கமலுடன் பாடும் வாய்ப்பு.. அறிமுக பாடகிக்கு அடித்த யோகம்

உத்தம வில்லன் படத்தில் இடம் பெறும் வில்லுப்பாட்டுப் பாடலை பாடும் வாய்ப்பை ஒரு அறிமுக பாடகிக்குத் தந்திருக்கிறார் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் வருகிற மே 1-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘உத்தம வில்லன்'. இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கமலுடன் பாடும் வாய்ப்பு.. அறிமுக பாடகிக்கு அடித்த யோகம்

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தில் இடம்பெற்ற இரணிய நாடகம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலை கமல் எழுதியதோடு மட்டுமல்லாமல், பாடியும் உள்ளார். இவரோடு புதுமுக பாடகி ருக்மிணி அசோக்குமாரும் இணைந்து பாடியுள்ளார்.

கமலுடன் பாடிய அனுபவம் குறித்து ருக்மிணி அசோக்குமார் கூறுகையில், "நான் முதலில் ஜிப்ரானை ஒரு ஆடியோ விழாவில்தான் சந்தித்தேன். அவரிடம் சென்று நான் ஒரு பாடகி என்றும், உங்கள் இசையில் பாட விருப்பம் என்றும் கூறினேன். அப்போது, என்னுடைய பாடல் சிடி ஒன்றை அனுப்பி வைக்கும்படி அவர் கூறினார்.

சில நாட்கள் கழித்து வளசரவாக்கத்தில் உள்ள தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரும்படி ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்றதும், உங்களுக்கு கர்நாடக சங்கீதம் தெரியுமா? என்று என்னிடம் ஜிப்ரான் கேட்டார். கர்நாடக சங்கீதத்தோடு, ஹிந்துஸ்தானி ராகமும் தெரியும் என்று சொன்னேன்.

உடனே, சில வரிகளை கொடுத்து என்னைப் பாடச் சொன்னார். நானும், பாடிக் கொடுத்தேன். என்னுடைய குரலை படத்தின் இயக்குனரிடம் காண்பித்துவிட்டு பிறகு ஓ.கே. சொல்வதாக என்னை வழியனுப்பி வைத்தார். நானும் பலமுறை ஜிப்ரானுக்கு போன் செய்து என்னுடைய குரல் ஓகே ஆகிவிட்டதா? என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

கமலுடன் பாடும் வாய்ப்பு.. அறிமுக பாடகிக்கு அடித்த யோகம்

கடைசியில், நான் உத்தமவில்லன் படத்திற்காகத்தான் இந்த பாடலை பாடியிருக்கிறேன் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக நான் ஜிப்ரானுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த பாடலாக இருக்கும். நான் பாடிய இரணிய நாடகம் பாடலை கமல் எழுதியதோடு மட்டுமில்லாமல், பாடியும் உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் எல்லா பாடல்களையும் கமல் எழுதியுள்ளார். சில பாடல்களை மற்றவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

அப்படி கமல் பாடிய பாடல்கள் அனைத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறார். இரணியன் நாடகம் பாடலில் நானும் கமலும் மட்டும்தான் பாடியுள்ளோம். ஜிப்ரான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில், கமல் போன்ற ஜாம்பவானுடன் இணைந்து பாடுவது என்பது, என்னைப் போன்ற புதிய பாடகர்களுக்கு ஆஸ்கர் விருதைவிட மேலானது," என்றார்.

சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த ருக்மிணி அசோக்குமார் அவரிடம் ஆசி பெற்றார். அப்போது அவரிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார். ‘இசையும் வாழ்க்கையும் சிறக்க வாழ்த்துக்கள்' என்று கமல் தன் கைப்பட எழுதித் தந்துள்ளார்.

 

மணிரத்னம் படத்தை அமெரிக்காவில் பார்த்து ரசித்த ஷங்கர்

மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்காவில் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார் மெகா இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் இப்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

மணிரத்னம் படத்தை அமெரிக்காவில் பார்த்து ரசித்த ஷங்கர்

கடந்த வியாழன்கிழமை அங்கு ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. மணிரத்னத்தின் தீவிர ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஷங்கர், படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து தன் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார்.

அவர் படம் பார்க்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.

ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்கப் போகிறார். அது தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் குறித்தும் அமெரிக்காவில் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

 

'உங்கள் அன்பு மற்றும் வெறித்தனமான விமர்சனத்துக்கு நன்றி!' - மணிரத்னம்!

தனது ஓ காதல் கண்மணி பெரிய வெற்றியைப் பெற உதவிய மீடியா உலகுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. இப்படம் குறித்து ஆக்கப்பூர்வமாக விமர்சனம் எழுதிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மணிரத்னம் கடிதம் எழுதியுள்ளார்.

'உங்கள் அன்பு மற்றும் வெறித்தனமான விமர்சனத்துக்கு நன்றி!' - மணிரத்னம்!

அதில், "அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.

இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

இந்தப் படம் வெளியாவதற்கு ஒருவாரம் முன்புதான் மணிரத்னம் மனைவி, மவுஸ் பிடித்தவர்களெல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார் என்பது நினைவிருக்கலாம்.

 

இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி!

தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை.

ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து.

'டியர் வைரமுத்து, தேவையா இந்த வெட்டி கெத்து?’ - வெளுத்த ஜெயகாந்தன் மகள்

ஆனால் அவர் அப்படிச் செய்த ஒரு விஷயம், இப்போது சந்திக்கு வந்து கேலிக்குரியதாகிவிட்டது.

அது அண்மையில் மறைந்த தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்பானது.

என்ன அது? இதோ ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி இன்று வைரமுத்துவை 'வெளுத்து வாங்கி' எழுதியிருப்பதைப் படியுங்கள்:

"சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:

இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

'டியர் வைரமுத்து, தேவையா இந்த வெட்டி கெத்து?’ - வெளுத்த ஜெயகாந்தன் மகள்

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!

அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது."

-என்னத்தைச் சொல்றது... வைரமுத்து பார்க்காத புகழில்லை. இப்படி அற்பத்தனமாகவா மாட்டிக் கொள்ள வேண்டும்!

 

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- 'கங்காரு' சுரேஷ் காமாட்சி குமுறல்

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை 2-ஐத் தயாரித்தவர். இப்போது தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'சாமி இயக்கத்தில் 'கங்காரு' என்கிற படத்தை தயாரித்து ஏப்ரல் 24ம் தேதி வெளியிடுகிறார். 150 திரையரங்குகளில் படம் வெளியாகிறது .

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- 'கங்காரு' சுரேஷ் காமாட்சி குமுறல்

அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம்? கேட்டவுடன் குமுறிவிட்டார் மனிதர்.

''சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்கள் வரை சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல,'' என்றவர் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார்.

பட்ஜெட்டில் பிரச்சினை!

"ஒரு படக்குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அதற்குள் சொன்ன அந்த தேதிக்குள், சொன்ன செலவுக்குள் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும் வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும்.

சொன்ன தேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப் பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால் கூட விடமாட்டார்கள்.

படப்பிடிப்பில் பிரச்சினை!

படப்பிடிப்பு தொடங்கினால் தினம் தினம் செலவுதான். அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். இப்படி 24 கிராப்டுக்கும் சம்பளம் தர வேண்டும். 2, 3நாள் கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேன் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும். ஒரு ஹேர் டிரஸ்ஸர் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்த முடியும். ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால்... ம்ஹூம், ஒண்ணும் பண்ணமுடியாது!

அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நேர்ந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள். கொடைக்கானலில் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர முன்னே பின்னே ஆகலாம். 2 நாள் கூட பொறுக்க முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர்கள் மட்டும்தான்.

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- 'கங்காரு' சுரேஷ் காமாட்சி குமுறல்

சங்கங்களின் அச்சுறுத்தல்!

திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளை பெற, ஊதியப் பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். நான் ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்கள் கூட சொல்லமுடியாது, நான் சங்கங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லையென்று.

பேட்டா தாமதனதற்கு லைட்மேன் யூனியன் தலைவர் ராஜா என்னை மிரட்டுகிறார். உன் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறார். படப்பிடிப்பு நிறுத்தப் பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா?

24 கிராப்ட்டையும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன. ஆனால் முதல்போட்ட தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்?

வியாபாரத்தில் போராட்டம்!

ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால் அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்வதற்கு தாவு தீர்ந்துவிடுகிறது. ஆளாளுக்கு ஒன்றைக் கூறுவார்கள்.

இந்தச் சூழலில் ஒருதயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்காக எடுக்க வேண்டுமா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்கு எடுக்க வேண்டுமா? விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா ? ஒன்றுமே புரியாது. பேசியபடி வியாபாரம் நடப்பதில்லை.

சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. சினிமாவில். எங்களால்தான் தொழில் நடக்கிறது, ஆனால் எங்களுக்குத்தான் மரியாதை இல்லை.

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால்தான் விநியோகஸ்தர்கள் வருகிறார்கள், வியாபாரம் பேசுகிறார்கள். அவர்களின் முதல் கேள்வியே பெரிய நடிகர்கள் இருக்கிறார்களா என்பதுதான்.

பெரிய நடிகர்கள் ஆறு, ஏழு பேர்தானே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வருஷத்துக்கு எத்தனை படம் எடுக்க முடியும்? ஆறு, ஏழு படம்தானே எடுக்க முடியும். மற்ற நாட்களில் யார் படங்களை திரையரங்கில் வெளியிடுவது? பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேர்தான் இருக்கிறார்கள். மற்றபடங்கள் தயாரிப்பது சின்ன தயாரிப்பாளர்கள்தானே?

திருட்டு விசிடி, சென்டார்...

ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் நோகாமல் திருட்டு விசிடி போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை.

ஒரு படத்துக்கு 'யூ' சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார்யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாகக் கேட்பார்கள். 'யூ' சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும்டா சாமி என்றாகிவிடும்.

இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்ற அச்சுறுத்தல்..

இப்போ சொல்லுங்க தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா இல்லையா?" என்று நம்மையே கேட்கிறார் சுரேஷ் காமாட்சி.

சரி, முதல் படம் அமைதிப்படை 2 பரபரப்பா அமைஞ்சிடுச்சி.. இரண்டாவது படம் கங்காரு எப்படி வந்திருக்கு?

''கங்காரு' நல்லா வந்திருக்கு. ஒவ்வொரு தயாரிப்பாளரும் சொல்றதுதான் இது என்றாலும், படத்தின் மீது அதன் தரத்தின் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதால் இதைச் சொல்கிறேன். எந்தப் போட்டியுமில்லாமல் ஏப்ரல் 24-ம் தேதியன்று வெளியாகிறது.'' என்றார்.

 

"பேயை"ப் பாராட்டிய விஜய்!

சென்னை: காஞ்சனா 2 படம் ராகவா லாரன்ஸை குஷியாக்கியுள்ளது. பாராட்டுகள் குவிகின்றன.. மறுபக்கம் தியேட்டர்களில் வசூல் அள்ளிக் குமிக்கிறதாம்.. இந்த நிலையில் நடிகர் விஜய் வேறு லாரன்ஸைக் கூப்பிட்டுப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

இளையதளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள். ஒரு படத்தில் கூட ஒரு காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் காஞ்சனா 2 படத்தின் வெற்றியால் ராகவா லாரன்ஸுக்கு அடுத்தடுத்து ஸ்வீட் சர்பிரைஸ் ஆக குவிந்து கொண்டிருக்கிறதாம்.

காஞ்சனா - 2 படத்தின் மெகா ஹிட் பற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தாராம்..

நல்ல நண்பரின் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அடுத்த வாழ்த்து 'தல' கிட்ட இருந்தா லாரன்ஸ்?.... 'தல'யும் லாரன்ஸுக்கு பெஸ்ட் பிரண்ட்தானே!

 

இது சின்னத்திரை திரைமறைவுகள்... கம்முன்னு படிங்க!...

20க்கும் மேற்பட்ட சேனல்களில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் கேம் ஷோக்கள் என கலந்து கட்டி அடிக்கின்றன டிவி சேனல்கள். இதில் மக்கள் எந்த சேனல்களை ரசிக்கிறார்கள் என்பதை டி.ஆர்.பிக்கள் காட்டிக்கொடுகின்றன. இந்த சேனல்களில் நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி சின்னச் சின்ன திரைமறைவு ரகசியங்களை உங்களுக்கு அளிக்கும் பகுதிதான் கம்முன்னு படிங்க... படிச்சு என்ஜாய் பண்ணுங்க வாசகர்களே.

பிரகாஷூ நிஜமாப்பா

சூர்ய டிவியில் இரவு 8 மணி ஆகிவிட்டாலே பிரகாஷை பார்க்க இல்லத்தரசிகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு நல்ல பிள்ளையாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார் பிரகாஷ். இந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் பெரிய திரையில் தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறாராம் பிரகாச நடிகர். ஏற்கனவே சினிமாவில் நடித்த போது ஹீரோயினாக நடித்த மன்மதராச நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சின்னத்திரையில் பிரபலமாக நடித்தாலும் மீண்டும் பெரிய திரை பக்கம் கவனம் செலுத்தி வருகிறராம் பிரகாச நடிகர்.

நடனமாட ஆர்வம் காட்டும் ரம்மியம்...

சின்னத்திரை தொகுப்பாளியான ரம்மியம் நடனம், நடிப்பு என்று ஆர்வம் காட்டாமல் இருந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர் தற்போது நடனத்திலும் ஆர்வம் காட்டி வருகிறாம். நட்சத்திர தொலைக்காட்சியின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஆடிய அவருக்கு நடனத்தின் மீது கவனம் திரும்பியுள்ளதாம்.

12 ஆண்டுகளாக முறைப்படி நடனம் கற்றவராம் ரம்மியம். சின்னத்திரை தொகுப்பாளினியான பின்னர் நடனத்தை கைவிட்டிருந்த அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கவே அதை வகையாக பயன்படுத்திக் கொண்டாராம்.

சந்தோசத்தில் சித்தியும், மாமியாரும்

சின்னத்திரை நட்சத்திரங்கள் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவே ஒரே ஒரு சேனல் மட்டும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்களை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளதாம்.

ஆனால் டி.ஆர்.பியில் பரபரப்பாக இருக்கும் அந்த சி.ஐ.டி தொடரை மட்டும் நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டதாம். ஏதோ இந்த மட்டிலாவது நிறுத்த ஒப்புக்கொண்டார்களே என்று சந்தோசப்படுகிறார்களாம் சித்தியும், மாமியார் நடிகையும்.

தமிழுக்கு வந்த அக்கட தேச தொகுப்பாளினி

அக்கட தேசத்தில் இருந்தும் அவ்விட தேசத்தில் இருந்தும் நடிகைகள்தான் சீரியலுக்கு வந்தனர். இப்போது புதிய முயற்சியாக அக்கட தேசத்து தொகுப்பாளினிகளை களமிறக்குகிறது பாலிவுட்டை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனல்.

தமிழ் தொகுப்பாளினிகளைப் பார்த்து போரடித்துப் போனவர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாம் இது. சேனலின் லோகோவை மங்களகரமாக மாற்றிய அந்த சேனல் ஆண்களின் ஆடையைப் பெயராகக் கொண்டு ஒரு கேம் ஷோவை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியில்தான் களமிறங்கியுள்ளார் புதிய தொகுப்பாளினி.

இவர் நட்சத்திர சேனலின் தொகுப்பாளினி போல அக்கட தேசத்தில் பிரபலமானவராம். மலையாள தேசத்து மங்கையான இவர் மலையாள படங்களில் தலைகாட்டியுள்ளாராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளும் அத்துபடியாம் இந்த தொகுப்பாளினிக்கு.

என்ன திறமை இருந்தாலும் மக்கள் ரசிச்சு டி.ஆர்.பியில வந்தாதானே அந்த நிகழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் டிவி ரசிகர்கள்.

விலகியதன் மர்மம் என்ன தெரியுமா?

பிரபலமான சீரியல்களில் இப்போதெல்லாம் இவருக்கு பதில் இவர் என்று போடுவது வாடிக்கையாகிவிட்டது. பிரபல சேனல்களான சூரிய தொலைக்காட்சியில் ஹீரோயினாக நடித்து வந்த சேது நடிகை திடீரென விலகினார். அவருக்கு பதில் இப்போது பிரபல இசையமைப்பாளரின் மருமகள் நடித்து வருகிறார். சேது நடிகை விலகக் காரணம் அவர் கர்ப்பம் ஆனதுதான் காரணம் என்கின்றனர்.

அதேபோல திருமணத்திற்குப் பின்னர் மும்பையில் செட்டில் ஆன மெட்டி ஒலி நடிகை தற்போது பாடகரின் மகனுடன் சீரியலில் ஜோடி சேர்ந்தார். அவரும் இப்போது கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவருக்குப் பதில் இவர் என்று கார்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

அமெரிக்காவில் நல்ல வசூலுடன் ஓ காதல் கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மணிரத்னம் படங்கள் கடந்த பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றிகளைப் பெறத் தவறி வந்தன. கடல் படம் படுதோல்வியைத் தழுவியது.

அமெரிக்காவில் நல்ல வசூலுடன் ஓ காதல் கண்மணி

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அவரது ஓ காதல் கண்மணி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஓ காதல் கண்மணி மற்றும் அதன் தெலுங்குப் பதிப்பான ஓகே பங்காரம் இரண்டும் வியாழக்கிழமை சிறப்புக் காட்சியில் மட்டும் ரூ 1.60 கோடியை வசூலித்துள்ளன. இதில் தமிழ்ப் பதிப்பு மட்டும் ரூ 1.10 கோடியை வசூலித்துள்ளது.

அஜீத், விஜய் படங்களுக்கு நிகரான வரவேற்பு ஓ காதல் கண்மணிக்கும் அங்கு கிடைத்துள்ளது. குறைவான விலைக்கே படம் விற்கப்பட்டிருப்பதால், வெளியிட்ட ப்ரைம் மீடியா நிறுவனத்துக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.

 

ஐஸு மக சரியான வாயாடி.. சொல்லிச் சொல்லி பூரிக்கும் அமிதாப் தாத்தா!

மும்பை: ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யா பேச ஆரம்பித்து விட்டால், நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாள் என்று தனது பேத்தி புராணம் பாடியுள்ளார் அமிதாப் பச்சன்.

தநது பிளாக்கில் பேத்தி ஆரத்யா குறித்து சிலாகித்து பூரித்து எழுதியுள்ளார் அமிதாப் பச்சன்.

ஆரத்யா நன்றாக கதை சொல்வாள் என்றும் அதைக் கேட்பதில் தனக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்றும் பச்சன் கூறுகிறார்.

ஐஸு மக சரியான வாயாடி.. சொல்லிச் சொல்லி பூரிக்கும் அமிதாப் தாத்தா!

3 வயதான ஆரத்யா, அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாவின் செல்ல மகள் ஆவர். தனது பேத்தி குறித்து அமிதாப் கூறுகையில், எதாவது பேசிக் கொண்டே இருக்கிறாள் ஆரத்யா. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். ரொம்ப மெச்சூர்டாக இருக்கிறாள்.

அவளுடன் இருப்பதே மிகச் சந்தோஷமான விஷயம். அதுவும் அவள் கூறும் கதைகளைக் கேட்பதில் பரம சந்தோஷம்.

விடாமல் பேசுவாள் ஆரத்யா. பேச ஆரம்பித்து விட்டால் நிறுத்த மாட்டாள். இடை இடையே கேள்விகள் வேறு சரமாரியாக வந்து விழும்.. நாம் பதில் சொல்லியாக வேண்டும். அருமையான அனுபவம் இது.

தனது பிரண்ட்ஸ் குறித்தும், தனது பொம்மைகள் குறித்தும், தனது வீடு குறித்தும், தனது வீட்டில் உள்ளோர் குறித்தும் கதை கதையாகப் பேசுவாள். இதுதான் குழந்தைத்தனத்தின் அருமையான தருணங்கள். இந்தப் பெரிய உலகுக்குள் எக்ஸ்போஸ் ஆவற்கு முன்பு இந்த அருமையான மகிழ்ச்சியான தருணத்தை குழந்தைகள் சந்திக்கிறார்கள்... என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

2007ல் திருமணமான அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடிக்கு 2011ல் ஆரத்யா பிறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காஞ்சனா 2... திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை!

ராகவா லாரன்சின் கோடை வெளியீடான காஞ்சனா 2 படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

தமிழகத்தில் படம் வெளியான முதல் நாளில் ரூ 6 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. காஞ்சனா 2ன் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய வசூலாகும்.

தமிழகம் தாண்டி மலேசியாவில் அதிக அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. அங்கும் வசூலில் பட்டையைக் கிளப்புகிறது படம்.

காஞ்சனா 2... திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை!

ஆந்திராவில் இந்தப் படம் தெலுங்கில் வெளியானது. அனைத்து அரங்குகளிலும் 90 சதவீதத்துக்கும் அதிகமான கூட்டம். ஆந்திர பாக்ஸ் ஆபீசில் சூப்பர் ஹிட் என அறிவிக்கப்பட்டுவிட்டது இந்தப் படம்.

கேரளாவில் நேரடித் தமிழ்ப் படமாகவே காஞ்சனா 2 வெளியானது. கிட்டத்தட்ட 50 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு, வசூல்.

இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் காஞ்சனா 2-தான். ராகவா லாரன்ஸின் கேரியரிலும் மிகப் பெரிய வசூலைக் குவித்த படமாக இந்தப் படம் திகழ்கிறது.

 

நடிகை புவனேஸ்வரியின் தியேட்டரை மோசடியாய் அபகரித்தவர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சினிமா நடிகை புவனேஸ்வரி. இவரது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூரில், 64 சென்ட் நிலத்தில் அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அஷ்டலட்சுமி என்ற பெயரில் திரையரங்கும் உள்ளது.

நடிகை புவனேஸ்வரியின் தியேட்டரை மோசடியாய் அபகரித்தவர் மீது வழக்கு பதிவு

கடந்த 2012 ஆம் ஆண்டு புவனேஸ்வரி, தனது வீட்டை விற்பதற்காக அன்னூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்காக நடந்த பத்திரப்பதிவின் போது, புவனேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலிருந்த திரையரங்கத்தையும் சேர்த்து, போலிக் கையெழுத்துப் போட்டு, தனது பெயருக்கு சுப்பிரமணியம் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக தெரிகிறது.

சுப்பிரமணியம் ஏமாற்றி வாங்கிய அந்தத் திரையரங்கின் மதிப்பு ரூபாய் 3 கோடி என தெரியவந்துள்ளது. இது குறித்து புவனேஸ்வரி கடந்த 2012 ஆம் ஆண்டு அன்னூர் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த புகார் மனு கோவை மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அன்னூர் போலீஸார், புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

 

ஜீவா - நயன்தாரா நடிக்கும் புதுப்படம் திருநாள்!

ஈ படத்திற்குப் பிறகு ஜீவா, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் படத்துக்கு திருநாள் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்ததை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆக்ஷன், காமெடியை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஜீவா - நயன்தாரா நடிக்கும் புதுப்படம் திருநாள்!

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும் படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் முதல் முறையாக ஈ படத்தில் ஜீவாவும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்தனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இடையில் நயன்தாரா நடித்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தார் ஜீவா.

 

கமலின் அடுத்த படத் தலைப்பு.. ஒரே இரவு!

கமலின் அடுத்த படத்துக்கு ஒரே இரவு என்று தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் ராஜாவுக்குப் பிறகு இந்தப் படத்தில் கமலுடன் இணைகிறார் பிரகாஷ் ராஜ்.

கமல் நடித்துள்ள ‘உத்தமவில்லன்' மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து பாபநாசமும், விஸ்வரூபம் 2-ம் வெளியாக உள்ளன.

கமலின் அடுத்த படத் தலைப்பு.. ஒரே இரவு!

இவற்றுக்குப் பிறகு கமல் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்கு ஒரே இரவு என்று தலைப்பிட்டுள்ளனர். இதில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரகாஷ் ராஜ். இந்தப் புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ள புதிய படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார். கமலே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது.

 

ஸ்வீடன் பட விழாவில் மேரி கோமுக்கு வெண்கல குதிரை விருது!

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் சர்வதேச ஜூனியர் திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான 'மேரி கோம்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

9 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நடுவர்களாக இருந்து 'மேரி கோம்' படத்துக்கு வெண்கல குதிரையைப் பரிசாக வழங்கினர்.

ஸ்வீடன் பட விழாவில் மேரி கோமுக்கு வெண்கல குதிரை விருது!

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது.

அது மட்டுமின்றி, கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாலும் திரையிடப்பட்ட ‘மேரி கோம்' சர்வதேச சினிமா விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது நினைவிருக்கலாம்.

அடுத்த மாதம் ஸ்வீடனில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவிலும் இப்படத்தை திரையிட உள்ளதாக 'மேரி கோம்' படத்தின் இயக்குனர் ஓமங்குமார் தெரிவித்துள்ளார்.

 

உமா ரியாஸ் போட்ட காக்கிச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்ட ராய் லட்சுமி!

மும்பை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் அகிரா படத்தில் ராய் லட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் தீனா, ரமணா, கஜினி, 7-ம் அறிவு, துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தனது கஜினி படத்தை ஏற்கனவே இந்தியில் ரீமேக் செய்தார்.

இந்நிலையில், தற்போது தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மவுனகுரு' என்ற தமிழ் படத்தை இந்தியில், 'அகிரா' என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இதில், அருள்நிதி நடித்த வேடத்தை பெண் கதாபாத்திரமாக மாற்றி, அதில் சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்கிறார்.

உமா ரியாஸ் போட்ட காக்கிச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்ட ராய் லட்சுமி!

பிரபல இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

'மவுன குரு' படத்தில் உமா ரியாஸ் நடித்த பெண் போலீஸ் வேடம், ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆகும். தற்பொது இந்தி ரீமேக்கில் இந்த வேடத்தில் ராய் லட்சுமி நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

ராய் லட்சுமி நடிக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தது போல் 'அகிரா' (இந்தி) படத்திலும் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராய் லட்சுமி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.