சின்னத்திரை நடிகையாக, வில்லியாக, சினிமா தயாரிப்பாளராக என்னை ஏற்றுக்கொண்ட மக்கள் சினிமா இயக்குநராகவும் ஏற்றுக்கொள்வார்கள் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார் பிருந்தா தாஸ்.
நடனம், டப்பிங்,நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும் ஆனந்தம் தொடரில் அபிராமி என்ற வில்லி கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
பல ஆண்டுகாலமாக சினிமா, சின்னத்திரை என பயணித்துக் கொண்டிருக்கும் பிருந்தா தாஸ் இப்போது ஹாய் டா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன்மூலம் சினிமாவில் பெண் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார் பிருந்தாதாஸ்.
சின்னத்திரை கலைஞர்கள்
பல வருடங்களாக ஏகப்பட்ட மெகா தொடர்களில் நடித்து சின்னத் திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் இவர், தன்னுடைய படத்தில் ஒரு சில டிவி நடிக நடிகைகளையும் நடிக்க வைத்திருக்கிறார்.
எப்படி இயக்குநரானேன்?
நடிகையாகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்த நான் சினிமா இயக்குநராக மாறியது எதிர்பாராத நிகழ்வுதான் என்கிறார் பிருந்தா.
பெருமான் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் பிருந்தா. அந்த அனுபவத்தில் சினிமா தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொண்டாராம். பெருமான் படத்தில் பணியாற்றியபோது அதன் இயக்குனர் ராஜேஷ் கண்ணாகிட்ட இந்த கதையை சொன்னேன். அவரே தயாரிக்கிறேன்னு சொன்னார் படமும் தயாராயிட்டிருக்கு. இது ஒரு புது பாதை. இதில் உதய், அஸ்வின், பிரதீஷ், ஜாக்குலின், பாவனா, இந்த 6 பேரும்தான் முக்கிய கேரக்டர். இவர்களுக்குள் நடக்கும் யதார்த்தமான விஷயங்கள்தான் கதை. அதை காமெடியா சொல்றேன்.
துன்பம் வரும்போது நண்பர்கள் எந்த அளவுக்கு நடந்துக்கணும் என்பதையும், எந்த பிரச்னையும் பேசித் தீர்க்காலாம் என்பதையும் சுவாரஸ்யமா சொல்றேன். நடிகையா ஏத்துக்கிட்டவங்க. இயக்குனராவும் ஏத்துக்குவாங்கன்னு நம்புறேன் என்று நம்பிக்கையோடு சொன்னார் பிருந்தாதாஸ்.
இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அஸ்வின் டணால் கே.ஏ. தங்கவேலு அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக பெரியமருது, சாம்ராட் படத்தில் நடித்துள்ளார். செல்லமே தொடரில் ராதிகாவின் தம்பியாக நடித்துள்ளார்.