ஒஸ்தி- சினிமா விமர்சனம்


இந்தியில் வெளியான தபாங் படத்தின் அப்பட்டமான தழுவல் இந்தப் படம். வரிக்கு வரி வசனங்களில் கூட மாற்றமில்லை.

ஆனால் பாருங்கள், ஒரு காட்சி கூட படத்தில் ஈர்ப்புடன் இருக்கவில்லை என்ற உண்மையை முதலிலேயே சொல்லியாக வேண்டும்.

உலகிலேயே அற்பமான சமாச்சாரம் எது தெரியுமா... சுயதம்பட்டம்தான்!. தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் வைத்துவிட்டார்கள், டி ராஜேந்தரும் அவர் மகன் சிம்புவும். படம் முழுக்க தான்தான் உலகத்திலேயே ஒஸ்தி என்கிற ரேஞ்சுக்கு 'ஒஸ்தி வேலன், ஒஸ்தி வேலன்...' என தாங்க முடியாத சுயபுராணம்!.

'காமெடி என்ற பெயரில் கோபத்தைக் கிளப்பாதடா' என்று அடிக்கடி மயில்சாமியைப் பார்த்து சந்தானம் கூறுவார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இதையே சிம்பு வரும் காட்சியில் திருப்பிக் கூறுகிறார்கள்!

கதை என்று சொல்ல இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை. தடி எடுத்த தண்டல்கார போலீஸ் கதை இது. அவ்வளவுதான். மற்ற கேரக்டர்கள் எல்லாம் ஊறுகாய்.

படம் முழுக்க மொத்த வசனமும் சிம்புவுக்குதான். ஹீரோயினுக்கு மிஞ்சிப் போனால் 5 வரிகள்!

பேச்சோடு நிற்காமல், படம் முழுக்க பறக்கிறார், குதிக்கிறார், தாவுறார், கத்துறார், நெல்லை பாஷை என்ற பெயரில் தமிழைக் குத்திக் குதறியெடுக்கிறார்... துப்பாக்கியில் சுடுவது கூட நின்றபடியல்ல... வானத்தில் பறந்தபடிதான் சுடுகிறார். இதெல்லாம் போக எங்கோ ஓரிரு காட்சிகளில் அவர் நடப்பது போலவும் காட்டுகிறார்கள். தியேட்டரில், இதைக் காணச் சகிக்காமல் பலரும் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தது தனிக் கதை!

படத்தில் பார்க்கும்படி இருப்பவர் ஹீரோயின் ரிச்சாதான். ஆனால் அவர் முகத்தைக் கொஞ்ச நேரம், தொப்புளை மீதி நேரமும் காட்டிக் கொண்டே இருக்கிறார்களே தவிர, நடிக்க துளியூண்டு சந்தர்ப்பம் கூட தரவில்லை. அட... டூயட்டில்கூட சிம்புதான் குதிக்கிறார், ரிச்சா அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!

தபாங் என்ற படம் உத்தரப் பிரதேச வட்டார இந்தி வசனத்துடன் வெளியானது. அதில் சுல்புல் பாண்டே என்ற பெயரில் சல்மான் கான் தனக்கு நன்கு தெரிந்த இந்தி வழக்கு மொழியை சரளமாகப் பேசியிருப்பார். ஆனால் இந்தப் படத்திலோ, அத்தனை கேரக்டர்களும் திருநெல்வேலித் தமிழ் என்ற பெயரில் ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்கள். யாருக்குமே அந்த வழக்கில் பேசத் தெரியவில்லை. இந்த பாவத்தைச் செய்யாத ஒரே ஆள் சந்தானம் மட்டுமே!

இன்னொரு விஷயம், இந்திக்காரர்களுக்கு தடாலடி போலீஸ் கேரக்டர் படங்கள் ரொம்ப புதுசு. அதனால் தபாங்கிற்கு அபார வரவேற்பு அங்கே.

தமிழில் நாம் பார்க்காத போலீஸ் கதையா... மூன்று முகம் ரஜினி, இதுதாண்டா போலீஸ் ராஜசேகர், சாமி விக்ரம் என விதவிதவிதமான அதிரடி போலீஸ் கதைகளை நாம் பார்த்துவிட்டோம். அந்தக் கதைகளுக்கு முன் இந்த ஒஸ்தி... ப்ச்!

படத்தில் உண்மையிலேயே பெரிய உழைப்பைக் கொடுத்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் தமன். ஆனால் அதுகூட பாடல்களில் மட்டும்தான்... பின்னணி இசையில் ஒஸ்தி ஒஸ்தி என்று கத்தி காதை பதம் பார்க்கிறது கோரஸ்.

சினிமா என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம்தான். அந்த பொழுதுபோக்கை பார்ப்பவர்களுக்கு சங்கடமில்லாத வகையில் இதமாகத் தருவது ஒரு கலை. தில், தூள், கில்லியில் அதை அற்புதமாகச் செய்திருந்தார் தரணி.

அந்த தரணி இயக்கிய படமா இது என்று கேள்வி படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் நெடு நேரம் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது!
 

"அரசு முடிவின்படி செயல்படுவோம்'' - திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்


சென்னை: முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அரசு முடிவு படி செயல்படுவோம் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சங்கள் உள்ளன. இதில் முக்கியமான அமைப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். இதன் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது "முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் வருகிற சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சினிமா காட்சிகளையும் ரத்து செய்வது," என்று முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார்.

இப்போது திரையரங்கு உரிமையாளர்களுக்காக இயங்கும் இன்னொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அபிராமி ராமநாதன் தலையில் செயல்படும் இந்த சம்மேளனத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் உள்ள பிலிம்ஸ் சேம்பரில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், "முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டுமின்றி, வேறு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மக்களின் நன்மைக்கே என்ன செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். ஆதலால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்த செயல்படுவோம்.

திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உற்ற துணையாக இருந்து அவர் வழிகாட்டியபடி நடப்போம்," என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

கூட்டத்தில், சம்மேளனத்தின் செயலாளர் சத்தியசீலன், துணைத்தலைவர் சாந்தி வேணுகோபால், பொதுச் செயலாளர் கணபதிராம் உள்பட ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
 

பிரசாந்த் படத்துக்கு தடை கோரும் மம்பட்டியான் மகன்!


சென்னை: 'மம்பட்டியான்' என்ற சினிமா படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்பட்டியான் மகன் நல்லப்பன்.

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை மம்பட்டியான் என்ற அய்யாத்துரையை முன்விரோதம் காரணமாக கருப்பன் என்பவர் 1964-ம் ஆண்டும் கொலை செய்தார். ஆனால் போலீசார்தான் என் தந்தை மம்பட்டியானை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டனர். தான் சார்ந்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர் அவர்.

தமிழக அரசு என் தந்தையை பிடிக்க மலபார் போலீஸ் உட்பட பல தனிப்படையை அமைத்தது. என் தந்தை மம்பட்டியான், தமிழகத்தில் பிரபலமானவர். லட்சக்கணக்கான மலைசாதியினராலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களாலும் தலைவனாக போற்றப்படுபவர் அவர்.

இந்த நிலையில் என் தந்தையை பற்றிய உண்மைக்கு புறமான தகவலுடன் லட்சுமி சாந்தி மூவிஸ் உரிமையாளர் தியாகராஜன் சினிமா எடுப்பதாக தெரிகிறது. என் தந்தையை பற்றி தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திவிடும்.

இதனால் என்னையும், எங்களது குடும்பத்தினரையும் இந்த சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். எந்த தவறும் செய்யாத நானும், என் குடும்பத்தாரும் பாதிக்கப்படக்கூடும். எங்கள் சொத்துக்களை பிறர் சேதமடையச் செய்யக்கூடும்.

'மம்பட்டியான்' சினிமாவை வியாபார நோக்கத்துடன் தியாகராஜன் எடுத்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அவர் எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியை பெறாமலேயே எனது தந்தையின் பெயரில் அவரைப் பற்றி படம் எடுத்து வருகிறார்.

எனவே தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் பிரசாந்த் நடிக்கும் `மம்பட்டியான்' படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். என் தந்தை மம்பட்டியானின் பெயர் அல்லது அவரது வாழ்க்கை பற்றிய எந்த அடையாளங்களையும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
 

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!


ஹைதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பிரபல தெலுங்கு நடிகர் - தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகனுமான மகேஷ்பாபுவின் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த 'திடீர்' சோதனை நடந்தது.

மகேஷ்பாபு இப்போது நடித்துவரும் தி பிஸினஸ்மேன் படத்தின் தயாரிப்பாளர் வீடுகள், பட அலுவலகம் என பல இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

மகேஷ்பாபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது, மகேஷ்பாபு, ஒரு படப்பிடிப்பில் இருந்தார்.

தகவல் அறிந்து, அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். தெலுங்கு சினிமாவில் மிக அதிகமான சம்பளம் பெறுபவர் மகேஷ்பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

டேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான்


சென்னை: சமீபத்தில் `டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.

முல்லைப்பெரியாறு அணையை, தனது சொத்துக்களை விற்று கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பொன்னி குயிக்கை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில், அவரது உருவப்படம் சென்னை வண்ணார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தங்கர்பச்சான் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் தங்கர்பச்சான் பேசுகையில்,

முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை பென்னி குயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்தை விற்று கட்டினார் என்ற வரலாற்றை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது.

எனவே, பென்னி குயிக்கின் வரவாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் பெயரை பென்னி குயிக் என்று மாற்றி வைத்து, அந்த வரலாற்று சின்னத்தை எக்காலமும் பாதுகாக்க வேண்டும்.

சமீபத்தில் `டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.

எனக்கு யாராவது நிதியுதவி அளிக்க முன்வந்தால், இருமாநில மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய கதையை படமாக எடுக்க தயாராக உள்ளேன்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்களின் குரல் மட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், செயல் வடிவில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் சேர்ந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதற்கு முன்பு அவர்கள் தங்களது சுய நலத்தைக் கருதியே செயல்பட்டனர். இப்போதும் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதை விட்டு விட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் நின்று என்றைக்கு குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். மத்திய அரசும் தனது கவனத்தை திருப்பும்.

தற்போது, நடந்து வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு கேரள அரவை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அய்யப்ப பக்தர்களும் கேரள எல்லையில் அடிவாங்க மாட்டார்கள் என்றார் அவர்.