ஈழப் போரை மையப்படுத்தி உருவான ஆயுதப் போராட்டம்!


ஈழத்தில் தமிழருக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் படம், ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ஆயுதப் போராட்டம்.

இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஜெய் ஆகாஷ்தான்.

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள ஆயுதப் போராட்டத்தில் ப்ரீத்தி மினால், அனிதா ரெட்டி என இரண்டு நாயகிகள். கதை போரைப் பற்றியது என்றாலும் கவர்ச்சிக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லையாம்.

அனுராதபுரம் விமான நிலையத் தகர்ப்புக் காட்சிகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்.

தீப்பெட்டி கணேசன் படம் முழுக்க வரும் பாத்திரமாக நடித்துள்ளார்.

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நந்தன் ராஜ் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
 

சமீராவும் செட் ஆகலை... தீவிரமாக நாயகி தேடும் கமல்!


விஸ்வரூபம் படம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிற்கிறது. அனுஷ்காவை நாயகியாக்கி கமல் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தில் அனுஷ்கா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீரா ரெட்டி ஜோடியாக நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் சமீரா நடிப்பாரா இல்லையா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லையாம்.

எனவே கமல் இன்னும் சில நாயகிகளை பரிசீலனை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு இணையாக, ஒரு உளவுத் துறை ஏஜென்ட் வேடத்தில் ஹீரோயின் வருகிறார். எனவே அதற்குப் பொருத்தமான நாயகியை தேடுகிறாராம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் விஸ்வரூபம். இதை ஆரம்பத்தில் இயக்கவிருந்தவர் செல்வராகவன். அவர் பின்னர் விலகிக் கொண்டார். செல்வராகவன் விலகிய கையோடு, படத்துக்கு நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சோனாக்ஷி சின்ஹாவும் விலகினார்.

பின்னர், அனுஷ்கா ஒப்பந்தமாகி, பின் விலகிக் கொண்டார். ஒரு வழியாக இந்த ஆண்டே முடியப் போகிறது. ஆனால் படமெடுத்தபாடில்ல... தயாரிப்பாளர்கள் நிலை கஷ்டம்தான் போங்கள்!
 

ஏஆர் முருகதாஸ் - விஜய் படம்: தொடங்கியது போட்டோ ஷூட்!


விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலாக இயக்கும் புதிய படத்தில், மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸன் நடிக்கக் கூடும் என முன்பே நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அந்த செய்தி உறுதியாகியிருக்கிறது. விஜய்யின் ஜோடியாக ஏஞ்சலாவை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். அதுமட்டுமல்ல, விஜய் - ஏஞ்சலாவை வைத்து ஒரு போட்டோ ஷூட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக பணியாற்றுகிறார் சந்தோஷ் சிவன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.
 

அம்புலி படத்துக்கு டப்பிங் பேச மறுத்தேனா? - பார்த்திபன் விளக்கம்


3 டி படமான அம்புலிக்கு டப்பிங் பேச மறுத்ததாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

பார்த்திபன் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் சில காட்சிகளில் தனது அனுமதி இல்லாமல், தன்னைப் போன்ற ஒருவரை டூப்பாகப் போட்டு சில காட்சிகளை அம்புலி இயக்குநர் எடுத்திருப்பதால் கோபப்பட்டு, டப்பிங் பேச மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.

ஆனால் இதனை பார்த்திபன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கும் அம்புலி பட இயக்குனர்கள் ஹரிசங்கர், ஹரீஸ் நாராயண் ஆகியோருக்கும் இடையே டப்பிங் பேசும் விவகாரத்தில் எந்த தகராறும் இல்லை. நான் இதுவரை அம்புலி படத்தையே பார்க்கவில்லை.

இப்போதைக்கு நான் நடித்த வித்தகன் பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறேன்.

இந்தப் படம் வெளியான பிறகு அம்புலி படத்தை ரீலீஸ் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அம்புலி பட டப்பிங் வேலையை இன்னும் நான் ஆரம்பிக்கவேவில்லை", என்றார்.

படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஹரிசங்கர் கூறுகையில், "ஒரு சண்டை காட்சியில் மட்டும் பார்த்திபனுக்கு டூப் பயன் படுத்தியது உண்மைதான். ஆனால் அதில் எந்த பிரச்சினையும் எழவில்லை. பார்த்திபனுக்கு சம்பள பாக்கி எதுவும் இல்லை. கொடுக்க வேண்டிய முழு சம்பளத்தையும் ஏற்கனவே கொடுத்துவிட்டோம். படத்தை அவருக்கு ஓரிரு நாட்களில் திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்து வருகிறோம்," என்றார்.
 

ஷாருக் மீது தான் முதல் காதல்: சோனம் கபூர்


ஷாருக் கான் மீது தான் முதன் முதலாக காதல் வந்தது என்று இந்தி நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

சோனம் கபூர், ஷாஹித் கபூர் நடித்துள்ள மௌசம் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் சோனம், ஷாஹித் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதாம். கற்பனையில் வாழ்வது என்றால் சோனம் கபூருக்கு அலாதிப் பிரியம்.

இது குறித்து சோனம் கூறியதாவது,

நான் மௌசம் படத்தில் ஒரு அழகான கவுன் அணிந்து ஆடியிருக்கிறேன். அந்த கவுனில் இருந்தபோது என்னை சிண்ட்ரெல்லாவாக கற்பனை செய்து கொண்டேன்.

எனக்கு 8 வயதிருந்தபோது தான் முதன் முதலாக காதல் வந்தது. அதுவும் ஷாருக் கான் மீது வந்தது. நூலகம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தீவிரவாத தாக்குதல்கள், இயற்கைச் சீற்றங்கள், ஊழல் இருக்கும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் காதல் இருக்க வேண்டும் என்றார்.
 

நான் ஒழுக்கமான நடிகை... தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா கடும் கோபம்


பெங்களூர்: எந்த ஆதாரமும் இல்லாமல், யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டும் என் மீது தடை விதித்திருப்பதை எதிர்க்கிறேன். இதனை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகை நிகிதா கூறியுள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து கணவர் மீது போலீசில் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். தர்ஷனுக்கும் நடிகை நிகிதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.

இப்பிரச்சினை குறித்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் நேற்று விவாதித்து, தர்ஷன் குடும்ப பிரச்சினைக்கு காரணமான நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடை விதித்துள்ளது.

இந்தத் தடையை கடுமையாக எதிர்த்துள்ளார் நிகிதா.

அவர் கூறுகையில், "தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்குமான குடும்ப சண்டையில் நான் தேவை இல்லாமல் இழுக்கப்பட்டு உள்ளேன். என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர். நான் ஒழுக்கமான நடிகை. தர்ஷனுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது அவதூறானது.

நான் சினிமாவில் ஆறு வருடங்களாக இருக்கிறேன். இதுவரை எந்த நடிகருடனும் என்னை இணைத்து பேசியது இல்லை. கன்னட படத்தில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். இங்குள்ள ரசிகர்கள் என் மேல் பிரியம் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன.

தர்ஷனுக்கும் எனக்கும் காதல் இருந்ததாக ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில் எனது பெயரை தேவை இல்லாமல் இழுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியானேன். மூன்று வாரங்களுக்கு முன்பு கூட விஜயலட்சுமி என்னுடன் டெலிபோனில் பேசினார். நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்து விசாரித்தார்.

நான் திறமையாக நடிப்பதாக பாராட்டினார். அப்படிப்பட்டவர் என் மேல் புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் நான் நடிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தவறு செய்யாத என்னை தண்டித்து உள்ளனர். இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன். என் பக்கம் நியாயம் உள்ளது. யாரோ ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?," என்றார்.
 

இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினர் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற 3 பேர் கைது


தேனி: திரைப்பட இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினருக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2003ம் ஆண்டு திரைப்பட இயக்குனர் மனோஜ் குமாரின் உறவினர் சின்னுவின் தந்தை பெயரை பயன்படுத்திய ஒரு கும்பல், போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயார் செய்து, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது.

இது குறித்து காவல்துறையினரிடன் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேனி நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் தனது 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தருமாறு சின்னு புகார் அளித்தார்.

அதன்பேரில் அல்லி நகரத் சேர்ந்த அய்யர், கருப்பையா, பாலன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை சின்னுவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
 

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு!


சென்னை: ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் திரைப்படமாகத் தயாரிக்கின்றனர். ஆனால் இந்தப் படத்துக்கு தாங்கள் எந்த வகையிலும் அனுமதி வழங்கவில்லை என்று ரஜினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சிறு வயது வாழ்க்கை பஸ் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வுகள், சினிமா பிரவேசம் திரையுலக வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து ரஜினி வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கிறார் பிரபல இந்தி தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரி.

வேண்டாம் சல்மான்கான்!

இதில் ரஜினி வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சல்மான்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ரஜினி வேடத்துக்கு சல்மான்கான் பொருந்துவாரா? என்பதில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்தி திரையுலகில் சல்மான்கான் பிரபல நடிகராக இருந்தாலும் ரஜினிக்கு இணையாக அவரை வைத்துப் பார்ப்பதை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

"ரஜினி வேடத்துக்கு சல்மான் எந்த வகையிலும் பொருத்தமானவர் அல்ல என்றும், ரஜினி வேடத்துக்கு இன்னொருவரை கற்பனை கூட செய்ய முடியாது. இன்னொன்று ரஜினி வாழ்க்கையை ஒரு செய்திப்படமாகத்தான் இப்போது தொகுக்க வேண்டும். வேறு நபரை வைத்து எடுப்பதை அனுமதிக்கக் கூடாது," என நடிகர் பிரசன்னா பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

ரஜினியின் நண்பரான நடிகர் எஸ்.வி.சேகர் கூறும்போது, "ரஜினி தனது வாழ்க்கை கதையை படமாக்க சம்மதிக்க மாட்டார் என்று கருதுகிறேன். இந்தியில் இப்படத்தை எடுப்பதாகவும் ரஜினி வேடத்தில் சல்மான்கான் நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள். இதை நிச்சயம் ரசிகர்கள் ஏற்கவே மாட்டார்கள்", என்றார்.

ரஜினி வேடத்தில் சல்மான்கானை நடிக்க வைப்பதை தாங்கள் விரும்பவில்லை என ஏராளமான ரசிகர்கல் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாங்களே எடுப்போம் - சௌந்தர்யா

இதற்கிடையே, இந்தப் படத்தை எடுக்க தாங்கள் எந்த வித அனுமதியையும் தரவில்லை என்று ரஜினியின் குடும்பத்தினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

அதுல் அக்னிஹோத்ரி தங்களுக்கு எந்த ஸ்கிரிப்டும் தரவில்லை என்றும், ஒரு வேளை தந்தாலும் அதற்கு அனுமதி தரமுடியாத நிலையில் இருப்பதாகவும் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினி தெரிவித்தார்.

மேலும் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க தாங்களே முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சக நடிகர்கள், ரசிகர்கள் எதிர்ப்பு மற்றும் ரஜினி குடும்பத்தின் அனுமதி மறுப்பு காரணமாக ரஜினி வாழ்க்கை வரலாற்றை சல்மானை வைத்து படமாக எடுப்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
 

தர்ஷன் குடும்பத்தை 'கெடுத்த' நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை!


பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இந்தியா திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று தெரிகிறது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை கொடுமைப்படுத்தியதற்காக கடந்த 9-ம் தேதி கைது செய்யபப்ட்டார். அவர் மனைவி கொடுத்த புகாரில் நடிகை நிகிதா பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த புகாரை விஜயலக்ஷ்மி வாபஸ் பெற்றார்.

இதையடுத்து கன்னட தயாரிப்பபாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்திய நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை சங்கத்தின் துணை தலைவர் முனிரத்னா அறிவித்தார்.

நடிகர் தர்ஷனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியதற்கு நிகிதா தான் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று நடிகரும், தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார். நிகிதா மீது கடுமையான நடிவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதனால் தான் இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவரை எந்த கன்னட தயாரிப்பாளரும் தங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நடிகை நிகிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் வம்ஷி, பிரின்ஸ், யோதா, நரிய சீரே கதா, சங்கொல்லி ராயன்னா ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே, நான் தர்ஷனுடன் தொடர்பு வைத்துள்ளேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதாரம் கொடுக்கட்டும் நானே கன்னடா திரையுலகை விட்டுச் சென்றுவிடுகிறேன் என்று நிகிதா தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகரின் குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இதுவரை திரையுலகம் காணாத விஷயமாக கருதப்படுகிறது.
 

தேர்தலில் போட்டி - நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வந்துருச்சி எம்எல்ஏ ஆசை!


ஹைதராபாத்: உறவினர்கள் பலரும் அரசியல் பதிவிகளை அனுபவித்துக் கொண்டிருக்க, முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா மட்டும் சும்மா இருப்பாரா... அவரும் தேர்தலில் குதிக்கிறார். தெலுங்கு தேசம் சார்பில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஆந்திர மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் இப்பொழுதே தயாராகி வருகின்றன.சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிட உள்ளார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.

இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன். சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். பாலகிருஷ்ணா அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சினிமாவில அதிக கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அதன் தலைவர் சந்திரபாபுநாயுடு திட்டம் வகுத்துள்ளார். இதன்படி தேர்தல் பிரசாரத்திலும், வேட்பாளர்கள் தேர்விலும் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பால கிருஷ்ணாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக இனி நானும் தீவிரமாக களமிறங்கப் போகிறேன். ஆந்திராவில் கட்சியை பலப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளேன். கட்சி மேலிடம் சொல்லும் இடத்தில் நிற்பேன்," என்றார்.
 

'அதெல்லாம் எனக்குப் பிடிக்காது!' - ஸ்ரேயா


சேச்சே... அதெல்லாம் எனக்குப் பிடிக்காது... நான் அந்த மாதிரி பெண்ணும் அல்ல. காக்டெயில் பார்ட்டி, டிஸ்கொத்தே, பண்ணை வீடுகளில் கொண்டாட்டம் போன்றவற்றுக்கெல்லாம் வேறு ஆளைப் பாருங்கள்!"

- நேற்று மும்பையில் தன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா சொன்னதுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது!

பொதுவாக நடிகைகளின் பிறந்த நாள் விழா இப்படித்தானே கொண்டாடப்படுகிறது என்ற நினைப்பில், அவரிடம் உங்க பிறந்த நாளை எந்த பண்ணை வீட்டில் அல்லது நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினீர்கள் என கேட்டபோது, சட்டென்று சீரியஸாகிவிட்டார் ஸ்ரேயா.

"கேளிக்கை விருந்துகளோடு பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. பிறந்த நாளை எப்போதும்போல என் வீட்டில் பெற்றோருடன் கொண்டாடினேன். சில நண்பர்களை சந்தித்தேன். படப்பிடிப்பிலும் பங்கேற்றேன். மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவது தேவையற்றது. அது வழக்கமான ஒரு நாள்தான் என்னைப் பொருத்தவரை," என்றார்.

தமிழில் ஸ்ரேயா நடித்த கடைசி படம் ரௌத்திரம். வேறு படங்கள் கைவசம் இல்லை. சிம்புவுடன் நடிக்கக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார். விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்களாம்.

மலையாளத்தில் ஹீரோ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன!
 

விஷாலின் 'வெடி'யை வாங்கியது சன் பிக்சர்ஸ்!


பிரபு தேவா இயக்கத்தில் விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் படமான வெடியை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

ஒரு பக்கம் சட்ட ரீதியான நெருக்கடிகள், கைதுகள் தொடர்ந்தாலும், சன் பிக்சர்ஸ் மீண்டும் புயல் வேகத்தில் படங்களை வாங்கி வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது. இரண்டாவது வார முடிவில் கிட்டத்தட்ட போட்ட பணத்தை முழுவதுமாக எடுத்துவிட்டது சன் டிவி.

அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது இந்த நிறுவனம். ஏழாம் அறிவு, நண்பன் போன்ற படங்களும் சன் கைவசம் வந்துவிட்டன.

அந்த வரகிசையில் விஷாலின் வெடி படமும் சேர்ந்துள்ளது. சன் பிக்சர்ஸின் அடுத்த ரிலீஸ் 'வெடி'தான்.

ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார். விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார். பிரபுதேவா படத்தில் முதல்முறையாக விவேக் காமெடி செய்துள்ளார்.

செப்டம்பர் 29-ம் தேதி விஜயதசமி ஸ்பெஷலாக வருகிறது வெடி.
 

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை மார்க்கெட்டிங் செய்யும் எம்பிஏ மாணவர்கள்!!


பெரிய நிறுவனங்கள் அடிக்கடி புதுப்புது பொருட்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. அப்போது அதை மக்களிடம் கொண்டுசெல்ல மார்க்கெட்டிங் நிபுணர்கள் பலர் மூளையைக் கசக்கி யோசனைகளைக் கொட்டுகிறார்கள். ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆகும்போதும் இப்படித்தான் யோசித்து மார்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் சினிமா தொழிலும் நிர்வாகவியலும் இதுவரை இணைந்ததில்லை.

ஊடகத்துறையில் புதிய முத்திரை பதிக்க களம் இறங்கியிருக்கும் 'மின்வெளி மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

பஞ்சாலைத் தொழில் சார்ந்த வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் படத்தை வெளியிடும்போது எம்.பி.ஏ. மாணவர்களைக் கொண்டு மார்க்கெட்டிங் யுத்திகளைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான பயிற்சியை மாணவர்கள் பெறுவதற்காக செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.ஏ. மாணவர்கள் வந்திருந்தனர்.

முதல் நிகழ்வாக, ஒன்லி சக்ஸஸ் நிறுவனத் தலைவர் வித்யாசாகர் மற்றும் சக்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தந்தனர்.

அடுத்து ‘மின்வெளி மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத் தலைவரும், ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான தனபால் பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்ற அமர்வில் பிரபல திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சட்டமன்ற உறுப்பினரும் மாஃபா நிறுவனருமான பாண்டியராஜன், ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் சந்திரமோகன் பாணி, ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரபு ஆகியோர் பேசினர்.

‘‘இன்றைய சூழலில் நல்ல படங்களையும், குறைந்த பட்ஜெட் திரைப்படங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல இதுபோன்ற இளம் ரத்தங்களும் புதிய சிந்தனையும் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், திரையுலகின் பல்வேறு சாதனையாளர்களோடு பழகும் வாய்ப்பை இந்தப் பயிற்சி மாணவர்களுக்குக் கொடுக்கும்’’ என்றார் தனபால் பத்மநாபன்.

'மாஃபா' பாண்டியராஜன்

‘‘தற்போது திரைப்படத் துறையில் ரூ. 70000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இது ரூ. 2 லட்சம் கோடியாக உயரும். இந்தத் துறையில் எதிர்காலத்தில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும்’’ என்றார் மாஃபா பாண்டியராஜன்.

ரிலையன்ஸ் சி.இ.ஓ. சந்திரசேகர் பாணி, ‘‘மிகவும் வாய்ப்புள்ள துறையில் நீங்கள் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். தரமான படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். மாணவர்களை வைத்து திரைப்படத்தை சந்தைப்படுத்துவது புதிய முயற்சி. தனபால் பத்மநாபனை இதற்காக பாராட்ட வேண்டும்’’ என்றார்.

‘ஸ்டுடியோ க்ரீன்’ பிரபு, ‘‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தின் பாடல்களைக் கேட்டேன். சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கும் என்று இதன்மூலம் தெரிந்துகொண்டேன்’’ என்றார்.

பாலுமகேந்திரா

இந்த அமர்வின் முத்தாய்ப்பாக இயக்குநர் பாலுமகேந்திரா பேச்சு அமைந்தது. ‘‘வாழ்க்கையிலிருந்து, மக்களிடமிருந்து, மக்களுக்காக எடுக்கும் சினிமா நல்ல சினிமா. மொத்தத்தில் ரசனையோடு எடுக்கப்பட்டு போட்ட முதலீட்டை எடுக்கும் வகையில் ஓடக் கூடிய சினிமாவைச் சிறந்த சினிமா என்பேன்...’’ என்றார் அவர்.

இரண்டாம் நாள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தனபால் பத்மநாபன் படம் எடுத்ததன் நோக்கம், தேவை, அனுபவம் குறித்து மாணவர்களிடம் பேசினார். படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மேற்கொண்டுவரும் வழிகளையும் விளக்கினார். இதைத்தொடர்ந்து படத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ் எந்தெந்த வகையில் படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று திரையில் பவர்பாயிண்ட்டுடன் கூடிய விளக்கங்களை அளித்தார்.

‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன் பல்வேறு சந்தைப்படுத்துதல் முறைகளை விளக்கினார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் பலத்தையும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் அவர் சொன்னார். மேலும் சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விகளையும், அதற்கான தகவல் தொடர்பின்மை உள்ளிட்ட காரணங்களையும் விளக்கமாகப் பேசினார்.

மதுரையைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ராமகிருஷ்ணன், ‘‘என்னுடைய 25 வருட அனுபவத்தில் இதுபோன்ற ஒரு மார்க்கெட்டிங் முயற்சியைப் பார்த்ததில்லை. புதுமையான முயற்சிகளுக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்’’ என்றார்.

எம்ஜிஆர்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் தனி செயலரும், அறிவியல் அறிஞருமான வி.பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர், ‘‘எம்.ஜி.ஆர்.தான் மாஸ் ஊடகமான திரைப்படத்தை சரியாகப் பயன்படுத்திகொண்டார். நவீன வசதிகள் மக்களிடம் நம்மைக் கொண்டு செல்வதிலும், சந்தைப்படுத்துதலிலும் பெரிதும் உதவிவருகின்றன. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் வெற்றி பெறமுடியும். இந்தப் பயிற்சியை உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகக் கொண்டால் பல வாய்ப்புகள் தேடிவரும்’’ என்றார்.

‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ‘இயக்குநரிடம் திட்டு வாங்கியதுண்டா’, ‘காதல் காட்சிகளில் சங்கடம் இருந்ததா’, ‘காதல் முன் அனுபவம் உண்டா’ என்று மாணவர்கள் கேட்ட துடுக்குத்தனமான கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.

வேலைவாய்ப்பு

‘‘இந்த ஒருமாத ‘இன்டர்ன்ஷிப் ப்ராஜக்ட்’ முடிந்ததும் அதில் மாணவர்களின் செயல்பாடு குறித்து மதிப்பிட்டு விருதுகள் வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் வேலைவாய்ப்பு பெற நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்துவைப்போம்’’ என்றார் தனபால் பத்மநாபன்.

வேலைவாய்ப்பு பற்றிய இந்த இன்ப அதிர்ச்சியோடு, ஜெயிக்க முடியும் என்ற புதிய உத்வேகமும் உற்சாகமும் மாணவர்கள் முகங்களில் தெரிந்தது. இந்தப் பயிற்சி, எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டியாக - கேரியர் கைடன்ஸாக இருந்தாக - பல மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.
 

தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் காரசார விவாதம்!


சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நேற்று காரசார விவாதம் நடந்தது.

சங்க தேர்தலில், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடக்கூடாது, என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசக்தி பாண்டியன், ஊழல் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால், குற்றம் சுமத்தியவர்கள் தண்டனையை ஏற்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் பவர்புல் அமைப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவர் பதவியிலிருந்து ராம.நாராயணன் விலகியதை தொடர்ந்து பொறுப்பு தலைவராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

சங்கத்தில் கடந்த சில வருடங்களாக முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாகவும், அதுபற்றி விவாதிப்பதற்காக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் வற்புறுத்தினார்கள்.

அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுக்குழுவை கூட்டாமலே தேர்தலை நடத்தலாம் என்று அவர்கள் கூறினார்கள். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ராவுத்தர் இந்த தேர்தலில் அதிகாரியாகப் பணியாற்றுவார்.

பலத்த பாதுகாப்பு

தேர்தலுக்கு முன்பாக சில பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சிறப்பு கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாதுகாப்புக்காக, பிலிம்சேம்பர் வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. 'மது அருந்திவிட்டு வரும் உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை'' என்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தன.

கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 2-30 மணிவரை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளிதரன், பொறுப்பு செயலாளர் கதிரேசன், பொருளாளர் காஜாமைதீன், முன்னாள் தலைவர்கள் கே.ஆர்.ஜி, இப்ராகிம் ராவுத்தர், முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர்கள் கேயார், சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், 'கலைப்புலி' எஸ்.தாணு, ஜி.சேகரன், ஏ.எல்.அழகப்பன், ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர்கள் பவித்ரன், தங்கர்பச்சான், ஷக்தி சிதம்பரம், நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான், கருணாஸ் உள்பட ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.

காரசார விவாதம்

கூட்டத்தில், காரசாரமாக விவாதம் நடந்தது. சிலர் மீது ஊழல் குற்றம்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கூச்சலும், ரகளையும் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.

உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், செயலாளர் கே.முரளிதரனும் கேட்டுக்கொண்டார்கள். என்றாலும் கூச்சலும், குழப்பமும் அடங்கவில்லை.

கூட்டம் முடிந்த பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், "தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தவறு செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்படும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதையும் மீறி அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது,'' என்றார்.

முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இன்று நடைபெற்ற கூட்டம், பொதுக்குழு கூட்டம் அல்ல. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது. இருப்பினும், ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனையை ஏற்க தயார். அப்படி நிரூபிக்கப்படவில்லை என்றால், குற்றம் சாட்டியவர்கள் தண்டனையை ஏற்க வேண்டும்,'' என்றார்.