திரைப்பிரபலங்களின் “நட்சத்திர பேட்மிண்டன்” – ஆகஸ்டில் துவக்கம்

திரைப்பிரபலங்களின் “நட்சத்திர பேட்மிண்டன்” – ஆகஸ்டில் துவக்கம்

சென்னை: இந்திய திரைப்பட பிரபலங்கள் இணைந்து விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெருமளவில் பிரபலமடைந்துள்ளது போல், தற்போது பேட்மிண்டன் போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை "இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி லீக்" என்ற அமைப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி, எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

நடிகைகளில் ஓவியா, லட்சுமி ராய், ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.

 

என்னது.. சன்.டி.வியில் ஞாயிற்றுக்கிழமையும் மெகாசீரியலா..! ஓஹோ அது மகாபாரதமா?

சென்னை: சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை, என்னதான் பிரமாண்டமாக காண்பிக்க மெனக்கட்டாலும், அதன் நடிகர் தேர்வால் தினமும் ஒளிபரப்பும் நெடுந்தொடர்கள் போலவே காட்சியளிக்கிறது.

சன் டி.வியில், ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் தொடர் மகாபாரதம். இதிகாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை. பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா இயக்கம் என்றதும் தொடர் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

என்னது.. சன்.டி.வியில் ஞாயிற்றுக்கிழமையும் மெகாசீரியலா..! ஓஹோ அது மகாபாரதமா?

குறைத்து மதிப்பிட முடியாது

மகாபாரத இதிகாசத்தை பல நூல்களின் குறிப்புகள் உதவியால் எடுத்துள்ளனர். கதையின் உண்மைதன்மையிலோ, அல்லது ஷார்ப்பான வசனங்களிலோ சன் டிவியின் மகாபாரதத்தை குறைத்து மதிப்பிட முடியாது. டிஆர்பியும் நன்றாகவே உள்ளது.

பழகிய முகங்கள்

அதே நேரம் நடிகர்கள் தேர்வுதான், ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களை பார்ப்பதுபோல உள்ளதே தவிர, அர்ச்சுனன், கர்ணன் என்று கற்பனை செய்ய ரசிகர்களுக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் இதில் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கும் பெரும்பாலானோர் நாம் அன்றாடம் பிற தினசரி சீரியல்களில் பார்த்து பழகிய முகங்கள்தான்.

வேறுபாடே தெரியலியே..

மகாபாரதத்தின் சூத்திரதாரி, பகவான் கண்ணனாக இருந்தாலும், பாண்டவர்களை சுற்றியே கதை நகரும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பாண்டவர்களுக்கான நடிகர் தேர்வு பாராட்டும்படியாக இல்லை. பீமனை தவிர மற்ற 4வரையும் அடையாளம் வைத்துக்கொள்ள முடியாதபடி ஒரே மாதிரியாக உள்ளனர். பீமனுக்கு மட்டும் நல்ல புஷ்டியான நடிகரை தேர்ந்தெடுத்திருப்பதால் அவர் தப்பித்தார்.

இது பஞ்சு முகமாச்சே!

எதிர்தரப்பில் முக்கியமான கதாபாத்திரங்கள் கவுரவர்கள். அதிலும், துரியோதனன் அதி முக்கியம். வில்லனின் ஆளுமைதான், ஹீரோவின் புகழை பறைசாற்றும். ஆனால் துரியோதனன் கதாபாத்திரத்திற்கு பஞ்சு முகத்தை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். அவரை பார்த்தால் சிரிப்பு வில்லன் போல தெரிகிறார். முகத்தில் வஞ்சகம் பிரதிபலிக்கவில்லை. கடந்த சில வாரங்களாகத்தான், கொஞ்சம் சத்தம் போட்டு கத்தி பேசி, நான்தான் துரியோதனன் என்பதை அந்த நடிகர் காண்பித்து வருகிறார். அனாலும், தமிழ் உச்சரிப்பு... முடியல.

கர்ண கொடூரம்

மகாபாரதத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் கர்ணன். ஆனால் சிவாஜியை கர்ணனாக நினைவில் வைத்துள்ள தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு, சீரியல் நடிகர் ஒருவர், உச்சரிப்பு சரியில்லாத தமிழிலில் பேசுவதை கேட்க கர்ண கொடூரமாக உள்ளது. அந்த வகையில், பீஷ்மர், சகுனி ஆகியோரின் தேர்வு சபாஷ் போட வைக்கிறது. விதுடராக வருபவரும் சீரியலில் பார்த்து பழகியவர்தான் என்றபோதிலும், கேரக்டருக்கு ஏற்ற நடிகர் தேர்வாகிவிட்டது. திருதிராஷ்டரின் தேர்வு மிகச்சரியே. ஆனால் பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னனும், புத்திரபாசத்தால் மதியிழந்தவருமான திருதிராஷ்டர், வாராவாரம் கண்ணீர் சிந்தி தனது மனைவி காந்தாரியிடம் புலம்பிக்கொண்டிருப்பது போல காட்சியமைத்துள்ளது அவரது கம்பீரத்தை குறைத்துவிடுகிறது.

தாயா, தங்கையா?

பாண்டவர்களின் தாயாக வரும் குந்தி தேவி, சில நேரங்களில் தங்கைபோல காணப்படுகிறார். அவர் தலைக்கு கொஞ்சம் அதிகமாக வெள்ளை கலரை பூசிதான் விடுங்களேன். சில வருடங்களுக்கு முன்பு, இந்தியில் இருந்து டப் செய்து ஒளிபரப்பப்பட்ட மகாபாரத கண்ணன் கதாபாத்திரத்தை நிஜ கிருஷ்ணராக மனதில் உருவகம் செய்தவர்கள் லட்சக்கணக்கானோர். எனவே தமிழ் கிருஷ்ணரை பார்க்க முதலில் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அவரது மேனரிசங்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டன.

செட் சூப்பர்

அரங்கில் பிரமாண்டத்தை காண்பிப்பதற்காக செட்டிங் போட்டுள்ளது பாராட்டும்படியுள்ளது. ஆனால் குடிமக்களின் ஆடை அலங்காரம்தான் செயற்கைத்தனமாக காட்சியளிக்கிறது. அதை கொஞ்சம் சரி செய்தால் விசுவலாக சன் டி.வி. மகாபாரதம் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே நேரம் அவுட்டோர் சூட்டிங் லொக்கேசன்கள் இன்னும் மேம்பட வேண்டும். சற்று பசுமையாக, மலைப்பாங்காக இருந்தால் பிரமாண்டம் அதிகரிக்கும்.

சன்டேயிலும், சன்டிவியில் சீரியலா?

கதாபாத்திரங்கள் தேர்வு, லொகேசன் உள்ளிட்ட சில விஷயங்களில் கோட்டைவிட்டதன் காரணமாக, மகாபாரதத்தை பார்த்துவிட்டு, "என்னப்பா சன் டி.வி.யில, சனிக்கிழமையோட சேர்த்து இப்போ, சன்டே கூட மெகா சீரியல் போட ஆரம்பிச்சிட்டாங்களா" என கேட்கத்தான் வாய் வருகிறது. சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு பார்த்தால்தான் ஓஹோ.. இது நம்ம சீரியல் நடிகர்கள் நடித்துள்ள, இதிகாச தொடரேதான், என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதையெல்லாம், கொஞ்சம் கவனியுங்க பாஸ்.

 

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பிஸியோ தெரபி முகாம்: சூர்யா முயற்சி

ஸ்டண்ட் நடிகர்கள் தினம் தினம் உயிரைப்பணயம் வைத்து ஆபத்தான காட்சிகளில் நடிக்கிறார்கள். ஒருமுறை அடிபட்டால், திரும்ப படப்பிடிப்புக்கு வர ஆறு மாதங்கள் ஆகிறது. அதுவரை அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஸ்டண்ட் நடிகர்களுக்காக ‘பிசியோதெரபி' முகாம் அமைப்பது பற்றி யோசித்து வருகிறேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பிஸியோ தெரபி முகாம்: சூர்யா முயற்சி

சூர்யா-சமந்தா ஜோடியாக நடித்து, லிங்குசாமி டைரக்டு செய்திருக்கும் படம், 'அஞ்சான்'. இந்த படத்தை, திருப்பதி பிரதர்ஸ், யு.டி.வி. ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படத்தின் ‘டீஸர்' சமீபத்தில் வெளியானது. அதை 2 நாட்களில், 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘யூ டியூப்'பில் பார்த்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நான் நடிக்கிற எல்லா படங்களும் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் பார்க்கும்படி அமைகின்றன. முகம் சுளிக்கிற மாதிரி காட்சிகள் வருவதில்லை. இதற்காக, என்னை வைத்து படங்களை இயக்கும் டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் என் கருத்துக்களை டைரக்டர்களிடம் திணிப்பதில்லை. அதுவாகவே நடக்கிறது என்றார்.

ஜாலி சூட்டிங்

அஞ்சான் படத்திற்காக 6 மாச ஷூட்டிங் போனதே தெரியலை. அவ்ளோ ஜாலியா ரகளையா இருந்துச்சு. ஃபிரண்ட்ஸ் கூட பிக்னிக் போன மாதிரி ரொம்பவே அனுபவிச்சு வேலை பார்த்தோம்.

புது லிங்குசாமி

லிங்குசாமி படத்துக்கு படம் புதுமையைக் கொடுப்பார். அஞ்சான் படத்தின் ‘ஸ்டைல் ஆஃப் மேக்கிங்ல இதுவரைக்கும் பாக்காத புது லிங்குசாமி சாரை நீங்க பாக்கலாம்.

ரசிகர்களை ரசிக்க வைப்பான்

தியேட்டருக்கு வர்ற ரசிகர்களை ‘அஞ்சான்' நிச்சயம் ஏமாத்தமாட்டான். என் வெற்றிப் பட வரிசையில் இவனுக்கு முக்கிய இடம் உண்டு.

இரட்டை வேடத்தில்

அஞ்சான்' படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என இரு வேடங்களில் நடித்து இருக்கிறேன். கதைக்களம் மும்பை என்பதால் முழுக்க முழுக்க மும்பையிலேயே எடுத்த படம் இது.

டுவிட்டர், ஃபேஸ்புக்

ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்வதில், நான் ஆர்வமாக இருக்கிறேன். டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எழுத நேரமில்லை. ஏதோ வந்தோம், பகிர்ந்தோம் என்று இருந்துவிடக் கூடாது. எங்கிருந்தாலும் உடனுக்குடன் சரியான தகவலை பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்க வேண்டும். அதற்காக ஒரு சிறிய டீமை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் இறங்குவேன்.

விளம்பரப்படங்களால் மதிப்பு

ஒரு பிராண்டுக்கு விளம்பரம் செய்யும்போது கூடுதல் வருமானத்துடன் ஒரு மரியாதையும் கிடைக்கிறது. அதை ஒரு வித மதிப்பான விஷயம் என்று நினைக்கிறேன்.

பயிற்சிப் பள்ளி

பள்ளி, கல்லூரி களுக்கு போகாமல் படிப்பை துண்டித்துக்கொள்கிற பிள்ளைகளுக்கு அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் பயிற்சி அளிக்க புதிய திட்டம் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன்.

கவனிக்க நேரமில்லை

குழந்தைகளை இப்போ ‘ஜோ' தான் கவனிச்சிக்கிறாங்க. முடிந்த வரை சனி, ஞாயிறுகளில் நேரம் ஒதுக்க முயற்சி செய்கிறேன். கடந்த 4, 5 ஆண்டுகளாக அது நடக்க வில்லை. குழந்தைகளோட பத்து வயது வரைக்கும் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இனி அது நடக்கும்.

தெலுங்குப் படத்தில்

தெலுங்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. ‘ஏன் இங்கு ஒரு படம் பண்ணக்கூடாது?' என்று நிறைய பேர் கேட்கவும் செய்றாங்க. இப்போ அதுக்கான வேலைகளில் இருக்கிறேன்.

அம்மாவுக்கு வீடு

அம்மாவுக்காக பிரம்மாண்ட வீடு கட்டும் வேலைகள் நடந்து வருது.இன்னும் நிறைய செலவு இருக்கு. அதை பொறுமையாக செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் சூர்யா.