ஹீரோயினை டம்மி பீஸாக்கிய மம்மி நடிகை!!!

சென்னை: தளபதி படம் பற்றி புஸு புஸு நடிகை பயந்தது போன்றே நடந்துவிட்டது.

தளபதி விலங்கின் பெயர் கொண்ட படம் ஒன்றில் நடித்து வருகிறார். படத்தில் வாரிசு நடிகை, புஸு புஸு நடிகை என இரண்டு ஹீரோயின்கள். மேலும் மயிலு வேறு நடித்து வருகிறார். வாரிசு நடிகையை ஒப்பந்தம் செய்தபோதே புஸு புஸு நடிகைக்கு ஒரு பயம் வந்துவிட்டது. அதாவது படத்தில் வாரிசு நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு நம்மை டம்மி பீஸாக்கிவிடுவார்களோ என்ற பயம்.

புஸு புஸு நடிகை பயந்தது போன்றே நடந்துவிட்டதே!!!

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி படத்தில் வாரிசு நடிகை மற்றும் புஸு புஸு நடிகையைவிட மயிலுக்கு தான் முக்கியத்துவமாம். அதுவும் ஹீரோவுக்கு அடுத்தபடியாக படத்தில் மயிலுக்கு தான் அதிக முக்கியத்துவமாம்.

புஸு புஸு நடிகை வாரிசு நடிகையை பார்த்து பயப்பட சப்தமில்லாமல் மயிலு ஓவர்டேக் செய்துவிட்டார். இத்தனைக்கும் படத்தில் புஸு புஸு நடிகையின் அம்மா தான் மயிலு.

ஹீரோவை ஒருதலையாக காதலித்து பாட்டு பாட வேண்டிய வேலை மட்டுமே புஸு புஸு நடிகையுடையதாம்.

 

இடைவெளிக்குப் பிறகு.. மீண்டும் சன் பிக்சர்ஸ்!

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா விநியோகத்தில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கம் - நடிப்பில் வெளியாகும் காஞ்சனா படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளது இந்த நிறுவனம்.

இடைவெளிக்குப் பிறகு.. மீண்டும் சன் பிக்சர்ஸ்!

காதலில் விழுந்தேன் படம் மூலம் 2008-ம் ஆண்டு சினிமா விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதிரடி விளம்பரங்கள் மூலம் சுமார் படத்தையும் பெரிய வெற்றிப் படமாக மாற்றியது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து, பெரும் வெற்றிப் பெற்றது. இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வெற்றி எந்திரனுக்குக் கிடைத்தது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பித்தது சன் பிக்சர்ஸ். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றே படங்களைத்தான் இந்த நிறுவனம் வெளியிட்டது. அவற்றில் முக்கியமானது குட்டிப் புலி. கடைசியாக இங்க என்ன சொல்லுது என்ற படத்தை வெளியிட்டது. சரியாகப் போகவில்லை.

அந்தப் படத்துக்குப் பிறகு இப்போதுதான் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். வரும் ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகிறது. அநேகமாக ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

 

வழக்கை வாபஸ் வாங்கவே முடியாது! - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்

திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

தியேட்டர்கள் கிடைக்காத சூழலில் தனது பெரும் சர்ச்சைக்குரிய படமான விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் அறிவித்தார். இதனால் கமல் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறி தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மல்லுக்கு நின்றனர்.

வழக்கை வாபஸ் வாங்கவே முடியாது! - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்

இந்த சூழலில் இந்திய போட்டி ஆணையத்தில் இது குறித்து கமல் ஹாஸன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வகையில் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இருந்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் மீது பெரும் அபராதம் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

உத்தம வில்லன் படத்தின் சென்னை உரிமையை வாங்கியுள்ள அபிராமி ராமநாதனும் இதில் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் கமலை சமீபத்தில் சந்தித்த அபிராமி ராமநாதன், தங்களுக்கு எதிரான வழக்கை காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் கமல். இந்த வழக்கை திரும்பப் பெறுவது முடியாத காரியம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.

 

விஜய் ஆன்டனியின் டாக்டர் சலீம்- தெலுங்கில் 350 அரங்குகளில் ரிலீஸ்

விஜய் ஆன்டனி தமிழில் நடித்து வெற்றிப் பெற்ற சலீம் படம் இப்போது தெலுங்கில் வெளியாகியுள்ளது. அங்கு இந்தப் படத்துக்கு டாக்டர் சலீம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதை தமிழில் இயக்கிய நிர்மல் குமாரே இயக்குவார் என்றும் செய்திகள் வெளியான நிலையில், படத்தை அப்படியே டப் செய்து வெளியிடுகிறார்கள்.

விஜய் ஆன்டனியின் டாக்டர் சலீம்- தெலுங்கில் 350 அரங்குகளில் ரிலீஸ்

படத்தின் கதைக் களம் மற்ற மொழிகளில் பெரும் வெற்றி பெற தோதாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ததால், இந்த பட்ததை மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

டாக்டர் சலீம் என்ற பெயரில் நேற்று வெளியான இந்தப் படத்துக்கு 350 திரைகள் கிடைத்துள்ளதை பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நேரடிப் படத்துக்கு நிகரான ரிலீஸ் இது.

விஜய் ஆன்டனிக்கு நாயகனாக இது இரண்டாவது படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.