கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு சர்வதேச விருது

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதி 2012இல் வெளிவந்த மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு உலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்த படைப்பாக மலேசியாவின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்திருக்கின்றது. 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.

இந்த உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் சிறந்த நூலைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட அறிஞர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.

கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு சர்வதேச விருது

புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதாலும், மொழிவளம், வெளிப்பாட்டு உத்தி, உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல், இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் போன்ற சிறப்புகளாலும் "மூன்றாம் உலகப்போர்" சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் குழு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்தார். அறக்கட்டளை நிறுவனர் டான் ஸ்ரீ சோமசுந்தரம் உடனிருந்தார்.

தன்னுடைய நாவலுக்கு கிடைத்திருக்கும் பரிசு குறித்து கருத்து கூறியுள்ள கவிஞர் வைரமுத்து, "டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நிகழ்த்திய புத்தகப்பரிசுப் போட்டியில் நான் எழுதிய "மூன்றாம் உலகப் போர்" நாவல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்குப் பெருமகிழ்வு தந்தது; பெருமிதத்தையும் கொடுத்தது. தமிழ் இலக்கியத்திற்கு உலகளவில் வழங்கப்படும் ஞானபீடம் என்று இதனைக் கருதுகிறேன்.

இந்தப் படைப்பு காலத்தின் வெற்றிடத்தை நிரப்பும் கருத்தோடு எழுதப்பட்டது. புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக வேளாண்மையின் நசிவுதான் இதன் உள்ளடக்கமாகத் திகழ்கிறது.

அடுத்த நூற்றாண்டில் பூமிப்பந்துக்கு நேரும் பேராபத்தைக் கருத்தில்கொண்டு உலக மானுடச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது தான் என் உயிர்த்தீயின் வெப்பமாக இருந்தது. அதனைப் புரிந்துகொண்டதற்கும் என் வலியை உணர்ந்து கொண்டதற்கும், உலக மானுடம் குறித்துக் கவலை கொண்டதற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த சர்வதேசப் பெருமையை தமிழுக்காக எழுதுகோல் ஏந்திய என் முன்னோடிகளின் காலடிகளில் காணிக்கை செய்கிறேன்." என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பரிசு வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசைப் பெற்றுக்கொள்கிறார்.

 

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஞ்சான்?

சென்னை: சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது ரசிகர்கள் கருத்துக்களில் இருந்து தெரிகிறது.

லிங்குசாமி, சூர்யா கூட்டணியில் நேற்று வெளிநாடுகளிலும், இன்று இந்தியாவிலும் ரிலீசான திரைப்படம் அஞ்சான். மொத்தம் சுமார் 1500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டுமே 37 தியேட்டர்களில் அஞ்சான் திரை கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரம், ஜில்லாவுக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மற்றொரு மாஸ் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கேற்பட 'நான் புறா இல்லை, கழுகு' என்பது போன்ற பஞ்ச் வசனங்களும்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஞ்சான்?

ஆனால் வெளிநாட்டு இணைய நண்பர்களும், உள்ளூரில் காலையிலேயே அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகர்களும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தங்கள் எதிர்பார்ப்பை அஞ்சான் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். பார்த்து பழகி, புளித்துப்போன மும்பை தாதா கதையை பின்னணியாககொண்டு அஞ்சான் படம் எடுக்கப்பட்டுள்ளது அசதியை வரவழைப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரம் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை பாராட்டாத ஆட்கள் இல்லை. யுவன் சங்கர் ராஜா இசை மோசமாகிவிட்டதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன. சமந்தா இந்த திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சியை காண்பித்துள்ளார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் சமந்தாவை பார்ப்பது என்பது, பலாப்பழத்தை, தேனின் ஊரவைத்து சாப்பிடுவதை போல உள்ளதாக இணையதளநண்பர்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர்.

சிங்கம் மற்றும் சிங்கம்-2 அளவுக்கு மாஸ் திரைப்படமாக இதை பார்க்க முடியவில்லை என்பது சூர்யா ரசிகர்கள் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் போட்டிக்கு பெரிய படங்கள் இறங்காத நிலையில் முதலுக்கு மோசம் இருக்காது என்பது படக்குழுவினரின் கணிப்பாக உள்ளது.

 

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்

திருப்பதி: பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மகனின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்

பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் ஏழுமலையான தரிசிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், என்னுடைய மகனுக்கு தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நான் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தேன் என்றார்.

நடிகர் விவேக்ஓபராயை பார்ப்பதற்காக கோவில் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் விவேக்ஓபராய்க்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல முயன்றனர்.

அப்போது தேவஸ்தான பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

 

இனி எனக்கு ஹீரோ முக்கியம் இல்லை, கேரக்டர் தான்: ஜல் நடிகை

சென்னை: இனி பெரிய ஹீரோவின் படமாகவே இருந்தாலும் தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தால் மட்டுமே நடிக்கப் போவதாக ஜல் நடிகை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பெரிய கண்களை கொண்ட ஜல் நடிகை. தெலுங்கில் அம்மணிக்கு நல்ல பெயர் உள்ளது. காரணம் ஹீரோக்கள். ஆம், ஹீரோக்கள் படப்பிடிப்புக்கு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பார் நடிகை. அதனால் தான் தெலுங்கு ஹீரோக்களின் மனம் கவர்ந்த நாயகியாக உள்ளார்.

இத்தனை நாட்கள் அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைக்கு தற்போது தெலுங்கு படம் ஒன்றில் முதன்முறையாக வில்லி கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதில் நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் நடிகை.

மேலும் இனி எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஜல் நடிகை.