தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 -களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்.
அன்றைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலை நடிகராகத் திகழ்ந்தார். இந்த இருவரும் நடிக்க இயலாத படங்கள், வேடங்களில் கூட கார்த்திக் அட்டகாசமாக நடித்தார்.
இயக்குநர் ஷங்கர் தன் ஜென்டில்மேன் படக்கதையை கார்த்திக்கை மனதில் வைத்து எழுதியதாகச் சொல்வார். அதேபோல, கார்த்திக்குக்காக எழுதப்பட்ட கதைதான் இந்தியன்.
இப்படி கொடிகட்டிப் பறந்த கார்த்திக், திடீரென்று காணாமல் போனது காலத்தின் கோலமல்ல, அவரது தனிப்பட்ட குணாதிசயம். லட்ச லட்சமாக சம்பாதித்தாலும் அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல், உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, ஜாலியாக வாழ்ந்தவர் கார்த்திக்.
அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், தனது வருவாய் முழுவதையும் அம்மா, அண்ணன், சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கே வாரி வழங்கியதாகச் சொல்வார்கள் அவருடனிருந்தவர்கள். சக நடிகர்களுக்கும் நிறைய கொடுத்து உதவியிருக்கிறார், அது திரும்ப வருமா வராதா என்று யோசிக்காமலே.
ஆனால் நேரத்தை மதிக்காதது, தொழிலில் கவனமின்மை ஆகிய இரண்டு விஷயங்கள் அவரைக் கவிழ்த்தன (அவரது அரசியல் காமெடி தனிக்கதை).
முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, கார்த்திக் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளும் உள்ளன.
முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.
கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. நான் ஏன் வெளியேற வேண்டும் என்று கார்த்திக் வெளியேற மறுத்த போதுதான், உயிலை அவரிடம் காட்டினார்களாம்.
சொத்து உயில் அவர் பெயரில் இல்லை. அண்ணன் பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும்தான் இருந்ததாம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டை போட்டார். தன் பணத்தில் வாங்கிய சொத்துகளை தனக்கே தெரியாமல் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டதைச் சொல்லி குமுறினார். ஆனால் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என்றும் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசி வருகிறார் கார்த்திக். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்.
கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இப்போது முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக உள்ளார். மகன் விவகாரங்களை கார்த்திக்தான் கவனித்து வருகிறார்.