ரொமான்ஸுடன் கூடிய விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்கப்படும்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

Kamal Announced On Viswaroopam Part 2

சென்னை: விஸ்வரூபம் படம் டி.டி.ஹெச்சில் வெளியாகி சரித்திரம் படைக்க இருக்கிற நிலையில் "விஸ்வரூபம் பார்ட் -2 " எடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் விஸ்வரூபம் நாயகி பூஜாகுமாரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விஸ்வரூபம் படம் பற்றிய பேச்சின் போது பூஜாகுமார், மேலோட்டமாக விஸ்வரூபம் பார்ட் 2 பற்றி சொல்ல, கமல்ஹாசனே மைக் வாங்கி நானே தனியாக ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்லலாம் என நினைத்தேன்.. இப்போது விஜய் டிவி மூலமாகவே சொல்லி விடுகிறேன்..விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன். அதில் ரொமான்ஸ் நிறையவே இருக்கும் என்றார். அப்போது தொகுப்பாளினி, அது எப்ப வரும் என்று கேட்டதற்கு, முதலில் பார்ட்-1ஐ வரவிடுங்க என்று கூறி சிரித்தார் கமல்ஹாசன்.

 

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்

My Political Entry Will Be Different Says Rajinikanth

சென்னை: என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கேட்டார். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தப் பேச்சின் மூலம் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களுக்கு மீண்டும் அவர் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடந்த விழாவின்போது வெளியிட்டார். ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி அம்மாள் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல அனைவரும் எதிர்பார்த்தது ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதைத்தான். அதேபோல ரஜினியும் தனது பேச்சில் பொடி வைத்துப் பேசத் தவறவில்லை.

ரஜினியின் பேச்சிலிருந்து சில துளிகள்...

பல ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துடன் நான் இங்கு மேடையில் ஏறினேன். அப்போது இவரை பற்றி 10 வரியில் பேச வேண்டும் என நினைத்தேன். 2 வரிதான் என்னால் பேச முடிந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி இல்லை. இதே இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி வரும். அப்போது நிறைய பேசுவேன் என்று முடிவு எடுத்தேன். அதனால் இப்போது நிறைய பேசுகிறேன்.

ப.சிதம்பரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். அவர் தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். ஆங்கிலம் பேசும் போது அதில் தமிழ் கலப்பு வராது. அந்த அளவுக்கு இரு மொழிகளிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். இங்கே இப்போது நான் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பேச்சில் ஆங்கிலமும் வரும், தமிழும் வரும். அவரைப் போல் என்னால் பேச இயலாது.

இன்று இவரை பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இவரை வாழ்த்தி தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது. இவரை பற்றிய விமர்சனங்கள் அடங்கிய புத்தகத்தை தொகுத்தால் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் வரும்.

இவருடன் 1996ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது அரசியல் ஞானிகளாக திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சிநேகம் ஏற்பட்டது. இவர்களின் நெருக்கத்தின் மூலம் நிறைய அரசியல் உண்மைகளை தெரிந்து கொண்டேன். அரசியலில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

1996ல் தமாகாவை மூப்பனார் உருவாக்கினார். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை பெற பெரும் சிரமமான சூழல் இருந்தது. அந்த பொறுப்பை ப.சிதம்பரத்திடம், மூப்பனார் ஒப்படைத்தார். கஷ்டமான அந்த பொறுப்பை ஏற்று சிறப்புடன் செய்து காட்டினார். அந்த சமயத்தில் துக்ளக் சோ என்னிடத்தில் பேசி, தமிழகத்தின் நிலமையை எனக்கு உணர வைத்தார். அந்த காலகட்டத்தில் நான் தமாகா, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தேன்.

அதன் பின்பு டெல்லியில் எனக்கு என்டிடிவி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் நான் பங்கேற்பதாக இருந்தால் ப.சிதம்பரமும் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த விருதை எனக்கு அளித்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்தபோதும் கூட எனக்காக ப.சிதம்பரம் வந்து விருது கொடுத்ததை நினைத்து பெருமை பட்டேன்.

வேட்டி சட்டைகளே அவருக்கு எப்போதும் விருப்பம். அவருக்கு வேட்டி சட்டை பொறுத்தமாக உள்ளது. அவர் நிதியமைச்சராக மத்தியில் இருந்தார். அதன் பின் குஜ்ரால் அமைச்சரவை மத்தியில் ஏற்பட்ட போது ப.சிதம்பரம் எனது அமைச்சரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குஜ்ரால் பேசினார். அந்த அளவுக்கு திறம்பட செயல்படுபவர். இவர் நிதியமைச்சராக இருக்கும் போது ஏழைகளை பணக்காரர்களாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருக்கவும், பணக்காரர்களான ஏழைகளை மீண்டும் ஏழைகள் ஆக்காமல் இருக்கவும், நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் இவருக்கும் நன்கு தெரியும். அதனால் தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்கு கிடைக்கிறது. அந்த பொறுப்பில் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது அவருக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜாவாக இருந்தாலும் 3 வட்டத்துக்குள் இருப்பார்கள். தங்களுக்கு என்று முதல் வட்டம் அவர்களுக்கான தனிவட்டம் அந்த வட்டத்துக்குள் மனைவி பிள்ளைகள் கூட வரமுடியாது. அவர்களையும் சேர்க்க மாட்டார்கள். 2வது வட்டம் இந்த வட்டத்துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், ரத்த சம்பந்தபட்ட பந்தங்கள் ஆகியோர் அடங்கும்.

அடுத்தது 3வது வட்டம். இந்த வட்டத்துக்குள் நண்பர்கள், நல்ல நெறியாளர்கள் எல்லோரும் இருப்பார்கள். 2ம் வட்டத்துக்குள் சொல்ல கூடாத விஷயங்களை எல்லாம் 3ம் வட்டத்தினரிடம் சொல்லி தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் உள்ள பிரதமரிடம் 3ம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும். அவருக்கு தெரியாமல் மத்திய அரசில் எதுவும் இருக்காது.

இவருக்கு எப்போது குரல் கொடுப்பது என்பது நன்கு தெரியும். இவர் முழிக்காவிட்டால் ஆபத்து என்பது நன்கு தெரியும். இவர் விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டில் புரட்சி நடந்து விடும் என்பதும் அவருக்கு தெரியும். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. அதனால் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று இருக்கிறேன். ஆனால், யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சிதம்பரத்துக்கு தெரியும். அரசியலுக்கு ஏன் நீங்கள் வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்பார். அப்படி வந்தால், என் வழி தனிவழியாகத்தான் இருக்கும். அந்த வழி அவருக்கு தெரியும் என்றார் அவர்.

 

சினிமாவில் நடிக்கக் கிளம்புகிறார்கள் திருவனந்தபுரம் சிறைக் கைதிகள்!

Kerala Prisoners Set Become Actors Soon

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் கொண்டு விரைவில் ஒரு மலையாளப் படம் தயாரிக்கப்படலாம் என்று மாநில சிறைத்துறை ஐஜி அலெக்சாண்டர் ஜேக்கப் கூறியுள்ளார். இதில் சிறைக் கைதிகளே நடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள புஜாபுராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியின் விற்பனை கடந்தாணடு தொடங்கியது. இதை தொடர்ந்து சிக்கன் குழம்பு, சில்லி சிக்கன் விற்பனையும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஒரு சப்பாத்தி ரூ.2க்கும், சிக்கன் குழம்பு ரூ.25க்கும், சில்லி சிக்கன் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு தரமான உணவு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சமையலுக்கு அடுத்தபடியாக இங்குள்ள கைதிகள் சினிமாவிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து கேரள சிறைத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறுகையில், திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, சிக்கனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் சப்பாத்தி, சிக்கன் விற்பனையாகி வருகிறது.இது தவிர பல கைதிகளுக்கு இலக்கிய ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதை ஊக்குவிக்க சிறை துறை தீர்மானித்துள்ளது.

சில கைதிகள் சினிமாவுக்கு கதை எழுதி வருகின்றனர். இந்த கதையில் அவர்களே நடிக்கவும் தீர்மானித்துள்ளனர். நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் கைதிகளின் நடிப்பில் விரைவில் ஒரு மலையாள சினிமா தயாராகும் என்றார் அவர்.

 

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கு உயர வேண்டும் - கமல் ஆசை

Kamal Wants See Pc As Pm

சென்னை: நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் குறித்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும், சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.