நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு- டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை


சென்னை: டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர்.

போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
 

சம்பளப் பிரச்சினையால் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திலிருந்து நிக்கோல் 'எஸ்கேப்'


நடிகை நிக்கோல், சம்பளப் பிரச்சினை காரணமாக ஒரு நடிகையின் கதை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் கம்பி நீட்டி விட்டு புனே போய் விட்டாராம்.

அடடா என்ன அழகு, ஆறு மனமே, நாய்க்குட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிக்கோல். தற்போது சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.

இவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்தனர். இது போக, சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் ரூம், அவருக்கான சாப்பாட்டுச் செலவு உள்ளிட்டவற்றையும் தயாரிப்பாளரே ஏற்று செலவழித்து வந்தாராம். இருப்பினும் படப்பிடிப்பின்போது ஒத்துழைப்பு கொடுக்காமல் சிக்கலை ஏற்படுத்தினார் நிக்கோல் என்று கூறப்படுகிறது.

நெல்லூரில் படப்பிடிப்பை வைத்தபோது அங்கு வராமல் ஜகா வாங்கினாராம். கேட்டால் தோல் அலர்ஜியாக இருக்கிறது என்றாராம். அவருக்காக பலவற்றை பார்த்துப் பார்த்து செய்தும் ஒரு லட்சம் சம்பளத்தைக் கொடுத்து விட்ட நிலையில் மீதப் பணத்தையும் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம் நிக்கோல்.

அதில் ரூ. 25,000 பணத்துக்கான செக் தருவதாகவும், மீதப் பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் செட்டில் செய்வதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாம். இருப்பினும் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தற்போது திடீரென கிளம்பி புனே போய் விட்டாராம்.

இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்போவதாகவும், கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாகவும் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் புகார்களை நிக்கோல் மறுத்துள்ளார். சம்பளம் தரவில்லை என்பதற்காகத்தான் நான் ஊருக்கு திரும்பி விட்டேன். மற்றபடி நான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. அவர்கள்தான் பல பிரச்சினைகளைக் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
 

குன்னூரில் சினிமா தயாரிப்பாளர் வெற்றிவேலன் மர்மசாவு- சாக்கடையில் பிணம்


குன்னூர்: குன்னூரில் குடிப்போதையில் சுற்றித் திரிந்த சினிமா தயாரிப்பாளர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்(38). அவரது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 1 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. படுகர் இனத்தை சேர்ந்த வெற்றிவேலன், பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சமீபகாலமாக 'ஹெச முங்காரு' என்ற படுகர் மொழி சினிமாவை வெற்றிவேலன் தயாரித்து வந்தார். மனைவி இறந்த பின் எப்போது போதையில் சுற்றி திரிந்த வெற்றிவேலன், இன்று காலை தூதுர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் இறந்து 3 நாட்களாகியதாக தெரிவித்தனர்.

வெற்றிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிவேலன் தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட தர்ஷன்!


கன்னட நடிகர் தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து, நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது பிரச்சினையில் தேவையில்லாமல் நிகிதாவின் பெயரை இழுத்து விட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கன்னடத்தில் நடித்து வந்த நிகிதாவை மையமாக வைத்து சமீபத்தில் பெரும் புயல் கிளம்பியது. நடிகர் தர்ஷன், தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடும் சண்டையி்ல் இறங்கினார். மனைவியைத் தாக்கிய அவர் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. தர்ஷன், விஜயலட்சுமி இடையிலான மோதலுக்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நிகிதா இதை மறுத்தார்.

இந்த விவகாரத்தில்தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார். மேலும் நிகிதாவுக்கு கன்னட திரையுலகில் தடையும் விதித்தனர். பின்னர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிறகு கோர்ட்டில் தர்ஷனுக்கும், விஜயலட்சுமிக்கும் நீதிபதி அறிவுரை கூறினார். அதையடுத்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷன். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் தர்ஷன்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், தேவையில்லாமல் எங்களது பிரச்சினையில் நிகிதாவின் பெயர் இழுக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். இருப்பினும் நான் ஒருமுறை கூட நிகிதாதான் எனது பிரச்சினைக்குக் காரணம் என்று நான் கூறியதே இல்லை. போலீஸில் கொடுத்த புகாரிலும் கூட அதை கூறவில்லை. வேறு எந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.

எங்களது பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம். இதற்காக யார் மீதும் பழி போட நாங்கள் விரும்பவில்லை. நிகிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக நான் வருந்துகிறேன். அவரது வாழ்க்கை பெரும் சிக்கலாகி விட்டதற்காக நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு நடிக்க தடை விதித்தது குறித்து எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது என்றார்.

அதேபோல தர்ஷனும் நிகிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
 

காகா ரொம்ப 'ஸ்வீட்', சொல்கிறார் ஷாருக்கான்!!


முதன்முதலாக இந்தியாவுக்கு வந்த பாப் பாடகி லேடி காகாவை சந்தி்த்த நடிகர் ஷாருக்கான் காகா ரொம்ப ஸ்வீட் என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாப் பாடகியான லேடி காகா முதன் முதலாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் சந்தித்து பேசினார். ஷாருக்கானின் ரா ஒன் படத்தில் காகா நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்கமுடியாமல் போனது. ஷாருக் கான் காகாவை யுடிவியின் நிகழச்சி ஒன்றில் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காகா ரொம்ப ஸ்வீட். நானும், அவரும் சுமார் 2 மணி நேரம் பேசினோம். வாழ்வில் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி பேசினோம். அவர் ரொம்ப இனிமையானவர். என் மகள் சுஹானா(11) லேடி காகாவின் தீவிர ரசிகை. அவர் மூலம் தான் நானும் காகா ரசிகனானேன். காகாவின் இசையை என்னை கேட்க வைத்த எனது மகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஃபார்முலா 1 பந்தயம் பார்த்தீர்களே அது பற்றி கூறுங்கள் என்றதற்கு, அருமையாக ஒருங்கிணைத்திருந்தனர். இங்கு கார் பந்தயம் நடந்தது ஒரு சிறந்த விஷயம். அதற்காக நாம் எல்லாம் கொண்டாட வேண்டும் என்றார்.
 

மேடம் டுசாட்ஸில் அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?


லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடைய சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மொழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, கட்டியணைப்பது, முத்தமிடுவது வழக்கமாகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதிக முத்தங்கள் பெற்ற சிலைகள் பெயர் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு அதிக முத்தம் பெற்ற டாப் 10 சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டாப் 10 முத்தப் பட்டியலில் ஷாருக் கான் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிடுவதில் பெண்கள்தான் ஜாஸ்தி!

மெழுகுச் சிலைகளுக்கு முத்தம் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தானாம். அதாவது 80 சதவீதம் பேர். வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மேடம் டுசாட்ஸில் ஷாருக் கான்( 45), சல்மான் கான் (45) மற்றும் அமிதாப் பச்சன்(69) ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இதில் ரித்திக் ரோஷனுக்கு (37) தான் இளம் வயதிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டிலிருந்து சிலையாகியுள்ள ஒரு பிரபலங்களில் கரீனா கபூரும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.
 

அமிதாப் பச்சன் பாணி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய்?


நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் கூறுகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதே போன்று தமிழகத்தில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது. இதையடுத்து பல சேனல்களும் குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் அவை ஒரிஜினல் நிகழ்ச்சி அவ்வளவு பிரபலமாகவில்லை.

இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.

அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.
 

தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்


எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் என் விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி படமான லக் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சூர்யா ஜோடியாக அவர் நடித்த 7 ஆம் அறிவு தீபாவளிக்கு ரிலீஸானது. அதில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஸ்ருதி கமல் மகள் என்று நிரூபித்துவிட்டார் என்றெல்லாம் அவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் வருகின்றன.

தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்து வருகிறார். கையில் 2 தெலுங்கு படங்களும் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி தனது தந்தை கமல் பற்றி கூறியதாவது,

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் எந்த விஷயமானாலும் சரி நான் சுயமாக முடுவு எடுக்கிறேன். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். பண வசதி இருப்பதால் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை தெரிந்து வைத்துள்ளேன்.

நடிப்பு, இசை, எழுத்து ஆகிய 3 விஷயங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுகிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன். ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். எனக்கு நானே வழிகாட்டி. சில விஷயங்களில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பேன். ஆனால் நான் தான் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
 

காதலியை மணந்தார் பி.வாசு மகன்: ரஜினி, கமல், விஜயகாந்த், கருணாநிதி, வாழ்த்து


பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை இன்று மணந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த் (எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

ஷக்தி சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகளான ஸ்மிருதியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வழக்கமான பெற்றோர்கள் போன்று விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல் வாசுவும், முரளியும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டிவிட்டனர். முரளி பி. வாசுவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இன்று காலை இவர்கள் திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினிகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாகிய பின்னர் அவரும், கமல்ஹாசனும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி- கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்


பிரபல நடிகை மனோரமா தலையில் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரி்த்தார். இதேபோல திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

பழம்பெரும் நடிகையான மனோரமா, சமீபத்தில் தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதனால் அவரது தலையில் அடிபட்டு விட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

அப்போது தலையில் ரத்தக் கசிவும், உறைவும் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அகற்ற நாளை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவர் கோமாவில் இல்லை என்றும் நல்ல நினைவுடன் நலமுடன் உள்ளதாக அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து மனோரமாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல நடிகை அனுஷ்காவும் நேரில் வந்து நலம் விசாரித்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்துள்ளனர்.

மனோரமாவின் உடல் நலம் குறித்து மகன் பூபதி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு நாள்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.