''எல்லாரு சென்னாகிதீரா..?''-பெங்களூரில் அசத்திய விஜய்!


வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.

மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,

எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.

எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.

விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.
 

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?


குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.

விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?
 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட்டுப் போடவில்லை!


சென்னை : மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.

ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.

அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர்.
 

'6' படத்துக்காக ஒத்திகை பார்த்த பூனம் கவுர் - ஷாம்!!


ஷுட்டிங் ஸ்பாட்டுக்குப் போன பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள், எக்ஸ்ட்ரா செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும் அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இந்த ட்ரெண்ட் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது ஷாம் நடிக்கும் புதிய படமான '6.' உண்மையில் இந்தப் படத்துக்குத் தலைப்பே கிடையாது. 6 மெழுகுவர்த்திகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு six Candles Symbol தான் இந்தப் படத்துக்கு தலைப்பு.

படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் நகரியில் நடக்கிறது. இதற்கான 'வொர்க்ஷாப்'தான் சென்னையில் 10 நாட்கள் நடந்தது. இதில் ஹீரோ ஷாம், நாயகி பூனம் கவுர், படத்தில் முக்கிய வேடத்தில் வரும் குழந்தை உள்பட அனைவரும் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர்.

இதுகுறித்து நடிகர் ஷாம் கூறுகையில், "படப்பிடிப்புக்கு முந்தைய ஒத்திகை உண்மையிலேயே மிகவும பயனுள்ளதாக இருந்தது. இனி ஷாட் போகும்போது, குறைந்தபட்ச நேரத்தில் குறித்த தேதிக்குள் வேலை முடிந்துவிடும் பாருங்கள்," என்றார்.

ஒத்திகை அனுபவம் குறித்து நாயகி பூனம் கவுர் கூறுகையில், "ரிகர்சல் பார்த்துவிட்டு ஷூட்டிங் போவது இதுதான் எனக்கு முதல் அனுபவம். உண்மையிலேயே இது வேறு உலகத்தைக் காட்டுவதாக இருந்தது. ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட கஷ்டமான காட்சியாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது," என்றார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் படமாகும் '6' படத்தை வி இஸட் துரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.

6 வருடம், 6 மாதம், 6 வாரம், 6 நாட்கள், 6 மணி நேரம், 6 நிமிடம், 6 நொடிகளில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக 25 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் ஷாம். அதுவும் ஏதோ கண்மூடித்தனமாக அல்ல... ஒரு தனி மருத்துவக் குழுவின் உதவியுடன் படிப்படியாக தன் எடையைக் குறைத்துள்ளார்!
 

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?


குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.

விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?

ரெடி ஜூட்!
 

டல்லாஸ் இசை நிகழ்ச்சி மூலம் சென்னை உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதியுதவி


டல்லஸ்: 'சென்னை உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதியுதவி செய்வதற்காக அமெரிக்காவில் 'ஹார்மொனி அன் லிமிட்டெட்' இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஹரியுடன் நான்' (ஜெயா டிவி) புகழ் 'ஹார்மொனி அன்லிமிட்டெட்' குழுவினரின் இந்த கச்சேரியை நடத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரவாரத்துடன் ஆரம்பமான இன்னிசை மழை, மணிக்கு அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் இரவு 7 மணி வரை நடந்தது.

750 இருக்கைகள் கொண்ட க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்திற்கு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விற்று விட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் பிறந்த சிறுவர் சிறுமிகள் சரியான உச்சரிப்போடு தெள்ளத் தெளிவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பார்வையாளார்களைப் பரவசப்படுத்தியது.

திரை இசை கலைஞர்கள் மணி, நவீன் மற்றும் வெங்கட் இசையமைப்பில், ஹரியுடன் நான் புகழ் ரவிசங்கர், கோபால கிருஷ்ணன், நிரஞ்சன், லஷ்மி, பார்கவி, சரண்யா பாடல்களை பாடினர்.

டிக்கெட்டுகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பாக 43 ஆயிரம் டாலருக்கான காசோலையை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பில் ராமன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு அவர்கள், யு.எஸ். உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி டாக்டர். பத்மினியிடம் வழங்கினார்கள்.

முன்னதாக உதவும் கரங்கள் அமைப்பின் சேவையை விவரிக்கும் ஒலி ஒளி காட்சியும், சென்னையில் இரண்டு மாதம் தங்கியிருந்து சேவை செய்து வந்த செல்வி ரம்யாவின் உரையும் பார்வையாளர்களின் நெஞ்சை உருக்கியது.

டல்லாஸ் தமிழ் நேரம் ரேடியோவின் ஹேமா மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இந்த இசைக்கச்சேரி அமைந்திருந்த்து.

நிகழ்சிக்கான ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன், மெட்ரோப்லக்ஸ் தமிழ் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தார்கள்.

தகவல்: ஆர் தினகர்,
புகைப்படம்: முத்துக்குமார் ராமலிங்கம்
 

சண்டையெல்லாம் இல்லை... ஒண்ணா சந்தோஷமா இருக்கோம்! - நயன்தாரா


எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அது தீயாகப் பற்றிக் கொண்டது.

முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து, நயன் - பிரபுதேவா சண்டை உண்மைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் இன்று இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.

அவர் கூறுகையில், "எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பதே உண்மை. திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம்," என்றார்.

திருமண ஏற்பாடுகள் ஜோர்

பிரபு தேவா - நயன்தாரா திருமணத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் நடப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
 

பில்லா 2 ஷூட்டிங்- ரவுடிகளுடன் சண்டைபோடுகையில் அஜீத்துக்கு காயம்


ரவுடிகளை பாட்டில்களைக் கொண்டு அடித்து நொறுக்கும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜீத் குமாருக்கு காயம் ஏற்பட்டது.

அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சண்டை காட்சியொன்றை படமாக்கினர். அப்போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது,

பில்லா 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் குமார் ரவுடிகளை ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. ரவுடிகளை அஜீத் பாட்டில்களால் அடிக்க வேண்டும். அதற்காக அவர் கையில் பாட்டில்கள் வைத்திருந்தார். அதை ரவுடிகள் மீது அடித்து உடைப்பது போன்று காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது பாட்டில் உடைந்து சிதறியதில் அஜீத் கையி்ல கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் வந்தது. உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுத்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு அஜீத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றார்.
 

பழனி மலையில் ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், மஞ்சு பார்கவி!


வேண்டுதலை நிறைவேற்ற பொதுவாக பழனி மலைக்கு போய் மொட்டை போட்டுக் கொள்வார்கள். இந்த வகையில் ஒரு மெகா சீரியல் வெற்றிகரமாகப் போவதைக் கொண்டாட அந்தக் குழுவே பழனிக்குப் போய் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளது.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தங்கம் மெகாத்தொடர் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடவும், டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலும் தங்கள் தொடரை முதல் இடத்தில் வைத்திருக்கும் 'பழனிமலை முருகனுக்கு' நன்றி சொல்லும் விதமாகவும், தங்கம் குடும்பத்தை சேர்ந்த ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், சீமா, மஞ்சு பார்கவி, ஜிகே, அனுராதா, காவேரி, வர்ஷா, மற்றும் பலர் ஒன்று கூடி கடந்த வாரம் பழனிக்கு சென்று சுப்ரமணிசுவாமியை தரிசித்து வந்தனர்.

இதை பற்றி இணை தயாரிப்பாளர் வினயா கிருஷ்ணன் கூறுகையில், "நாங்கள் இந்த இரண்டு வருடங்களில் ஒரு கூட்டு குடும்பமாகவே ஆகிவிட்டோம். ஆகவேதான் எங்கள் குடும்பத்துடன் பழனிக்கு சென்று வந்தோம். சீரியல் குடும்பத்தில் என்ன பகை நடந்தாலும் நிஜமான நிகழ்வில் அந்த பகைக்கு இடமில்லை. எப்போதும் எங்கள் குழுவினரிடம் ‘ஒற்றுமை’, ‘நிம்மதி’, 'சந்தோஷ'ந்தான் பிரதிபளிக்கும். தங்கம் தொடருக்காக ஒவ்வொருவரின் தனிபட்ட ஈடுபாடும் உழைப்பும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுகிறது. அது தான் ‘தங்கம்’ குடும்பத்தின் பலம்", என்கிறார் வினயா கிருஷ்ணன்.

ஒற்றுமை, நிம்மதி, சந்தோஷம்.... ம்ம்... அடுத்தடுத்த மெகா சீரியல்களுக்கான தலைப்பு ரெடி போலிருக்கே!
 

வேட்பாளர் பட்டியலில் நடிகர் செந்தில் 'மிஸ்ஸிங்'... ஏமாற்றத்துடன் திரும்பினார்!


சென்னை: அதிமுகவின் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவரான செந்தில் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அதிமுகவின் நட்சத்திப் பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.

இன்று காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்றிருந்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் புத்தகம் முழுக்க அலசி தேடிப்பார்த்தார்கள். ஆனால் பெயர் இல்லை. ஒரு வேளை பக்கத்து வாக்கு சாவடியில் பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனால் செந்தில் பாரதிதாசன் தெரு வாக்கு சாவடிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவரது பெயர் இல்லை.

2 மணிநேர அலைக்கழிப்புக்கு பிறகு நடிகர் செந்தில் ஓட்டுபோட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதுபற்றி நடிகர் செந்தில் கூறுகையில், "நான் முதல்வர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டுவிட்டுச் செல்ல வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லை.

இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். இதனால் எனது குடும்பத்தின் 5 ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது," என்றார்.

அதிமுக ஆட்சியில்தானே உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்காளர்கள் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டன... நீக்கப்பட்டன. செந்தில் யாரை குற்றம் சொல்லப் போகிறார்?
 

குண்டூரில் நடிகை சாவித்திரிக்கு வெண்கல சிலை!


தமிழ் - தெலுங்கு சினிமா நடிகைகளில் சாதனையாளராகக் கருதப்படும் சாவித்ரிக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது. சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.

ராதிகாவுக்கு சாவித்ரி விருது

கலாதர்பார் கலாசார அமைப்பின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சாவித்திரி பெயரில் வழங்கப்படும் விருதுக்கு இந்த ஆண்டு நடிகை ராதிகா தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்.

விழாவில் ராதிகாவுக்கு, சாவித்திரி விருதை கிருஷ்ணம் ராஜு வழங்கினார்.

நடிகை வாணிஸ்ரீ, சாவித்ரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வர், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.