பெப்சிக்கு எதிரான வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு சாதகமான தீர்ப்பு

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘அதிரடி' திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி' அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றும், ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பெப்சிக்கு எதிரான வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு சாதகமான தீர்ப்பு

இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது:

அதிரடி படத்தின் ஷூட்டிங்குக்கு பிப்ரவரி 27ம் தேதியிலிருந்து மார்ச் 27ம் தேதி வரைக்கும் ஒருமாதம் ஷெட்யூல் போட்டு, ஹீரோயினை வரவழைத்து, மும்பையில் இருந்து வில்லனை வர வழைத்து, லாட்ஜ்ல ரூம் போட்டு, ஒன்றரை மாதமா திட்டமிட்டு, காமிரா, ஆர்ட் டைரக்டர், டைரக்டருக்கு எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து, பெப்ஸி ஆளை வச்சிட்டுத்தான் ஷுட்டிங் போனேன்.

120 பேர் வரைக்கும் ஷுட்டிங் போனோம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில ஷுட்டிங். 27ம் தேதி பாட்டு ஷுட்டிங் , 28ம் தேதி 5.30 மணிக்கு ஷுட்டிங் வரமாட்டோம்னு பாய்காட் பண்றாங்க. யாரும் வரமாட்டோம், மன்சூரலிகான் மன்னிப்புக் கேட்கணும்னு சொல்றாங்க. நான் ஆயிரக்கணக்கான தொழிலாளிக்கு வேலை கொடுக்கறவன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து ராதாரவி ஷுட்டிங்கில கேரவன் கேட்டாங்க. மேக்கப் மேனுக்கு தனி கார் வேணும், காஸ்ட்டியூமருக்கு தனிகார் வேணும்னாங்க. அதெல்லாம் முடியாது, உங்க காசுல தனியா வாங்கிக்குங்க. 8000,10,000னு வாங்கறீங்க, 50,000, 75000ம்னு சம்பளம் கொடுக்கறேன், மேக்கப்புக்கு ஆள் சரியா இருக்கு, புரொடக்ஷனுக்கு ஆள் கம்மியா இருக்குன்னு புரொடக்ஷன் ஆளுங்களுக்கு போன் போட்டு வரவச்சாங்க. அவங்க தயாரிப்பாளரா என்னை பார்த்திருக்கணும்.

நான் தொழிலாளர்அமைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் பெப்ஸி அமைப்புல பல வருஷம் இருந்திருக்கேன்.நான் ஒரு டான்சர், டான்ஸ் மாஸ்டர் கார்டு வச்சிருக்கேன்.சினி டான்சர், சினி டான்ஸ் மாஸ்டர் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன்.சினி மியூசிஷியன்ல மெம்பர்.ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ல லைப்மெம்பர், ஆர்ட்டிஸ்ட் அன்ட் டப்பிங் யூனியன்ல மெம்பர், 1988ல இருந்து,தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர், பிலிம் சேம்பர்ல மெம்பர், நான் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவன்.

தலைமையில் உள்ள சில புல்லுருவிகள் தவறான வழிகாட்டி, அவங்க சுயநலத்துக்காக என்னை தப்பா பணியவைக்கப் பார்த்தாங்க. நான் பணிஞ்சிபோறவன் கிடையாது. சிவா, நடிகர் சங்கத்துல ராதாரவியோட வலது கை, இடது கைன்னு சொல்லப்படற கே.ஆர்.செல்வராஜ் செக்ஷன்ல இருக்கலாம். அவர்கிட்ட பேசச் சொன்னாங்க. நான் எதுக்குப் பேசணும், நான் பேசமாட்டேன்னு சொன்னேன். சிவா கிட்ட பேசச் சொன்னாங்க, சரின்னு காலையில 5.30 மணிக்கு போன் அடிச்சி சிவா கிட்ட பேசினேன். அன்னைக்கு எனக்கு தொண்டை ரொம்ப கம்மியிருந்தது. கேட்டாரு, மன்சூரலிகான் பேசறன்னன், அப்படியே போனை வச்சிட்டாரு, அதுக்கப்புறம் அவர் எடுக்கவேயில்லை.

அதுக்கப்புறம் நான் எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் பேக் பண்ணி அனுப்பிட்டு, அன்னைக்கு ஷுட்டிங் கேன்சல். அதுக்கு நஷ்டஈடு 25 லட்ச ரூபாய் கேட்டிருக்கேன். அதுக்கான எல்லா செலவினங்களையும் நீதிமன்றத்துல தாக்கல் பண்ணியிருக்கேன். அது கேஸ் நடந்து முறைப்படி அவங்க இழப்பீடு தந்தே ஆகணும், நான் விடமாட்டேன்," என்றார்.

 

ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?

மும்பை: ஆபாசமாக உடை அணிந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வசந்தத்தை வரவேற்கும் விதமாக வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது, பிரபல இந்தி கவர்ச்சி நடிகை சோபியா கயாத்தின் ஹோலி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?

அதில், அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்தவாறு அவர் ஹோலி கொண்டாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.

ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?

சோபியாவின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கொச்சைப்படுத்தி உள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?

இந்நிலையில், இது தொடர்பாக சோபியா மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சோபியா விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மிஷ்கின் - சரத்குமார் படம் ஜூன் மாதம் துவக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

மிஷ்கின் - சரத்குமார் படம் ஜூன் மாதம் துவக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார் என்று 'பிசாசு' படத்துக்கு முன்னரே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படம் குறித்து விசாரித்த போது, "ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

இதில் சிக்ஸ் பேக் வைத்து சரத்குமார் நடிக்கிறாராம். சரத்குமாருடன் ஜோடியாக நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜெயம் ரவியின் 'டன்டனக்கா'.. டி ஆரை அவமானப்படுத்துகிறதா?

தனது படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் அடிக்கடி டி ராஜேந்தர் உபயோகிக்கும் பதம் டன்டனக்கா.. ஏ டன்டனக்கா..

இதை வைத்து சந்தானம் பல படங்களில் காமெடி செய்துள்ளார்.

ஜெயம் ரவியின் 'டன்டனக்கா'.. டி ஆரை அவமானப்படுத்துகிறதா?

இப்போது இந்த டன்டனக்காவை வைத்து ஜெயம்ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்' படத்தில் புதிய பாடலே உருவாக்கியுள்ளார்கள்.

இப்பாடலை டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி உள்ளார்.

பாடலின் முதல் வரிகள் இவை...

‘எங்க தல எங்க தல டி ஆரு
சென்டிமென்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலின்னாரு,
அவரு உண்மையா லவ் பண்ண சொன்னாரு.
மச்சான் அங்க தாண்ட தல நின்னாரு' என அந்த பாடல் தொடங்குகிறது. இதை இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளார்.

டன்டனக்கா.. ஏ டன்டனக்கா.. என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் டிஆரை கலாய்க்கும் வகையில் உள்ளதாகக் கூறி ட்விட்டரிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். அதில், "‘டண்டனக்கா' பாடலை தவறாக பொருள் கொள்ளச் செய்யும்படி சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்கள் வெளியிட்டு உள்ளனர். ரசிகர்கள் இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம். படத்தில் நான் டிஆர் ரசிகன். அதனால்தான் அப்படி ஒரு பாட்டு," என்று கூறியுள்ளார்.

 

திருமணத்திற்கு அவசரப்படுத்தும் மாப்பிள்ளை: கடுப்பில் நம்பர் நடிகை

சென்னை: நிச்சயம் முடிந்துவிட்டாலும் திருமணம் செய்து கொள்வதில் நம்பர் நடிகை அவசரம் காட்டவில்லை. ஆனால் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையோ திருமண தேதியை குறிக்குமாறு வலியுறுத்துகிறாராம்.

சின்ன நம்பர் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நடிகை வழக்கம் போல் நடிக்க சென்றுவிட்டார். அவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு அவசரப்படுத்தும் மாப்பிள்ளை: கடுப்பில் நம்பர் நடிகை

என்ன மேடம், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், புதிய படங்களையும் ஒப்புக் கொள்கிறீர்கள் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகையோ, தற்போதைக்கு திருமணம் இல்லை என்று கூலாக தெரிவித்துள்ளார்.

நடிகை இப்படி நினைக்க அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வேறுவிதமாக நினைக்கிறார். அவர் நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இத்தனை நாட்களாக திருமண தேதியை தெரிவிக்குமாறு மாப்பிள்ளையின் குடும்பத்தார் நடிகையை நச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லையாம்.

இதனால் தற்போது மாப்பிள்ளையே திருமண தேதியை விரைவில் குறிக்குமாறு நடிகையை நச்சரித்து வருகிறாராம். இதனால் நடிகை எரிச்சல் அடைந்துள்ளாராம்.

 

5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ள விஜய்

சென்னை: விஜய் அட்லீ படத்தை அடுத்து நடிக்க 5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என இரண்டு ஹீரோயின்கள். மேலும் ஸ்ரீதேவி பல காலம் கழித்து புலி படம் மூலம் கோலிவுட் திரும்பியுள்ளார்.

விஜய்யை இயக்கப் போகும் அந்த 5 பேரில் ஒருவர் யார்?

புலி படத்தை அடுத்து விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்ததாக அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதிலும் 5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம். அந்த 5 பேரில் ஒருவரின் படத்தில் தான் விஜய் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அட்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் தான் நடிக்கும் அடுத்த படத்தை தேர்வு செய்யப் போகிறாராம். அந்த 5 இயக்குனர்களில் யாருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

புலி படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது

என்னமோ நடக்குது வெற்றியைத் தொடர்ந்து விஜய் வசந்த் நடிக்கும் புதிய படத்துக்கு அச்சமின்றி எனத் தலைப்பிட்டுள்ளனர்.

விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது

என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டியே இந்தப் படத்தையும் இயக்க, ட்ரிபிள் வி ரிகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய் வசந்தின் சகோதரரது சொந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது

முதலில் இந்தப் படத்துக்கு சிகண்டி என்று தலைப்பிட்டிருந்தனர். இப்போது அச்சமின்றி என மாற்றியுள்ளனர்.

விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது

இந்தப் படத்தில் விஜய் வசந்துக்கு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இருபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.

 

சி2எச்சில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை 10 லட்சம் டிவிடிகள் விற்பனை!

வீடுகளில் நேரடியாக சினிமாவை வெளியிடும் சேரனின் சி2எச்- முறையில் வெளியிடப்பட்ட 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.

மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2எச்-ஐ தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் படங்களை வீடுகளிலே அதிகாரபூர்வமாக டி.வி.டிக்கள் மூலம் கொண்டு போய் சேர்ப்பதே சி2எச் திட்டத்தின் நோக்கமாகும்.

சி2எச்சில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை 10 லட்சம் டிவிடிகள் விற்பனை!

இத்திட்டத்தில் முதல் படமாக சேரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' வெளியிடப்பட்டது.

முதல் நாளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான டிவிடிக்கள் விற்பனையாகி சாதனை படைத்தததாக இயக்குநர் சேரன் செய்தித்தாள் விளம்பரங்களில் அறிவித்துள்ளார்.

முதல் படத்துக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இயக்குநர் சேரன் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இன்னும் ஒரு பெரிய படத்தை இந்த சி2எச் மூலம் வெளியிட்டால் போதும், மோசடிக் கணக்கு காட்டும் தியேட்டர்கார்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் தப்பித்துவிட முடியும் என்கிறார்கள் திரைத்துறையினர்.

இயக்குநர் சேரனின் சி2எச் முயற்சிக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தைத் தொடர்ந்து 'அர்ஜுனனின் காதலி', 'அப்பாவின் மீசை', 'ஆவி குமார்' உள்ளிட்ட 50 படங்கள் சி2எச் மூலம் வெளியாகப் போவதாக சேரன் அறிவித்துள்ளார்.

கிராமப் புறங்களில் இன்னும் இந்தத் திட்டம் பரவலாக அறியப்படாமல் உள்ளதாகவும், அங்கும் டிவிடிகள் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்தால் இந்தத் திட்டம் பெரும் வெற்றிப் பெறும் என்கிறார்கள் இந்தத் திட்டத்தின் முகவர்கள் சிலர்.

 

சினிமாக்காரன் சாலை 14 - ’பெரும் படங்கள் ஆகும் கனவில் வெறும் படங்கள் ஆகிப்போன குறும் படங்கள்!’

- முத்துராமலிங்கன்

Muthuramalingan

மார்ச் 6 கடந்த வெள்ளியன்று தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்பியிருந்த இருவர் என்னை கடுமையாக சோதித்தார்கள். ஏமாற்றத்தின் உச்சத்துக்கு என்னைத் தூக்கிக்கொண்டு போய் அதள பாதாளத்தில் தூக்கிப் போட்டார்கள். ‘நாங்க அந்த அளவுக்கு ஒர்த் இல்ல பாஸ்' என்று ஒரே குரலில் சொன்னார்கள்.

செல்லச் சண்டைக்கா ‘ரன்' ஆகிய முதல் நபரைப் பற்றி இரண்டாவதாக, அடுத்த கட்டுரையாக எழுதிக் கொள்ளலாம் என்ற முடிவில் இரண்டாவது நபரான கார்த்திக் சுப்பாராஜ் முதலில் வந்துவிட்டார்.

சினிமாக்காரன் சாலை 14 - ’பெரும் படங்கள் ஆகும் கனவில் வெறும் படங்கள் ஆகிப்போன குறும் படங்கள்!’

கார்த்தி சுப்பாராஜிடம் நான் முதலில் ரசிப்பது அவருடைய ‘எந்தக் கடையில நீ பிட்சா வாங்குற?" உடலமைப்பைத்தான். அப்புறம் தான் ‘பிட்சா' 'ஜிகர்தண்டா' எல்லாம். அடுத்த ஓரிரு வருடங்களில் அஜீத் அல்லது கமல் படத்தில் இவர் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பேரவா.

இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நிலையில் ‘ஸ்டோன் பெஞ்சு' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தமிழ் சினிமாவின் கிளைகளை விரிவாக்க அவர் களம் இறங்கியபோது, அவர் மீதிருந்த மரியாதை இன்னும் சற்றே உயர்ந்தது. அதிலும் குறும் படங்கள் சிலவற்றை தொகுத்து அவற்றை தியேட்டர்களில் பெரும் படங்களுக்கு போட்டியாக களம் இறக்கப் போவதாக அறிவித்தபோது, நான் இருந்த இடத்தில் இருந்தபடியே இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்கும்படி உரக்க அவருக்கு கேட்கும்படி ‘சபாஷ்' சொன்னேன். அதன் முதல் முயற்சியான ‘ஆறு குறும் படங்கள் சேர்த்து ஒரு செம படம்' பார்க்கும் வாய்ப்பு வெள்ளியன்று கிட்டியது.

சென்னையில் ரோட்டோர கடைகளில் தயாராகும் புரோட்டாக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக தயாரிக்கப்படுபவை தமிழ் சினிமாவில் குறும் படங்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தனை குப்பைகள். 5 டி கேமரா வைத்திருப்பவர்கள் அனைவருமே குறும்பட இயக்குநர்கள். ஆனால் இந்த குப்பைகளிலிருந்துதான் கார்த்திக் சுப்பாராஜ் போன்ற சில வைரங்களும் கிடைத்தார்கள் என்பது நிதர்சனம்.

அப்படிப்பட்ட கா.சு. இப்படிப்பட்ட ஒரு முதல் முயற்சியில் இறங்கும்போது, ரசிகர்களை ஒரு புது அனுபவத்துக்கு தயாராக அழைக்கும்போது, எவ்வளவு மெனக்கெடல் இருக்கவேண்டும்? அவர் சொன்னது போல் செம படம் வேண்டாம். ஒரு சுமார் படமாவது இருந்திருக்கவேண்டாமா?'. அய்யோ..அய்யோ... (கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் வடிவேலு குரலில் வாசிக்கவும்).

சினிமாக்காரன் சாலை 14 - ’பெரும் படங்கள் ஆகும் கனவில் வெறும் படங்கள் ஆகிப்போன குறும் படங்கள்!’

அந்த ஆறு படங்களில் முதல் சொதப்பல், முதல் படமாக வந்த ‘த லாஸ்ட் பேரடஸ்'. ‘ஆரண்யகாண்டம்' ஜிகர்தண்டா' புகழ் சோம சுந்தரேஷ்வரின் மோனோ ஆக்டிங்கை நம்பி, வசனங்களின்றி ஊமைப் படமாக இயக்கியிருக்கிறார் அனில் கிருஷ்ணன். சிறையிலிருந்து விடுதலையாகி, தனது வீடு திரும்பும் ஒருவனைப் பற்றிய கதை இது. அவன் எதற்கு சிறைக்குப் போனான். என்பதில் துவங்கி யாருமற்ற அவனது வீட்டில் தொங்கிக்கிடக்கும் பூட்டு வரை அந்த பதினைந்து நிமிடப்படத்தில் இருபத்தைந்து கேள்விகள் கிளம்புகின்றன. அவற்றிற்கு படத்தில் எங்கும் பதில்கள் அல்லது மிஷ்கினின் குறியீடுகள் போன்றோ எதுவுமே இல்லை. இப்படி பெரும்பூடகமாக படம் எடுத்தால் தன்னை இண்டெலக்‌சுவல் என்று ரசிகர்கள் ஏமாறுவார்கள் என்று இயக்குநர் நினைத்திருக்கக்கூடும். கார்த்திக் சுப்பாவைத் தாண்டி ஒரே ஒரு ரசிகர் கூட அப்படி ஏமாற மாட்டார் என்று இருபது ரூபாய் பாண்டு பேப்பரில் நான் எழுதித்தருகிறேன்.

இரண்டாவது படம் கோபக் குமார் இயக்கியிருக்கும் ‘அகவிழி'. ஒரு முக்கோணக்காதல் கதையை தப்பித் தவறி எக்கோணத்திலும் புரிந்து விடாதபடி குழப்பிக் கும்மியடித்திருக்கிறார். எதிர்காலத்தில் நிறையபேரின் கோபத்துக்கு ஆளாகப் போகிறார் என்று யூகித்து கோபக் குமார் என்று தம்பிக்கு பெயர் சூட்டிய இவரது பெற்றோர்களின் கிரியேட்டிவிடியை வியப்பதைத் தாண்டி சொல்ல ஒன்றுமில்லை.

அடுத்த அருவாமனை ‘புழு'. இதை இயக்கிய புண்ணியவானின் பெயர் சாருகேஷ் சேகர். கருப்பு வெள்ளை குறியீட்டுடன் இருந்த இந்தப் படத்தில் ஒரு அத்துவான மலைப் பிரதேசத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிவிட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் இரு நண்பர்கள், ‘சரியா குத்தாம விட்டுட்டேன். உனக்கு என் கையாலதாண்டா சாவு' என்றபடி ஒருவரை நோக்கி ஒருவர் ஊர்ந்து வருகிறார்கள். எதற்கோ நேர்ந்து விடப்பட்ட ஃபீலிங்க்ஸில் ரசிகர்கள் சோர்ந்து விடுகிறார்கள்.

நாலாவதாக நாம் நூலாவது மோனேஷ் இயக்கிய ‘நல்லதோர் வீணை செய்தே' பார்த்து. ஒரு டியூஷன் வாத்தியார், கவனிங்க டீச்சர் இல்ல. ஒரு டியூஷன் வாத்தியார் பல வருடங்களாக தன்னிடம் கற்க வரும் மாணவனிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது பற்றிய கதை. அந்த வாத்தியாரை விட மோசமான மேக்கிங். இந்த ஆறு படங்களில் ஆகச்சிறந்த குப்பை இதுவே.

சினிமாக்காரன் சாலை 14 - ’பெரும் படங்கள் ஆகும் கனவில் வெறும் படங்கள் ஆகிப்போன குறும் படங்கள்!’

‘என்னதான் ஆச்சி இந்த கார்த்திக் சுப்பாராஜுக்கு? என்று எண்ணியபடி தியேட்டரை விட்டு எஸ்கேப் ஆகிவிடலாமா என்று யோசித்தபோது ஐந்தாவதாக வந்த ‘மது' கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். காதல் தோல்வியில் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களை போதையில் மிரட்டும் ஒருவனின் மனநிலையை இயல்பான வசனங்களால் நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார் ரத்னக்குமார். சொன்னதையே சொல்லும் திரும்பத் திரும்ப சொல்லும் குடிகாரன் போலவே படத்தின் நீளம் வளவள...

சவப் பெட்டியின் இறுதி ஆணியை அடித்தவர் சாட்சாத் கார்த்திக் சுப்பாவேதான். முன்பு ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் பரிசு வென்ற அவரது ‘நீர்' படம் ஆறாவது ஆறுதலாய் அமைந்தது. இதில் தற்போது நல்ல மார்க்கெட்டில் உள்ள விஜய் சேதுபதி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பதால் வியாபார ரீதியாய் ஆட்களை உள்ளே இழுக்க உதவும், அதன் மூலம் கொஞ்சம் காசு பார்க்கமுடியும் என்று கா.சு. நினைத்திருக்கக்கூடும். அதுக்கெல்லாம் நோ சான்ஸு பாஸ். மதுரைக்காரரான உங்களுக்கு நோகாம நொங்கு சாப்பிட முடியாதுன்ற பழமொழிய நாங்களா சொல்லித் தரணும்?

இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சியில் இந்திய சினிமாவில் யாரும் செய்யவில்லை என்று பேட்டிகளில் வெட்டியாக முழங்கிய கா.சு. தனது முதல் முயற்சிக்காக எவ்வித சிரத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை படங்களின் தேர்வுகளில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்தப் படங்களில் சில ஏற்கனவே யூட்யூப் பக்கங்களில் இருந்தவைதான். தற்போது பெரும்பட திரையிடல் முயற்சிக்காக அவற்றை 'வெவரமாக' முடக்கியிருக்கிறார்கள்.

அடுத்த தேர்வுகளும் இப்படியேதான் இருக்குமெனில், தனது ஸ்டோன் பெஞ்சை ஏதாவது ஒரு பார்க்குக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு, கார்த்திக் சுப்பாராஜ் தொடர்ந்து படங்கள் இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவது அவருக்கும் தமிழ்சினிமாவுக்கும் நல்லது.

பி.கு: கட்டுரைக்கு இவ்வளவு கோமாளித்தனமான தலைப்பு வைத்ததற்கு இந்தப் படங்கள் பார்த்த மனநிலையே காரணம். இதற்கு அடுத்த கட்டுரைகளில் இந்த அநியாயம் நிகழாது என்று உங்க தலைமேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!

(தொடர்வேன்...)

 

மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மூத்த நடிகை மனோரமாவுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது டேக் கேர் இந்தியா என்ற தனியார் அமைப்பு.

டேக் கேர் சார்பில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த விருதினை மனோரமாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘டேக் கேர் இந்தியா' நிறுவனம் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை அண்ணா நகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை உயர் அதிகாரி ஷ்கில் அக்தர், ஆச்சி குழுமம் நிறுவனர் பதம்சிங் ஐஸக், சமூக ஆர்வலர் நசிமா மாரிக்கர், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை மனோரமா மற்றும் மருத்துவர் பி.எஸ்.ஸ்ரீமதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது. நடிகை மனோரமா இல்லத்திற்கு சென்று ‘டேக் கேர் இந்தியா' நிறுவனர் மொஹமத் இப்ராஹிம் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவ்விருதினை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.