மும்பை : மும்பை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த நடிகை அசினின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அசின் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து கார் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கஜினி படம் மூலம் இந்திக்கு சென்ற அசின் தமிழ்ப் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். தொடர்ந்து இந்தியில் சல்மான்கான், அஜய் தேவ்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தற்போது ‘ஆல் இஸ் வெல்' என்ற படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் அசினின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் கார்களை நிறுத்தக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால், ‘நோ பார்க்கிங்' பகுதியில் அசினின் சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
நீண்ட நேரமாக அந்தக்கார் அங்கு நின்றிருந்ததால், போலீசார் அந்த காரின் டயரில் பூட்டுப் போட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்தக் காரை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், காருக்குள் இருந்த அசின் பெரும் தவிப்பிற்கு ஆளானார். பின்னர் அவர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்து, கார் டயரின் பூட்டை கழற்றி விடுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் காரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.