தலைவா ரிலீஸ் விவகாரம்: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன சிம்பு...

தலைவா ரிலீஸ் விவகாரம்: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன சிம்பு...

சென்னை: விஜய் ரசிகர்களுக்கு தலைவா பட விவகாரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என ட்வீட்டரில் ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளார் சிம்பு.

இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து இன்று ரிலீசாக இருந்த ‘தலைவா' படம் சில பல காரணங்களால் தமிழகத்தில் மட்டும் நிலீசாகவில்லை. ஏற்கனவே, ஆன்லைனிலும், நேரடியாகவும் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு இன்ரு தலைவா நிலீசாகவில்லை என்ற செய்தி மிகவும் சோகத்தைத் தந்துள்ளது.

ஆங்காங்கே சில இடங்களில் சில ரசிகர்கள் கோபத்தில் பிரச்சினைகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பலர் வேறு மாநிலங்களுக்குச் சென்று தலைவாவை தரிசிக்க முடிவு செய்து விட்டனர்.

இன்று தன் ஹனி ஹன்சிகாவின் பிறந்த நாள் குதூகலத்தில் இருந்தபோதும், தன் சக நடிகரின் படம் ரிலீஸ் தாமதமாவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் சிம்பு. மேலும், இதனால் மனமுடைந்த விஜய் ரசிகர்களுக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து ட்வீட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது, ‘விஜய் அண்ணா ரசிகர்களே, கவலைப்படாதீர்கள்... எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்காது. விரைவில் சூரிய வெளிச்சம் உதயமாகும். அதுவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்...' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,இப்பிரச்சினை குறித்துக் கேள்விப்பட்டு தான் மிகவும் கவலைப்பட்டதாகவும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் சிம்பு.

 

தலைவா - இன்னுமொரு விமர்சனம்

இன்று காலையில் கனடா வாசகர் அனுப்பிய தலைவா விமர்சனம் படித்திருப்பீர்கள். இதோ... அமெரிக்காவில் டல்லஸில் படம் பார்த்த இர தினகர் அனுப்பியுள்ள விமர்சனம்.

ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வரும் விஷ்வா (விஜய்), அதை கடை கடையாக வினியோகம் செய்து வரும் லோகு (சந்தானம்).இவர்கள் இருவரும் சேர்ந்து சிட்னியில் அடிக்கும் லூட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘தலைவா' என்ற டைட்டிலே மறந்து விடுகிறது.

ஹீரோயின் தேர்வு செய்யும் போது, கூடவே ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியாக சந்தானத்தை புக் செய்வது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது.

தலைவா - இன்னுமொரு விமர்சனம்

ஹீரோவுக்கு பிழைப்புக்கான தொழில், தண்ணீர் கம்பெனி என்றாலும் மனசுக்கு பிடிச்சது டான்ஸ் ஆடுவதுதான். தடதடவென்ற காட்சி அமைப்பில், அந்த கதையோட்டத்துடன் ஒன்றிப்போக முடிகிறது. வெளி நாட்டுக்காரர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இப்படி தொழில் வேறு, சொந்த விருப்பம் வேறு என இரு தரப்பட்ட வாழ்க்கை வாழ்வது சகஜம்தானே என்று ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.

அவருடைய ‘தமிழ் பசங்க' என்ற நடனக்குழு சிட்னியில் பிரபலம் என்பதற்கான பாடலும், காட்சிகளும் மனசுக்கு இதமாகவும் இருக்கிறது.

சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. இரட்டை அர்த்தம் இல்லாமல், ஒன்லைன் வசனங்களில் சந்தானம் கைத்தட்டலை அள்ளுகிறார். அமலா பால் அறிமுகக் காட்சி ரொம்பவே செயற்கைத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவரும் இரட்டையர்களுடன் கலந்து விடுகிறார்.

வழக்கம் போல் ஹீரோயினைப் பார்த்து ஜொள்ளு விடும் சந்தானம், இதிலும் ஏமாற்ற வில்லை. நடனப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தடுக்க வில்லன் கூட்டம் வழக்கமான சதி செய்ய, அதை மீறி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை சுருக்கமாக, நறுக்கென்று செய்திருக்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெற்றவுடன், காதலும் மலர்ந்து விடுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லைதானே! காதலி தந்தையின் கட்டளையை ஏற்று உடனடியாக அப்பாவை பார்த்து கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க கிளம்பி விடுகிறார் விஜய்.

அத்தனை நாளும் வெறுமனே போனில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அப்பா(சத்யராஜ்)வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நினைத்து திடீரென கிளம்பி வந்தவருக்கு, அவரைப் பார்ப்பதற்குள்ளாகவே மூச்சு வாங்கிவிடுகிறது. நமக்கும்தான்!

மகனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தான் மட்டும் மும்பையில் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என மகனிடம் விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த காட்சிகள் மகனை ‘தலைவா' ஆக்கி விடுகின்றன. இறுதியில் வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பது சுவாராஸ்யமில்லாத மசாலாத்தனம்.

மும்பை வீதிகளை 'துப்பாக்கி' படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள். எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் தாராவியை அடுத்த மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள்.

வழக்கம்போல விஜய் படத்திற்கான ஃபார்முலாவில் படம் நகர்கிறது. சில இடங்களில் உக்கார்ந்தே விடுகிறது... பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் 'ஆ..வ்'.

படத்துக்கு படம் விஜய்க்கு இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் எனர்ஜியோடு காணப்படுகிறார். ‘கொலை வெறி' தாக்கமோ என்னமோ... வாங்கண்ணா வணக்கமுங்கண்ணாவில் பார்வையாளர்களை கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைக்கிறார். மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

தலைவா ஆன பிறகு டைட்டான அரைக்கை வெள்ளை சட்டையுடன் தான் விஜய் வருகிறார். அவ்வப்போது கூலிங்க்ளாஸ் வேறு திணிக்கப் பட்டதாகத்தான் தெரிகிறது. காதலியின் அப்பா சொன்னார் என்பதற்காக சட்டென்று ஊருக்கு வருகிறார் என்பதை கஷ்டப்பட்டு ஜீரணிக்கும் போதே, அது வரையிலும் விறுவிறுப்பாக இருந்த திரைக்கதை படுத்துவிடுகிறது. அவ்வப்போது நாயகன்,பாட்ஷா, தளபதி, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

சத்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், பொன் வண்ணன், மனோ பாலா ஆகியோர் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுமே காட்ட உதவியுள்ளார்கள்.

அமலா பால் முதல் பாதியில் அசத்தல், இரண்டாம் பாதியில் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார்.

அன்றாட வாழ்வில் ‘தலைவா'' என்று விளையாட்டாக அழைப்பதை, இயக்குனர் விஜய் சீரியஸ் டைட்டிலாக வைத்து விட்டார். ஒரு நல்ல அரசியல் படத்திற்கான தலைப்பை வீணாக்கி விட்டார். ஒரு பாட்டு இடம் பெற்று விட்டால் அரசியல் படமாகிவிடுமா? அதுவும் வடக்கிந்தியர்கள், வடக்கத்திய உடையுடன் 'தலைவா' என்று பாடுவதை பார்க்கும் போது எரிச்சல்தான் ஏற்படுகிறது. மற்றபடி அரசியல் படம் என்றெல்லாம் உளவு பார்த்து பரப்பி விட்டவர்களுக்கு நிச்சயம் டோஸ்தான்.

மும்பையில் படம் எடுத்தால் வெற்றி என்ற சென்டிமென்ட், பழைய படங்களிலிருந்து சுட்டுப்போடுதல் போன்ற க்ளீஷேக்களிலிருந்து விஜய்கள் சீக்கிரம் விடுபடட்டும்!

- இர தினகர், டல்லஸ்

 

மிஸ் இந்தியா நவ்னீத் கெளர் தில்லானை துரத்திய பிச்சைக்கார சிறுமிகள்

சண்டிகர்: சண்டிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றவரான நவ்னீத் கெளர் தில்லானை பிச்சைக்கார சிறுமிகள் துரத்தியதால் அவர் பயந்து போய் விட்டார்.

சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் ஷூக்களின் அறிமுகத்தை தொடங்கி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.

மிஸ் இந்தியா நவ்னீத் கெளர் தில்லானை துரத்திய பிச்சைக்கார சிறுமிகள்

தில்லான் வந்ததுமே அவரை நோக்கி அங்கு நின்றிருந்த பிச்சைக்கார சிறுமிகள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். ஒரு சிறுமி தில்லானின் டிரஸ்ஸைப் பிடித்து இழுத்தார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார் தில்லான். ஆனால் சிறுமிகள் விடவில்லை. அவரைத் துரத்தினர்.

இதைப் பார்த்த பாதுகாவலர்கள் ஓடி வந்து சிறுமிகளை விலக்கி விட்டு தில்லானை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

 

நான் என்ன பாவம் செய்தேன்... என் மகனுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது! - எஸ்ஏசி

நான் என்ன பாவம் செய்தேன்... என் மகனுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது! - எஸ்ஏசி

சென்னை: நான் என்ன பாவம் செய்தேன்.... என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடம் எஸ்ஏ சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார்.

தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது தந்தையை நிலைகுலைய வைத்துள்ளன.

தலைவா படம் உலகமெங்கும் வெளியாகிவிட்டாலும், விஜய்யின் சொந்த மாநிலமான தமிழகத்தில் மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியாகாமல் போய்விட்டது.

முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது. ஆனால் தனக்கேற்பட்ட நிலையை தொடர்ந்து மீடியா மற்றும் மக்கள் முன் எடுத்துச் சொல்லி, நீதிமன்றம் போய் தீர்த்துக் கொண்டார் கமல்.

ஆனால் நடிகர் விஜய் அல்லது இயக்குநர் விஜய் அல்லது படத்தின் தயாரிப்பாளர் யாருமே குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைக் கூட சந்தித்து நிலைமையைச் சொல்ல முடியாத சூழல். முன்பு கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதே திரையுலகம் இப்போது மவுனம் காக்கிறது.

அரசியல் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், தன் மகனுக்கும் அவர் படத்துக்கும் இப்படி ஒரு நிலை வந்தது அப்பாவாக மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போதும் தலைவராக உள்ள எஸ்ஏ சந்திரசேகரனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சர்வ பலம் பொருந்தியதாக, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் முதலாளிகளின் அமைப்பாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரால் தன் மகன் படத்தையே சிக்கலின்றி வெளியிட முடியவில்லையே என்ற பேச்சு கடந்த ஒரு வாரமாக வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது.

அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், "நான் என்ன பாவம் செய்தேன், என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும்?" என்று சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லி வருந்தியுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைக்கும் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாகக் கூறப்படும் சில விஷயங்களே காரணங்களாகக் கூறப்படுகிறது. தன்னை அண்ணாவுக்கும் தன் மகன் விஜய்யை எம்ஜிஆருக்கும் ஒப்பிட்டு எஸ் ஏ சந்திரசேகரன் பேசியதற்கான ஆதாரங்களை மேலிடத்தின் கவனத்துக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே கொண்டு போயுள்ளனர்.

அடுத்து தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களைப் பார்த்து, "எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா... இதுவும் அப்படித்தான்," என்று கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

வேளாங்கண்ணியில் விஜய் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி!

வேளாங்கண்ணியில் விஜய் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி!

சென்னை: தலைவா படம் இன்று ரிலீசாகாத நிலையில், நாகப்பட்டினம் சென்றுள்ள விஜய், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துகிறார். அவருக்காக திருப்பலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அந்த மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் செய்துள்ளது.

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது, தமிழகம் தவிர. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையிலும் படம் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் எங்கும் இந்தப் படம் திரையிடப்படவில்லை.

எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் கொடநாட்டுக்கே போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு தங்கிய விஜய், பின் அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு வந்தார். இன்று மாலை அவர் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மேரி மாதாவின் தேவாலயத்துக்குச் செல்கிறார்.

தேவாலயத்தில் சிறப்புப் பிராத்தனை மற்றும் திருப்பலிக்கு விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பங்கேற்று பிரார்த்தனை நடத்துகிறார் விஜய்.

 

தலைவா... ஒரு வாசகரின் விமர்சனம்!

இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று தலைவா.

இந்த முறை தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் எதிலும் கைவைக்காமல், உள்ளூர் க்ளாசிக்குகளான நாயகன், தேவர் மகனே போதும் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஜாலியாக டான்ஸ் குழு நடத்தும் விஜய், தன் அப்பா சத்யராஜை சில சமூக விரோதிகள் கொன்றுவிட, மும்பை திரும்புகிறார். தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். முட்டுக் கட்டையாய் வந்து நிற்கும் சதிகார சமூக விரோதிகளுடன் மோதி மக்கள் தலைவனாகிறார்.

இதைத்தான் பாட்டு, சண்டை, காமெடி என கதம்பமாக்கி கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு ஜவ்வாய் இழுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

தலைவா... ஒரு வாசகரின் விமர்சனம்!

விஜய்யின் நடிப்பு என்று தனியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு பஞ்ச் விடுவதிலும், வில்லன்களுக்கு அறிவுரை சொல்வதும்தான் ரொம்ப போரடிக்கிறது. நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார்.

ஹீரோயின் அமலா பாலுக்கு பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில். அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார்.

சில காட்சிகளில் சந்தானம் சிரிக்க வைக்கிறார். யு ட்யூப் புகழ் சாம் ஆன்டர்சனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். சிரிப்புதான் வரமறுக்கிறது.

சத்யராஜுக்கு முக்கியமான பாத்திரம்தான். ஆனால் அவரது பாத்திரம், அவரது காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கெனவே அமிதாப் நடித்த சர்க்கார் படத்தை நினைவூட்டுகிறது.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசை காட்சிகளை இன்னும் டம்மியாக்கும் அளவுக்குதான் உள்ளது.

படத்தின் பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு.

உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பார்த்தாலும் அவற்றை உல்டா பண்ணுவதுதான் தன் வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார் இயக்குநர் விஜய். அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காதல்லவா!

என்னுடைய ரேட்டிங்.... 2/5.

குறிப்பு: கனடாவில் தலைவா படம் பார்த்த நமது வாசகர் அனுப்பியுள்ள விமர்சனம் இது. படம் தமிழ்நாட்டில் ரிலீசான பிறகு நமது விமர்சனம் வெளியாகும்.

-இமானுவேல்

 

கொடநாட்டில் முதல்வரின் இணைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம் - இயக்குநர் விஜய் பேட்டி

கொடநாட்டில் முதல்வரின் இணைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம் - இயக்குநர் விஜய் பேட்டி

கோவை: தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் னழ முதல்வரிடம் மனு கொடுத்திருப்பதாக இயக்குநர் விஜய் தெரிவித்தார்.

நடிகர் விஜய், மற்றும் தலைவா படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக நீலகிரி மாவட்டம் கொடநாடு சென்றனர்.

முன் அனுமதி பெறாமல் இருவரும் சென்றதால் முதல்வரைச் சந்திக்க இருவரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உடன் எஸ்ஏ சந்திரசேகரனும் அவர்களின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் சென்றனர்.

முதல் செக்போஸ்டிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முதல்வரின் இணைச்செயலரை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அவரிடம் தலைவா படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் கிளம்பி கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் இயக்குநர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தலைவா' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து புகார் மனு அளிக்க சென்றோம். மனுவை கோடநாட்டில் இருந்த முதல்வரின் இணைச்செயலரை சந்தித்து அளித்துவிட்டு திரும்பினோம்.

நாளை (இன்று) தலைவா படம் திட்டமிட்டபடி நிச்சயமாக வெளியிடப்படும் என்று நம்புகிறோம். ஏனெனில் வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களின் பொருளாதார பிரச்சினை இதில் அடங்கி உள்ளது.

இதனால் நானும், நடிகர் விஜயும் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த படத்தை தடையில்லாமல் திரையிடுவதற்கு தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் மனு கொடுத்துள்ளோம்," என்றார்.

 

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் தலைவா பட பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை நேற்று முதல் போலீஸ் உதவியுடன் அகற்றி வருகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள்.

விஜய் நடிக்கும் தலைவா படம் இன்று ரம்ஜான் ஸ்பெஷலாக வரவிருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் படம் வெளிவரவில்லை. படத்துக்கு இன்னும் வரிவிலக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

தியேட்டர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பதால் யாரும் படத்தை வெளியிட விரும்பவில்லை.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

ஆனால் உலகில் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகும் நாடுகளில் தலைவா வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தலைவா படத்துக்காக தனியார் இடங்களில் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பெரிய அளவில் கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றை வைக்க மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் தலை படம் தொடர்பான அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன. போலீஸ் துணையுடன் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்
 

ரம்ஜானுக்கு பவன் இல்லை, விஜய் டவுட்: அப்படினா ஷாருக்கான் மட்டுமா?

சென்னை: ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தலைவா ரிலீஸாகுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் நாளை ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ரிலீஸாவதில் உறுதியாக உள்ளது.

இந்த ரம்ஜான் பண்டிகை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று கருதப்பட்டது. தெலுங்கில் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி, தமிழில் விஜய்யின் தலைவா மற்றும் இந்தியில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ரம்ஜான் அன்று ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் மோதும் என்று கூறப்பட்டது.

ரம்ஜானுக்கு பவன் இல்லை, விஜய் டவுட்: அப்படினா ஷாருக்கான் மட்டுமா?

ஆனால் ஆந்திராவில் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதை எதித்து நடந்து வரும் போராட்டங்களால் பவனின் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைவா படத்திற்கு திடீர் என்று நேற்று சிக்கல் உருவாகியது. சாதாரண சிக்கல் என்று நினைத்தால் அது என்னவென்றால் இடியாப்ப சிக்கலாக உள்ளது.

இதனால் நாளை தலைவா ரிலீஸாகுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் நிச்சயமாக உறுதியாக நாளை ரிலீஸாவது சென்னை எக்ஸ்பிரஸ் மட்டுமே.

 

தலைவா படம் நாளை ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!

சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று, நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.

படத்துக்காக முன்பதிவு செ்த ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருகின்றன திரையரங்குகள்.

ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன.

தலைவா படம் நாளை ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!

வரிவிலக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. அடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால், தியட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர்.

இதனால் படத்தை வெளியிடுவதிலிருந்து தமிழக தியேட்டர்கள் பின்வாங்கின. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறின.

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து நிலைமையை விளக்க விஜய்யும் எஸ்ஏ சந்திரசேகரும் கொட நாடு சென்றனர். ஆனா் அவர்களைச் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே, தலைவா திரைப்படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் வரிவிலக்கு கமிட்டியும், அரசு அதிகாரிகளும் இன்று பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் தலைவா திரைப்படத்தை வெளியிட மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாகக் கூற்பட்டது.

படத்தின் நீளமும் 2.40 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்தன.

ரிலீஸ் இல்லை

இந்த நிலையில் தலைவா படம் நாளை வெளியாகாது என திரையரங்குகள் அறிவித்துவிட்டன. தலைவா ரிலீஸை ஒட்டி தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பணம் வாபஸ்

இந்தப் படத்துக்கு சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன (நேற்றுதான் அவை நிறுத்தப்பட்டன). இதில் ஆன்லைன் மற்றும் நேரில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை வாபஸ் தர ஆரம்பித்துள்ளன தியேட்டர்கள்.

ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து திரும்பத் தரப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கமலா சினிமாஸில் விசாரித்தபோது, படம் நாளை வெளியாகாது. எப்போது வெளயாகும் என்பதை காலையில்தான் சொல்ல முடியும். இப்போது ரீபண்ட் தர ஆரம்பித்துள்ளோம் என்றனர்.

மாயாஜால் உள்ளிட்ட மல்டிப்ளெக்ஸ் நிர்வாகிகளும் இதே பதிலைத்தான் தெரிவித்தனர்.