ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் கோச்சடையான்... அவதார் ஸ்டைலில் 3 டி படம்!


ராணா படம் இப்போதைக்கு இல்லை என்பதை ஒருவழியா ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
 

மஸ்கட்டில் தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!


பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குகிறது மஸ்கட் தமிழ்ச் சங்கம்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சாதகப் பறவைகள் சங்கர் குழுவினர் நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சியில் தேவா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பங்கேற்றுப் பாடுகிறார்கள். இவர்களுடன் கார்த்திக், சுசித்ரா, சைந்தவி உள்பட பிரபல பாடகர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத திரைப்பாடல்களை இந்த மேடையில் பாடுகிறார்கள்.

8000 ரசிகர்கள் அமரும் பிரமாண்ட அரங்கில் இந்த விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
 

பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்


ஊட்டி: சென்னை நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்பத்தினரை ஆபாசமாக விமர்சித்தும் பேசிய வழக்கில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஊட்டி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து ஒரு செய்தி வந்தது. அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். இந்த செய்தியைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது திமுக அரசின் உத்தரவின் பேரில் அதி வேகமாக செயல்பட்ட போலீஸார், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. ரஜினிகாந்த் முன்னிலையி்ல் நடந்த இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகக் கேவலமாக நடிகர்கள் பலர் பேசினர். குறிப்பாக சிரிப்பு நடிகர் விவேக்கின் ஆபாசப் பேச்சு பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கொதிக்க வைத்தது.

பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் என்று சூர்யா விமர்சித்தார். இப்படி ஒவ்வொருவரும் ஆபாசமாக பேசினர். சத்யராஜின் பேச்சும் வக்கிரமாகவே இருந்தது.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் வருகிற டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ரொசாரியோவின் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே அவர்கள் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.

இந்த சம்மன் உத்தரவின் மூலம் கிடப்பில் போடப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
 

நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார்- போலீஸ் விசாரணை


சென்னை: பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உரிய கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பிறகும், கூடுதலாக 25 லட்சம் ரூபாய் கேட்டு சித்ரவதை செய்வதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி ஏற்றுமதியாளர் ஷேக் மதார் கந்து வட்டி புகார் கொடுத்துள்ளார். 30 லட்சம் ரூபாய் கடனுக்கு அசல், வட்டியோடு ரூ.32 லட்சம் தந்தபிறகும் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரூ.25 லட்சம் கேட்டு மன்சூர் அலிகான் தம்மை சித்தரவதை செய்தார் என்றும் அவர் அவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சூர் அலிகான், தம்மிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தராமல் தப்பிக்கவே ஷேக் மதார் தவறான புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். பண விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து ஷேக் மாதரை ஏற்கனவே அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

'படு அபாயகரமான' பிரபலம் காத்ரீனா கைப்!


இணையதளத்தில் மிகவும் அபாயகரான பிரபலமாக காத்ரீனா கைப் விளங்குகிறாராம். எதற்காக இந்த பெயர் அவருக்குக் கிடைத்திருக்கிறது தெரியுமா? காத்ரீனா பெயரை பயன்படுத்திதான் பலரும் கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பி வருகின்றனராம்.

பல கோடி ரசிகர்களின் இதயம் கவர்ந்த கன்னியாக அதாவது நடிகையாக திகழ்கிறார் காத்ரீனா கைப். ஆனால் அவரது பெயரைப் பயன்படுத்தி ஏகப்பட்ட வைரஸ்களை அனுப்பி பல கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகிறார்களாம் விஷமிகள்.

கம்ப்யூட்டர் வைரஸ்களைப் பரப்புவோரின் விருப்பப் பெயராக காத்ரீனா கைபின் பெயர் இருக்கிறதாம்.

2011ம் ஆண்டில் அதிக அளவில் வைரஸ்களைப் பரப்ப பயன்படுத்தப்பட் பெயராக காத்ரீனாவின் பெயர் உருவெடுத்துள்ளதாக பிரபல வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் நிறுவனமான மெக்காபி தெரிவித்துள்ளது.

பிரபலமான நடிகைகளின் சூடான படங்கள், இலவச டவன்லோடுகள், ஸ்கிரீன் சேவர்கள், வீடியோ ஆகியவற்றைத் தேடுவோர் அதிகம் உள்ளதால், அதை பயன்படுத்திக் கொண்டு காத்ரீனாவின் கலக்கல் படங்கள், கிளுகிளுப்பு வீடியோக்கள் என்ற பெயரில் வைரஸ்களை நுழைத்து விடுகிறார்களாம் இந்த சைபர் கிரிமினல்கள்.

வைரஸ்களை அனுப்பப் பயன்படும் பிரபலங்களின் பெயர்கள் வரிசையில் காத்ரீனா முதலிடத்தில் இருக்கிறதாம். அடுத்து தீபிகா படுகோன், கரீனா கபூர் ஆகியோர் உள்ளனர்.

மேலும் சைப் அலிகான், ஜான் ஆப்ரகாம், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், பிபாஷா பாசு, ஆமிர்கான், ஷாருக் கான் ஆகியோரது பெயர்களிலும் ஏகப்பட்ட வைரஸ்களைப் பரப்புகின்றனராம்.

இதுதான் அழகிய ஆபத்து என்பதா ...?
 

'டேம்999' இன்று துபாயில் ரிலீஸ்: அது என்ன '999'?


துபாய்: பிரச்சனைக்குரிய டேம்999 திரைப்படம் இன்று ஐக்கிய அரபு நாடுகளில் ரிலீஸ் ஆகிறது.

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான சோகன் ராய் இப்போது ஐக்கிய அரபு நாடுகளில் தான் வசித்து வருகிறார். இந்தப் படத்தை Biz TV Network FZE நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ. 45 கோடியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தை நாளை இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையிடவும் சோகன் ராய் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் விமலா ராமன், மேகா பர்மன், ரஜத் கபூர், ஆஷிஷ் வித்யார்த்தி, கேரி ரிச்சர்ட்சன், வினய் ராய், தம்பி ஆன்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த அணைக்கு தமிழகத்திடம் 999 ஆண்டு கால உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிக்கவே டேம்999 என்ற பெயரை சூட்டியுள்ளார் அறிவாளி சோகன் ராய். கேட்டால், இது முல்லைப் பெரியாறு அணையைக் குறிக்கவில்லை. இது எல்லா அணையையும் குறிக்கும் என்று வியாக்கியானம் பேசி வருகிறார்.
 

மருத்துவமனையில் நடிகர் எஸ்எஸ்ஆர் அனுமதி


சென்னை: எஸ்எஸ் ஆர் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால், அவரது முதுகு தண்டில் அடிபட்டிருந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றபின் குணமடைந்தார்.

இந்நிலையில் அவருடைய முதுகு தண்டில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதையொட்டி, இன்று சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகு எலும்பு தேய்ந்திருப்பதால், அதனை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்த மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர் எஸ்எஸ்ஆர். தீவிர அரசியலில் பங்கெடுத்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
 

விஜய் படத்துக்கு தலைப்பு 'துப்பாக்கி'... ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி!


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர். அப்போதே ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ 12 கோடி என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பின்னர் இந்த சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு தரப்பில் யோசித்ததால், இழுபறி நீடித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறியதால், முருகதாஸ் சம்பளத்துக்கு பிரச்சினை இல்லாமல் போனது. விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகவில்லை.

படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை. இந்த அளவுக்கு அவரது படம் பிஸினஸ் ஆகுமா என்ற கேள்வி இருப்பதால், விநியோகஸ்தர்கள் மலைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது.
 

பெங்களூரில் ராணா ரகசிய ஷூட்டிங்கா... சௌந்தர்யா மறுப்பு!


'ரஜினியின் ராணா படப்பிடிப்பு பெங்களூரில் ரகசியமாகத் தொடங்கிவிட்டது' என்று கடந்த வாரம் முழுக்க செய்திகளுக்கு இப்போது மறுப்புத் தெரிவித்துள்ளார் ரஜினி மகள் சௌந்தர்யா.

சில தினங்களுக்கு பெங்களூர் நைஸ் ரோடில் ராணா படப்பிடிப்பு தொடங்கி விட்டதென்றும், ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் படமாக்கினார் என்றும் முன்னணி தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

படத்தின் தொழில்நுட்ப இயக்கநரும் இணை தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி, இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "அப்பா பெங்களூர் போனது உண்மைதான். ஆனால் ராணா படப்பிடிப்பில் பங்கேற்றார் என்பது அடிப்படையில்லாத செய்தி. வெறும் வதந்தி. ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து அப்பாவே அறிவிப்பு வெளியிடுவார்," என்றார்.
 

அந்தக் கண்ணு மாதிரியா இந்தக் கண்ணு இருக்கு?


நடிகை பிந்து மாதவியின் கண்களைப் பார்த்தால் அப்படியே சில்க் ஸ்மிதாவின் கண் மாதிரியே இருக்கு. சில்க்கை உரித்து வைத்ததைப் போலவே இருக்கிறார் பிந்து மாதவி என்று நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் மாய்ந்து மாய்ந்து பாராட்டித் தள்ளியுள்ளனர்.

கிருஷ்ணா, பிந்துமாதவி இணைந்து நடித்துள்ள படம் கழுகு. இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று காலை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் ஷோபா பேசும்போது, இப்படத்தின் பாடல் காட்சிகளைப் பார்த்தபோது பிந்து மாதவி அப்படியே சில்க்கைப் போலவே இருக்கிறார் என்று எனது கணவரிடம் கூறினேன். இருவருக்கும் நிறைய உருவ ஒற்றுமை இருக்கிறது என்றார்.

மறுபக்கம் பேசிய ஆர்.கே.செல்வமணியோ, பிந்து மாதவி அப்படியே சில்க்கின் ஜெராக்ஸ் போல இருக்கிறார். சில்க்கின் கண்களைப் போலவே பிந்துவின் கண்களும் ஈர்ப்புடையதாக உள்ளது என்றார்.

இதைக் கேட்டு பிந்து மாதவிக்கு ஒரே நெகிழ்ச்சியாகி விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், சில்க் ஸ்மிதா மிகப் பெரிய நடிகை, அழகான நடிகை, நல்ல நடனம் ஆடக் கூடியவர். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசியது பெருமையாக உள்ளது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாக்கப்பட்டால் நான் நிச்சயம் சில்க் வேடத்தில் நடிப்பேன் என்றார் அவர்.
 

அந்தக் கண்ணு மாதிரியா இந்தக் கண்ணு இருக்கு?


நடிகை பிந்து மாதவியின் கண்களைப் பார்த்தால் அப்படியே சில்க் ஸ்மிதாவின் கண் மாதிரியே இருக்கு. சில்க்கை உரித்து வைத்ததைப் போலவே இருக்கிறார் பிந்து மாதவி என்று நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் மாய்ந்து மாய்ந்து பாராட்டித் தள்ளியுள்ளனர்.

கிருஷ்ணா, பிந்துமாதவி இணைந்து நடித்துள்ள படம் கழுகு. இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று காலை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் ஷோபா பேசும்போது, இப்படத்தின் பாடல் காட்சிகளைப் பார்த்தபோது பிந்து மாதவி அப்படியே சில்க்கைப் போலவே இருக்கிறார் என்று எனது கணவரிடம் கூறினேன். இருவருக்கும் நிறைய உருவ ஒற்றுமை இருக்கிறது என்றார்.

மறுபக்கம் பேசிய ஆர்.கே.செல்வமணியோ, பிந்து மாதவி அப்படியே சில்க்கின் ஜெராக்ஸ் போல இருக்கிறார். சில்க்கின் கண்களைப் போலவே பிந்துவின் கண்களும் ஈர்ப்புடையதாக உள்ளது என்றார்.

இதைக் கேட்டு பிந்து மாதவிக்கு ஒரே நெகிழ்ச்சியாகி விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், சில்க் ஸ்மிதா மிகப் பெரிய நடிகை, அழகான நடிகை, நல்ல நடனம் ஆடக் கூடியவர். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசியது பெருமையாக உள்ளது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாக்கப்பட்டால் நான் நிச்சயம் சில்க் வேடத்தில் நடிப்பேன் என்றார் அவர்.
 

கணவனைப் பிரிந்த மனைவி்யின் கஷ்டம் புரிகிறது! - நயன்தாரா


தெலுங்குப் படமான ஸ்ரீராமராஜ்யத்தில் சீதையாக நடித்ததால், கணவனைப் பிரிந்த மனைவியின் சோகம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார்.

இந்தப் பட அனுபவம் தன்னை மனதளவில் பெரிய மாற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாக நயன்தாரா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தை எனது பிறந்த நாளான கடந்த 18-ந்தேதி பார்த்தேன். இந்த படம் எனது சிறந்த பிறந்தநாள் பரிசு. சீதை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னால் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அஞ்சலி தேவி போன்ற நடிகைகள் செய்யவேண்டிய வேடம் அது.

அதில் இயக்குனர் எனது ஸ்டைலில் சுதந்திரமாக நடிக்க வைத்தார். சில நாட்களிலேயே கேரக்டரில் ஒன்றினேன். விரதம் இருந்தேன். சீதையாகவே வாழ்ந்தேன். அப்போதுதான் கணவனை இழந்த மனைவியின் வலியை, கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது.

படத்தில் பர்ணசாலை காட்சிகளைத்தான் முதலில் படமாக்கினார்கள். அதனால் நான் முழுமையாக சைவத்துக்கு மாறினேன். தினமும் கோவிலுக்கு சென்றேன். பூஜைகள் செய்தேன். இந்த படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணாதான் முக்கிய காரணம். அவர்தான் என்னை பரிந்துரை செய்தார்.

அவருடன் ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை தந்ததற்காக மனப்பூர்வமான நன்றி," என்றார்.