'பாரதம் உன்னைத் தேடுது....' லதா ரஜினிகாந்த் உருவாக்கிய சுதந்திர 'வீர வணக்கப்' பாடல்!

நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி, அதற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு தனிப் பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார் லதா ரஜினிகாந்த்.

கல்வி, சமூக சேவை, தேச ஒருமைப்பாடு போன்றவற்றில் அக்கறை காட்டி வரும் லதா ரஜினிகாந்த், ஐ யாம் பார் இந்தியா என்ற இயக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார்.

Latha Rajiniklanth's Bharatham song for I-Day

நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் தேசத் தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாகவும், இளைஞர்களை உத்வேகப்படுத்தும் முகமாகவும் ஒரு புதிய பாடலை எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளார் லதா ரஜினிகாந்த்.

பாரதம் உன்னைத் தேடுது...
ஒரு உண்மைப் பிள்ளை உன்னைத் தேடுது

பாரதம் உன்னை நாடுது
ஒரு உண்மை உறவை உன்னிடம் நாடுது

எழுந்து நில்
உறவைச் சொல்
பாரத மாதாவை
நீ அணைத்துக் கொள்

புறப்படு
உன் சேவை
தாய் நாட்டுக்கு
என்றும் தேவை

... என்று ஆரம்பிக்கிறது அந்த பாடல்.

இனிய மெட்டும், லதாவின் அருமையான குரலும், மெல்லிசையும் பாடலை மீண்டும் கேட்க வைக்கிறது.

இன்றைய நாளில் தேசத்துக்கு மிகப் பொருத்தமான அர்ப்பணிப்பு!

 

முதல் முறையாக மலையாளப் படம் நடிக்கும் த்ரிஷா!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாகத் திகழும் த்ரிஷா, முதல் முறையாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிக்கப் போகிறவர் மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி.

Trisha's Malayalam debut

தமிழ், தெலுங்கு, இந்தி, கடைசியாக கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த த்ரிஷா மலையாளத்தில் மட்டும் நடிக்காமல் இருந்தார்.

எத்தனையோ அழைப்புகள் வந்தும் அவர் அவற்றைத் தவிர்த்துவிட்டார். அறிமுகப்படுத்திய ப்ரியதர்ஷனே மலையாள இயக்குநர்தான் என்றாலும், அங்கு சம்பளம் குறைவு, வணிகப் பரப்பும் குறைவு என்பதால் அவர் மலையாளத்தில் அக்கறை காட்டவில்லை.

Trisha's Malayalam debut

இந்த நிலையில் இப்போது முதல் முதலாக மலையாளப் படத்தில் நடிக்கிறார், அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக!

ஒயிட் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படத்தை உதய் ஆனந்த் இயக்குகிறார். பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஆர்யா, விஷால் (சிறப்புத் தோற்றம்), சந்தானம், தமன்னா, பானு

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

இசை: டி இமான்

தயாரிப்பு: ஆர்யா

இயக்கம்: ராஜேஷ் எம்

ஒரு டாஸ்மாக் கடை, அதில் இரண்டு நண்பர்கள், கடந்து போகும் இரு அழகான பெண்கள் இருந்தால், கொஞ்சம் லூசுத்தனமான அம்மாக்கள் அல்லது அப்பாக்கள், க்ளைமாக்ஸில் எட்டிப் பார்க்க ஒரு கெஸ்ட் ஹீரோ கிடைத்தால் போதும்... இயக்குநர் ராஜேஷ் ஒரு படத்தை சுருட்டிக் கொடுத்துவிடுவார் என்று பேசுமளவுக்கு வந்திருக்கிறது விஎஸ்ஓபி.

வாசு சந்தானமும் சரவணன் ஆர்யாவும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரில் உள்ள பாரிலெல்லாம் ஒண்ணா குடிச்சவங்க. ஒருவரையொருவர் கலாய்த்தபடி ஒரு மொபைல் நடத்தி வரும் இருவரில், சந்தானத்துக்கு பானுவை பெண் பார்க்கிறார்கள். அந்த பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து கல்யாணமாகி முதலிரவு வரை நண்பன் சந்தானத்தை ஆர்யா கலாடடா கொண்டே இருக்க, அது பானுவுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

Vasuvum Saravananum Onna Padichavanga - Review

ஆர்யாவுடனான நட்பை ஒரேயடியாக முறித்துக் கொண்டால்தான் முதலிரவு, இல்லாவிட்டால் டைவோர்ஸ் என மிரட்டுகிறாள் பானு. இதைச் சமாளிக்க, ஆர்யாவுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறார் சந்தானம். அப்போதுதான் தமன்னா அறிமுகமாகிறார். முதல் சந்திப்பிலேயே வழக்கம் போல ஆர்யாவுக்கு காதல் பிறந்துவிடுகிறது. ஆனால் தமன்னா வெறுக்கிறார்.

சில பல ட்ராமாக்களுக்குப் பிறகு தமன்னாவும் லவ்வுகிறார். ஆனால் அவரை இன்டர்வியூ செய்கிறேன் பேர்வழி என சந்தானம் சில்லறைத்தனமாக கேள்விகள் கேட்க, கோபத்தின் உச்சிக்கே போய் சந்தானத்தின் நட்பைத் துண்டிக்குமாறு ஆர்யாவுக்கு ஆர்டர் போடுகிறார்.

Vasuvum Saravananum Onna Padichavanga - Review

நண்பர்கள் இருவரும் பிரிந்தார்களா... சந்தானம் முதலிரவு நடந்ததா? தமன்னா இறங்கி வந்து ஆர்யாவை ஏற்றாரா? இதையெல்லாம் தியேட்டரில் போய் குடிக்கும் கடிக்கும் நடுவில் தெரிந்து கொள்ள வேண்டியவை.

படத்தில் ஹீரோ யார்? காமெடியன் யார்? என ஒரே குழப்பம். காரணம் ஆர்யாவுக்கு லூசுத்தனமான வேடம். சந்தானத்துக்கு அத்தனை சிக்கல்களையும் சமாளித்து நண்பனைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான வேடம். பல காட்சிகளில் இவரது தோற்றம், காஸ்ட்யூம், நடனம், பாத்திரம் எல்லாமே ஹீரோ மாதிரியே முன் நிறுத்துகின்றன.

Vasuvum Saravananum Onna Padichavanga - Review

சந்தானத்தின் கலாய்ப்புகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. படத்தில் ஒரு காட்சியில் தமன்னாவும் விஷாலும் சந்தானம் கலாய்ப்பதை 'பத்தல பத்தல' என்பார்கள். ரசிகர்கள் மன நிலையும் அப்படித்தான்.

ஆர்யா - தமன்னா காதல் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. காரணம், ஆர்யாவின் எரிச்சலூட்டும் கேரக்டர். 'இப்படி ஒரு கிறுக்குப் பையனை எவதான் லவ் பண்ணுவா?' என ரசிகர்களைக் கேட்க வைக்கிறது.

தமன்னா இந்தப் படத்திலும் அழகாக வந்து அள்ளுகிறார். ஒரு காட்சியில் பீர் குடித்து 'என்னிஷ்டம்... எந்த சரக்கு வேணாலும் அடிப்பேன்,' என பீதி கிளப்புகிறார்.

Vasuvum Saravananum Onna Padichavanga - Review

சந்தானம் ஜோடியாக வரும் பானு, சுவாமிநாதன் போன்றவர்கள் செட் பிராபர்ட்டிகள் மாதிரிதான். அந்த வித்யுலேகாவுக்கு தற்காலிகமாக தடை போட்டால் கூட நல்லதுதான். ஓவர் இம்சை!

இந்தப் படத்துக்கு இந்த அளவு ஒளிப்பதிவு போதும் என அளந்து செய்திருக்கிறார் நீரவ் ஷா. இமானின் இசையில் வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க.. மனசில் நிற்கிறது.

Vasuvum Saravananum Onna Padichavanga - Review

இயக்குநர் ராஜேஷுக்கு விஎஸ்ஓபி 5 வது படம். இவை எல்லாவற்றிலுமே தொடக்கம், க்ளாமாக்ஸ், முடிவு என அனைத்துமே ஒரே மாதிரிதான். டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத தூதர் மாதிரி, படம் முழுக்க மது வழிய படமாக்கியிருப்பதை என்னவென்று சொல்வது?

படத்துக்கு பெரிய ப்ளஸ் கடைசி ஐந்து நிமிடம் வரும் விஷால் மற்றும் முகம் காட்டாமல் நான்கைந்து நொடிகள் குரல் தரும் லட்சுமி மேனன். நண்பர்களின் பிரச்சினையை பீரையும் பிராண்டியையும் ஒப்பிட்டுத் தீர்த்து வைத்து சுவாரஸ்யமாக இருந்தாலும், இங்கும் சரக்கா என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.

இலைமறை காயாக உள்ள கெட்ட விஷயத்தை பொதுவெளியில் இழுத்து வைத்து சீவி சிங்காரித்துக் காட்டி, புதுப்புது இளம் குடிகாரர்கள் உருவாக துணை போவது எத்தனை பெரிய தவறு ராஜேஷ்!

 

இந்த 'குண்டு'க்குப் பேரா இஞ்சி இடுப்பழகி?

இன்று காலையிலிருந்து ஒரு கண்ணாடி போட்ட ஒரு குண்டுப் பெண்ணின் முகம் திரும்பத் திரும்ப இணையத்தில் வெளியானபடி உள்ளது.

இந்தப் பக்கம் ஆர்யா அமர்ந்திருக்க, அவருக்கு சற்றுத் தள்ளி அந்த குண்டுப் பெண். உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது, அந்த குண்டுப் பெண் நடிகை அனுஷ்கா என்பது.

Inji Iduppazhagi first poster released

‘இஞ்சி இடுப்பழகி' படப்பிடிப்பு வேகமாக நடந்து, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் வெளியாகவுள்ளது.

இன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் அனுஷ்கா மிகவும் குண்டான பெண்ணாகவும், அவருக்கு ஆர்யா அறிவுரை கூறி உடம்பை குறைப்பது போலவும் கதையை உருவாக்கியுள்ளார்களாம். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பிரகாஷ் இயக்குகிறார்.

 

'நாங்களெல்லாம் ரீல் ஹீரோக்கள்...!' - சுதந்திர தின விழாவில் விஷால் பேச்சு

"நாங்களெல்லாம் ரீல் ஹீரோக்கள்... சுதந்திரப் போர் வீர்கள், ராணுவ வீரர்கள்தான் ரியல் வீரர்கள்," என்றார் நடிகர் விஷால்.

இன்று சென்னை ஷெனாய்நகர் திருவி.க மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இவ் விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களிடம் விஷால் பேசும் போது, "சுதந்திரத்துக்காக போராடியவர்கள் உயிர் இழந்தவர்கள் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள். சுதந்திரம் சாதாரணமாக வந்து விடவில்லை.

Actors like me are reel heroes, says Vishal

இன்று உங்களால் எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு பள்ளி சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வேன் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. உங்கள் மூலம் எனக்கு அந்த பாக்யம் கிடைத்து இருக்கிறது.

இங்கே இந்திய ராணுவத்திலிருந்த மித்ரதாஸ் அவர்கள் வந்து இருக்கிறார்கள். நாங்களெல்லாம் வாழ்க்கையில் 'ரீல் ஹீரோஸ்', இவரைப் போன்றவர்தான் ரியல் ஹீரோ. உங்கள் மூலம் இப்படிப்பட்ட ரியல் ஹீரோவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இங்குள்ளவர்களிடையே அவரைத்தான் இளைஞராக உணர்கிறேன். அவரது வயதை எண்ணி உட்கார்ந்து மாலை மரியாதையை ஏற்கச் சொன்னபோது ,முடியாது என்று மறுத்து நின்றுகொண்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதில் இந்திய ராணுவத்தின் உறுதி தெரிந்தது. அந்த ராணுவத்தின் உறுதியான கம்பீரம் என்றும் ஒயாது . நான் மித்ரதாஸ் அவர்களை அவர் கையைப் பிடித்து அழைத்து வந்து தேசியக் கொடியை அவர் கையால் ஏற்றிய போது மிகவும் மகிழ்ந்தேன். அப்போது அதை என் இந்த 2015ஆண்டின் மறக்க முடியாத தருணமாக உணர்ந்தேன்.

இந்நாளில் நான் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். மேலே படிக்க வசதி இல்லாமல், நிதியில்லாமல் தவிக்கிற மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ விரும்புகிறேன்.

Actors like me are reel heroes, says Vishal

ஒரே ஒரு காரணத்துக்காகவே உதவ விரும்புகிறேன்.

நீங்கள் பள்ளியை விட்டுச் சமுதாயத்தை நோக்கி வெளியே செல்லும் போது, ஏதாவது சமுதாயத்துக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் இந்த எதிர்பார்ப்புடன்தான் பெற்றோரும் ஆசிரியர்களும் வெளியே நிற்கிறார்கள். எவ்வளவு உதவவேண்டும் என்பதை விட ஏதாவது உதவி செய்யவேண்டும் என்கிற உணர்வு வேண்டும். இதை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுக்கு உதவுவதைப் போல சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.

என் பையன் நல்லா படிச்சு வருவான் என்கிற நம்பிக்கையோடு உங்களைப் பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்குப் போகிற உங்கள் பெற்றோரை ஏமாற்றி விட வேண்டாம். பெற்றோரின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.

Actors like me are reel heroes, says Vishal

பெற்றோரை மதியுங்கள். நன்றாக இருக்கலாம். நான் பெற்றோரை மதித்தேன்; இன்று நன்றாக இருக்கிறேன். பள்ளியில் கலைநிகழ்ச்சிகள். விளையாட்டுப் போட்டிகளில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள். அது என்றைக்காவது கைகொடுக்கும். அதன் அருமை போகப்போகத்தான் புரியும். என்.சி.சி, என். எஸ்.எஸ்.போன்றவற்றில் சரியாகப் பங்கேற்காத வருத்தம் எனக்கு இருக்கிறது. எனவே கலை நிகழ்ச்சிகள்,போட்டிகளில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்," என்றார்.

 

விஷாலின் 'மனைவி' டேஷ் லட்சுமியா... லட்சுமி டேஷா?

விஷாலின் காதலி யார்? யாருடனோ அவர் கல்யாணம் பண்ணாமலேயே குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறாராமே? அந்தப் பெண்ணின் பெயரில் கூட லட்சுமி என்ற வார்த்தை உள்ளதாகச் சொல்கிறார்களே?

-இப்படி மீடியாவும் அவற்றைப் படிக்கி ரசிகர்களும் கிசுகிசுத்து வருகிறார்கள். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை அவர்கள் பார்த்தால் ஒருவேளை சந்தேகம் தீரலாம்.

Who is Vishal's life partner? Watch VSOP to know the answer!!

படத்தின் க்ளைமாக்ஸில் ஆர்யா, சந்தானம் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வருகிறார் உதவி கமிஷனர் விஷால்.

அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது, மனைவியிடமிருந்து.

"சொல்லும்மா செல்லம்.." என அவர் பேச ஆரம்பிக்க, அந்தப் பக்கமிருந்து நாம் நன்கு கேட்டுப் பழகிய குரல்.

உடனே சந்தானம் விஷாலிடம் இப்படிக் கேட்பார்: "சார் உங்க மனைவி பேரு டேஷ் லட்சுமியா... லட்சுமி டேஷா?" என்று கேட்பார்.

கட் பண்ணால் அடுத்த சீன். அதில் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு 'மனைவி லட்சுமி' போனில் பேசிக் கொண்டிருப்பார் விஷாலிடம்.

அந்தக் குரல் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் கேட்டுப் பழகிய குரல்.

சந்தானம் குறிப்பிட்ட டேஷ் இடத்தில் என்ன வரும் என்பதை நீங்களே கண்டுபிடிச்சிக்கங்க!

 

உலகிலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள்! - இளையராஜா

சென்னை: உலகத்திலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எனக்கென்று தனி இணையதளம், யுட்யூப் சேனல் தொடங்குகிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து திரையிசையில் உலக சாதனைப் படைத்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் சாகா வரம் பெற்றுத் திகழ்கின்றன. இன்றும் அதிக அளவில் கேட்கப்படும் பாடல்களும் இவரதுதான்.

Ilaiyaraaja launches new website and youtube channel

தற்போது ‘தாரை தப்பட்டை' படம் மூலம் 1000ஆவது படத்திற்கு இசையமைத்து வரும் இவர், தனது படைப்புகளுக்கு உரிய உரிமத் தொகையைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அனுமதியில்லாமல் தன் பாடல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இளையராஜாவிடம் உரிய அனுமதி பெற்று பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளன பண்பலை வானொலி உள்ளிட்ட அமைப்புகள்.

இந்த நிலையில் இணையதளங்களில் இளையராஜாவின் இசை, பாடல்களை மையப்படுத்தி ஏராளமான இணைய தளங்கள், வலைப்பூக்கள் மற்றும் யு ட்யூப் சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக யு ட்யூபில் ராஜாவின் பாடல்களை ஒரு ஆர்வத்தில் ரசிகர்கள் பதிவேற்றி வைக்க, அதை வைத்து வேறு யார் யாரோ முகம் தெரியாத நபர்கள் காப்பிரைட் என்று கூறி சம்பாதித்து வருகிறார்கள். பதிவேற்றிய ரசிகருக்கு வெறும் கமெண்டும் லைக்கும்தான் அதில் மிச்சம்.

இவற்றை முறைப்படுத்த இப்போது இளையராஜா முனைந்துள்ளார்.

இது குறித்து இளையராஜா கூறும்போது, "இதுவரைக்கும் இணைய தளங்களில் என்னுடைய பெயரில் பல்வேறு வெப்சைட் பக்கங்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் என் கவனத்திற்கு வராமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்பட்டு வருகின்றன என்பதோடு, இந்த பக்கங்கள் மூலம் என்னுடைய ரசிகர்களை தவறாக திசை திருப்பும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கத்துடன் ஒரு இணைய பக்கத்தை www.ilaiyaraajalive.com பெயரில் இன்றிலிருந்து தொடங்கி இருக்கிறேன்.

இதேபோல், யூடியூப் சேனல் www.youtube.com/ilaiyaraaja official வழியாக என்னுடைய அரிய வீடியோ இணைப்புகளை நீங்கள் காணலாம். இனிமேல் என் அதிகாரப்பூர்வமான சேனல்கள் இவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

புத்தம் புதுக் காலை, நின்னுக்கோரி வர்ணம் பாடல்களை புதிதாய் ஷூட் பண்ண முடியுமா உங்களால்?

ரசிகர்கள் மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க இளையராஜா ஒரு போட்டி வைத்திருக்கிறார்.

அவரது புகழ்பெற்ற புத்தம் புதுக்காலை மற்றும் நின்னுக்கோரி வர்ணம் பாடல்களை, இளம் படைப்பாளிகள் புதிதாகப் படமாக்கித் தர வேண்டும். அவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து பரிசளிக்க்ப போகிறார் இளையராஜா.

Ilaiyaraaja announces new contest for young talents

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "எனது புதிய இணையதளத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகளும் புதிய படைப்பாளிக்கு சினிமாவில் தங்களுடைய பங்களிப்பை செலுத்தும் வகையிலான வாய்ப்புகளும் வழங்கப்படும்.

குறிப்பாக நான் தேர்வு செய்த ‘புத்தம் புது காலை', ‘நின்னுக்கோரி வர்ணம்' போன்ற இரண்டு பாடல்களும் இளம் படைப்பாளிகள் தங்களுடைய திறமையில் புதிதாக படப்பிடிப்பு நடத்துங்கள். இந்த படக்காட்சிகளை என் பார்வைக்கு வரும் வண்ணம் இணையத்தில் பதிவு செய்யுங்கள்.

பாடலுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்குமானால் அதனை நானே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளிப்பேன். இதேபோல் நான் எடுத்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவிதை எழுதலாம்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ரசிகர்கள் www.ilaiyaraajalive.com என்ற இணையத்திற்கு சென்று விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அக்டோபர் 31ம் தேதிக்குள் உங்களுடைய படைப்புகளை இணையத்தில் பதிவு செய்து விடுங்கள்," என்றார்.