மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு


சென்னை: எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்கார முயற்சி, அது தொடர்பாக தான் கொடுத்த புகாருக்கு போலீசார் காட்டிய ரியாக்ஷன், சமரசமாகப் போகுமாறு வந்த மிரட்டல்கள் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் கொஞ்சகாலத்துக்கு சினிமாவில் நடிக்கவே மாட்டேன், என்றும் நடிகை சோனா அறிவித்துள்ளார்.

மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். இவ்வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது. போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார்.

பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.

மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இதனால் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருகட்டத்தில், போலீசார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் சோனாவை சமரசமாக போகும்படி நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிபி சரணுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தினால் கைது செய்து உள்ளே அடைத்துவிடுவோம் என போலீஸ் சோனாவை பகிரங்கமாக மிரட்டியது.

இதனால், அடுத்த நாளே சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார் என்றும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சோனாவே அறிவித்தார். எஸ்ப்பி சரண் எதுவும் கூறவில்லை.

நடந்த சம்பவங்கள் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிவந்தார் சோனா. உடனடியாக வெளிநாடு போய், பின்னர் ஹைதராபாத்தில் தங்கி நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது இப்போதைய முடிவு குறித்து சோனா கூறுகையில், "எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதை எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன. ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.

அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன்.

வேண்டாம் வெங்கட்பிரபு படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்றார்.
 

வாகை சூட வா - திரையில் ஒரு இலக்கியம்


-எஸ் ஷங்கர்

நடிப்பு: விமல், கே பாக்யராஜ், இனியா, தம்பி ராமையா, பொன்வண்ணன், தென்னவன், நம்பிராஜன்

இசை: டி ஜிப்ரான் (அறிமுகம்)

ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்

எழுத்து - இயக்கம்: ஏ சற்குணம்

தயாரிப்பு: எஸ் முருகானந்தம், என் பூரணா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

மக்களை மகிழ்விப்பது வெகுஜன சினிமா. கூடவே மாற்றத்துக்கான சிறு வித்தையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்துச் சென்றால் ஒரு படைப்பு என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. அந்த வகையில் சற்குணம் உருவாக்கியுள்ள வாகை சூட வா, 'சிறந்த படைப்பு'!

கொளுத்தும் வெயிலில் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானம் கவிந்து, பெருமழை பிடித்துக் கொள்கிறது. மண் வாசம் மனதை நிறைக்க, சின்ன தளும்பலுடன் நினைவுகள் பின்னோக்கிப் போய் பால்ய மழைக்காலங்களையும், அந்தப் பருவத்தில் அனுபவித்து மகிழ்ந்த சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தொட்டுத் தடவி மகிழத் தொடங்கிவிடும். சற்குணத்தின் இந்த முயற்சியில் அந்த பழைய மனப்பதிவுகளைத் தடவிப் பார்த்த அனுபவம்!

சினிமாவின் முதல்காட்சி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், காதலர்கள் இப்படித்தான் பாடிக் கொள்ள வேண்டும், நகைச்சுவை இப்படித்தான் பித்துக்குளித்தனமாக இருக்கவேண்டும், க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடிய வேண்டும்... ம்ஹூம்... இந்த கோடம்பாக்க விதிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை இந்த மனிதர்!

திரையில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை. 'வாத்தியாரை' அடிக்கிறார் நம்பியார். மணலைக் குவித்து உட்கார்ந்து படம் பார்க்கும் கூட்டத்தில், தோளில் வேட்டைத் துப்பாக்கியோடு ஒரு நரிக்குறவர். வாத்தியாரை அடிக்கும் நம்பியாரை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'வாத்தியாரே ஒதுங்கிக்கோ' என்று கூவியபடி திரையைச் சுடுகிறார் அந்த நரிக்குறவ ரசிகர். திரை எரிகிறது, அவர் மனம் குளிர்கிறது!

-அறுபது எழுபதுகளில் இந்தக் காட்சியை பார்த்திராத, அனுபவித்திராத சினிமா ரசிகர்களோ, டூரிங் டாக்கீசுகளோ அனேகமாக தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை! அந்த யதார்த்தத்தோடு தொடங்கும் படம், இறுதிக் காட்சியில் அறியாமையின் இருளிலிருந்து விடுபட்ட சிறுவர்கள், தங்களை ஏய்க்கப் பார்த்தவனிடம் உழைப்புக்கான ஊதியத்தை எண்ணி வாங்கும் போது ஹீரோ ஆனந்தக் கண்ணீருடன் சிரிக்கிறாரே.... அதுவரை தொடர்கிறது... ஹேட்ஸ் ஆஃப் சற்குணம்!

1966. அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டம்.

'ஒரு சர்க்கார் உத்தியோகம் வேண்டும். அதற்கு முன் கிராம சேவக் தன்னார்வ அமைப்பு மூலம் ஏதோ ஒரு கிராமத்தில் தற்காலிக வாத்தியார் வேலை செய்தால் சொற்ப சம்பளமும் ஒரு சான்றிதழும் கிடைக்கும். இந்த சான்றிதழ் இருந்தால் அரசு வேலை எளிதில் சாத்தியம்,' - பத்திரம் எழுதி தன்னைப் படிக்க வைத்த அப்பாவின் (பாக்யராஜ்) இந்த யதார்த்தக் கனவை நனவாக்க கண்டெடுத்தான் காடு கிராமத்துக்கு வருகிறார் வேலுத்தம்பி (விமல்).

செங்கல் சூளையில் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் மக்களின் வாரிசுகளுக்கு பாடம் சொல்லித் தர முயற்சிக்கிறார். அறியாமை இருளிலிருந்து அவர்கள் வெளிவராவிட்டாலும், படித்த பட்டணத்து இளைஞனான வாத்தியாரின் வெள்ளந்தித்தனத்தை தோலுரித்து விடுகிறார்கள்.

படித்தவன் பிழைப்பைக் கெடுக்கப் பார்க்கிறான் என்ற நினைப்பில், வாத்தியாரை 'சேர்த்துக் கொள்ளாமல்' இருக்கும் அந்த மக்கள், படிப்பறிவில்லாத தங்களை, ஒரு 'ஆண்டை' எப்படியெல்லாம் ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்த கணத்தில், வாத்தியாரின் கைகளில் தங்கள் பிள்ளைகளை ஒப்புவிக்கிறார்கள். கிராமத்தில் குறும்புத்தனம் செய்த மழலைகள், மெல்ல மெல்ல பல்பம் வைத்து சிலேட்டில் கிறுக்க ஆரம்பிக்கிறார்கள். கூடவே வாத்தியாருக்கு ஆக்கிப் போட வந்து, தன்னை அவருக்குத் தரத் தயாராக நிற்கும் மதி (இனியா).

தனது கொத்தடிமைகள் புதிதாக கற்க ஆரம்பித்துள்ள கல்வி தனக்கெதிரான புரட்சிக் கேள்வியாக மாறும் நாள் நெருங்குவதை உணர்ந்த ஆண்டைக்கு ஆத்திரம் தாங்கவில்லை. அந்த மக்களையே அழிக்க முயல, ஆபத்பாந்தனாய் அவர்களைக் காக்க வருகிறார் வாத்தியாரின் தந்தை. வந்தவர் அரசு வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை வாத்தியாரிடம் தர, உற்சாகத்தோடு வேலையில் சேரப் புறப்படுகிறார் வாத்தியார்.

பாதிக் கலைந்த உறக்கத்தில் தவிப்பர்களைப் போல, அரைகுறை கல்வியோடு கண்முன் நிற்கும் அந்த மழலைகளிடம் கண்ணீருடன் விடைபெறுகிறார் வாத்தியார்... அரசு வேலையில் சேர்ந்தாரா.... அந்த மழலையரின் கல்வி என்ன ஆனது.. மதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? போன்றவை ஒரு அழகிய நாவலின் நிறைவான அத்தியாயம் மாதிரி சொல்லப்பட்டுள்ளன.

1966-தான் கதை நிகழும் காலம் என்று முடிவு செய்த இயக்குநர், அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமுறை, உணவு வழக்கம், விவசாயம், விளையாட்டு, சினிமா... ஒன்றிலும் சிறு குறைகூட காண முடியாத அளவுக்கு பார்த்துப் பார்த்து விஷயங்களைச் சேகரித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளுக்குத் தெரியாத விஷயங்களை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கொழிந்துபோன கவலைப் பாசனம், கருவாமணி, பிரிமனை, மக்கேரி, தவலை (தண்ணீர்குடம்), பொட்டல்வெளி என்பதற்கு சரியான உதாரணமாய் ஒரு கிராமம், பனையிலேறும் மீன், செங்கல் சூளைகள், கிராமத்து உணவுகள் போன்றவற்றையெல்லாம் திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. ஒரு இலக்கியவாதியின் செய்நேர்த்தி!

படத்தில் ஹீரோ விமலையும் தாண்டி கண்ணிலேயே நிற்பவர்கள் இருவர்... நாயகி இனியா மற்றும் நான்கே காட்சிகளில் வந்தாலும் மனசைத் தொடும் பாக்யராஜ்.

விமலிடம் பணத்தைப் பிடுங்க அப்பா தம்பி ராமையாவுடன் சேர்ந்து நடத்தும் நாடகமும், தன் காதலைச் சொல்லும் உத்தியாய், 'எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க' என்ற பொய்யைச் சொல்லி, அதற்கு விமல் முகம் போகும் போக்கைப் பார்த்து சந்தோஷத்தில் ஆடிக் கொண்டே வருவதும்... முதல் தரம். பாரதிராஜாவின் நாயகிகளைக் கண்முன் நிறுத்தியது இந்தக் காட்சிகளில் இனியாவின் நடிப்பு.

மகன் சர்க்கார் வேலைக்கு ஏன் போக வேண்டும் என்பதை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லும் முதல் காட்சியிலும், அதே மகன் தன் கனவை நிறைவேற்றாமல் செல்லும்போது வழியனுப்பும் காட்சியிலும் மனதைப் பிசைகிறது பாக்யராஜ் நடிப்பு.

'டூ நாலெட்டாக' வரும் தம்பி ராமையா, நம்பிராஜன், பொன்வண்ணன், அந்த குருவிக்கார கிழவனாக வரும் குமரவேலும் நடிகர்களாகவே தெரியவில்லை.. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கண்டெடுத்தான் காட்டுவாசிகள்தான் அவர்கள்!

இத்தனை நாளும் நாம் ஆண்டையிடம் இப்படித்தான் ஏமாந்து போனோமா என்ற தவிப்புடன், சூளையில் கிடக்கும் தன் மகளை தரதரவென இழுத்துப் போய் விமலிடம் ஒப்படைத்து, 'வாத்தியாரே இதை உங்கையிலே ஒப்படைக்கிறேன்... எதையாவது கத்துக் கொடுங்க,' என அந்தத் தாய் கதறும்போது கண்களில் நம்மையும் மீறி 'மளுக்'கென எட்டிப் பார்க்கிறது கண்ணீர்!

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு, காலச் சக்கரத்தில் ஏற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டுகிறது. ஜிப்ரான் என்பவர் புதிய இசையமைப்பாளர் என்கிறார்கள். நம்பத்தான் முடியவில்லை. பின்னணி இசையும், 'போறானே...', 'சரசர சாரக்காத்து...' பாடல்களும் லயிக்க வைக்கின்றன.

களவாணியில் தன்னை நிலை நிறுத்த ஒரு திரைக்கதையை உருவாக்கி வெற்றிபெற்ற சற்குணம், இந்தப் படத்தில் தமிழ் சினிமாவையே நிமிர்த்தும் அசத்தலான திரைக்கதையை உருவாக்கி வாகை சூடியிருக்கிறார்... வாழ்த்துக்கள்!
 

கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!


கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் நிகிதா.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நிகிதா வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படம் கிடைத்திருக்கிறதே, அதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்களேன் என்தற்கு,

நான் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தற்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

கார்த்தி தற்போது சகுணியில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் சூரஜ் தன் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

தர்ஷன் பிரச்சனை முடிந்தபிறகு நிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்...
 

ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியை ஒத்தி வைத்த மழை!


மழை காரணமாக, சென்னையில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திப் போட்டார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

டிக்கெட்டுகள் மளமளவென விற்பனையாகிவந்த நிலையில், சென்னையில் திடீர் திடீரென பெரும் மழை வெளுத்துக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை வேளைகளில் கச்சேரி நடத்துவது சென்னையில் சாத்தியமில்லாததாகிவிட்டது.

எனவே சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதியும், கோவையில் ஏற்கெனவே அறிவித்தது போல அக்டோபர் 16-ம் தேதியும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் என தனது பிஆர்ஓ நிகில் மூலம் அறிவித்துள்ளார் ஹாரிஸ்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
 

நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கீஷ்... 2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!


பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கீஷ்.

நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கீஷ்.

மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மொபைலில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் ஜக்கீஷ்.

அப்போது சாலையிலஸ் ஒரு பெண் கதறிக் கொண்டும், காப்பாற்றக் கோரியும் சத்தமெழுப்பியது அவர் காதில் விழுந்தது. உடனே சாலையில் எட்டிப் பார்த்தார். அப்போது ஒரு 17 வயது பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணோ சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

கிட்டத்தட்ட 20 அடி தூரம் ரோடில் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். அப்படியும் விடவில்லை. உடனே அந்தத் திருடர்களில் ஒருவன் பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலியைப் பறிக்க பைக் பறந்தது. அதற்குள் அந்தப் பெண்ணருகில் ஓடிவந்த ஜக்கீஷ், நடந்ததைப் புரிந்து கொண்டு, போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு அருகிலிருந்தவர்களிடம் சொன்னார்.

மேற்கொண்டு நடந்ததை அவரே சொல்கிறார்:

" அந்தப் பக்கம் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விஷயத்தைச் சொல்லி பைக் கேட்டேன். அவரும் மறு பேச்சின்றி உடனே தந்தார். அடுத்த நொடி நான் பறந்தேன் பைக்கில். எனக்கும் அவர்களுக்கும் 500 மீட்டர் கேப். வேகமாகப் போய், அவர்கள் பைக்குக்கு முன் நான் மறிக்க அவர்கள் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் பலமாகப் பிடித்துக் கொண்டேன். ஒருவன் மட்டும் சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து செயினை கைப்பற்றினேன். அந்தப் பெண்ணிடம் அந்த செயினை ஒப்படைத்தபோது, அவள் அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் இதற்கு முன் பார்க்காதது," என்றார்.

ஆரம்பத்தில் இது ஏதோ சினிமா ஷூட்டிங் என நினைத்துவிட்டார்களாம் மக்கள். அவர்களிடம் கன்னடத்தில் "இது ஷூட்டிங் அல்ல' என்று பல முறை விளக்கிக் கூறவேண்டியிருந்ததாம். விஷயம் புரிந்ததும், அசந்துபோய் ஜக்கீஷைப் பாராட்டினார்களாம் பொதுமக்கள்.

பின்னர் வழக்கம்போல போலீஸ் கடைசியில் வந்து, திருடர்கள் இருவரையும் பிடித்துள்ளது. பிடிபட்ட இரு இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

"ஒரு இளைஞன் ஆஸ்டின் கல்லூரியில் பியூசி படிப்பவன். இன்னொரு இளைஞர் ஷேசாத்ரிபுரம் கல்லூரியில் பியூசி படிக்கிறான்," என்றார் இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களூர் துணை கமிஷனர் ரேவண்ணா.

ஜக்கீஷ் இதுபோல நிஜத்திலும் உதவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பெங்களூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்றி தவறி ட்ராக்கில் விழவிருந்த ஒருவரை, பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளார் ஜக்கீஷ்.
 

ரஜினி அங்கிளைச் சந்தித்தேன்... சூப்பரா இருக்கார்! - மோகன்பாபு மகள்


ரஜினியை வீட்டில் போய் சந்தித்தேன். அவர் நலமுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் உள்ளார் என்று நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்ற ரஜினி கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பிறகு அவர் போயஸ் கார்டன் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு ஆகியவற்றில் ஓய்வெடுத்து வருகிறார்.

இடையில் ராணா பட வேலைகளையும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள், படத்தின் இசை, காட்சியமைப்புகளில் மாற்றம், உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் போன்றவற்றை ரஜினி ஆலோசனையுடன் இயக்குநர் ரவிக்குமார் முடிவு செய்து வருகிறார்.

இடையில் ரஜினி தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள், வைரமுத்து, எஸ்பி முத்துராமன் போன்ற திரையுலகப் பிரமுகர்களை மட்டும் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரமுகருமான மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி, சில தினங்களுக்கு முன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் லட்சுமி குறிப்பிடுகையில், "ரஜினி அங்கிளை சென்னையில் சந்தித்தேன். சூப்பராக இருக்கிறார். முன்பைப் போலவே உற்சாகமாகவும் நலமாகவும் உள்ளார். அவரை பார்த்ததே மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் அதே மாதிரி ஸ்ட்ராங்காக திரும்ப வந்துவிட்டார். விரைவில் அவரது படத்தை வெளியிடுவேன்," என்றார்.
 

பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் 'வாகை சூடவா' - 'வெடி'!


இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.

இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.

விமல், இனியா நடித்துள்ள இந்தப் படத்தில், கே பாக்யராஜ் முக்கிய வேடமேற்றுள்ளார். படம் முழுக்க 60களின் பின்னணி என்பதால் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார் சற்குணம். தமிழ் திரையில் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும் என்று, இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்த சக இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான படம் வெடி. விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் ரொமான்டிக் படம் இது. சவுரியம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படங்கள் இரண்டுமே ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை என்பதால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய திரைவிருந்தாக இவை அமையக்கூடும்.
 

எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!


எல் ஆர் ஈஸ்வரி... சினிமாவில் பொன்விவா கொண்டாடும் பாடகி. 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்.

காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.

எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.

இந்த நிலையில், எல் ஆர் ஈஸ்வர் மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் அஷ்டாவதானி எனப்படும் டி ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.

'கலாசலா..' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள் இந்தப் பாடலுக்கு.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி. தபாங்கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..'

மல்லிகா ஷெராவத், எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இத இத இதத்தானே 'ஒஸ்தி' டீம் எதிர்ப்பார்த்தது!