சென்னை: அதர்வாவுக்கு நான் செய்த கடமையாகத்தான் பரதேசி படத்தைப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாலா.
அதர்வாவின் வித்தியாசமான நடிப்பிலும், பாலாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் பரதேசி. இதில் நாயகியாக நடித்திருக்கிறார் தன்ஷிகா. வேதிகாவும் படத்தில் இருக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பாலா வழக்கம் போல வித்தியாசமாகப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலா கூறுகையில், நான் செண்ட்டிமெண்ட் பார்க்காதவன் என்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே படத்தின் தலைப்பு சென்ட்டிமென்ட்டாக வைக்கப்பட்டதா என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
அதர்வாவிற்கு நான் செய்யும் கடமையாகத்தான் இந்தப்படத்தில் அவனை நடிக்க வைத்தேன்.
ஜி.வி.பிரகாஷூம் அதிகம் பேசாதவன்; நானும் அதிகம் பேசாதவன். அதனால் எப்படி அவனிடம் மியூசிக் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். படம் முழுவதையும் எடுத்து முடித்து அவனுக்கு போட்டுக் காண்பித்தேன். இதற்கேற்றார் போல் மியூசிக் வேண்டும் என்று கேட்டேன். அது மாதிரியே போட்டுக் கொடுத்து விட்டான்.
வைரமுத்து சாருக்கு படத்தைப் போட்டுக் காண்பித்து இதற்கேற்றார் போல் பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன். அவர் மூன்று நாட்கள் கழித்து என்னை அழைத்தார். பாடல் வரிகள் அடங்கிய காகிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு, இது ரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள். ஒரு வரி கூட மாறக்கூடாதுஎன்று கூறினார்.
மதுரைப்பக்கம் எப்பவுமே கொஞ்சம் நகைச்சுவையாகத்தானே பேசுவார்கள். அதனால் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். ஒருவேளை மை தீர்ந்து போய் ரத்தத்தால் எழுதியிருப்பாரோ என்று கூட சிரித்துக் கொண்டேன்.
ஆனால், வீட்டுக்கு வந்து பாடல் வரிகளை படித்துப் பார்த்தபோதுதான் அவர் சொன்னது உண்மை என புரிந்தது. அத்தனை பாடல்களும் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. அது, இந்தப் பாடல்களை கேட்கும்போது உங்களூக்கே தெரியும் என்றார் பாலா.