விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

சென்னை: கத்தி படப்பிடிப்பை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை வேறு இடத்தில் நடித்த வேண்டியதாகிவிட்டதாம்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கத்தி. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த முருகதாஸ் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தினார்.

விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மூன்றாவது நாள் படப்பிடிப்பை இங்கு எல்லாம் நடத்தக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகள் திடீர் என்று தெரிவித்துவிட்டார்களாம். விமான நிலையத்தில் முருகதாஸ் ஒரு பாடல் காட்சியை வேறு படமாக்க நினைத்திருந்தார். இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி இடத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதி பெற்று அங்கு சென்றுவிட்டார். முன்னதாக கடந்த மாதம் சென்னை விமான நிலையத்தில் முருகதாஸ் கத்தி படத்தின் சில காட்சிகளை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், நந்திதா, காளி, ராமதாஸ்

ஒளிப்பதிவு: பிவி சங்கர்

இசை: சீன் ரோல்டன்

தயாரிப்பு: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: ராம்


மக்களுக்கான ஒரு செய்தியை பிரச்சார நெடியின்றி சொல்வதற்குப் பெயர்தான் கலை. முண்டாசுப்பட்டியில் அந்தக் கலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு மூட நம்பிக்கை. யாராவது போட்டோ எடுத்துக் கொண்டால் பொசுக்கென்று செத்துப்போய்விடுவார்கள் என்று. ஏன்... 1947-ல் நடந்த ஒரு ப்ளாஷ்பேக் சம்பவம். ஒரு வெள்ளைக்காரர் அந்த ஊருக்கு வருகிறார். ஊர் மக்களை போட்டோ எடுத்துச் செல்கிறார். அடுத்த சில நாட்களில் பல நோயில் விழுந்து இறக்கின்றனர்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்  

அன்று முதல் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை அந்த ஊர்க்காரர்கள்.

இப்படியிருக்க, அந்த ஊர் மக்களின் குலதெய்வ சிலையை திருட வருகிறது ஒரு கும்பல். சிலையைத் திருடிக்கொண்டு போகும்போது, ஒரு எரிகல், சாமி சிலை இருந்த இடத்தில் விழுகிறது. தங்கள் குல தெய்வம்தான் வானத்திலிருந்து கல்லாக விழுந்தது என நம்புகிறார்கள் மக்கள்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

எரிகல் விழுந்ததை அறிந்த வெள்ளைக்காரர் மறுபடியும் முண்டாசுப்பட்டிக்கு வருகிறார். 'வந்துட்டானா மறுபடியும் போட்டோ எடுக்க..' என்று வெறியோடு அவரை அடித்து விரட்டுகிறார்கள் மக்கள். தப்பித்துச் செல்லும் வெள்ளைக்காரர் அந்த எரிகல்லின் ஒரு சிறு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறார்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

அதை ஆய்வு செய்ததில், அந்த கல் விலைமதிக்க முடியாத கனிமப் பொருள் என்பதைக் கண்டறிகிறார்.

இப்போது 1983-க்கு வருகிறது கதை. போட்டோக் கடை வைத்திருக்கும் விஷ்ணுவுக்கு ஒருநாள் முண்டாசுப்பட்டி கிராமத்தில் சாகக் கிடக்கும் பெரியவரை படமெடுக்கச் சொல்லி அழைக்கிறார்கள். பணத்துக்காக அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பன் காளியுடன் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு நந்திதாவைப் பார்க்கும் விஷ்ணு, அவள்தான் இறக்கப் போகும் ஊர் தலைவரின் பேத்தி என்பதையும் அறிகிறான். ஆனால் பெரியவர் இறந்தபிறகுதான் அவரை படம் எடுக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிக்க, அங்கேயே தங்குகிறார்கள். அப்படியே நந்திதாவிடம் காதலைச் சொல்கிறான் நாயகன். நந்திதா மறுத்துவிட, விஷ்ணுவின் ஒருதலைக் காதல் தொடர்கிறது.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

பெரியவர் இறந்ததும் அவரது உடலைப் படமெடுக்கிறார் விஷ்ணு. ஆனால் போய் பிரிண்ட் போட்டால், பெரியவர் படமே பதிவாகவில்லை. பதறிப் போய், முனீஷ்காந்த் என்வரை தாஜா செய்து, பெரியவர் மாதிரி வேஷம் போட்டு படமெடுத்து கொண்டு போய் நந்திதா வீட்டில் தருகிறார்கள். அப்போதுதான் செத்துப்போன பெரியவரின் தம்பி மகன்தான் இந்த முனீஷ்காந்த் என்று தெரிகிறது.

போட்டோ மூட நம்பிக்கை, விண்கல் திருடும் முயற்சி, முனீஷ்காந்திடம் மாட்டிக் கொள்ளும் விஷ்ணு - காளி... இந்த மூன்று விஷயங்களும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதுதான் மீதிக் கதை.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

விஷ்ணுவுக்கு வித்தியாசமான வேடம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் குரல் உச்சரிப்பு எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதுதான் அவரது மைனஸ். பழைய நடிகர் சுதாகர் கெட்டப்பில் அச்சு அசலாக 80களின் இளைஞரை விஷ்ணு உருவில் பார்க்க முடிந்தது.

நந்திதா பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி அத்தனை அடக்கமாக, இயல்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட, இதில் பளிச்சென்று அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

காளிக்கு இதில் பிரதான வேடம். கலக்கி இருக்கிறார். அவரும் விஷ்ணுவும் சேர்ந்து படத்துக்கு தனி காமெடியனே தேவையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

அப்புறம்.. அந்த முனீஷ்காந்த் என்கிற ராமதாஸ். வெளுத்துக் கட்டிவிட்டார். இனி சந்தானம், சூரிக்கு கொஞ்சம் டல்லடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு காமெடியில் ரகளை பண்ணியிருக்கிறார்.

பிவி சங்கரின் ஒளிப்பதிவு, சீன் ரோல்டனின் இசை, இரண்டுமே படத்துக்கு பலம்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

முன்பாதி கொஞ்சம் ஆமை வேகத்தில் இருந்தாலும், க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க நகைச்சுவையே படத்தில் பிரதானமாகிவிடுவதால், சிரிப்பு வாயும், மலர்ந்த முகமுமாக வெளியில் வருகிறார்கள் பார்வையாளர்கள். அதுதான் இயக்குநர் ராமுக்குக் கிடைத்த வெற்றி!

 

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

பிரகாஷ் ராஜ் இயக்கிய உன் சமையலறையில் படம் கேரளாவில் இளையராஜா ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

பிரகாஷ் ராஜ், சினேகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த படம் உன் சமையலறையில். தெலுங்கு, கன்னடத்திலும் வெளியானது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போனது. ஆனால் கன்னடத்தில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் குறிப்பிட்டிருந்தனர் மீடியா விமர்சனங்களில்.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

இந்தப் படத்தை கேரளாவில் வெளியிட வேண்டாம் என்றுதான் பிரகாஷ்ராஜ் முடிவு செய்திருந்தார். ஆனால் இளையராஜாவுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்தப் படத்தை அவர் இசைக்காகவே கேரளாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

இளையராஜாவின் இசைக் காவியம் என்ற முத்திரையோடு போஸ்டர்களை அடித்து அங்கு விளம்பரப்படுத்தியுள்ளனர் இந்தப் படத்தை.

 

ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: இயக்குநர் கவுதமன்

ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: இயக்குநர் கவுதமன்

சென்னை: தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை இல்லாததால் கலந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார்.

அரசு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார். மருத்துவம்தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் 1996ஆம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது. இதனால் நந்தினி போன்ற பல மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து இன்றுவரையிலும் அகதியாக வளரும், வாழும் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு முதல்வர் விரைந்து தீர்வு காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில்வாடும் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும், கல்வியும் கிடைக்க வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும்.

எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை கலைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நந்தினியின் கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

2 நடிகையும் சேர்ந்து நடிக்கையில் என்ன பூகம்பம் வெடிக்குமோ: பயத்தில் தயாரிப்பாளர்கள்

சென்னை: ஏ.ஜே. நடிகர் நடித்து வரும் படத்தில் 2 நாயகிகளும் ஒருசேர தோன்றும் காட்சியை படமாக்கும்போது என்ன பிரச்சனை வரப் போகிறதோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

மேனன் இயக்குனரின் படத்தில் ஏ.ஜே. நடிகர் நடித்து வருகிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் 2 நாயகிகள். அதில் உயர்ந்த நடிகைக்கு காதல் செய்வதும், டூயட் பாடுவதும் தான் வேலையாம். இரண்டாவது நாயகியான மூனுஷாவுக்கு வலுவான காதபாத்திரமாம்.

இதை அறிந்த உயர்ந்த நடிகை ஏ.ஜே.விடம் கூற அவரோ இயக்குனரிடம் இரண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். நடிப்பவர்களிடம் கதை என்ன என்பதையே கூறாத இயக்குனரிடம் போய் உயர்ந்த நடிகை மொத்த ஸ்கிரிப்ட்டையும் கேட்டுள்ளாராம்.

இந்நிலையில் 2 நாயகிகளும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்க உள்ளார்களாம். அப்போது என்ன பூகம்பம் வெடிக்குமோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

 

சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!

ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சிகப்பு என்ற படத்தை இயக்குநர் - நடிகர் ராஜ்கிரண் வாங்கி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இந்த வாங்கி வெளியிடலின் பின்னணியில் ஒரு பைனான்ஷியல் இழுபறி நடந்திருக்கிறது.

சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!

புன்னகைப்பூ கீதா... இவர்தான் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தவர். இவருக்கு படங்களில் நடிக்க வேண்டும், அதுவும் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நீண்ட நாளாக ஆசை. விமலை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டார். ஜோடியாக தானே நடிப்பதாகக் கூறினார். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விமல், ஜோடியாக வேறு நடிகையை போடச் சொல்லிவிட்டார்.

உடனே கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக்கி, சமுத்திரக்கனியை இன்னொரு ஹீரோவாக்கினார்கள். கனிக்கு ஜோடியாக புன்னகைப் பூ கீதா. இந்தப் படத்துக்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்று தலைப்பிட்டனர். படம் தயாரிக்கும் பொறுப்பை மணிரத்னத்தின் உறவினர் சீனிவாசனிடம் ஒப்படைத்தார் கீதா.

இந்த நேரத்தில் கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கிக் கொண்டிருந்த சிகப்பு படத்துக்கு நிதிச் சிக்கல். தயாரிப்பாளர் முக்தா கோவிந்த் உடனே, புன்னகைப் பூ கீதாவை அணுக, அவர் தன் படத்துக்காக வைத்திருந்த பணத்திலிருந்து ரூ 2 கோடியைக் கொடுத்திருக்கிறார். சிகப்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முக்தா கோவிந்த் மரணமடைந்துவிட்டார்.

இப்போது, கீதா தான் கொடுத்த பணத்தைக் கேட்க, முக்தா கோவிந்த் குடும்பத்தினரோ, பணம் இல்லை.. இந்தப் படத்தை நீங்களே வாங்கி வெளியிடுங்கள் என்று கூறிவிட்டார்களாம். ஆனால் அதற்கு கீதா ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த சிக்கல்களை அருகிலிருந்து பார்த்த ராஜ்கிரண், படம் நன்றாக வந்திருப்பதால், தானே வாங்கி வெளியிட முடிவு செய்தாராம்.

 

விதிமீறி பிரசாரம்… திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் குயிலி ஆஜர்

திருவாரூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திருத்துறைப்பூண்டியில் விதிமுறைகளை மீறி பேசிப் பிரசாரம் செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள அதிமுக நடிகை குயிலி, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

திருத்துறைப்பூண்டியில் ஏப்ரல் 24ம் தேதி நடிகை குயிலி பிரச்சாரம் செய்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி பல பகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்தார்.

விதிமீறி பிரசாரம்… திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் குயிலி ஆஜர்

இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மே 15ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.

இதைத் தொடர்ந்து இன்று திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.