இசையமைப்பாளர் உதயன் இசையில் எங்கள் குடும்ப இசையின் சாயல் தெரிகிறது. அது மனசுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, என இயக்குநர் - இசையமைப்பாளர் - பாடலாசிரியர் கங்கை அமரன் பாராட்டினார்.
அப்புக்குட்டி, ஸ்வாதி, வைஷாலி, தம்பி ராமையா, பாண்டியராஜன் நடித்துள்ள படம் மன்னாரு. ஜெய்சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உதயன் இசையமைத்துள்ளார்.
மொத்தம் நான்கு பாடல்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு கிருஷ்ண ராஜுடன் இணைந்து எஸ்பி ஷைலஜா இந்தப் படத்தில் இனிமையான காதல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
படத்தின் நாயகன் அப்புக்குட்டி, நாயகி ஸ்வாதி, வைஷாலி தம்பி ராமையா, பாண்டியராஜன் தவிர, இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், கங்கை அமரன், எஸ்பி ஜனநாதன், பெப்சி சிவா, வ கவுதமன், சுசீந்திரன் என பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் பேச்சு. இசையமைப்பாளர் உதயனின் பாடல்களைக் கேட்டதுமே, இதில் எங்கள் குடும்பத்து இசையின் சாயல் இருக்கிறது. கேட்க மிக இனிமையாக இருக்கிறது, என பாராட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், "இன்றைக்கு இசை என்ற பெயரில் என்னென்னமோ செய்கிறார்கள். ஒய் திஸ் கொல வெறி என்ற ஒன்று... இதெல்லாம் பாட்டாங்க... என்னய்யா கொடுமை.
இப்போதெல்லாம் ஒரு பாட்டு பாடினாலே போதும்... அல்லது ஒரு பாட்டுக்கு இசையமைச்சாலே போதும்... தலைகால் புரிவதில்லை யாருக்கும்.
உதயனின் இசையில் இனிமை இருக்கிறது. குறிப்பாக அந்த ஊரையெல்லாம் காவல் காக்கும் பாடலைக் கேட்டவுடன் இந்த இசை நம் குடும்பத்தின் சாயல் கொண்டது என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக வார்த்தைகள் புரியும்படி அருமையாக இசையமைத்துள்ளார்," என்றார்.
சாதனை இயக்குநர் எஸ்பி முத்துராமன் பேசுகையில், "ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல இனிமையான காதல் பாடலைக் கேட்க முடிந்தது. மிகவும் அருமையான இசை. உதயனுக்கு வாழ்த்துகள்," என்றார்.
இயக்குநர் பாண்டியராஜன், தம்பி ராமையா, எஸ்பி ஜனநாதன் ஆகியோர், பாடல்கள் மற்றும் இசையை வெகுவாகப் புகழ்ந்தனர்.