சென்னை: ஜில்லா படத்தின் இசையை நாளை மறுநாள் வெளியிடுவதாக அறிவித்துவிட்டு சத்தமில்லாமல் இன்றே வெளியிட்டுவிட்டனர்.
ஜில்லா படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 21ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் வெளியாகும் இசையை கேட்க விஜய் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில் விஜய் திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது. விழாவில் 3 தயாரிப்பாளர்கள் மற்றும் 2 தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார் விஜய். உதவிகள் வழங்கும் விழா என்று நினைத்தால் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்டுவிட்டனர்.
நிகழ்ச்சி துவங்கியபோது ஜில்லா இயக்குனர் நேசன் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அங்கு வரவில்லை. ஆனால் விஜய் மேடையில் ஏறியதும் நேசனும், இமானும் திடீர் என்று வந்து மேடையில் ஏறினர். விஜய் இசையை வெளியிட 5 தயாரிப்பாளர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
21ம் தேதி இசை வெளியீடு என்று அறிவித்துவிட்டு இப்படி கமுக்கமாக வெளியிட்டதன் அவசியம் என்னவோ என்று தான் கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.