சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!


தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான்.

அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.

இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான்.

இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார்.

ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.
 

முப்பொழுதும் உன் கற்பனைகள் ஒற்றைப் பாடல் வெளியீடு!


இப்பொழுதெல்லாம், ஒரு படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிடுவது புதிய வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.

அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.

இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.

மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!
 

இளையராஜா, யுவனைப் பிரிந்தார் பாலா... அடுத்த படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்!


ஜிவி பிரகாஷின் காட்டில் இப்போது அடை மழை... அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள், அதுவும் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய இயக்குநர்களின் படங்களில்.

ஏ ஆர் ரஹ்மானின் உறவுக்காரர்தான் ஜிவி பிரகாஷ். ஜென்டில்மேன் படத்தில் குழந்தைப் பாடகராக அறிமுகமானார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

அதைத் தொடர்ந்து பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரஜினியின் குசேலன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் வந்த படங்கள் அனைத்தும் ஜிவி பிரகாஷுக்கு பெயர் சொல்லும்படி அமைந்தன. அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், ஆடுகளம் என தொடர்ந்து ஹிட் அடித்தன இவரது படங்கள்.

இப்போது பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.

அடுத்ததாக, அவருக்கு அடித்துள்ளது 'பாலா பட வாய்ப்பு' எனும் பெரும் அதிர்ஷ்டம்.

அதர்வாவை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாலாவின் படங்களில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இவரது முதல்படம் சேதுவுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரையிசையில் அந்தப் படம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்தபடம் நந்தாவுக்கு யுவன் சங்கர் ராஜாவும், பிதாமகனுக்கு இளையராஜாவும் இசையமைத்தனர். நான் கடவுளுக்கும் இளையராஜாதான் இசை.

அவன் இவனுக்கு மீண்டும் யுவன் இசையமைத்தார். இந்த நிலையில் தனது ஆறாவது படத்துக்கு இளையராஜா குடும்பத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை இசையமைப்பாளராக பாலா ஒப்பந்தம் செய்துள்ளது, திரையுலகில் இன்றைய பரபரப்பாக பேசப்படுகிறது.
 

போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி!


'ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்' - இந்த விருப்பமோ ஆசையோ இல்லாத பொது ரசிகனையோ ரஜினி ரசிகனையோ பார்ப்பது அரிது!

ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை ஏகத்துக்கும் உண்டு.

சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்ற பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் போட்டோ இதுதான்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், உடம்பை பழைய நிலைக்குக் கொண்டுவர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் ரஜினி. தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.

மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் தன் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் ஒரு ரவுண்ட் வருகிறாராம் அதிகாலை நேரத்தில்.

ரஜினி வருவதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள். உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுக்க, சந்தோஷத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் பழைய உடல்நிலையுடனும் இருந்ததாக இந்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ராணா மேலும் தாமதமாகும் என்று வரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

பிபாஷா பாசு, ராணா டக்குபதி விரைவில் திருமணம்?


பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்றிருக்கும் நடிகர் ராணா டக்குபதிக்கும் இடையே பத்திக்கிச்சாம். விரைவில் திருமணம் நடக்கப்போவதாக பேசப்படுகிறது.

நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். என்னாச்சோ, ஏதாச்சோ என்று தெரியவில்லை ஆளுக்கொரு பக்கமா பிய்த்துக் கொண்டு போய் விட்டனர். பிபாஷா தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்டதாகவும், அதற்கு ஜான் மறுப்பு தெரிவத்தனால் தான் இருவரும் பிரிந்ததாக ஒரு பேச்சு.

ஜானைப் பிரிந்த பிறகு பிபாஷா தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகர் ராணா டக்குபதியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். ராணா தெலுங்கு முன்னணி நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜூனாவின் நெருங்கிய உறவினர். ராணாவும், பிபாஷாவும் சேர்ந்து தம் மாரோ தம் என்ற படத்தில் நடித்தனர். அதில் இருந்து பிபாஷா, ராணாவுடன் சுற்றுவதாகத் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ராணா தமிழ் நடிகை ஷ்ரேயா சரணை டேட் செய்தார். அதன் பிறகு தான் பிபாஷா பக்கம் தாவி்விட்டார். ராணா, ஷ்ரேயா பிரிய பிபாஷா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

என்னவோ போங்கப்பா!
 

அடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி


இயமலையைத் தெரியாதவர்கள் இல்லை என்றாலும், அங்கே போய் ஆன்மீக அமைதி பெற்று வருவதை பிரபலமாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் உண்டு. அதன் விளைவு, இமயமலை என்றதுமே உடன் நினைவுக்கு வருபவர் ரஜினிதான்.

இதனால், வேறு எந்த நடிகர் இமயமலையைப் பற்றிப் பேசினாலும், ரஜினியின் பாதிப்பு அல்லது ரஜினியைப் போல இமயமலைக்குப் போவதாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இமயமலை நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஷால்.சமீபகாலமாக அடிக்கடி இமயமலைக்கு சென்று வருகிறாராம். ரஜினிகாந்தைப் போல் இவரும் ஆன்மிக பயணம் செல்வதாகவும், இமயமலையில் உள்ள குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உண்மையில் இவர் எதற்காக இமயமலை போகிறார்... உண்மையிலேயே விஷயமிருக்கிறதா அல்லது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை விஷாலிடமே கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அவர் கூறுகையில், "இமயமலை, எனக்கு மிகவும் பிடித்த இடம். என் தந்தை ஜி.கே.ரெட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தபோது, எனக்கு 16 வயது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது. அப்போதுதான் நான் முதன்முதலாக இமயமலைக்கு சென்றேன். 45 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.

அதன்பிறகு 10 முறை நான் இமயமலைக்கு போய் வந்து விட்டேன். 'அவன் இவன்' படம் முடிந்ததும், எனக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. அந்த படத்தில் நான் ஒன்றரை கண் உள்ளவனாக நடித்து இருந்தேன். அதனால் என் கண்களுக்கும், மனசுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. உடனே இமயமலைக்கு புறப்பட்டேன். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

இமயமலை செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆனந்தா ஸ்பா என்ற இடத்தில்தான் தங்குவேன். அங்கிருந்து ரிஷிகேஷ், பத்ரிநாத், குலுமனாலி ஆகிய இடங்களுக்கு 'பைக்'கில் செல்வேன். பஸ் கூரை மீது கூட பயணித்திருக்கிறேன்.

ஆன்மீக பயணம் அல்ல...

ஆன்மிக பயணத்துக்காக நான் இமயமலை செல்வதில்லை. ஓய்வு எடுப்பதற்காகவே போகிறேன். என்னை அங்கு யாருக்கும் தெரியாது என்பதால், சுதந்திரமாக நடமாட முடிகிறது. அங்கு, கங்கா நதிக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. ஒரே ஒரு நாள் அந்த பூஜையில் கலந்துகொண்டேன்.

லடாக்கில் மயங்கிய சமீரா

வடநாட்டில் எனக்கு பிடித்த இன்னொரு இடம், லடாக். ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. 'வெடி' படத்துக்காக, 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினோம். டாக்டர்கள் குழுவையும், ஆக்சிஜன் சிலிண்டரையும் கூடவே வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். அப்படியிருந்தும் சமீராரெட்டி மயங்கி விழுந்து விட்டார். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது,'' என்றார்.
 

டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள் விழா... வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது!!


வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.

ரஜினிக்கும் அழைப்பு

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
 

பில்லா 2 நாயகி ஹூமா நீக்கம் - அஜீத் ஜோடி பார்வதி ஓமண குட்டன்!


அஜீத் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படமான பில்லா -2 ல் அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் பில்லா 2.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம், முன்பு ரஜினி நடித்து வெளியான பில்லாவின் முன் தொடர்ச்சியாகும்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றவர். 2008-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்தவர். இந்தியாவின் முன்னணி மாடலாகத் திகழும் பார்வதி, மிஸ் போட்டோஜெனிக், மிஸ் பர்சனாலிட்டி உள்பட பல பட்டங்களை வென்றுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசுகையில், "அஜீத்துக்கு ஜோடியாக, எடுத்த எடுப்பில் தமிழில் நடிப்பது பெருமையாக உள்ளது," என்றார்.

படம் ஆரம்பித்த போது, ஹூமா குரேஷி என்ற மாடல்தான் அஜீத் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

"ஆனால் படம் தொடங்கும் தேதியில் ஏற்பட்ட சில மாறுதல்கள் காரணமாக ஹூமாவின் தேதிகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. வேறு வழியில்லாத நிலையில், பார்வதியை தேர்வு செய்தோம். ஆனால், இந்தப் படத்துக்காக நடந்த ஆடிஷனில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் பார்வதி," என்று ஐஎன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.

பிரேசில் மாடல் புருனா அப்துல்லா...

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரேசில் நாட்டின் பிரபல மாடல் புருனா அப்துல்லா நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது அதனை ஐஎன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
 

வெளிநாடு 'பறக்கும்' சோனா!!


தன்னை எஸ்பிபி சரண் பாலியல் வன்முறை செய்ய முயன்றார் என்று புகார் கொடுத்து, தொடர்ந்து போராட்டம் என்றெல்லாம் புயல் கிளப்பிய நடிகை சோனா, இன்று ‘விட்டால் போதுமென’ வெளிநாடு பறக்கிறார்.

எஸ்பிபி சரண் என்னிடம் பகிரங்கமாக, அதுவும் மீடியா முன்பாக வந்து மன்னிப்பு கேட்டால்தான் வழக்கு வாபஸ் என்று கூறிவந்த சோனா, நேற்று வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், போலீஸார் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக உள்ளனர், அவர்களின் ‘ட்ரீட்மென்ட்’ போன்றவை புரிந்ததும், தானாகவே அமைதியாகிவிட்ட சோனா, இன்று இந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டார். சரணை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்ட சரண், இதுவரை எதுவுமே பேசவில்லை. அவர் சார்பாக பேச வேண்டியதையெல்லாம் ‘மேலிட அறிவுறுத்தலின் படி’ போலீசாரே ‘பேசிவிட்டதாக’ விவரமறிந்த வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், சரணை மன்னித்ததாக அறிவித்த கையோடு, வெளிநாடு பறந்துவிட்டார் சோனா. போவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய சோனா, மனசே சரியில்ல. எதையும் வெளிப்படையா பேச முடியாத நிலை. நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன். கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில் இருந்து மனசை தேத்திக்கிட்ட பிறகு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன்,” என்றார் சோகமாக.

அத்தனை பலமாக இருந்திருக்கிறது ‘மேலிடத்து அட்வைஸ்’!

 

உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வடிவேலு?


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.

விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே,” என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்


சென்னை: பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சக்தி நாடக சபா மற்றும் சிவாஜி நாடக மன்றத்தில் பணிபுரிந்தவர், எஸ்.ஏ.கண்ணன். பராசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்,’ ‘வியட்நாம் வீடு’ ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். சத்யம், தனிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை டைரக்டும் செய்தார்.

இவருடைய மனைவி காமாட்சி ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். எஸ்.ஏ.கண்ணன் தனது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த எஸ்.ஏ.கண்ணனின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்களம். அவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் இருக்கிறார்கள்.

அவருடைய உடல் தகனம் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது.

 

அமெரிக்க சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சல்மான்!


மும்பை: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரகான சல்மான்கான் (வயது 45) ‘டிரைகெமினல் நியூரால்ஜியா’ என்ற நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் முகத்தில் கன்னம், தாடைப்பகுதியில் தாங்க முடியாத வலியை அனுபவித்து வந்த அவர் அதிலிருந்து நிவாரணம் பெற அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 31-ந் தேதியன்று அவருக்கு 8 மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குணம் அடைந்தார்.

பிக்பாஸ் சீஸன் 5-ல் பங்கேற்பு

நேற்று முன்தினம் இரவில் அவர் விமானம் மூலம் மும்பை திரும்பினார். அவரை குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற ‘பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ’வின் 5-வது சீசன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) மும்பை மெகபூப் ஸ்டூடியோவில் நடக்கிறது. ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி இந்த நிகழ்ச்சியில் சஞ்சய் தத்துடன் சல்மான்கான் கலந்துகொள்கிறார்.