென்றால் டாப்லெஸ்ஸாக இருக்கிறதே. இது எனது போட்டோவே இல்லை. மார்பிங் செய்துவிட்டார்கள் என்று படபடக்கிறார்.

இது குறித்து காஜல் மேலும் கூறுகையில்,

நான் கருப்பு டிரஸ் போட்டு தான் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அவர்கள் எனக்கு அனுப்பிய காப்பி கூட என்னிடம் இருக்கிறது. அப்படி இருக்கையில் மார்பிங் செய்து இப்படி ஒரு போட்டோவை அதுவும் அட்டையில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை நான் சும்மா விடப் போவதில்லை. நான் அந்த பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றும் கொடுக்கவில்லை. நான் ஒரு நாளும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்க மாட்டேன். நான் அப்படி பட்டவள் இல்லை என்றார்.

தான் ஒருபோதும் பிகினியில் திரையில் தோன்றமாட்டேன் என்றும், முத்த காட்சிகளுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று காஜல் தெரிவித்ததாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சையின் மறுபெயர் காஜலோ!
 

செக்ஸ் தொந்தரவு: தமிழ் பட தயாரிப்பாளர் மீது இந்தி கவர்ச்சி நடிகை புகார்!


மும்பை: செக்ஸ் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாக தமிழ் பட தயாரிப்பாளர் மீது இந்திப்பட கவர்ச்சி நடிகை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இந்திப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர் நிஷா யாதவ் (வயது 22). இவர் தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழி படங்களிலும், டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார். மும்பையில் உள்ள குரார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர், சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராம்நாத் ஆனந்தன் என்பவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள ஒரு பாரில் ராம்நாத் ஆனந்தன் என்னை சந்தித்தார். அவர் தன்னை சென்னையைச் சேர்ந்த தமிழ் பட தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தனது புதுப் படத்தில் கவர்ச்சி வேடம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார். அதன்பிறகு என்னுடன் நட்பானார்.

அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி என்னை அடிக்கடி அழைத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று ராம்நாத் ஆனந்தன் தொந்தரவு செய்தார். அவருடைய ஆசைக்கு நான் சம்மதிக்க மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் எனக்கு போன் செய்து சென்னைக்கு வருமாறும் அங்கு வந்து தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனால் கோபமடைந்த நான் ஆனந்தனுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டேன். ஆனாலும் அவர் எனக்கு மீண்டும், மீண்டும் போன் செய்து மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். என்னுடன் வசிக்காவிட்டால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். பிரபல தாதா சோட்டாராஜன் என்னுடைய நண்பர் என்று மிரட்டினார்.

எனக்கு தொந்தரவு கொடுத்து வரும் ஆனந்த் ராம்நாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குரார் போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பி.மகாமுல்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

எந்திரன் மற்றும் நில அபகரிப்பால் ரூ 10 கோடி இழந்ததாக சக்தி சிதம்பரம் புகார்!


சென்னை: 'எந்திரன்' படம் மூலமும், நில அபகரிப்பாலும் தனக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் நேற்று பரபரப்பான புகார் கொடுத்தார்.

செவ்வாய்க்கிழமை அவர் இரண்டு விதமான புகார் மனுக்களை கமிஷனரிடம் கொடுத்தார்.

அதன் விவரம்:

நான், தமிழ் திரையுலகில் 20 வருடங்களாக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தொழில் செய்து வருகிறேன். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனாவிடம் இருந்து ரூ.4 கோடிக்கு விலைபேசி வாங்கினேன்.

ரூ.4 கோடி பணத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால் 8 சினிமா தியேட்டர்களில் அந்த படத்தை திரையிட வேண்டும். ஆனால் அதிகம் வசூலாகும் ஒரு தியேட்டரை எனக்கு கொடுக்காமல், 7 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தனர். இதனால் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இதுபற்றி கேட்டபோது, சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் என்னை மிரட்டினார்கள். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.1 கோடியே 60 லட்சத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.

நிலமோசடி

அதே எந்திரன் படம் விநியோக உரிமையை செங்கல்பட்டு ஏரியாவில் நான் எடுத்துள்ளதை அறிந்து, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரன் என்பவரும் அந்த படத்தை வெளியிடுவதில் என்னோடு கூட்டணி சேர்ந்துகொள்வதாக கூறினார்கள். அதற்காக ரூ.2 கோடி தருவதாகவும் சொன்னார்கள்.

அதற்கான ஒப்பந்தம் போடுவதாக வெற்றுத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். செங்கல்பட்டு ஏரியாவில் எந்திரன் படம் விநியோகத்தையும், அதன் கணக்கு வழக்குகளையும் தினகரனே கவனித்துக்கொண்டார்.

பின்னர் திருவள்ளூரில் எனது மாப்பிள்ளைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தினகரன் வாங்கிக்கொண்டார். ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.55 லட்சம் மதிப்புள்ள நிலம் என்று குறைவாக மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்துகொண்டார்கள்.

எந்திரன் படத்தில் வசூலான பணத்தையும் எனக்கு தரவில்லை. நிலம் வாங்கியதற்கான பணத்தையும் எனக்கு தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரனும் ஒரு அறையில் அடைத்துவைத்து மிரட்டினார்கள். அடியாட்களை ஏவிவிட்டு என்னை அடித்து உதைத்தனர். இதுதொடர்பாகவும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்."

இவ்வாறு சக்தி சிதம்பரம் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.