முதலில் கொஞ்சம் குண்டாகத்தான் இருந்தேன். சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு ஸ்லிம்மாகிவிட்டேன், என்றார் நடிகை ஹன்ஸிகா.
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ளார் ஹன்ஸிகா. தமிழில் மட்டுமே 7 படங்களில் நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படங்கள், தனது ரசனைகள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இது:
உங்கள் வாழ்க்கையில் உந்துதலாக உள்ள பெண்மணி?
எனது தாயார்தான். எனக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என் தாய். என்னுடைய பலம் அவர்தான்.
உங்களைக் கவர்ந்த நடிகை ?
என்னை ஈர்த்தவர்கள் நடிகைகள் மட்டுமல்ல, தனது வாழ்வின் எல்லா அம்சங்களையும் சரியாகக் கையாண்டு, கடின உழைப்பு மற்றும் தியாகங்களை செய்யும் எல்லா பெண்களும்தான்.. அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பற்றிய உங்களது கருத்து..
இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள்வது அவசியம். அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்கள் பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது.
ஏழை எளிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறீர்களே...என்ன காரணம்?
நல்லது செய்ய காரணங்கள் வேண்டாம்.. இது எனது பழக்கம். ஏழை குழந்தைகளை நான் தத்தெடுத்து வளர்ப்பது உண்மைதான். இவ்வாறான சேவைகளை என் தாயார் செய்து வருகிறார். ஒரு நாள் நீயும் ஏன் இதை செய்யக்கூடாது என கேட்டார். இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அதன்பிறகு நான் குழந்தைகளை தத்தெடுத்தேன். அவர்களின் நல்வாழ்வுக்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறேன். எனக்கு இது மனநிறைவை தருகிறது.
தங்களின் கருத்தின்படி கதாநாயகிகளை கையாள்வதிலும் நடத்துவதிலும் தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு திரைத்துறைக்கும் வேறுபாடுகள் உள்ளதா ?
இல்லவே இல்லை... தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு பட உலகுக்கும் வேறுபாடு இல்லை. மொழி மாறுமே தவிர படப்பிடிப்பு என்ற உணர்வும் உபசரிப்பும் ஒன்றுதான்.
இந்தி பட வாய்ப்புகள் பற்றி...
ஓய்வில்லாமல் இங்கு படங்கள் செய்து வருகிறேன். வாய்ப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன .. ஆனால் இந்தி படங்களில் நடிக்க நேரம்தான் இல்லை .
எப்படி குறுகிய காலத்தில் உடல் இடையை குறைத்தீர்கள்? அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்?
சாப்பிடுவதை குறைத்து கொண்டதால் உடல் எடையும் குறைந்து விட்டது. தினமும் அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டதும் எடை குறைவுக்கு காரணமாக அமைந்தது. நான் நடிகையாக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். முதல் இடத்தை பிடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை. சிறந்த நடிகை பண்பான நடிகை என்ற பெயரே நிரந்தரமானது.
இந்திய கதாநாயகிகளின் திரை ஆயுட்காலம் குறைவாகவும் ஹாலிவுட் கதாநாயகிகளின் திரை ஆயுட்காலம் பெரிதாகவும் உள்ளதே, அதை பற்றி...?.
ஆட்சேபிக்கிறேன்! ரேவதி, குஷ்பு, ஸ்ரீதேவி போன்றோர் இன்னும் சினிமாவில் நிலைத்து உள்ளனரே...
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.