சூர்யா - கார்த்தியை இயக்குகிறார் வெங்கட் பிரபு?


அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?

சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை. இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால். வர்த்தகமும் பெரிதாக இருக்கும் என்கிறாராம் வெங்கட் பிரபு.

ஏற்கெனவே அஜீத், அர்ஜூன் என இரு பெரிய ஹீரோக்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் என்பதால், வெங்கட் பிரபுவின் இந்த ஐடியாவும் பரிசீலனையில் உள்ளதாம்!

விரைவில் படம் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். அதுவரை, வதந்திக்கு பஞ்சமிருக்காதல்லவா!!
 

பத்து வருஷம் பீல்டுல இருக்கேன்னா சும்மாவா! - தம் கட்டும் த்ரிஷா


 

அசினிடம் சவால்விட்டு தோற்றுப்போன சல்மான் கான்!


நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.

நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.

அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.

பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.

நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.
 

சந்தானத்தைப் 'பிடித்த' சுந்தர் சி!!


காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாயும் நாணலைப் போன்றவர்கள்தான் சினிமாக்காரர்கள். காரணம் இது முழுக்க முழுக்க வர்த்தகம். கலை என்பது காசுக்கு அப்புறம்தான்!

இயக்குநர் சுந்தர் சியும் ஒரு பக்கா சினிமாக்காரர்தான். இவர் ஆரம்பத்தில் கவுண்டமணியை மட்டுமே நம்பி காமெடிப் படம் எடுத்தார். கவுண்டர் அலை ஓய ஆரம்பித்ததும், அன்றைக்கு பரபரப்பாக இருந்த வடிவேலுவை தனது ஆஸ்தான காமெடியன் ரேஞ்சுக்கு கொண்டு வந்தார்.

வின்னர், கிரி, இரண்டு, தலைநகரம், நகரம் என வரிசையாக இவர்களின் படங்களில் காமெடி களை கட்டியது. இந்த நிலையில் அரசியலில் குதித்து 'அடிபட்டார்' வடிவேலு.

சினிமாவில் மீண்டும் நடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் சுந்தர் படத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. சுந்தர் மற்றும் அவர் மனைவி குஷ்பு இருவருமே திமுகவினர். வடிவேலுவும் திமுகவுக்காக களமிறங்கித்தான் இந்த நிலையில் உள்ளார். எனவே வடிவேலுவுக்கு சுந்தர் கைகொடுக்கிறார் போலிருக்கிறது என 'நம்பி' அனைவரும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தர, சுந்தரோ இதை உடனே மறுத்தார்.

இப்போது தான் இயக்கும் அடுத்த படத்துக்கு காமெடியனாக சந்தானத்தை ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்!!
 

ரேஸில் நம்பர் ஒன்னான 'ரா ஒன்'.... தயங்கும் தமிழ்ப் படங்கள்!


முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.

தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா... கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் 'டப்பாகி' இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்போதைக்கு ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!

ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.

மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
 

இந்தியப் படங்களை தடை செய்தால்தான் பாக். சினிமா பிழைக்கும்- பாக். நாளிதழ்


இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால்தான் பாகிஸ்தான் திரையுலகம் பிழைக்க முடியும், புத்துயிர் பெறமுடியும் என்று அந்த நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் தி நேஷன் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது, அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக லாகூரில் நடந்த கலைஞர்கள், பாடகர்கள், இயக்குநர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அரசு பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இது நடந்தால்தான் பாகிஸ்தான் திரையுலகைக் காப்பாற்ற முடியும்.

பாகிஸ்தானில் உள்ள பல தியேட்டர்களில் இந்திப் படங்களை மட்டுமே திரையிடுகின்றனர். பாகிஸ்தான் படங்களை அவர்கள் திரையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பாகிஸ்தான் திரையுலகம் நலிவடைந்து போய்க் கிடக்கிறது.

பாகிஸ்தானின் ஒவ்வொரு மூ்லை முடுக்கிலும் இந்தித் திரைப்படங்களின் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. இப்படியே போனால் பாகிஸ்தான் திரையுலகமே அழிந்து போய் விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்தித் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது பாகிஸ்தான் மக்கள் இந்தித் திரைப்படங்களைத்தான் விரும்பிப் பார்க்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஒரு இந்திப் பட வெறியர். அதிலும் லதா மங்கேஷ்கர் குரலுக்கு இவர் கிட்டத்தட்ட அடிமை ஆவார். அவரே இதை ஒருமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஆசை! - ஏ.ஆர்.ரஹ்மான்


சென்னை: அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப் படமாக அரவான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடந்தது. முதல் இசைத் தட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.

விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்திருக்கிறது. ஒரு படத்தின் 'டிரைலரை' பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள்.

ஒரு சிறுவனிடம் ட்ரெய்லரைக் காட்டினால், அதுபற்றி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் உண்மையாகிறது. அதைவைத்தே அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று கூறிவிடலாம்.

நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

இந்த (அரவான்) பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது,'' என்றார்.

தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் குவிந்துவிட்டது போல, ஏராளமான பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேயார் ஆகியோர் தங்கள் அணியுடன் வந்து விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குநர் வசந்தபாலன் நன்றி கூறினார்.
 

அக் 9-ம் தேதி ரஜினியைச் சந்திக்கிறார் ஷாரூக்கான்!


சென்னை: வரும் அக்டோபர் 9-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்திக்கிறார் நடிகர் ஷாரூக்கான்.

அன்று ஷாரூக்கானின் ஐபிஎல் அணி சென்னையில் விளையாடுகிறது. எனவே நிச்சயம் அன்றைக்கு தான் சென்னையில் இருப்பேன் என்றும், ரஜினியைச் சந்திப்பேன் என்றும் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

ஆனால் அவரது சந்திப்பு குறித்து ரஜினி வீட்டில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ஷாரூக்கான், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். நிச்சயம் அவரை சென்னையில் சந்தித்து மரியாதை செலுத்த விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது நிச்சயம் சந்திப்பேன். அவரைப் பற்றி பேசும்போதே சிலிர்ப்பாக உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி ராணா படத்தில் அவர் நடிப்பார் என்றும் அப்போது ராஒன் காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் ரஜினி சார் ராணாவில் நடிக்கவில்லை. ஆனாலும் சௌந்தர்யா தன் வாக்கை காப்பாற்றினார்.

படப்பிடிக்கு தனது தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுடன் வந்தார் ரஜினி சார். என் வாழ்க்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆம், ரஜினி சாருடன் நான் நடித்தேன். பின்னர் அந்தக் காட்சியை சௌந்தர்யா எடிட் செய்து, மீண்டும் ரஜினி சாருக்கு காட்டி அனுமதி பெற்றார்," எனும் ஷாரூக், எந்திரன் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"ரோபோ படத்தை எனது குழந்தைகள் வீட்டில் உள்ள திரையரங்கில் பார்க்க விரும்பினார்கள். ஆனால் பிரிண்ட் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லதா மேடம், உடனே கவுரியிடம் (ஷாரூக் மனைவி) பேசினார். மும்பையில் உள்ள விநியோகஸ்தரிடம் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். என் குழந்தைகள் ரோபோவை பார்த்து மகிழ்ந்தனர். இப்படி பல விஷயங்களில் ரஜினி சார் குடும்பத்துக்கு நான் ஆயுள் முழுக்க கடன்பட்டிருக்கிறேன்," என்றார்.
 

சீமான் படம்: கிணற்றில் விழுந்த புது நடிகர்!


சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.

முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.

போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.

காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழய கிணற்றைக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணறில் தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மயக்கமான தருணை, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றினர்.

அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது!
 

மனைவியை அடித்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்


மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

மனைவி விஜயலட்சுமியை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார் தர்ஷன். அவருக்கும் நடிகை நிகிதாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் தர்ஷனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை அடி்த்து கொலை செய்து விடுவதாக தர்ஷன் மீது போலீஸில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இதையடுத்து போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் இவர்களது குடும்பச் சண்டையில் தலையிட்ட கன்னட தயாரிப்பாளர் சங்கம், நிகிதாவுக்குத் தடை விதித்து பரபரப்பை அதிகரித்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழவே தயாரிப்பாளர் சங்கம் தடையை விலக்கியது.

இந்தப் பின்னணியில் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குஅவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறவே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. இந்த நிலையில், விஜயலட்சுமி திடீரென பல்டி அடித்தார்.

செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரான அவர் தனது கணவர் தாக்கி தான் காயமடையவில்லை என்றும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும் தர்ஷன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு, தாக்கி காயம் ஏற்படுத்துதல், மனைவியைக் கொடுமைப்படுத்தியது, குற்றச் செயலில் ஈடுபடுதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதால் இந்த நிலை. மேலும் அவர் மீது ஆயுதத் தடைச் சட்டமும் பாய்ந்திருந்ததால் ஜாமீன் கிடைக்க முடியாத நிலை நிலவியது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் ஜாமீன் கோரி மனு செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 13ம் தேதி தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 

நான் பிரசாரத்திற்குப் போகும் இடமெல்லாம் பார்க்கிறேன், நல்ல ஆதரவு இருக்கிறது- குஷ்பு


திருச்சி: நானும் பிரச்சாரம் செய்யும் இடங்களையெல்லாம் பார்க்கிறேன். மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும் என்று பேசியுள்ளார் சினிமா நடிகை குஷ்பு.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்புவை இறக்கி விட்டுள்ளது திமுக தலைமை. அவரும் வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து நேற்று தீவிரப் பிரசாரம் செய்தார். அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடி குஷ்புவின் பேச்சை ரசித்தனர்.

குஷ்பு பேசுகையில்,

சிறுபான்மையினத்தைச் சார்ந்த அண்ணன் மரியம் பிச்சை அவர்கள், எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த போது, அதிமுகவின் தலைமை மீண்டும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், ஜெயலலிதாவோ, சிறுபான்மையினத்தைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர். திமுகவை மைனாரிட்டி, மைனாரிட்டி என்று விமர்சனம் செய்வதோடு சரி. ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடி. மதக் கலவரங்களுக்கெல்லாம் காரணமானவர் என்று விமர்சனத்துக்குள்ளானவர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு, இவருடைய பிரதிநியாக இரண்டு பேரை ஆதரவு தெரிவிப்பதற்காக அனுப்பி வைத்தார்.

பரமக்குடியிலோ அப்பாவித் தலித் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அவருக்கு நேரமில்லை. அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களையாவது அனுப்பியிருக்கலாம்.

தலித்துக்களையோ, சிறுபான்மையினரையோ கண்டுகொள்ளாத ஜெயலலிதா, எங்கே திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் இங்கே 15 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பியுள்ளார்.

தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார்கள். இந்த முறை தவறை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். நானும் பிரச்சாரம் செய்யும் இடங்களையெல்லாம் பார்க்கிறேன். மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. நீங்கள் நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.

திமுககாரர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்று சித்தரித்து தினமும் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்களை கைது செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையையே முழு நேரமாக செய்து கொண்டிருக்கிறார் என்றார் குஷ்பு.