ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்?

Rajini S Next Heroine Vidhya Balan

ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே என கனவுக்கன்னிகளுடன் ஜோடி சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் வித்யா பாலனுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினி முடித்துவிட்டார். கேன்ஸ் படவிழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.

கோச்சடையான் அநேகமாக ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.

புதிய படத்திற்கான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் முடிவாகி விட்டபோதும், கோச்சடையான் திரைக்கு வரும்வரை அது பற்றிய செய்திகளை வெளியே விடுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறார் ரஜினி.

எனினும் இயக்குநர் கே.வி. ஆனந்த் என்பது போல, புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளன.

கேன்ஸ் பட விழாவில் படங்களை தேர்வு செய்யும் 9 பேர் கொண்ட நடுவர் குழுவில் வித்யாபாலனும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே விழாவுக்கு ரஜினியும் செல்லவிருப்பதால, அப்போது தனது படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து ரஜினி பேசி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

வேலூர் சிறையில் பவர்ஸ்டார்:அதிர்ச்சியில் பட அதிபர்கள்

Power Star Prison Producers Shock

சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவில் விடுதலையாகிவிடுவார். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

 

ஸ்டண்ட் நடிகர்கள் ஸ்டிரைக்:படப்பிடிப்பு நடக்க ஒத்துழையுங்கள்-பாரதிராஜா

Director Bharathiraja Speaks Stunt Directors Union

சென்னை: ஸ்டண்ட் நடிகர்கள் வேலை நிறுத்தத்தால் ஏராளமான படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று இயக்குநர் பாராதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பணி பாதுகாப்பு மற்றும் பணி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டண்ட் நடிகர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல படங்களின் படப்பிடிப்புகள் காலவரையரையின்றி ஒத்திப்போடப்பட்டுள்ளது. இதனால் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாராதிராஜா, இது மிகவும் சிக்கலான பிரச்சினை என்று தெரிவித்தார். சினிமாவில் சண்டைக் கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்று கூறிய அவர், சண்டை கலைஞர்களுக்கு தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும்போது உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை, பேசி தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல என்றார்.

இதை விட சிக்கலான பல பிரச்சினைகளுக்கு எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருப்பதை தமிழ் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள்.

இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக, தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை சண்டை கலைஞர்கள் தவிர்ப்பதில் நியாயமிருப்பதாக எந்த நடுநிலையாளரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எனவே சண்டை கலைஞர்கள் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பில் உடனடியாக கலந்து கொண்டு தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்கி, இதனால் ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டத்தில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.

பிரச்சினை தீருமா?

இதனிடையே ஸ்டண்ட் நடிகர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு சில தினங்களில் இந்தப் பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அதன்பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.