ரசிகர்களுக்கு போரடிக்கும்போது நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் 3/4/2011 10:33:09 AM
ரசிகர்களுக்கு போரடிக்கும்போது நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மோசர்பேர் தனஞ்செயன் எழுதிய, 'தி பெஸ்ட் ஆஃப் தமிழ் சினிமா' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. நூலை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது: இன்னும் பாதுகாக்கப்பட வேண்டிய சினிமா வரலாறு நிறைய இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் வரலாற்றையும், புராணத்தையும் குழப்பிக் கொள்கிறோம். வரலாறு படிக்கும்போது பாதியில் கடவுள் வந்து விடுகிறார். இப்போது நிறைய மனித கடவுள்கள் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இப்படியே அவர்கள் பெருகி கடைசியில் கும்பிட ஆள் இல்லாமல் போய்விட வேண்டும்.
நான் இன்னும் சினிமாவில் மாணவனாகத்தான் இருக்கிறேன். நான் நன்றாக நடிப்பதில் ஆச்சர்யமில்லை. காரணம் நான் கண் விழித்ததே சினிமாவில்தான். புலவர்கள் மன்னர்களை நம்பியிருந்தார்கள். நடிகர்கள் மக்களை நம்பி இருக்கிறார்கள். என்ன செய்யக்கூடாது என்பதை கடந்த காலத்தை வைத்து தெரிந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்காலத்தை வைத்து கணிக்க வேண்டும். நல்ல சினிமாவை பாராட்ட வேண்டும். நன்றாக இல்லாத சினிமாவை நன்றாக இல்லை என்று சொல்லும் தைரியம் வேண்டும்.
நடிகனுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காக அவனை சுற்றி போடப்படும் விளக்குகள், அவன் கண்களை குருடாக்கி விடக்கூடாது. ரசிகர்களுக்கு தெரியும், நாம் எதுவரை நடிக்க வேண்டும் என்று. அவர்களுக்கு போரடிக்கும்போது நடிப்பதை நிறுத்தி விட வேண்டும். தனி மனிதனுக்கு தேவைப்படும் ஒழுக்கத்தைபோல கலைக்கும் ஒழுக்கம் தேவை. எனது மதிப்புமிக்க இயக்குனர்கள்கூட சில நேரம் என்னிடம், 'ஏன் குப்பை படத்திலெல்லாம் நடிக்கிறாய்?' என்பார்கள். என்னிடம் நல்ல விதை இருக்கிறது. அது கெட்டுப்போகாமல் எந்த உரத்தில் போட்டும், என்னால் பயிர் செய்ய முடியும். அந்த பயிரில் புதர் மண்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில், இயக்குனர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், கே.பாக்யராஜ், மிஷ்கின், சசி, சேரன், கரு.பழனியப்பன், பார்த்திபன், வசந்த், தங்கர் பச்சான், செல்வராகவன், சிவகுமார் உட்பட பலர் பேசினர். வெளியீட்டாளர் ஷக்தி கிரிஷ் வரவேற்றார். நூலாசிரியர் தனஞ்செயன் நன்றி கூறினார்.