சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2.4.2008 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின்னர் படத் தயாரிப்புப் பணிகளுக்காக பெரும் தொகையை எங்கள் நிறுவனம் அளித்தது. ஒப்பந்தப்படி 18 மாதங்களுக்குள் படத் தயாரிப்புப் பணிகள் முடிவடைய வேண்டும்.
எனினும் திட்டமிட்டபடி படத்தின் தயாரிப்புப் பணிகளை ராஜ்கமல் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஏற்கெனவே மர்மயோகி படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார் ராஜேந்திர ஜெயின்.
இந்த மனு நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.