தெய்வீக குரலுக்கு ஆண்டு 50 – கே.ஜே. யேசுதாஸ் சாதனை


கர்நாடக இசை மேதையும் பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது.

எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ அந்த நிமிடங்களில் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அனுபவத்தைப் பெறுகிறோம். மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே. எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தம். அந்நிய மொழிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தெய்வீக குரலுடைய கே.ஜே. யேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்து பாடல்களுமே கேட்கக் கேட்க திகட்டாதவை.

50 ஆண்டுகள் சாதனை

கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.

விருதுக்கு விருது

தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார்.

இவரது புகழினை பரப்பும் வகையில் இவரது இளையமகன் விஜய் யேசுதாஸ் புகழ்பெற்ற பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.
 

ரோட்டில் 'உச்சா' அடித்து போலீசிடம் சி்க்கிய ரன்பிர் கபூர்!


பிரபல இந்தி நடிகர் ரன்பிர் கபூர் ரோட்டோரமாக 'உச்சா' போகையில் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தாங்கள் செய்தது தவறேயானாலும் அது சரிதான் என்று வாதாடுபவர்களுக்கு மத்தியில் தான் செய்த தவறைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய ரன்பிர் கபூர் தான் தவறு செய்து போலீசில் சிக்கியது பற்றி தெரிவி்ததார்.

அதன் விவரம் வருமாறு,

ரன்பிர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கர்கட்டில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். நீண்ட தூரம் பயணம் செய்த அவருக்கு அவசரமாக 'உச்சா' வந்துள்ளது. உடனே காரை நிறுத்திவிட்டு ரோட்டோரமாக உச்சா அடித்துள்ளார். அந்நேரம் பார்த்து நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசார் அங்கு வந்துள்ளனர். ரன்பிரைப் பார்த்து என்ன சார் இது. பெரிய ஸ்டாரா இருந்துக்கிட்டு இப்படி செய்கிறீர்களே என்று கேட்டுள்ளனர். (ஸ்டாரா இருந்தாலும் வந்தா போய்த்தானே ஆகணும்!)

உடனே ரன்பிர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் ரன்பிரை விட்டுவிட்டனர். இதை ரன்பிர் கபூரே தன் வாயால் தெரிவித்துள்ளார்.

பரவாயில்லை, தான் அசிங்கப்பட்டதைக் கூட மறைக்காமல் சொல்லியிருக்கிறார் ரன்பிர்!.
 

அவள் - மெகா தொடரில் லட்சுமி ராமகிருஷ்ணன்!


அவள் என்ற புதிய மெகா தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் அழகான இளம் அம்மா வேடமா... கூப்பிடுங்க லட்சுமி ராமகிருஷ்ணனை எனும் அளவுக்கு, அவர் ரொம்ப பிஸி.

இளம் நடிகை மகாலட்சுமி அமலா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். சஞ்சீவ், மணிகண்டன், சங்கீத் பாலன், ஏஆர்எஸ், சிவன் ஸ்ரீனிவாஸ், ஸ்ரீகலா, சாய்ராம் உள்பட பலரும் இந்தத் தொடரில் நடிக்கிறார்கள்.

ஜி ஜெயகுமார் இந்தத் தொடரை எழுதி இயக்குகிறார். எபிசோட் இயக்குநராக யு வள்ளிமுத்து பொறுப்பேற்றுள்ளார். ஒளிப்பதிவு மார்ட்டின் ஜோ, டிவி அனில்.

பெற்றவர்களால் அநாதையாக்கப்பட்ட ஒரு பெண், தன்னை வளர்த்த குடும்பத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதுதான் இந்தத் தொடரின் கதை. பெற்ற தாயே மகளுக்கு வில்லியாக மாறி துரத்துகிறார். ஆனால் இந்த தாய் - மகள் உறவே இருவருக்கும் தெரியாததால் இந்தத் துரத்தல் தொடர்கிறது. உண்மை தெரிய வந்ததா என்பதுதான் கிளைமாக்ஸ்.

விஜய்டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.
 

'புளூ பிலிம்ஸ்' என் அரிய பொக்கிஷம்: ராம் கோபால் வர்மா!


புளூ பிலிம்ஸ் தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம்: 'சர்ச்சை மன்னன்' ராம் கோபால் வர்மா

சர்ச்சையின் மறுபெயர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாங்கள் ஒன்றும் சும்மா அப்படி சொல்லவில்லை. காரணம் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அழகு என்று பாடுவார் நக்மா. அதற்கு மாறாக இயக்குனர் ராம் கோபால் வர்மா நின்றால், பேசினால், படம் எடுத்தால் சர்ச்சை தான்.

அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

என்ன தான் சினிமாத் துறையே அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்தாலும் மனுஷன் மசிவதாக இல்லை. நீங்கள் பேசுவதைப் பேசுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்கிறார்.

நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜிரணித்தாகத் தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன் என்றார்.

பிறர் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தான் அவர்களுக்கு கடுப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
 

மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.


மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.

அலை படத்தில் முதல்முறையாக சிம்புவும் த்ரிஷாவும் நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது.

நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு. இந்த வயது வித்தியாசமே இந்த ஜோடியின் சிறப்பாக சிலர் கூறுகின்றனர். எனவே இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.

த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்றார்.
 

விஜய் வெளியிடும் 'உருமி' இசை!


மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ள உருமி படத்தின் தமிழ் வடிவ இசையை நாளை வெளியிடுகிறார் நடிகர் விஜய்.

பிருத்விராஜ் பிரபு தேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன் நடிக்கும் படம் உருமி. மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் தமிழ் வடிவம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் குறித்து ஜெனிலியா கூறுகையில், "நான் நடித்த படங்களில் மிக வித்தியாசமானது, புதிய அனுபவத்தைத் தந்தது உருமி. சரித்திரக் கதையில் நடிப்பது சாதாரணமானதல்ல என்பதை இந்தப் படத்தில் புரிந்து கொண்டேன். அற்புதமாக வந்துள்ளது," என்றார்.

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. பல்வேறு படவிழாக்களிலும் பங்கேற்று வருகிறது. தீபக் தேவ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

உருமி தமிழ் படத்தின் பாடல்கள் நாளை சத்யம் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உருமி.
 

பில்லா -2: அஜீத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால்!


பில்லா 2 படத்தில், அஜீத்துக்கு வில்லனாக நடிக்கிறார் வித்யூத் ஜம்வால். பாலிவுட்டில் வளரும் நடிகராகத் திகழும் வித்யூத்துக்கு தமிழில் இதுதான் அறிமுகப் படம்.

பில்லா 2-ல் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார். ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத்.

களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மாடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார். இவர் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் கூட.

இந்தியில், போர்ஸ் படத்தில், வித்யூத்தின், அசத்தலான நடிப்பு அவரை தமிழுக்கு வர வழைத்திருக்கிறது. இந்தி மட்டுமின்றி தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் சக்தி மற்றும் ஒசரவல்லி போன்ற படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுவும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் வித்யூத்.

பில்லா-2 முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் 30நாட்களும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 40 நாட்களும் முடிந்து, தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது!
 

சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கணும்! - டாப்ஸி


ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன், என்கிறார் நடிகை டாப்ஸி.

ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து டாப்ஸியிடம் கேட்டபோது, "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது.

ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும்.

சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள்.

திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை.

என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன்," என்றார்.

ஆக, கல்யாண ஆசை வந்துருச்சி!
 

சினிமாவில் பிரகாஷ் ராஜ் உயிர் பிழைப்பது போல ராஜசெகர ரெட்டி வர வேண்டும்-விஜய நிர்மலா


தூக்குடு படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கோமாவில் விழுந்து 20 ஆண்டுகளுக்குப் பின் பிழைத்து வந்து எதிரிகளைப் பந்தாடுவது போல ராஜசேகர ரெட்டியும் பிழைத்து வந்து தனது எதிரிகளைப் பந்தாட வேண்டும் என்று பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா கூறியுள்ளார்.

எலந்தப் பழம் பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் விஜய நிர்மலா. இவர் ஹைதராபாத்தில் நடந்த பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தூக்குடு படத்தின் 50வது நாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. படத்தில் மகேஷ்பாபு தந்தையாக நடித்துள்ள பிரகாஷ்ராஜை வில்லன்கள் அடித்து தூக்கி வீசுவார்கள். காட்டுவாசிகள் அவரை காப்பாற்றுவார்கள். 20 ஆண்டு கோமாவில் இருந்து மீண்டு எதிரிகளை பழி வாங்குவார்.

அதேபோல ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராஜசேகரரெட்டி மீண்டும் உயிரோடு வரமாட்டாரா? என்ற ஆசை எனக்கு எழுந்தது. அவரை ஆந்திர மக்கள் மறக்கவில்லை. அவரின் பல நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.

இப்போது ஆந்திரா பல சோதனைகளை சந்தித்து வருகிறது. அதில் இருந்து ஆந்திர மக்களை காப்பாற்ற ராஜசேகரரெட்டி உயிருடன் எழுந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனது ஆசை பேராசையாக இருந்தாலும் சினிமாவில் வருவதுபோல அப்படி நடக்கக்கூடாதா? என நினைக்கிறேன் என்றார் விஜய நிர்மலா.

மகேஷ் பாபு பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். விஜய நிர்மலா, கிருஷ்ணாவின் 2வது மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிரசவத்துக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்!


மும்பை: பிரசவத்துக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்.

அவருக்கு வரும் வியாழன் கிழமைக்குள் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ன குழந்தை பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாடெங்கும் உள்ள ரசிகர்களிடம் நிலவுகிறது.

ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 11-11-11 அபூர்வ தினத்தன்று குழந்தை பிறக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பல கோடிக்கு பெட் கட்டி ஏமாந்தனர் நிறைய பேர்.

இந்த சூதாட்டத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் பணம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் மும்பை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள 5-வது மாடியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மாடியில் உள்ள எல்லா அறைகளையும் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராயை இன்று காலை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக திருப்தி தெரிவித்தனர். 17-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர்.
 

நான் ஒருவகையில் சுயநலவாதி: கமல்


நான் ஒரு வகையில் சுயநலவாதி என்று நடிகர் கமல்ஹாசன் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தெரிவி்ததுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தமின் ‘இலக்கியச் சாரல்', ‘ஜெயிக்கப்போவது நீதான்', ‘மேடைப் பயணங்கள்', ‘சந்தித்ததும் சிந்தித்ததும்', ‘சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்' ஆகிய 5 நூல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் புத்தகங்களை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

நான் ஒரு வகையில் சுயநலவாதி தான். எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. கற்றறிந்தவர்கள், ஞானம் உள்ளவர்களுடன் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சுயநலம். நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். அவரிடம் நான் பல அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து நண்பர்களாகிவிட்ட நாங்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம. சந்திக்க முடியவில்லையா தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசுவோம்.

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அது தெரிந்தால் நீ பெரிய நடிகனாகிவிடுவாய் என்று கூறிய அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார்.

மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி கையை ஆட்டாமலேயே அனைவரையும் சிரிக்கை வைப்பார். நாகேஷோ தன் பாடி லாங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைப்பார். இவ்வாறு ஆளுக்கொரு ஸ்டைல் உள்ளது.

ஞானசம்பந்தமுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. அவருடைய நகைச்சுவை இயல்பாக இருக்கும். தான் அறிந்த விஷயங்களை, புலைமையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான நகைச்சுவையில் தெரிவித்துவிடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை உள்ளது. அதனால் இவை நிச்சயம் மக்களைச் சென்றடையும்.

நான் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காததால் தான் நான் இன்னும் என்னை ஒரு மாணவனாகவே கருதி பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்த கற்கும் ஆர்வம் இருந்திருக்குமோ, இல்லையோ?

ஆத்திகம், நாத்திகம் பேசுவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவ்வாறு பேசும்போது எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நடித்ததில்லை என்றார்.