வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தினரால் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விதம் மற்றும் அதற்கான விசாரணை முறைகளை மையமாக கொண்ட திரைப்படம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கி, அமெரிக்கப் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியை போட்டவர், அல்-கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லாடன். பின்னர் அமெரிக்கா படையின் பல ஆண்டுத் தேடலுக்கு பின், பின்லாடனை, பாகிஸ்தானில் சுட்டு கொன்றனர்.
இதனிடையே நடந்த விசாரணை, பின்லாடனை பிடிக்க வகுக்கப்பட்ட திட்டங்கள், அமெரிக்க் கடற்படையின் சீல் படையினர் வகுத்து வியூகங்கள், தாக்குதல் முறைகள் உள்ளிட்டவற்றை வைத்து திரைப்படமாக வெளியாகவுள்ளது பின்லாடன் கொல்லப்பட்ட சம்பவம். 2008ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் கேத்ரின் பிக்லோ இந்த படத்தை இயக்குகிறார். அமெரிக்காவின் ஹோம்லான்ட் பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக உள்ள பீட்டர் கிங் தயாரிக்கிறார்.
திரைப்பட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள கேத்ரின்பிக்லோ மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மார்க்போல் ஆகியோர் நடிகர்கள் தேர்வை முடித்துள்ளனர். இறுதி முடிவிற்கு காத்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வெளிவந்த “த ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் உலகமெங்கும் மெகா ஹிட்டாக ஓடியது. இதில் அமெரிக்கா ஈராக்கில் நடத்திய குண்டுவீச்சு சம்பவத்தை தழுவி வந்தது.
தற்போது பின்லாடன் கொலையை மையமாக கொண்ட படத்திற்கு, “கில் பின்லாடன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பின்லாடனின் சம்பவங்களை குறித்து பல ரகசிய தகவல்கள் வெளியிட முடியாதவை. இவற்றை வெளியிட்டால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பின்னாட்களில் ஆபத்து வரலாம். திரைப்படங்களுக்கு பேட்டி கொடுப்பது எங்கள் வேலையல்ல. திரைப்படங்களை குறித்து சிந்திப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை. என்றார்.