விஸ்வரூபம் என் சொந்தக் கதை... என் தேதிகள் வீணடிக்கப்பட்டதால் நானே தயாரிக்கிறேன்! - கமல்


விஸ்வரூபம் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பேட்டியும் கொடுத்ததில்லை கமல்ஹாஸன்.

முதல்முறையாக மும்பை பத்திரிகை ஒன்றுக்கு இப்போது பேட்டியளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.

என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

விஸ்வரூபம் எனது கதை

ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.

நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல்.
 

'முகமூடி'யில் நாகேஸ்வரராவ் - பிரகாஷ் ராஜ்!


மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.

இவரைத் தவிர, முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

யுடிவி தயாரிப்பில், ஜீவா - பூஜா ஹெக்டே நடிக்கும் முகமூடி படத்தில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார் நரேன். இதற்காக பல மலையாளப்பட வாய்ப்புகளைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டார் நரேன்.

இப்போது இந்தப் படத்தில் தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நாகேஸ்வரராவ் தவிர, முன்னணி கலைஞர் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய வேடத்தில் வருகிறார்.

கே இசையமைக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.
 

ரூ 60 லட்சம் செட் பழசாகக் காத்திருக்கும் 'கும்கி' டீம்!


கும்கி படம் குறித்து வரும் செய்திகள், அந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்புகளை வெகுவாக அதிகரித்துள்ளது.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. யானைகளின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் பிரமாண்ட காதல் படம் இது. பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவின் அடர்ந்த காடுகளில்தான்.

கும்கி கிளைமாக்ஸுக்காக சமீபத்தில் ரூ 60 லட்சத்தில் ஒரு செட் போட்டிருக்கிறார்கள் கேரளாவின் மூணாறு பகுதியில்.

ஆனால் போட்டவுடன் படப்பிடிப்பு நடத்தவில்லை. காரணம், செட் புதிதாக இருந்ததுதானாம். எனவே அது பழசாக இப்போது காத்திருக்கிறார்கள் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர்.

இதுகுறித்து இயக்குநர் பிரபு சாலமனிடம் கேட்டபோது, "செட் புதிதாக இருந்தால் அன்னியமாக இருக்கும். சரி பழசாகவே போட்டுவிடலாம் என்றால், அதில் பர்பெக்ஷன் கிடைக்காது, முழுமையாகவும் இருக்காது. எனவே அந்த செட் இயற்கையாகவே பழசாக வேண்டும். அதனால் காத்திருக்கிறோம்," என்றார்.
 

கமலுக்கு ஜோடி கிடைச்சாச்சு...!


விஸ்வரூபம் படத்தில் பொருத்தமான ஹீரோயின் கிடைக்காததால், கதாநாயகி இல்லாமலேயே ஷூட்டிங்கைத் தொடங்கி பாதி முடித்துவிட்ட கமலுக்கு ஒருவழியாக ஜோடி கிடைத்துவிட்டது.

ஹீரோயின் பெயர் பூஜா குமார். நியூயார்க்கில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். சில ஆங்கிலப் படங்கள், இந்திப் படங்களிலும் தலைகாட்டியுள்ளாராம்.

பஞ்சாபைச் சேர்ந்த இவர் பிரபலமான மாடலும் கூட.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்து, படம் தாமதமானதால் விலகிக் கொண்டார். பின்னர் அனுஷ், ஸ்ரேயா என பலரும் வந்தார்கள், போனார்கள்.

இதனால் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமலேயே படப்பிடிப்பைத் தொடர்ந்தார் கமல்.

இப்போது மும்பை பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பூஜா குமார் என்ற என் ஆர் ஐ பெண்ணை விஸ்வரூபம் படத்தில் நாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அவருக்கு அமையும். நல்ல திறமையான நடிகை," என்று கூறியுள்ளார்.

இந்த பூஜா குமார் யார் என்பதை இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லையா...

12 ஆண்டுகளுக்கு முன், தமிழில் 'காதல் ரோஜாவே' என்றொரு படம் வந்தது நினைவிருக்கிறதா... கேயார் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்தவர்தான் இந்த பூஜா குமார்!
 

ஜெய்யுடன் காதல் இல்லை... இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன்...! - அஞ்சலி அதிரடி


எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் ஜெய்யுடன் இனி நடிக்கப் போவதும் இல்லை, என்று அறிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை ஜெய்யும் அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பொது இடங்களில் இருவரும் அடிக்கடி காணப்பட்டனர். ஏழாம் அறிவு பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினர்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் என கிசுகிசு வெளியானது. இந்த நிலையில், ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் ஏஜிஎஸ் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், அனைத்து கிசுக்கள் மற்றும் செய்திகளை மறுத்து ஒரு அறிக்கை வெியிட்டுள்ளார் அஞ்சலி.

அதில், "அங்காடித் தெரு மூலம் எனக்கொரு அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர் ரசிகைகளுக்கு எங்கேயும் எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

வாழ்க்கையில் ஜெயிக்க போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் போராடிய பிறகுதான் நல்ல நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.

இப்போதுதான் நல்ல நல்ல படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல், ஒரு நடிகருடன் காதல் (ஜெய்), திருமணம் என்றெல்லாம் பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் கிசுகிசுக்கப்படும் அந்த நடிகருடன் இணைந்து ஒரு படம்தான் நடித்துள்ளேன். அதன் பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். அப்படி வந்த வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டேன்.

நான் இன்னும் வளரவேண்டும். நல்ல நடிகை என பெயரெடுத்து விருதுகளை வாங்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்.

எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதனை பகிரங்கமாக இப்போது அறிவிக்கிறேன்.

தயவு செய்து இனி அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள். நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.
 

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினாரா சிவக்குமார்?


பொதுமேடைகளில், குறிப்பாக இலக்கிய மேடைகளில் நடிகர் சிவகுமாரை அடிக்கடி பார்க்கலாம். அவரது பேச்சுக்கு கல்லூரி மாணவ மாணவிகளிடையிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், அடிக்கடி அவரை அழைத்துப் பேச வைக்கின்றனர்.

அவரது ராமாயண சொற்பொழிவு பெரிதும் ரசித்துப் பாராட்டப்பட்டது. வரலாற்று நாயகர்கள் குறித்தும் இப்போது நிறைய பேசி வருகிறார்.

பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதுபோல, அவர் எல்லா மேடைகளிலுமே சில விஷயங்களை உரிமையுடன் கூறுகிறார். அப்படி அவர் சொன்ன சில கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இதுதொடர்பாக ஒரு இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி:

சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.

இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.

"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது? குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?

மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?

தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது. நடிகை குஷ்பு "தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை" என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது. உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை?

தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான, அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து “அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

மேடையில் உணர்ச்சிகரமாக பேசி ‘திரில்’ ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார்.

கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம்.

இதுதான் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "இது விதண்டாவாதம். சிவகுமார் வெறும் விளம்பரத்துக்காக பேசக்கூடிய மனிதரல்ல. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. எப்போதும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர். அவர் பேச்சு அடங்கிய முழு வீடியோவும் கடந்த 6 மாதங்களாகவே அனைத்து இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. டிவியிலும் வந்துள்ளது. அதைக் கேட்டுப் பார்த்தால், அவர் பேச்சு எந்த அளவு சரியானது என்பது புரியும்.

விமர்சகர்கள் குற்றமாகக் குறிப்பிடும் அந்தக் கருத்து சிவகுமாரின் சொந்த கருத்தல்ல. கருத்தடைச் சாதனம் பற்றி அவர் சொன்னது நாளிதழ்களில் வெளியான செய்தி. அதேபோல, அந்தக் காலத்தில் இருந்த பிரபல சினிமா கதாநாயகனுக்கு பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான மோகத்தைச் சுட்டிக்காட்டவே இந்த உதாரணத்தை அவர் சொன்னார். அதை வைத்து அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அப்படிச் சொன்னார் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

காதல் திருமணங்களை அவர் பொதுவாகக் குறை சொல்லவில்லை. சமூகத்தில் ஓரிருவர் தவறிப் போய் தப்பான வழியில் செல்வதைக் குறிப்பிட்டு, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சறுக்கி விடக்கூடாது என்றுதான் அறிவுரை சொன்னார்.

அதைப் போய் தவறாக சித்தரித்து சர்ச்சை கிளப்புவது சரிதானா... இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், தமிழ் இலக்கிய மேடைகளில் ஒருவரும் பேச முடியாமல் போகும். முதலில் அவர் பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு விமர்சிக்கவும்," என்கிறது சிவகுமார் தரப்பு.
 

பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணமே செல்லாது! - உயர் நீதிமன்றம்


சென்னை: நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமிக்கு நடந்த திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கிரகலட்சுமி ஏற்கனவே திருணமானவர் என தெரிய வந்ததும் 2007-ம் ஆண்டு பிரசாந்த் கிரகலட்சுமியை விட்டுப் பிரிந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்கள் நடந்தது.

திருமணம் செல்லாது என அறிவிக்க 2009-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது என தீர்ப்பு கூறினர்.

அதைத் தொடர்ந்து தன்னை பிரசாந்துடன் இணைத்து வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கிரகலட்சுமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுமீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அதில் இருவர் திருமணமும் செல்லாது என குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீதிபதி உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து கிரகலட்சுமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.