வில்லன் நடிகர் ரவிமரியா படுகாயம்


சண்டை காட்சியில் நடித்தபோது, வில்லன் நடிகர் ரவிமரியா கழுத்தில் அடிபட்டதால் படுகாயமடைந்தார்.

குருராஜன் தயாரிக்க, நந்தா பெரியசாமி டைரக்டு செய்து வரும் படம், 'அழகன் அழகி.' இந்த படத்தில் புதுமுகங்கள் ஜாக்-ஆருஷி கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். வில்லனாக ரவிமரியா நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையை அடுத்த பொழிச்சலூர் காட்டில் நடந்தது.

கதாநாயகனும், கதாநாயகியும் தப்பி ஓடுவது போலவும், அவர்களை ரவிமரியா விரட்டி வருவது போலவும் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

100 கிலோ எடையுள்ள ஒரு மரக்கட்டையால் கதாநாயகன் ஜாக், வில்லன் ரவிமரியாவை அடிப்பது போல் ஒரு காட்சியை படமாக்கியபோது, அது தவறி ரவிமரியாவின் கழுத்தில் விழுந்தது. அடி பலமாக இருந்ததால், ரவிமரியா சுருண்டு விழுந்தார். அடிபட்ட இடத்தில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்தது.

இதனால், படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவிமரியாவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.
 

ஒஸ்திக்கு சிக்கலா? - தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்


ஒஸ்தி படத்துக்கு சிக்கல் என்றும், தியேட்டர் தர மறுப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தரணி இயக்கத்தில் சிம்பு - ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள ஒஸ்தி படம், வரும் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்தை சன் டிவிக்கு விற்றிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் தர மறுப்பதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் சங்கம், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஒஸ்தி படத்துக்கு மேற்கண்ட அமைப்புகளில் உள்ள எவரும் எந்த வித தடையையும் விதிக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், செயலாளர் பி எல் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.
 

கோழிப் பண்ணை மீது வைத்துள்ள நம்பிக்கையை சினிமா மீது வையுங்கள்! - கமல்


சென்னை: கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா மீது வையுங்கள் என வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாஸன்.

மேலும் பழைய திரைப்படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை 2 நாள் மாநாடு நடந்தது.

இதில் சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன், முதன்மை அதிகாரி பங்கஜா தாக்கூர், நடிகர் கமலஹாசன், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முடிவில் கமலஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியா முழுவதும் திரைப்படத் தொழிலில் 'டிஜிட்டல்' முறை உருவாகி வருகிறது. இதனால் பழைய 'ரீல்' முறையை மாற்றி, நவீன யுக்திகளுடன் சினிமா எடுக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 3,500 பழைய படங்களை அரசாங்க உதவிகள் இல்லாமல் 'டிஜிட்டல்' முறையில் பாதுகாத்துள்ளோம். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பழைய படங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

பழைய படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும்.

`டிஜிட்டல்' மாற்றத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களைக் களைய இந்த மாநாட்டின் மூலம் விளக்கம் தரப்பட்டது.

இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சென்சார் போர்டு அதிகாரிகள் வந்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் இன்முகத்துடன் பதில் அளித்தனர். இந்த மாநாட்டின் மூலம் தயாரிப்பாளர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டது.

திரைப்படங்களில் சென்சார் போர்டு புதிய செயல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல்பாடுகள் பற்றி தயாரிப்பாளர்கள், திரைப்படத்துறையினருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கி கடன் வேண்டும்

திரைப்பட தொழிலுக்கு வங்கிகளில் கடனுதவி வழங்குவது தொடர்பாக பேசி வருகிறோம். கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா தொழில் மீது வங்கிகள் வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். வங்கிகள் மூலம் கடனுதவி பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். திரைப்படங்கள் பட்ஜெட்டை பொறுத்து வசூல் ஆகும்.

இந்த 2 நாள் மாநாட்டில் திரைப்படத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கு (`பிக்கி') நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
 

ரூ 5 கோடி பேரம்... பேத்தி படத்தை வெளியிட அமிதாப் மறுப்பு!


மும்பை: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக இரு பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசியுள்ளன. ஆனாலும் குழந்தையின் படத்தை பிரசுரிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் போல ஏ என்ற எழுத்தில் துவங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக்பச்சன் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும் படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார்.

தற்போது இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன் பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனுக்கு திருமணம் நடந்த புதிதில், அவர்களின் கல்யாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் பல கோடி தருவதாக சர்வதேச பேஷன் பத்திரிகைகள் கேட்டன. அப்போதும் அவற்றை தர மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
 

ரஜினியின் தங்கையாக சினேகா!


கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அடுத்து நடிக்கும் படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க, கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் வரவிருக்கும் படம் இது.

இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சினேகாவுடன் பேசி வருகின்றனர். ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதையெல்லாமே இன்னும் சில தினங்களில் தெளிவாக்கிவிடுவோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
 

சில்க் ஸ்மிதா பற்றிய படத்துக்கு பாகிஸ்தானில் தடை!


டெல்லி: தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

வித்யா பாலன், நஸ்ருதீன் ஷா நடித்துள்ள இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார்.

பாகிஸ்தானில் இந்திப் படங்களுக்கு ஏக மவுசு. குறிப்பாக வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே தி டர்ட்டி பிக்சர் படத்தை 50 அரங்குகளில் வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் படத்தை பார்த்த பாகிஸ்தான் தணிக்கை அதிகாரிகள் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்தனர்.

வித்யா பாலனுடன் நசுருதீன் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துச்சார் கபூர் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பாகிஸ்தானில் இந்தப் படம் வெளியாகவில்லை.

பெரிய வெற்றி

இதற்கிடையே, தி டர்ட்டி பிக்சர் இந்திய பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதாக வட இந்திய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

நாகிரெட்டி நூற்றாண்டு விழா - தமிழ், தெலுங்கு படங்களுக்கு விருது


சென்னை: இந்திய திரையுலகின் ஜாம்பவான்களுள் ஒருவரான மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறது விஜயா குழுமம். இதனையொட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து விஜயா குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பொட்டிபாடு கிராமத்தில் 1912-ம் ஆண்டு பிறந்தவர் நாகிரெட்டி.

பின்னர் சென்னையில் குடியேறிய அவர், விஜயா ஸ்டூடியோவை நிறுவி, விஜயா புரொடக்ஷன் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். `எங்க வீட்டு பிள்ளை', `மாயா பஜார்', `மிஸியம்மா', `நம்நாடு' உள்ளிட்ட படங்களையும், தெலுங்கு, இந்தி மொழி படங்களையும் தயாரித்தார்.

'ஆந்திர ஜோதி' நாளிதழ் மற்றும் `சந்தமாமா' சிறுவர் பத்திரிகையையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தினார். 1972-ம் ஆண்டு விஜயா மருத்துவ அறக்கட்டளையை ஏற்படுத்தி விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர் மற்றும் விஜயா ஹார்ட் பவுண்டேஷன் ஆகியவற்றை உருவாக்கி மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.

நூற்றாண்டு விழா

திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளிலும் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். திரைப்படத்துறை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட விஜயா குழுமம் திட்டமிட்டுள்ளது.

நூற்றாண்டு விழா கொண்டாட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாகிரெட்டியின் பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது.

நூற்றாண்டு விழாவில் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருகிற 4-ந் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் நூற்றாண்டு விழா சிறப்பு புத்தகம் வெளியிடப்படுகிறது. நாகிரெட்டியின் சொந்த கிராமத்தில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

நூற்றாண்டு நினைவு தபால் தலை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வினாடி-வினா நடத்தப்படுகிறது. பல கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

படங்களுக்கு விருது

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கான விழா சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விழா குறித்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை சௌகார் ஜானகி, பத அதிபர் பி வெங்கட்ராம ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

மயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் - அன்புமணி குற்றச்சாட்டு


சென்னை: மயக்கம் என்ன படத்தில் புகைப் பிடிக்கும் காட்சியில் மத்திய அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் மத்திய அரசின் விதிகளை சினிமாக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு நவம்பர் 14 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படத் துறையினர் சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

மயக்கம் என்ன

சமீபத்தில் வெளிவந்துள்ள `மயக்கம் என்ன' எனும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய உத்தரவு செயலுக்கு வந்த நாளுக்கு பின்னரே தணிக்கைத் துறை சான்று பெற்றிருந்தும் சட்டவிதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை.

'திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கும் கதாநாயகர், படம் தொடங்கும் போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேச வேண்டும், புகைபிடிக்கும் காட்சியின் போது கீழே எச்சரிக்கை வாசகத்தை ஓடவிட வேண்டும்' என்கிற அரசு உத்தரவு இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

இந்த முக்கியமான விதிகள் தமிழ்நாட்டின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே தமிழ் திரைப்படத் துறையினர் இனியும் தாமதிக்காமல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்


சென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் 1996ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்த காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து சொர்ணா மீது சென்னை ஜார்ஜ் டவுன் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் போத்ரா மோசடி வழக்கு தொடர்ந்தார். இதையடு‌‌த்து சொர்ணா ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். மீதிப்பணத்தை செலுத்தாததால் அவருக்கு 6 மாத ‌சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சொர்ணா மே‌ல்முறை‌யீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சொர்ணாவின் தண்டனையை 3 மாதமாக குறைத்தா‌ர். மீதிப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌ப்‌பீ‌ல் செ‌ய்தா‌ர் சொர்ணா. ஆனா‌ல் சொ‌ர்ணா‌வி‌ன் மனுவை தள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு செய்தார்.

அதில், போத்ராவுக்கு தர வேண்டிய பணத்தை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் டெபாசிட் செய்து விட்டேன். பெண் என்பதால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, சொர்ணாவுக்கு விலக்களிக்க மறுத்த நீதிபதி, 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இ‌ந்த நிலையில் நேற்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் மீண்டும் விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பை உறு‌தி செ‌ய்து தீர்ப்பளித்தது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்.