சனா கான் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய மறுத்த மும்பை ஹைகோர்ட்

சனா கான் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய மறுத்த மும்பை ஹைகோர்ட்

மும்பை: நடிகை சனா கான் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகை சனா கானின் உறவினர் நவீத் கான்(18). அவருக்கு சமூக வலைதளம் மூலம் 15 வயது பெண் ஒருவருடன் கடந்த நவம்பர் மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நவீத் கூற அந்த பெண் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி அந்த பெண் மும்பை சன்பதா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது நவீத் தனது 3 நண்பர்களுடன் பிஎம்டபுள்யூ காரில் அந்த பெண்ணை கடத்த முயன்றார். ஆனால் அந்த பெண் தப்பியோடிவிட்டார். அப்போது காரை ஓட்டியவர் சனா கான் தான்.

இந்த சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் சனா கான், நவீத் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் நவீத் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சனா கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் கௌதம் பட்டேல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த அவர்கள் கூறுகையில்,

கடத்தலுக்கு உங்களின் பிஎம்டபுள்யூ கார் பயன்படுத்தப்பட்டுள்ளபோது இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எவ்வாறு கூற முடியும்? உங்கள் மீதான வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும் என்று கேட்டனர்.