இந்திய சினிமா பாக்.இளைஞர்களை கெடுக்கிறதாம்!

இந்திய சினிமாப் படங்கள் தங்களது நாட்டு இளைஞர்கள் மனதைக் கெடுப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நவாஸ்ஷெரீப் பிரிவு எம்.பி.யான தஹீரா ஒளரங்கசீப் குற்றம் சாட்டி, அரசிடமும் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கலாச்சாரத்துறை அமைச்சரை சந்தித்து அவர் புகார் கொடுத்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது அங்கும் இந்திய சினிமாவை பல்வேறு கட்சி எம்.பிக்கள் விமர்சித்தனர்.
ஒரு எம்.பி. கூறுகையில், பாகிஸ்தானை இந்திய சினிமாக்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானிய படங்களால் இந்தியாவில் அந்த அளவுக்கு ஊடுறுவ முடியாமல் போய் விட்டது வேதனை தருகிறது என்றார்.
இருப்பினும் இந்தியா உள்ளிட்ட பிறநாட்டுப் படங்களை பாகிஸ்தானில் தடை செய்தால் அது திரைப்பட வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியே ஒரு தீவிர இந்திப் பட பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐஸ்வர்யா ராயையும், லதா மங்கேஷ்கரையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது நினைவிருக்கலாம்.
 

ஒரே படத்தில் ரெண்டு ‘கா’

Sneha and Bhumika Chawla
ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் இப்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் யார் என்ற புதிய படம் 2 நாயகிகளுடன் வரவுள்ளது.
யார் என்று பல ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் படம் வந்தது. இப்போது அதே பெயரில் புதிய படம் உருவாகிறது. முதலில் இதற்கு அஞ்சுகம் என்றுதான் வைத்திருந்தார்கள். பின்னர் என்ன யோசித்தார்களோ, அதை மாற்றி விட்டு யார் என்றுசூட்டி விட்டனர்.
இதில் முக்கிய நாயகியாக சினேகாவும், இன்னொரு நாயகியாக பூமிகாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் முக்கியமான பாத்திரங்களாம். இதனால் இமேஜ் பிரச்சினை வராது என்கிறார் இயக்குநர் ஜெயராம்.
அதற்கேற்றார் போல இரு நடிகைகளும் கா விடாமல் சமர்த்தாக நடித்துக் கொடுத்தார்களாம். அதுபோக நன்றாக பழகி தோழிகளாகி விட்டனராம்.
படத்தின் தயாரிப்பாளர் சதீஷ். இவர் வேறு யாருமல்ல, நடிகை ஷ்ரியாவின் மேனேஜர். இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து ஷ்ரியாவை வைத்து படம் எடுப்பாரா சதீஷ்.
 

திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!

Divya
தமிழ்ப் படங்களில் திவ்யாவை நடிக்க வைக்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் உறவினர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான திவ்வா, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந் நிலையில் திவ்யாவை இனி மேல் தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பிரச்சனையில் தமிழர்கள் நலனைக் கருதாமல் எதிராக செயல்பட்ட திவ்யாவை தமிழில் நடிக்க வைக்கக் கூடாது.
ஏற்கனவே கெளதம் மேனன் திவ்யாவை வாரணம் ஆயிரம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். இனி அவரை தன் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் என்று கெளதம் உறுதியளி்த்தார். அதனால் அமைதியாக இருந்தோம்.
ஆனால், தற்போது மீண்டும் திவ்யாவை தனது புதிய படத்திற்கு தேர்வு செய்துள்ளார் கெளதம். இதை அனுமதி்க்க மாட்டோம். கெளதம் மேனன் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து திவ்யா கூறுகையில், நான் இந்தப் படத்தில் நடிப்பேனா, இல்லையா என்பதை கெளதம் தான் கூற வேண்டும் என்றார்.