ரஜினியைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அவரை மீண்டும் பார்க்கணும், என்று கூறியுள்ளார் தளபதி படத்தில் அவருடன் நடித்த அரவிந்த் சாமி.
மணிரத்னம் இயக்கி ரஜினி - மம்முட்டி நடித்த தளபதி படம் இன்றும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களுள் ஒன்று. அந்தப் படத்தில் கலெக்டராக வரும் அரவிந்த் சாமியும் மிக முக்கியமான பாத்திரம்.
முன்னணி நாயகனாக வரவேண்டிய அரவிந்த் சாமி, ஏனோ இடையில் சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார். விபத்தில் சிக்கி பெரும் பாதிப்புக்குள்ளானார். அதே நேரம் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார்.
இந்த பாதிப்புகளிலிருந்து மீண்ட அரவிந்த் சாமி, இப்போது மீண்டும் பிஸியான நடிகராகிவிட்டார்.
விகடனுக்கு பேட்டியளித்துள்ள அவரிடம், "தளபதி' படத்துக்குப் பிறகு ரஜினியைச் சந்திச்சுப் பேசினீங்களா?'' என்று கேட்டிருந்தனர்.
அதற்கு அவர் அளித்த பதில்: 'தளபதி' படம் பண்ணும்போது எனக்கு 20 வயசு. யார்கிட்டயும் எந்தத் தயக்கமும் கிடையாது. 'ஹலோ சார், எப்படி இருக்கீங்க?'னு போய் பேசிக்கிட்டே இருப்பேன்.
ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரம் வந்துட்டேன். ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு ஒரு ரூம்ல போய் படுத்துத் தூங்கிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்து பார்த்தா, பக்கத்துல உள்ள ஒரு சோபாவுல கை கால்களைக் குறுக்கிக்கிட்டு ரஜினி சார் படுத்திருந்தார்.
மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி சார்கிட்ட, 'ஏன் சார் அங்கே படுத்திருக்கார்? நல்லா வசதியா ஏதாவது பெட்ல படுக்கவேண்டியது தானே?'னு கேட்டேன். 'இது அவர் ரூம். நீங்க வந்து படுத்தீட்டீங்க'னு சொன்னார்.
'எழுப்பி இருக்கலாமே!' கேட்டேன். ''டிஸ்டர்ப் பண்ண வேணாம், தூங்கட்டும்'னு சொல்லிட்டார்'னு சொன்னார்.
அதேபோல, மைசூர்ல ஷூட்டிங். ஒரு இடத்துல யோசிக்கிற மாதிரி நின்னு பார்த்துக்கிட்டே இருந்தார். சுத்தியும் ஆயிரக்கணக்கில் கூட்டம். 'என்ன சார்... என்ன யோசனை'ங்கிற மாதிரி போய் நின்னேன். தன் சின்ன வயசுல பசியில ரெண்டு மூணு நாட்கள் அந்த இடத்துல படுத்துக்கிடந்ததைச் சொன்னார். இப்படி நிறைய அனுபவங்கள்... ரொம்ப வருஷம் ஆச்சு அவரைப் பார்த்து. மறுபடியும் பார்க்கணும்.''