வித்யா பாலனுக்கு தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை!


மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன், அப்படத்தில் குளியல் காட்சியில் நடித்தபோது தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் பெரும் அலர்ஜியாகி அவஸ்தைப்பட்டு விட்டாராம். இதையடுத்து மினரல் வாட்டரை ஊற்றி குளிக்க வைத்தார்களாம்.

நடிகைகளுக்கு இந்த குளியல் காட்சிதான் மிகவும் சவாலானது. ஏசி அறைகளில் வாழ்ந்து, நல்ல தண்ணீரில் குளித்து மேனியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் அவர்கள், படத்திற்காக குளிக்கும் காட்சிகளில் நடிக்கும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

பலருக்கு தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் போய் விடுகிறது. சிலருக்கு உடல் நலப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது. முன்பு இப்படித்தான் நடிகை நிலா, மினரல் வாட்டரில்தான் குளிப்பேன் என்று கூறி படப்பிடிப்பிலிருந்தே எஸ்கேப் ஆகி ஓடினார்.

இந்த நிலையில் நடிகை வித்யா பாலன் இப்படி ஒரு காட்சியில் குளிக்கப் போய் உடம்பு முழுவதும் நமைச்சல் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டுள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இதில் ஸ்மிதா வேடத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். இதற்காக படத்தில் குளியல் காட்சிகளையும் வைத்துள்ளனர். அப்படி ஒரு காட்சியில் வித்யா பாலன் நடித்தபோது உடம்பு முழுவதும் எரிச்சலும், நமைச்சலும் ஏற்பட்டு விட்டதாம்.

இதையடுத்து டாக்டர்களிடம் போய் சோதித்துள்ளார். அப்போது உடம்பில் அலர்ஜி ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறவே இனிமேல் எனக்கு மினரல் வாட்டரையே கொடுங்கள் என்று கூறி விட்டாராம் வித்யா பாலன். இதையடுத்து அவரை மினரல் வாட்டரில் குளிக்க வைக்க தீர்மானித்துள்ளனராம் படக் குழுவினர்.
 

கன்னடப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம்-ஜெயமாலா மகள் நாயகி!


தனது திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். காட்பாதர் என்ற கன்னடப் படத்திற்கு அவர்தான் இசை.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி, இந்திய இசையமைப்பாளராக உயர்ந்து, இப்போது உலக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கன்னடப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

காட்பாதர் என்ற படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர். உபேந்திரா மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் செளந்தர்யா நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த கதைதான். ஆம், அஜீத் நடித்த வரலாறு படத்தின் ரீமேக்தான் இது. இப்படத்தில் தந்தை அஜீத்துக்கு ஜோடியாக, கனிகா நடித்திருப்பார். அதாவது அம்மா வேடத்தில் அவர் அசத்தியிருப்பார்.

இப்போது கனிகா வேடத்தில் கன்னடத்தில் நடிக்கப் போவது நம்ம ஊர் சிம்ரன். மகன் உபேந்திராவின் ஜோடியாக வரப் போகிறார் செளந்தர்யா. இவர் அந்தக் கால கன்னட நாயகி ஜெயமாலாவின் மகள் ஆவார். இப்படம் மூலம் இவரும் சினிமாத் தொழிலுக்கு வருகிறார்.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். முதல் முறையாக கன்னடப் படத்தில் ரஹ்மான் இசையமைக்கவிருப்பதால் கன்னடத் திரையுலகமே உற்சாகமாகியுள்ளது. அவரது முதல் கன்னட இசையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கன்னடத் திரையுலகுக்கு புதிய இசை அலையை ரஹ்மான் பரப்பப் போவதாக கருதுகிறார்கள். எப்படி தமிழில் ரஹ்மானின் இசை வந்த பிறகு புதிய அத்தியாயம் தொடங்கியதோ அதேபோல கன்னடத்திலும் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. அது பி.சி.ஸ்ரீராம். அவர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.
 

ஐந்து எழுத்தில் தமிழ்ப் பெயருக்கு மாறுகிறது ராணா!


தனது தந்தையின் நினைவாக ராணா என படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டியுள்ள போதிலும், ராசி கருதி இப்படத்தின் பெயரை ஐந்து எழுத்துக்களில் தமிழில் வருமாறு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் படப் பெயர் மாற்றும் வேலையை கடைசியாக பார்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனராம்.

ரஜினிகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகும் படம் ராணா. படத்தின் பூஜை போடப்பட்ட நாளில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே படம் தடைபட்டது. தற்போது ரஜினி உடல் நலமடைந்து திரும்பியுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் முழு வீச்சில் படம் தொடங்கவுள்ளது.

ரஜினி தயாரானவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராணா என்ற பெயர் ராசிப்படி சரியாக இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், அதை மாற்றி விடலாம் என்ற யோசனைக்கு படக் குழு வந்துள்ளதாக தெரிகிறது. உண்மையில் ராணோஜி ராவ் என்ற ரஜினியின் அப்பா பெயரிலிருந்துதான் இப்படத்திற்கு ராணா என்று ரஜினி பெயர் தேர்வு செய்து வைத்தாராம். எனவே இப்பெயரை மாற்றுவதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது ராணா படத்தின் தொடக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளாகி விட்டதால் படத்தின் பெயரை மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே பாபா என்ற இரட்டை எழுத்துப் பெயர் கொண்ட படம் சந்தித்த பிரச்சினைகளையும் இத்தோடு இணைத்து ராணாவும், இரண்டெழுத்தில் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினை எதற்கு என்று கூறியுள்ளனராம்.

மேலும் படையப்பா போல ஐந்தெழுத்து அல்லது சந்திரமுகி போல 6 எழுத்தில் நல்ல தமிழ்ப் பெயராக வைத்து விடலாம் என்ற யோசனையும் ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ரஜினியும் யோசிப்பதாக தெரிகிறது.

இப்போதைக்கு படப்பிடிப்பைத் தொடங்குவது, பெயர் மாற்றத்தைப் பிறகு பார்க்கலாம் என்று ரஜினித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
 

சிறுத்தையும் இந்திக்குப் போகிறது!


அண்ணன் சூர்யா நடித்த சிங்கம் இந்தியில் ரீமேக் ஆன நிலையில் இப்போது தம்பி கார்த்தி நடித்த சிறுத்தையையும் இந்திக்குக் கொண்டு போகிறார்களாம்.

ஒரு காலத்தில் இந்தியிலிருந்து தமிழுக்குப் படத்தைக் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது தலைகீழாகியுள்ளது. இங்கிருந்து அங்கு போகத் தொடங்கியுள்ளன படங்கள். கற்பனை வளம் எல்லாப் பக்கத்திலும் வறண்டு போய் விட்டது என்பதையே இந்த ரீமேக் படங்கள் காட்டுகின்றன.

சமீபத்தில் சிங்கம் படத்தை இந்தியில்ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான இப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் சிங்கம் என்ற பெயரிலேயே படத்தை வெளியிட்டனர்.

தற்போது கார்த்தி நடித்த சிறுத்தை படத்தையும் இந்திக்குக் கொண்டு போகவுள்ளனராம். கார்த்தி, தமன்னா நடித்த படம் இது. தமிழில் மிகப் பெரிய ஹிட் படம் இல்லை என்ற போதிலும் ஓரளவுக்கு கையைக் கடிக்காத வகையில் ஓடியது சிறுத்தை.

இந்தியில் ரீமேக் ஆகவுள்ள இப்படத்திலும் அஜய் தேவ்கனே நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கப் போவதும் சிங்கத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி என்றே கூறுகிறார்கள்.

இதையடுத்து தற்போது ஹீரோயின் வேட்டை தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தி சிங்கத்தில் நடிக்க தமிழ் ஒரிஜினல் நாயகி அனுஷ்கா கடுமையாக முயன்றார். ஆனால் காஜர் அகர்வால் புகுந்து வாய்ப்பை அள்ளி விட்டார்.

இந்த நிலையில் தற்போது சிறுத்தை ரீமேக்கிலாவது நாயகியாகி விட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறாராம் அனுஷ்கா. அதேபோல ஒரிஜினல் சிறுத்தை நாயகி தமன்னாவும் இந்தியிலும் நடிக்க தீவிரமாக களம் குதித்துள்ளாராம்.

அனுஷ்கா, தமன்னா மோதலில் சிறுத்தையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.