மெட்ராஸ்- சினிமா விமர்சனம்

Rating:
4.0/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கார்த்தி, கேதரின் தெரசா, கலையரசன், வினோத், ரமா, ரித்விகா
ஒளிப்பதிவு: ஜி முரளி
இசை: சந்தோஷ் நாராயண்
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
எழுத்து இயக்கம் : பா ரஞ்சித்

சென்னை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா... தெரியாது. ஆனாலும் மெட்ராஸ் என்பதில் உள்ள ஈர்ப்பும் இயல்பும் 'சென்னை'யில் இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம், மெட்ராஸ் என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கான வார்த்தை. அவர்களின் அடையாளம். சிந்தாதிரிப் பேட்டைக்கு தெற்கே உள்ளவர்களுக்கு மெட்ராஸ் என்ற சொல் இன்றைக்கு ரொம்பவே அந்நியமாகத் தெரியக் கூடும்.

கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் புழங்கியவர்களுக்கு, கோடி ரூபாய் கொடுத்தாலும் தென் சென்னைப் பக்கம் வரப் பிடிக்காது. இந்த உணர்வைப் புரிந்தவர்களுக்கு மெட்ராஸ் மனதுக்கு மிக நெருக்கமான படமாக இருக்கும்!

மெட்ராஸ்- சினிமா விமர்சனம்

வியாசர்பாடி பகுதியில் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் உள்ள ஒரு பெரிய சுவரைப் பிடிப்பதில் போட்டி. அந்தப் போட்டியின் பின்னணியில் பெரும் அரசியலே இருக்கிறது. இந்த சுவரில் பழைய அரசியல் புள்ளி ஒருவரின் படத்தை வரைந்து வைத்து, சுவர் எங்களுக்கே சொந்தம் என ஒரு கட்சியினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அந்த சுவரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என கலையரசன் துடிக்கிறார். சுவரைக் கைப்பற்றும் முயற்சியில் கலையரசன் கொல்லப்பட, அந்த கொலைக்கு பழிவாங்க களமிறங்குகிறார் கார்த்தி. அதற்கு குறுக்கே காதலி கேதரின். அதையும் மீறி கார்த்தி தன் முயற்சியைத் தொடர்ந்தாரா.. சுவர் யார் வசம் வந்தது என்பது மீதிக் கதை.

என்னடா இது.. ஒரு சுவருக்காக முழுப் படமா? என்று கேட்பவர்கள், படத்தைப் பார்த்தால்தான் அதன் பின்னணியை உணர்ந்து ரசிக்க முடியும்.

மெட்ராஸ்- சினிமா விமர்சனம்

சென்னையின் பூர்வ குடிகளைப் பற்றி இத்தனை அழுத்தமான பதிவை இதற்கு முன் தமிழ் சினிமாவில் எவரும் செய்ததில்லை. அந்த வகையில் மெட்ராஸ் ஒரு சிறப்பான படம். படத்தின் நீளம், இடைவேளைக்குப் பின் வழக்கமான பழிவாங்கல் என்ற இரு விஷயங்கள்தான் படத்துக்கு மைனஸ்.

கார்த்தியை இப்படியொரு வேடத்தில், கோணத்தில், நடிப்பில் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. காளியாக வாழ்ந்திருக்கிறார். ஐடியில் வேலைப் பார்த்தாலும் ஏரியாவுக்கு வந்ததும், பக்கா லோக்கலாகிவிடும் யதார்த்தம் வசீகரிக்கிறது. சென்னை பாணி தமிழ் என்றதும் செயற்கையாக பல கஸ்மாலங்கள், பேமானிகளைச் சேர்த்துக் 'கொல்லும்' மேல்தட்டு கபாலிகள் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறையவே உண்டு இந்தப் படத்தில், கார்த்தி நடிப்பில். சண்டைக் காட்சிகளில் அத்தனை இயல்பு. கார்த்தியின் உழைப்பு உண்மையில் பிரமிக்க வைக்கிறது.

கார்த்தியின் நண்பன் அன்புவாக வரும் கலையரசன், மக்களுக்காக ஏதாவது செய்ய நினைக்கும் இளம் அரசியல்வாதியாக கலக்கியிருக்கிறார். அவருக்கும் அவர் மனைவியாக வரும் ரித்விகாவுக்கும் இடையிலான தாம்பத்யமும் சரி, கலையரசன் - காளி நட்பும் சரி.. மனசுக்கு அத்தனை நெருக்கமாகத் தெரிகிறது. நாமே அருகிருந்து பார்த்த நெருக்கமான நண்பர்களின் வாழ்க்கையைப் போல!

நாயகியாக வரும் கேதரின் முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றுள்ளார். கார்த்திக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் எளிய கவிதைகள்!

கார்த்தியின் அம்மாவாக என்னுயிர்த் தோழன் ரமா. படத்தின் பெருமளவு பாத்திரங்களில் புதியவர்கள் நடித்திருந்தாலும், அவர்களை அச்சு அசலாக, அந்த ஏரியாவாசிகளாகவே மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ஜி முரளியின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். இரண்டு காட்சிகள் கடந்ததுமே, வியாசர்பாடி ஹவுசிங் போர்டுக்கு மனசு குடிபோய்விடுகிறது. சண்டைக் காட்சிகளில் நடிகர்களுக்கு இணையான பங்கு கேமராவுக்கும்!

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அருமை. குறிப்பாக கானா பாலாவின் அந்த சாவுப் பாட்டு.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஞ்சித்தின் இந்த முயற்சி புதியது மட்டுமல்ல, எதிர்பாராதது. இத்தனை நுணுக்கமாக மெட்ராஸ் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய, சினிமாவைத் தாண்டிய ஒரு சமூக அக்கறை வேண்டும். அது ரஞ்சித்தின் அட்டகத்தியில் மேலோட்டமாகத் தெரிந்தது.... மெட்ராஸில் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டுள்ளது. இந்த மாதிரி படைப்பாளிகள்தான் தமிழ் சினிமாவின் இன்றைய தேவை!

 

பெரும் விலைக்குப் போனது கத்தி தெலுங்கு உரிமை.. ஹைதராபாதில் தனி இசை வெளியீடு!

விஜய் - ஏ ஆர் முருகதாஸின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான கத்தியின் தெலுங்கு உரிமை பெரும் விலைக்கு கைமாறியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தாகூர் மது இந்தப் படத்தை வாங்கியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பின் இசை சில தினங்களுக்கு முன் பெரும் பரபரப்புக்கிடையில் வெளியானது. அடுத்து இதன் தெலுங்கு இசையை வரும் அக்டோபர் 12-ம் தேதி ஹைதராபாதில் வெளியிடுகின்றனர். இசையமைப்பாளர் அனிருது, நடிகர் விஜய், சமந்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.

பெரும் விலைக்குப் போனது கத்தி தெலுங்கு உரிமை.. ஹைதராபாதில் தனி இசை வெளியீடு!

ஏ ஆர் முருகதாஸ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. இவரது ரமணா படம்தான் அங்கு தாகூராக வெளியானது. இவர் இயக்கிய ஸ்டாலின் படம் பெரும் வெற்றி பெற்றது.

சூர்யா நடித்த கஜினி பெரும் வசூலைக் குவித்தது தெலுங்கில். எனவே கத்தியையும் தெலுங்கில் நேரடிப் படம் போலவே வெளியிட முயற்சித்து வருகிறது அந்தப் படத்தைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்.

 

நடனப்புயலுக்கு புது ஜோடி கிடைச்சிருக்காமே?

காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நம்பர் நடிகையை திருமணம் செய்ய இருந்தார் நடனப்புயல். ஆனால் அந்த காதல் முறிந்து போனது.

விரக்தியில் எனக்கு திருமணமே கிடையாது என்று பகிரங்க பேட்டி கொடுத்தார். ஆனால் அதில் உண்மையில்லை என்கிறது பாலிவுட் வட்டாராம்.

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வரும் நடனப்புயல் மறுமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோது, என் வாழ்க்கையில் இன்னொரு திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

ஆனால், கடந்த சில தினங்களாக, நடனப்புயலுக்கும் ஒரு இந்தி பெண் டான்ஸ் மாஸ்டருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால். இந்த செய்தி குறித்து நடனப்புயல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.

 

ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் மனசைக் கெடுக்கிறார்களா? - யேசுதாஸுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

திருவனந்தபுரம்: இந்தியப் பெண்கள் ஜுன்ஸ் அணிந்து ஆண்களின் மனதைக் கெடுக்கிறார்கள் என்று பிரபல பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது.

பல மகளிர் அமைப்புகள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றார். எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைத்தே இருக்க வேண்டும்," என்றார்.

ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் மனசைக் கெடுக்கிறார்களா? - யேசுதாஸுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

யேசுதாஸ் கருத்தைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யேசுதாஸ் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யேசுதாஸ் சிறந்த பாடகர்தான். அதற்காக பெண்களுக்கு எதிராக அவர் இஷ்டத்துக்கும் கருத்து தெரிவிப்பதை ஏற்பதற்கில்லை என்று மகளிர் அமைப்பு தலைவி பிந்து மாதவி தெரிவித்தார்.

 

இப்பதான் எனக்கே படம் ஓடுது, இந்நேரம் பார்த்து காட்சிகள் ரத்தா: கடுப்பில் ஹீரோ

சென்னை: அரசியல் சூழ்நிலையால் தனது புதிய படத்தின் காட்சிகள் ரத்தானதால் சிறுத்தை கடுப்பானாராம்.

சிறுத்தை நடிகருக்கு பல காலம் கழித்து தற்போது தான் ஒரு படம் ஹிட்டாகியுள்ளது. வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானது. படம் ரிலீஸான மறுநாளே அம்மா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து ஆளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் திரை உலகினர் அம்மாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு உண்ணாவிரதம் இருந்ததுடன், அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

தனக்கே இப்போது தான் ஒரு படம் நன்றாக ஓடுகிறது. இந்நிலையில் இப்படி அரசியல் சூழ்நிலையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதே என்று சிறுத்தை கவலைப்பட்டாராம்.

இப்படி ரத்து செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமே என்று கவலையும் ஏற்பட்டதாம்.

 

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... ஐந்து மொழிகளில்.. என்னா தைரியம்!!

யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம். அரசியல், சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள நேரமாகப் பார்த்து, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாக்கப் போவதாக ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... ஐந்து மொழிகளில்.. என்னா தைரியம்!!

படத்துக்குத் தலைப்பு அம்மா!

இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம்.

ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்களாம்.

இந்தப் படத்தை இயக்குபவர் பைசல் சயீப். இவர் யார் தெரியுமா? ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் விதத்தில் படமெடுத்து, பின்னர் ரஜினியே கோபப்பட்டு வழக்குப் போட்டுத் தடுத்தாரே.. அந்த மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ராகினி திவேதி நடிக்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது வரை அனைத்தையும் காட்சிப்படுத்தப் போகிறார்களாம்.

'அம்மா' தமிழகத்திலிருந்திருந்தால் இப்படியொரு செய்தியை வெளியிடத் துணிந்திருப்பார்களா எவராவது.. என்னா தைரியம்!!

 

தீபாவளி ரேசில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

நேற்று வெளியாகவிருந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தள்ளிப் போய்விட்டது. காரணம்... மெட்ராஸ், ஜீவா படங்கள்தானாம்.

விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'.

'ஜெயம் கொண்டான்', ‘சேட்டை' போன்ற படங்களை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

கிராமத்து பின்னணியில் காதலுடன் நகைச்சுவை கலந்து படம் எடுக்கப்பட்டுள்ள படம் இது.

தீபாவளி ரேசில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

இப்படம் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் செய்யும் திட்டமிட்டுள்ளார்களாம்.

ஏன் அப்படி?

கடந்த வெள்ளியன்று வெளியான ‘மெட்ராஸ்', ‘ஜீவா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைhd பெற்றிருப்பதாலும், ‘யான்' படம் அதிக அரங்குகளைப் பிடித்திருப்பதாலும்தான் இந்த மாற்றமாம்.

தீபாவளிப் போட்டியில் கத்தி, பூஜை என இரண்டு பெரிய படங்கள் உள்ளது ஞாபகமில்லையா ஒரு ஊர்ல ரெண்டு ராஜா டீமுக்கு?

 

என் குடிகார தம்பி ரஜினிகாந்த்: ஜெயபிரதா

சென்னை: கே. பாலசந்தர் எழுதி இயக்கிய அந்துலேனி கதா படத்தில் ரஜினி தனது குடிகார தம்பியாக நடித்ததாக நடிகை ஜெயபிரதா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. பின்னர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவர் தற்போது தனது மகனை வைத்து உயிரே உயிரே படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

என் குடிகார தம்பி ரஜினிகாந்த்: ஜெயபிரதா

இந்நிலையில் அவர் தனது திரை உலக பயணம் குறித்து கூறுகையில்,

கே. பாலசந்தர் எழுதி, இயக்கிய அந்துலேனி கதா என்ற தெலுங்கு படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானேன். அதில் ரஜினிகாந்த் என்னுடைய குடிகார தம்பியாக நடித்திருந்தார். சலங்கை ஒலி படத்தில் நான் இயல்பாக நடிக்க கமல் ஹாஸன் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். அவர் தான் எனக்கு எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

என்னால் மறக்க முடியாத படம் என்றால் அது நினைத்தாலே இனிக்கும் தான் என்றார்.

 

ஷமிதாப்பில் தனுஷுடன் அமிதாப் மட்டுமல்ல.. ரேகாவும் நடிக்கிறார்!

ஷமிதாப் படத்தில் தனுஷுடன் அமிதாப் நடிப்பதும், அந்த கதை கூட நம்ம ஊரில் 80களில் பிரபலமான நடிகர் மோகன் - அவருக்கு படங்களில் குரல் கொடுத்த சுரேந்தர் இடையிலான சண்டைதான் என்பதும் பலருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான்.

இப்போது படத்தில் புதிதாக ஒரு பாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் ரேகா. ஆம், பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி் ரேகாதான்.

தனுஷ், ‘ராஞ்சனா' இந்தி படம் மூலம் மும்பை படஉலகில் பிரபலமானார். அப்படம் ஹிட்டானதால் மீண்டும் இந்தியில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது.

ஷமிதாப்பில் தனுஷுடன் அமிதாப் மட்டுமல்ல.. ரேகாவும் நடிக்கிறார்!

தனுஷும், அமிதாப்பச்சனும் நடித்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட நிலையில்தான், ரேகா மேட்டரை வெளியில் விட்டுள்ளார் இயக்குநர் பால்கி.

அமிதாப் - ரேகா இடையிலான உறவும் பிரிவும் இந்தியத் திரையுலகம் அறிந்தது. பாலிவுட்டின் மிக வெற்றிகரமான ஜோடியான அமிதாப் - ரேகா 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் நடித்த படம் சில்சிலா. வெளியா ஆண்டு 1981.

33 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் நடிக்கின்றனர். ஆனால் ஜோடியாக அல்ல!

 

போதையில் பல் மருத்துவரை கத்தியால் குத்த வந்த ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் பல் மருத்துவரை கத்தியால் குத்த முயன்றுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன்(49). அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை நாற்காலியில் அமர வைத்துள்ளார் மருத்துவமனை ஊழியர் ஒருவர். பின்னர் நைட்ரஸ் ஆக்சைடு கொடுப்பதற்காக அவர் சார்லியின் முகத்தில் மாஸ்க் போட்டுள்ளார்.

போதையில் பல் மருத்துவரை கத்தியால் குத்த வந்த ஹாலிவுட் நடிகர்

இதையடுத்து சார்லி கடுப்பாகி கத்தியை எடுத்து பல் மருத்துவரை மிரட்டியுள்ளார். மேலும் அவரை குத்துவது போன்றும் வந்துள்ளார். இதில் பல் மருத்துவர் பயந்துவிட்டார்.
அதிர்ஷ்டவசமாக மருத்துவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

சார்லி கொக்கைன் என்னும் போதைப் பொருளை பயன்படுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து சார்லியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

மணிரத்னம் பட நாயகியானார் நித்யா மேனன்!

அடுத்த படத்துக்கு ஹீரோயின் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த மணிரத்னத்துக்கு ஒரு வழியாக நாயகி கிடைத்துவிட்டார்.

தமிழில் இதுவரை எவ்வளவோ முயன்றும் காலூன்ற முடியாமல் போன நித்யா மேனன்தான் மணிரத்னத்தின் அடுத்த பட நாயகி.

துல்க்வார் சல்மான் நாயகனாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மணிரத்னம் பட நாயகியானார் நித்யா மேனன்!

குரு, ராவணன், கடல் என தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மணிரத்னம், இந்தப் படத்தில் தனது பழைய படம் ஒன்றையே ரீமேக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.

சென்னையிலும் மும்பையிலும் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

துல்க்வார் சல்மான் - நித்யா மேனன் ஜோடி மலையாளத்தில் வெற்றி ஜோடியாகத் திகழ்கிறது. இருவரும் இணைந்த உஸ்தாத் ஓட்டல், பெங்களூர் டேஸ் ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை என்பது நினைவிருக்கலாம்.

வரும் திங்கட்கிழமை மணிரத்னத்தின் புதிய படப்பிடிப்பு தொடங்குகிறது!

 

ஜிம்பாப்வே திரைப்பட விழாவுக்குப் போகும் குற்றம் கடிதல்

ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் திரைப்பட திரையிடப்பட உள்ளது.

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் குற்றம் கடிதல்.

குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படம். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார் எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜிம்பாப்வே திரைப்பட விழாவுக்குப் போகும் குற்றம் கடிதல்

சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். அஜய், ராதிகா, பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பசங்க, கோலிசோடா வரிசையில் வெற்றியும் பெறும்" என்கிறார் படத்தை வாங்கியுள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.

இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் சர்வதேச படவிழாவிலும், மும்பையில் நடைபெற இருக்கும் 16வது எடிசன் திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனரின் படம் என்கிற பகுதியில் இந்த இரண்டு திரைப்பட விழாக்களுக்கும் குற்றம் கடிதல் படம் தேர்வாகி உள்ளது. அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

 

ஜீன்ஸ் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது: பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சர்ச்சை

திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் திரைப்பட பின்னணி பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், 'பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும் என்றார்.

ஜீன்ஸ் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது: பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சர்ச்சை

இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார்.

கே.ஜே.யேசுதாஸின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகிளா காங்கிரசை சேர்ந்த பெண்கள், பெண்களின் சுதந்திரத்தை பாதிப்பதாக இந்த கருத்து இருக்கிறது இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யேசுதாஸ் ஒரு சிறந்த பாடகர், இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பவை. ஆனால், அப்படிப்பட்டவரிடம் இருந்து இப்படி பெண்களுக்கு எதிரான கருத்து வருவது துரதிருஷ்டவசமானது என மகிளா காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார்.