அப்புச்சி கிராமம்- அறிவியல் சார்ந்த ஒரு புதிய படம்!

அப்புச்சி கிராமம்- அறிவியல் சார்ந்த ஒரு புதிய படம்!

சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது.

எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார்,

படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார்.

தனது இந்தப் படம் உலக அளவில் பேசும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் வி ஆனந்த். அவர் கூறுகையில், " எப்பொழுது ஒரு படம் மனித உறவுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறதோ அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும்," என்கிறார்.

தன் படமும் இந்த வரையறைக்குள் வரும் என அழுத்தமாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆனந்த்.

 

என் மகளுக்கு இன்னும் திருமண வயசே வரலியே! - ராதா

சென்னை: என் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. அவளுக்கு இன்னும் திருமண வயதே வரவில்லை என்று நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

பழைய நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகாவுக்கு தமிழ் - தெலுங்கில் புதிதாகப் படங்களே இல்லாததால் திருமணம் செய்யப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

என் மகளுக்கு இன்னும் திருமண வயசே வரலியே! - ராதா

கார்த்திகா 'கோ' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியால், இவர் தமிழில் பெரிய அளவுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார்.

ஆனால் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடித்த பிறகு, எதிர்பார்த்தபடி கார்த்திகாவுக்கு படவாய்ப்புகள் வரவில்லை. ஹன்சிகா, அமலாபால், காஜல் அகர்வால் போன்றோருக்கு படங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தப் போட்டியில் தாக்குப்பிடிக்காமல் ஒதுங்கி நிற்கிறார் கார்த்திகா.

இந்த நேரத்தில் திருமணச் செய்தி வெளியானதால், உண்மை என்றே பலரும் நம்பினர்.

திருமணம் பற்றி வெளியான செய்தி குறித்து ராதாவிடம் கேட்டபோது, "என் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கார்த்திகாவுக்கு 21 வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்வதற்கான வயதே வரவில்லை. நான்கு வருடத்துக்கு பிறகுதான் கார்த்திகா திருமணம் பற்றி சிந்திப்போம்.

எனது அக்கா மல்லிகா மகள் வினிதாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. கேரளாவில் வருகிற 26-ந்தேதி இந்த திருமணம் நடக்கிறது. இதை வைத்து கார்த்திகாவுக்கு திருமணம் நடக்கிறது என்று தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

கார்த்திகா பற்றி உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

 

டெண்டுல்கர் ஓய்வை கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டது- அமிதாப்

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பைக் கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டதைப் போலிருந்தது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிருபர்களிடம் கூறுகையில், "'டெண்டுல்கர் 200-வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டது போல உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்.

டெண்டுல்கர் ஓய்வை கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டது- அமிதாப்

இந்திய கிரிக்கெட்டில் அவர் பணியை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

என்றுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.. கிரிக்கெட்டுக்கே அடையாளமாக மாறியவர். அவரைப் பொறுத்தவரை இந்த ஓய்வு என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராததுதான்.

ஆனால் அவர் போனபிறகு, இந்த கிரிக்கெட் அதே சிறப்புடன் இருக்குமா என்பதை கற்பனை செய்யும் முடியவில்லை.

டெண்டுல்கரின் ஆட்டம், அவர் நிகழ்த்திய சாதனைகளை வேறு எந்த தனி வீரருடனும் ஒப்பிடவே முடியாது.

அவர் ஆட்டத்தில் எது சிறந்தது என்று கேட்க வேண்டாம். காரணம் அவர் விளையாடிய அத்தனை தருணங்களும் அற்புதமானவை.

அவரை வாழ்த்துகிறேன்," என்றார் அமிதாப்.

 

'கவர்ச்சி வேடங்களா... என்னையும் கவனத்தில் வச்சிக்கங்க'

கதையோடு ஒட்டி வரும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன் என்கிறார் அமலா பால்.

தலைவா படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கில் படு பிசியாக உள்ளார் அமலா பால்.

'கவர்ச்சி வேடங்களா... என்னையும் கவனத்தில் வச்சிக்கங்க'

தனது இந்த முன்னணி இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அடுத்தடுத்து அதிரடி ஆஃபர்களை தயாரிப்பாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

முதல் கட்டமாக ஒரு மலையாளப் படத்தில் மகா கவர்ச்சியான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இதே பாலிசியை தமிழுக்கும் கடைப் பிடிக்கப் போகிறாராம். இதுகுறித்து அமலா பால் கூறுகையில், "கிளாமர் வேடங்கள் எனக்குப் பொருத்தமாக இருப்பதால், கதையோடு ஒட்டி வருவதாக இருக்கும் வேடங்களை ஒப்புக் கொள்கிறேன்.

இதற்கு மொழி பேதமெல்லாம் கிடையாது.

'கவர்ச்சி வேடங்களா... என்னையும் கவனத்தில் வச்சிக்கங்க'

புதுப் புது வேடங்களில், நான் இதுவரை செய்யாத பாத்திரங்களில் நடிக்க விருப்பமாக உள்ளது. துணிச்சலான சாகசங்கள் எனக்கு பிடிக்கும். அந்த மாதிரி வேடங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.

சினிமா வாழ்க்கையில் நடிகை ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மறக்க முடியாதது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு வரும் பிரபலமானவர்களை தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்களை தான் சிறந்த ஆண்களாக கருதுவேன். தன்னம்பிக்கை செயல் திறனும் இருக்க வேண்டும்," என்றார்.

 

இப்போதெல்லாம் விளம்பரத்துக்கே ரூ 5 கோடி வேணும்!- தயாரிப்பாளர் கேயார்

இப்போதெல்லாம் விளம்பரத்துக்கு மட்டுமே ரூ 5 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த செலவுகள் குறைந்தால்தான் படங்கள் லாபம் பார்க்க முடியும் என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

ராவண தேசம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விபி கலைராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் முதல் சிடியை பெற்றுக் கொண்டு பேசுகையில், "தமிழில் தற்போது நிறைய படங்கள் தயாராகின்றன.

இப்போதெல்லாம் விளம்பரத்துக்கே ரூ 5 கோடி வேணும்!- தயாரிப்பாளர் கேயார்

பிலிம் இல்லாமல் டிஜிட்டல் படங்கள் எடுக்கலாம் என்ற நிலை வந்த பிறகு குறைந்த முதலீடு செய்து நிறைய பேர் படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குப்படி தற்போது 400 முதல் 450 படங்கள் புதிதாக தயாராகி வருகின்றன.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படங்கள் தயாரிக்கலாம். ஆனால் அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டமானது. விளம்பரம், விநியோகம், தியேட்டர் புக்கிங் என பல நிலைகளை தாண்டிதான் ஒரு படம் ரிலீசாக வேண்டி இருக்கிறது.

சிறிய படமாக இருந்தாலும் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.1 கோடி வேண்டும். அப்போதுதான் மக்களைச் சென்று அடையும். பெரிய படங்களுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை விளம்பரத்துக்கு செலவு செய்கிறார்கள். இதுபோன்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும்," என்றார்.

அம்மா தேசம்

படத்தின் தயாரிப்பாளர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி விழாவில் பேசும்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அம்மா தேசம் என்ற பெயரில் படமாக எடுக்க உள்ளேன். முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு நிறைவேற்றிய அனைத்து சரித்திர சாதனை திட்டங்களும் இப்படத்தில் இருக்கும், என்றார்.

 

தமிழுக்கு முதல்வர் ஜெயலலிதா செய்த சிறப்புகள்- கவிஞர் சினேகன் கடிதம்!

சென்னை: தமிழுக்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகளைச் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா எனக் கூறி, நன்றி தெரிவித்துள்ளார் கவிஞர் சினேகன்.

ஆரம்பத்திலிருந்தே அதிமுக அபிமானியான கவிஞர் சினேகன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழுக்கு முதல்வர் ஜெயலலிதா செய்த சிறப்புகள்- கவிஞர் சினேகன் கடிதம்!

ஒரு பேரினத்தை ஒரு மொழிதான் அடையாளம் காட்டுகிறது. ஒரு மொழியை ஒரு இனம் தாங்கிப் பிடிக்கிறது.

மூத்த இலக்கணமும் முதல் இலக்கியமும் கண்ட மொழி தமிழ். உயர்ந்த பண்பாடும் பரந்த கோட்பாடும் கொண்டவன் தமிழன்.

பக்தி இலக்கியம் தொட்டு கணிணி இலக்கியம் வரை எண்ணற்ற பரிமாணங்களைக் கடந்தும், இன்றும் கூட இனிமை குறையாதது, செழுமை குறையாதது நம் மொழி.

தமிழையும் தமிழர்களையும் காக்க, அரியதோர் சிந்தனையாய், அளவற்ற கருணையாய், அறிவார்ந்த நோக்கத்தால், மொழியையும் இனத்தையும் மூச்சுக்காற்றாய் முகர்ந்து, நம் பண்பாட்டைப் பாதுகாக்கவும் உலகறியச் செய்யவும், வளரும் தலைமுறைக்கு மொழியின் சிறப்பை முன்னெடுத்துச் செல்லவும்

திருக்குறளுக்கு ஓவியக் காட்சிக் கூடம்,

உலகத் தமிழ் பண்ணாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம்

தொல்காப்பியர் ஆய்வறிக்கைக்கு ஒரு அடித்தளம்

நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம்

-என வரலாற்று சிறப்பு மிக்க பணிக்கு கருணையுள்ளத்தோடு உத்தரவிட்ட, தமிழ் இனத்தின் தாயாக விளங்கும் தமிழக முதல்வருக்கு நன்றி," என்று கூறியுள்ளார்.

 

இந்திக்குப் போகும் சூதுகவ்வும் - ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்

தமிழில் ஹிட் படமான விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் இந்திக்குப் போகிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இதனை இந்தியில் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டியுடன், கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் நடிகரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தி உரிமையை அருண்பாண்டியன்தான் வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திக்குப் போகும் சூதுகவ்வும் - ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்

ரோஹித் ஷெட்டி தற்போது சிங்கம் 2 படத்தை அஜய் தேவ்கனை வைத்து எடுத்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததுமே மீண்டும் அவர் ஷாரூக்கானுடன் இணைந்து படம் தருவார் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை ஷாரூக்கான் படத்தை ரோஹித் இயக்கப் போய்விட்டார், சக்தே இந்தியா படத்தை இயக்கிய சிமித் அமின் சூது கவ்வும் படத்தை இந்தியில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்திப் பட ரீமேக்கில் இம்ரான்கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் பெயரும் பரிசீலனையில் உள்ளது.