தள்ளிப் போகும் ரஜினி முருகன் காரணம் என்ன

சென்னை: ஜூலை மாதம் 17 ம் தேதி வெளியாகும் என்று பல மாதங்களுக்கு முன்பே ரஜினிமுருகன் படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், அதனைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இடம் பொருள் ஏவல் படத்திற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ரஜினிமுருகன், வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் மாபெரும் வெற்றிக்குப்பின்னர் மீண்டும் அதே குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கும் ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Rajini Murugan Movie  postponed?

ரஜினிமுருகனுக்கு போட்டியாக தனுஷின் மாரி மற்றும் சிம்புவின் வாலு போன்ற படங்களும் வெளியாகும் என்று கூறியதால், எல்லாவற்றிலும் போட்டி கடுமையாக என்று திரையுலகினர் சார்பில் கூறப்பட்டது.

ஆனால் படத்தை வாங்கி வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரஜினிமுருகன் பற்றி வாயைத் திறக்காமல், இடம் பொருள் ஏவல் படத்திற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

ரஜினிமுருகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் இன்னும் முடியவில்லை என்று, என்று ஒரு காரணத்தை வேறு கூறி வருகின்றனர். காரணம் அந்த அளவுக்கு இல்லை என்று சொல்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், இருந்தும் ஏன் இப்படி படத்தைப் பற்றி ஒரு தகவலும் கூறாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை பார்க்கலாம்.

 

இவன் ரொம்பக் கெட்டவன் போல... தொடங்கியது "யானும் தீயவன்" படப்பிடிப்பு

சென்னை: இதுநாள் வரை தமிழ் சினிமாவில் நான் ரொம்பவும் நல்லவன் என்று ஹீரோவை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள், தற்போது ஹீரோவை எவ்வளவு மோசமானவனாக காட்ட முடியுமோ அப்படிக் காட்டவே விரும்புகிறார்கள்.

ரசிகர்களும் ஆண்டி ஹீரோ கதையம்சம்களை மிகவும் லைக் பண்ணுவதால், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் யானும் தீயவன்.

Yaanum Theeyavan Movie Shooting Started

கலைஞர் டிவி நடத்திய நாளைய இயக்குநர் சீசன் 3 யில் கலந்து கொண்டவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் ஜி.கிரிஷ். இவர் இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர், யானும் தீயவன் படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து தொடங்கியுள்ளது.

புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, தமிழில் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ், படத்தொகுப்பு பிரசன்னா.

பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார்.

ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் "பெப்பி சினிமாஸ்" சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

 

​கிளாஸ்மேட் ஆல்பம்.. டீசர் வெளியிட்ட கார்த்தி.. பாராட்டிய எஸ்ஜே சூர்யா!

தனிநபர் இசை மற்றும் வீடியோ ஆல்பங்கள் உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் வெகு அரிதாகவே ஆல்பங்கள் வெளியாகின்றன.

அந்த வகையில் கிளாஸ்மேட் (glassmate) என்ற பெயரில் தனி தமிழ் ஆல்பம் விரைவில் வெளியாகிறது.

இதனை இசையமைத்து உருவாக்கியிருப்பவர் ஜெஃப்ரே ஜோனத்தன்.

Karthi releases teaser for Glassmate

இந்த ஆல்பம் குறித்து அவர் கூறுகையில், "தனிநபர் ஆல்பத்துக்கான வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை? என்ற கேள்வி என்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கினேன்.

மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் ஆஷிஷ் கோத்தாரி என்பவர் சோனி மியுசிக் நிறுவனத்துடன் இணைந்து, இந்த கிளாஸ்மேட் என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் 'வரியா' என்ற பாடலின் டீசர் மட்டும் நேற்று திங்கட்கிழமை நடிகர் கார்த்தியால் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வரும் ஜூன் 25ம் தேதி முதல் இணையதளத்தில் (you tubeல்) வெளியாகிறது.

இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தைப் பார்த்த எஸ் ஜே சூரியாவும், இயக்குநர் பிரபு சாலமனும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்த பாடலில் பிரதாயினி என்ற மாடல் நடித்துள்ளார். சோனி நிறுவனம் வெளியிடும் முதல் சிங்கிள் டிராக் தமிழ் ஆல்பம் இது.

இந்த ஆல்பத்துக்கு 'விடியுமுன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புரட்சி நம்பி என்பவர் பாடலை எழுதியுள்ளார். இசான் வர்கீஸ் பாடியுள்ளார்.

இந்த பாடலை ஜெஃப்ரே ஜோனாத்தன் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ ஆல்பமாகவும் இயக்கியும் உள்ளார்​.

 

வாலு பாடல் காட்சி: சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் ஹன்சிகா!

சிம்பு நடித்த வாலு இப்போ ரிலீஸ்.. அப்போ ரிலீஸ் என அவ்வப்போது அறிவிப்புகள் வருவதும், பின்னர் அப்படியே சைலன்டாகிவிடுவதும் வழக்கமான சமாச்சாரமாகிவிட்டது.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 17-ந் தேதி வெளியாகவிருப்பதாக கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வாலு' படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிம்புவும் ஹன்சிகாவும் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

Hansika ready work with ex boyfriend Simbu

படம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளது. இப்போது அந்தப் பாடலையும் ஷூட் செய்து இணைக்கப் போகிறார்களாம். இதில் கலந்து கொள்ள ஹன்சிகா வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஹன்சிகாவோ நிச்சயம் வந்து நடித்துத் தருகிறேன் என உறுதி அளித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, வாலு பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வரத் தயாராக உள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "வாலு' படம் ஜூலை 17-ந் தேதி வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு. படம் வேறு. இந்த படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் எப்போது என்னை அழைத்தாலும், அதற்காக நான் என்னுடைய நேரத்தை ஒதுக்க தயாராக உள்ளேன். ஏனென்றால், இதுவும் என்னுடைய படம்தான்," என்றார்.

 

அகதிகள் குறித்த ஆவணப்படம் கட்டாயம் தேவை – சொல்வது 'மெட்ராஸ் கபே' ஹீரோ ஜான் ஆப்ரகாம்!

மும்பை: பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் அகதிகள் நல்லெண்ணத் தூதுவராக (UNHCR) செயல் பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். சமீபத்தில் அவர் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

இலங்கை நாட்டைச்சேர்ந்த திவ்யா அவரது சகோதரி, சோமாலியன் நாட்டைச் சேர்ந்த பெர்லின், மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கஸ் மற்றும் சில ஆப்கானிய, ஈரானியக் கைதிகளுடன் அமர்ந்து கடந்த சனிக்கிழமை மதியம் ஜான் ஆப்ரகாம் உணவு அருந்தினார்.

John Abraham Refugees Celebrity ambassador

அவர்களைச் சந்தித்து முடித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்தியா ஒரு மிகச்சிறந்த நாடு, ஆனால் அகதியான திவ்யாவும் அவரது சகோதரியும் தமிழ்நாடு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பின்பே என்னைப் பார்க்க வந்தனர்.

அகதிகள் குறித்த முறையான மற்றும் முழுமையான ஒரு ஆவணப்படம் தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது, என்னுடைய படங்களின் மூலம் தொடர்ந்து நான் சமூகக் கருத்துக்களை வலியுறுத்தி வருகிறேன்.

ஏனெனில் சினிமா என்பது மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஊடகம், எனவே சினிமாவின் மூலம் கருத்துக்களை கூறினால் அவை மக்களை முழுமையாக சென்றடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

2006 ம் ஆண்டில் என்னுடைய படப்பிடிப்புக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்த போது ஆப்கானிஸ்தானில் இருந்து நிறைய அகதிகள் வெளியேறுவதைக் காண முடிந்தது. அகதிகளின் உண்மை வாழ்க்கையானது மிகவும் துயரம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது," என்றார்.

ஜான் ஆப்ரகாமின் தயாரிப்பில் வெளிவந்த மெட்ராஸ் கபே திரைப்படமானது இலங்கை அகதிகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை போன்றவற்றை பின்னணியில் வைத்து உருவானது. இதில் விடுதலைப் புலிகளையும் தமிழரின் போராட்டங்களையும் தவறாக சித்தரித்திருந்ததால், தமிழகத்தில் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அந்தப் படமும் வெளியாகவில்லை என்பது நினைவிருக்கலாம்.

 

பாகுபலிக்கு யு ஏ சான்று... 4000 அரங்குகளில் வெளியாகிறது!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்துக்கு தணிக்கைக் குழு யுஏ சான்று அளித்துள்ளது.

அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தியாவின் மிக பிரமாண்ட படம் பாகுபலி.

UA for Baahubali

இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்து ஹாலிவுட்டே வியந்து பாராட்டியுள்ளது. படத்தை வரும் ஜூலை 7-ம் தேதி வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகியிருக்கும் படம் இது.

இதனை தணிக்கைக் குழுவுக்கு நேற்று அனுப்பினர். படம் பார்த்து முடித்தபிறகு யு ஏ சான்று அளித்துள்ளனர்.

எந்தக் காட்சியையும் நீக்க வேண்டாம் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் தெரிவித்துவிட்டதால் யுஏ சான்று தரப்பட்டுள்ளது. யுஏ சான்று என்றால் பெற்றோர் துணையுடன்தான் சிறுவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று அர்த்தம்.

4000 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகவிருக்கிறது பாகுபலி.

 

நாளில் 20 லட்சத்தைத் தொட்டது புலி டீசர்

சென்னை: புலி டீசர் வெளியான ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அதனைப் பார்த்து ரசித்திருந்தனர், ஆனால் தற்போதைய நிலவரப்படி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டீசரைக் கண்டு களித்துள்ளனர்.

முதல்முறையாக விஜய் ராஜா வேடத்தில் நடித்து இருக்கிறார் போர் உடையில் விஜய் வாள் வீசுவது போன்ற ஆக்க்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் திரும்பத் திரும்ப பலரும் புலி டீசரைப் பார்த்து வருகின்றனர்.

Puli Teaser Crossed More Than 2 Million Views

விஜயின் பிறந்த நாள் பரிசாக பல தொலைக்காட்சி சேனல்களும் புலி டீசரை ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்திற்குப் பின் விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் புலி படத்தில் விஜயுடன் இணைந்து சுருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

அப்பாவிற்கு மாரடைப்பு .. லண்டன் விரைந்தார் எமி ஜாக்சன்

சென்னை:நடிகை எமி ஜாக்சனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து எமி ஜாக்சன் லண்டன் விரைந்துள்ளார்.

மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் வெளிநாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன். விக்ரமுடன் முதலில் இணைந்த தாண்டவம் கைகொடுக்கா விட்டாலும் மீண்டும் விக்ரமுடன் இணைந்து நடித்த ஐ ஹிட்டடித்து எமியைக் காப்பாற்றி விட்டது.

Amy Jackson's father suffers heart attack

தற்போது தமிழில் தனுஷுடன் வேலை இல்லாப் பட்டதாரி பார்ட் 2, உதயநிதியுடன் கெத்து போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஞாயிறு அன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், எமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் போஸ்ட் செய்திருந்தார்.

இந்நிலையில் வேலை இல்லாப் பட்டதாரி ஷூட்டிங்கில் எமி இருந்த போது அவரின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரம் மொபைல் மூலம் தெரியவர, ஷூட்டிங்கை கேன்சல் செய்து அவசர அவசரமாக விமானத்தின் மூலம் லண்டன் பறந்து சென்றிருக்கிறார் எமி.

 

எத்தனை லவ்வோ? மாத்தி மாத்தி கடுப்பேத்தறாங்கப்பா….

சேதி தெரியுமா? அந்த ரப்பர் இயக்குநர் அந்த புது பொண்ணை புடிச்சிட்டாராமே என்பதுதான் இப்போதைக்கு பரபரப்பு பேச்சு. நம்பர் நடிகை இயக்குநரை காதலிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது கூட ரப்பர் இயக்குநரை கடுப்பேத்த தானாம். ஏன் இப்படி ஆள் ஆளுக்கு மாறி மாறி காதல் கிசுகிசுவை பரப்பணும்? காரணம் இல்லாமல் இல்லைங்க.

வம்பு நடிகரை காதலித்த நம்பர் நடிகை அந்த காதல் முறிந்த உடன், ரப்பர் இயக்குநருடன் கை கோர்த்தார். இயக்குநரும் காதல் மனைவியை விவாகரத்து செய்யும் அளவிற்கு போனார். ஒரு கட்டத்தில் அந்த காதலும் கசந்து போனது.

பிக்அப் டிராப் நடிகருடன் ஜோடி சேர்ந்த நம்பர் நடிகை அவரையும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை.

ரப்பர் இயக்குநர் பாலிவுட்டில் பிஸியாக வாரிசு நடிகையுடன் காதலில் விழுந்துவிட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் இனி என் வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் ரப்பர்.
அது ஒரு ட்ராக்கில் போக அரசியல் வாரிசு நடிகருடன் ஜோடி சேர்ந்த நம்பர் நடிகை காதல் கிசுகிசுவில் சிக்கினார். தற்கொலை என்றெல்லாம் ஒரு கட்டத்தில் செய்திகள் உலாவந்தது.

அதே நேரத்தில் ரப்பர் நடிகரும் வாரிசு நடிகையை விட்டு விட்டு தன்னுடைய படத்தில் நடிக்கும் வெளிநாட்டு நடிகையுடன் காதலில் சுற்றுவதாகவும், சமீபத்தில் நடிகையின் பிறந்தநாள் பார்ட்டி முழுவதையும் ரப்பர்தான் ஏற்றுக்கொண்டார் என்றும் செய்திகள் கசிந்தது.

இதனால் கடுப்பான நம்பர் நடிகை, ரப்பரை கடுப்பேற்ற இயக்குநருடன் நெருக்கமாக இருந்த படங்களை ஊடகங்களில் கசிய விட்டாராம். எல்லாம் சரிதான். யாரும் யாரையும் காதலிக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் காதலில் விழலாம் ஆனால் கடுப்பேற்ற காதலிப்பது எந்த விதத்தில் நியாயம் இதனால் கடுப்பாவது என்னவோ ரசிகர்கள்தான்.

 

13 நாட்களில் 1 பில்லியன் டாலர்... ஜூராஸிக் வேர்ல்ட் புதிய சாதனை!

வெளியான 13 நாட்களில் 1 பில்லியன் டாலர்கள் வசூலைக் குவித்து, ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் சாதனையை முறியடித்தது ஜூராஸிக் வேர்ல்ட்.

டைனோசர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜூராசிக் பார்க்கின் நான்காவது பாகம் இந்தப் படம். முதல் இரு பாகங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Jurassic World’ Crossing $1B Global

கடந்த ஜூன் 10-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் 11-ம் தேதி வெளியானது. உலகெங்கும் இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது.

'ஜுராசிக் வேர்ல்ட்' திரைப்படம் ரிலீசான 13 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 6,353 கோடி ரூபாய்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 585 மில்லியனைக் குவித்துள்ளது இந்தப் படம்.

இந்தப் படம் வெளியான 4 நாட்களில், இதற்கு முந்தைய வசூல் சாதனை படைத்த ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2' படத்தின் சாதனையை தகர்த்தெறிந்தது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த ஆண்டு வெளிவந்த பாஸ்ட் அண்டு பியூரியஸ் 17 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. இந்த சாதனையை 13 நாட்களில் முறியடித்துள்ளது ஜுராசிக் வேர்ல்ட். விரைவில் ஜப்பானிலும் இந்த படம் வெளியாகிறது.

யுனிவர்சல் ஸ்டுடியோவின் 103 ஆண்டு வரலாற்றில் ஜூராசிக் பார்க்தான் மிக அதிக வசூலைக் குவித்த சாதனைப் படமாகும்.

 

என் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கிடையாது! - ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பியுள்ளனர்.

I'm not using FB or Twitter - Raghava Lawrence

எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப் பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

நான் பேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப் படுத்த வில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்," என்று ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

பேஸ்புக்கில் மட்டும் ராகவா லாரன்ஸ் பெயரில் ஆறு அக்கவுண்டுகள் உள்ளன என்பது குறிப்பித்தக்கது.

 

'ஆ' படத்தில் கிம்முடன் நடிக்கிறாரா தனுஷ்?

மும்பை: பார் அடல்ட்ஸ் ஒன்லி படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அணுகப்பட்டுள்ளாராம். இதில் கிம் கர்தஷியானும் நடிக்கவுள்ளதால், கிம் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பார் அடல்ட்ஸ் ஒன்லி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாராகிறது. முற்றிலும் முழுமையான முதல் செக்ஸ் படமாக இது வர்ணிக்கப்படுகிறது. இதில் கிம் கர்தஷியான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Dhanush's Adult Film With Kim Kardashian?

அவருடன் நடிக்க தற்போது தனுஷை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைசல் சைப் இயக்கும் இப்படம் கிம்முக்கு முதல் இந்தியப் படமாக அமையும். படத்தில் நடிக்க கிம் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இப்படத்தில் நடிக்க தனுஷ் சம்மதித்து விட்டாரா என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் விரைவில் அவர் இப்படத்தில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பிரெஞ்சு - ஹாலிவுட் தயாரிப்பு ஒன்றில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மரிஜனே சத்ராப்பி இந்தப் படத்தை இயக்குகிறார்.

பார்க்கலாம் கிம்மையும், தனுஷையும் ஒரே ஸ்கிரீனில் பார்க்க முடியுமா என்பதை!

 

இவங்கள்லாம் பத்திரிகைகாரங்கன்னு வேற சொல்லிக்கிறாங்க! - வரலட்சுமி காட்டம்

பத்திரிகைகாரர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார் சரத்குமார் மகள் வரலட்சுமி. காரணம் அவரைப் பற்றி வந்த ஒரு செய்தி.

Varalakshmi blasted Journalist writes against her

நடிகர் சங்கத் தேர்தலில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் ஒரு அணியாகவும், நெருங்கிய நண்பரான விஷால் எதிர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தினசரி அறிக்கைப் போர் நடத்தி வருகிறார்கள் இரு தரப்பினரும்.

இந்த நிலையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், 'வரலட்சுமியின் தாயார் சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். அந்த கோபம் வரலட்சுமிக்கு இன்னமும் உள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார் வரலட்சுமி," என்று குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

Varalakshmi blasted Journalist writes against her

இதைப் படித்து கடுப்பான வரலட்சுமி, ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார் பத்திரிகையாளர்களை. "இந்த முட்டாள்தனமான கட்டுரைக்கு நான் எப்படி ரியாக்ட் செய்வது? இவர்களெல்லாம் தங்களை பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு விஷயத்தில் உண்மை என்னவென்று தெரியவில்லை என்றால், அதைப் பற்றி எழுதும் உரிமை யாருக்கும் இல்லை.

இன்னொரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் என் தந்தையைத்தான் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, எப்போதும் ஆதரிப்பேன்," என்று கூறியுள்ளார் வரலட்சுமி.

 

“டைட்டானிக்“ பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலி

லாஸ் ஏஞ்செல்ஸ்: டைட்டானிக் இந்த வார்த்தையைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு காதலை மிக அழகாக வலியுடன் பதிவு செய்த இந்தப்படம் இன்றளவும் காதலர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.

1997 ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கிய படம் டைட்டானிக். ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ள ஒரு காதல் காவியம்.

'Titanic' Fame James Horner; Dies in Plane Crash

புகழ் பெற்ற இந்தப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் நேற்று அதிகாலை தனது சொந்த விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். விமானியாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட ஜேம்ஸ் ஹார்னர் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா அருகே திங்கள்கிழமை காலை தனது சொந்த விமானத்தில், பயணம் செய்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இதனை உறுதி செய்து பேஸ்புக் பக்கத்தில் செய்தி கொடுத்துள்ளார் அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா.

1953-ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் ஜேம்ஸ் ஹார்னர். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இசை பயின்றவர். 1970களின் இறுதியில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார்.

1982-ல் வெளியான ஸ்டார் டிரெக் 2 படமானது இவருக்கு நல்ல பெயரை அளித்தது. ஏலியன்ஸ், பிரேவ் ஹார்ட், அப்போலோ 13, ஏ பியூடிஃபுல் மைண்ட், அவதார் போன்ற சிறந்த ஹாலிவுட் படங்களுக்கு தனது மகத்தான இசையின் மூலம் உயிர் கொடுத்தவர் ஹார்னர்.

ஜேம்ஸ் ஹார்னர் இதுவரை 120 ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பல முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஜேம்ஸ் ஹார்னருக்கு டைட்டானிக் படத்தின் மூலமே ஆஸ்கார் கனவு நனவானது, மேலும் இந்தப் படமானது மூலம் ஜேம்ஸ் ஹார்னர் உலகப் புகழ் பெறக் காரணமாக அமைந்தது.டைட்டானிக் படத்தின் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் ஜேம்ஸ் ஹார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் ஆக்க்ஷன் பாதைக்குத் திரும்பும் கோலிவுட்

சென்னை: தமிழ் சினிமாவில் பேய்களின் ஆதிக்கம் குறைந்து பார்ட் 2 படங்களின் மோகம் அதிகரித்து உள்ள நிலையில், மீண்டும் ஆக்க்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளனர் கோலிவுட் படைப்பாளிகள்.

யானும் தீயவன், விழித்திரு, துடி போன்ற ஆக்க்ஷன் படங்களின் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது புகழ். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் அப்பாவியாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ஜெய், தற்போது புகழ் படத்தின் மூலம் ஆக்க்ஷன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

Pugazh: Action Thriller Movie

சமீபத்தில் ஜெய் ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து வெளிவந்த வலியவன் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தற்போது புகழ் படத்தில் நடித்து வருகிறார் ஜெய்.

மற்றவர்களால் நீயெல்லாம் எங்க ஜெயிக்கப் போற என்று அவமானப்படுத்தப்படும் ஒருவனில் நாம் எப்போதும் நம்மைக் கண்டு அவர்கள் ஜெயிக்க வேண்டும், என்று சமயங்களில் பிரார்த்திப்போம் அல்லவா? அந்த மாதிரி ஒரு நபரின் கதைதான் புகழாம்.

படத்தில் ஜெய்க்கு இவன் வேற மாதிரி மற்றும் வேலை இல்லாப் பட்டதாரி போன்ற படங்களில் நடித்த சுரபியை ஜோடியாக்கியுள்ளனர்.

"‘புகழ்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல் படுகிறோம்" என்கிறார் இயக்குனர் மணிமாறன்.

 

பண்பலை வானொலி நிலையத்தில் நடந்த பாபநாசம் இசை வெளியீட்டு விழா!

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் இன்று நடந்தது.

மலையாளத்தில் உருவாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் இந்தியாவின் முன்னணி மொழி சினிமாக்களில் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றியடைந்து வருகிறது. கன்னடத்திலும், தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

Papanasam audio launched at FM station

அடுத்து தமிழ், இந்தியில் வெளியாகவிருக்கிறது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தில் கமல், கவுதமி நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் இந்த விழா நடந்தது.

கமல் ஹாஸன், கவுதமி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பாடலாசிரியர் நா முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் எம்எஸ் பாஸ்கர் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

பாபநாசம் குடும்பம் இசையை வெளியிட, படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

 

விஜய்க்கு வாள் சண்டை கற்றுத் தந்த சீன ஸ்டன்ட் மாஸ்டர்!

புலி படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளுக்காக வாள் சண்டை கற்றுக் கொண்டாராம் நடிகர் விஜய்.

சிம்பு தேவன் இயக்கி வரும் புலி படம் சரித்திர மற்றும் அதியுச்ச கற்பனை கதையை அடிப்படையாகக் கொண்டது. இதில் போர்வீரனாகத் தோன்றுகிறார் விஜய். நடிகை ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்துள்ளார்.

Vijay learnt sword fight for Puli

இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் சிம்புதேவன் கூறுகையில், "புலி, இதுவரை இல்லாத பிரமாண்டம் மற்றும் புதுமையுடன் இருக்கும். இந்தப் படம் வரலாற்று புனைகதை. ஆனால் கடந்த காலத்தில் நிஜத்தில் நடந்த எந்த சம்பவத்தையும் காட்சிப்படுத்தவில்லை.

இந்தப் படத்தில் போர் வீரனாக வரும் விஜய், வாள் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இதற்காக அவருக்கு சிறப்பு வாள் பயிற்சி அளிக்கப்பட்டது. திலீப் சுப்பராயனும், சீன ஸ்டன்ட் கலைஞர் சாங் லின்-னும் அவருக்குப் பயிற்சி அளித்தனர்," என்றார்.

விஜயதசமி ஸ்பெஷலாக வருகிறது விஜய்யின் புலி.

 

ஜூன் 26 ம் தேதியில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஒன்பது படங்கள் வெளியாகின்றன

சென்னை: 6 மாதத்தில் செஞ்சுரி அடித்து சாதனை புரிந்த தமிழ் சினிமா போகின்ற போக்கைப் பார்த்தால், இந்த வருடத்தில் இன்னும் ஒரு செஞ்சுரி அடித்து விடும் போல. ஆமாம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்து வந்தன.

ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை இடும் நோக்கில் வரும் ஜூன் 26 ம் தேதி மொத்தமாக 9 படங்கள் வெளியாக உள்ளன. இதில் நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 8, ஒரே ஒரு படம் மட்டும் ஹாலிவுட் படம்.

June 26: 9 Movies  Released  In Tamilnadu

ஆதியின் யாகாவாராயினும் நாகாக்க, விமலின் காவல், விஷ்ணுவின் இன்று,நேற்று,நாளை போன்ற இளம் நடிகர்களின் படங்களுடன் கருணாஸின் லொடுக்கு பாண்டி மற்றும் மதுமிதாவின் மூணே மூணு வார்த்தை போன்ற படங்களும் வெளியாக உள்ளன.

இந்தப் போட்டி பத்தாது என்று சிறு பட்ஜெட் படங்களான ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்ஜோதி, மீனாட்சி காதலன் இளங்கோவன் போன்ற மூன்று படங்களும் ஜூன் 26 ம் தேதியில் வெளியாக உள்ளன.

ஹாலிவுட் படமான டெமானிக் படமும் இந்த வரிசையில் இணைந்து போட்டிக் களத்தில் குதித்துள்ளது.

ஒரே நாளில் இத்தனை படங்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது ஒட்டுமொத்தக் கோடம்பாக்கமும்.

 

பாபநாசம் போஸ்டர்: மன்னிப்பு கோரிய கமல்

சென்னை: பாபநாசம் பட போஸ்டர்களில் ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவதுபோல இடம்பெற்றிருந்த தனது படங்களுக்காக மன்னிப்பு கோரினார் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்'. ஜூலை முதல் வாரம் படம் வெளியாகவிருக்கிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் இது. கமலுடன் கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

Kamal regrets for not wearing helmet

இந்நிலையில், இப்படத்தில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் நான்கு பேரும் ஒரு மொபெட்டில் பயணிப்பது போன்ற ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ஹெல்மெட் அணியாமல் தான் நடித்ததற்காக கமல் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

வரும் ஜூலை முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய படத்தில் இந்த மாதிரியான காட்சியில் ஹெல்மெட் அணியாமல் நடித்ததற்காக வருந்துகிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, "இந்த பைக் காட்சியை நாங்கள் ரொம்ப நாளைக்கு முன்பே எடுத்துவிட்டோம். இருந்தாலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காட்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து நடித்திருக்க வேண்டும்.

நீங்கள் எப்படி வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல்வதை கட்டாயம் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் ஹெல்மெட்டும் அவசியம் என்பதை உணருங்கள்," என்றார்.