அர்ஜூனின் ஜெய்ஹிந்த்- பாகம் 2!

Arjun S Jai Hind Part 2

ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படும் அர்ஜூன் தான் இயக்கிய வெற்றிப்படமான ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் அர்ஜூன். இதுவரை பத்துப் படங்கள் இயக்கியிருக்கிறார். அவற்றில் ஜெய் ஹிந்த் பெரிய வெற்றிப் படமாகும். அர்ஜூன், ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தனர்.

கடமை தவறாத காவல் அதிகாரியாக நடித்திருந்தார் அர்ஜூன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் இயக்குகிறார் அர்ஜூன். தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். படத்தின் நாயகனும் அவரே. மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சுர்வின் சாவ்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இவர்கள் தவிர, நான்கு இளம் நடிகைகளும் நான்கு மாணவர்களும் இதில் அறிமுகமாகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்தப் படத்தை எடுக்கிறார் அர்ஜுன்.

ரூ 20 கோடி செலவில் தயாராகும் இந்தப் படத்தின் வசனத்தை கோபிகிருஷ்ணா எழுத, இணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் ஜெகன்.

இந்தப் படம் குறித்து அர்ஜூன் கூறுகையில், "இந்தப் படம் மீடியாவுக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் எனது சமர்ப்பணமாகும். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவுக்கு ஒரு வடிவம் கொடுக்கிறேன் இந்தப் படத்தில். இந்தப் படத்தில் எனது முந்தைய படங்களின் தொடர்ச்சி எதுவும் இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும்.

சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறோம்," என்றார்.

 

தமிழில் அம்பிகாபதியாக வெளியாகும் ராஞ்ஜ்னா

Raanjhnaa Come Tamil As Ambikapathy   

தனுஷ் நடிக்கும் ராஞ்ஜ்னா இந்திப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது.

இந்தியில் தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்ஜ்னா. இந்தப் படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆன்ந்த் எல் ராய் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். டீன் ஏஜ் காமெடியையும் காதலையும் மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

தனுஷ் நடிப்பை ஷூட்டிங்கின்போதும், டப்பிங்கின் போதும் படக்குழு வெகுவாகப் பாராட்டியிருந்தது.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, ராஞ்ஜ்னா படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்கின்றனர். இந்தியில் வெளியாகும் ஜூன் 21 ஆம் தேதியே தமிழிலும் அம்பிகாபதியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

மே 15-ம் தேதி ஜெயிலுக்குப் போகிறார் சஞ்சய் தத்!!

Sanjay Dutt Surrender On May 15

மும்பை: மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதால், விதிக்கப்பட்ட கெடு தேதியான மே 15-ம் தேதி சிறைக்குப் போகிறார் சஞ்சய் தத்.

மும்பையில் 1993-ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதற்காக ஏராளமான துப்பாக்கிகளை கொண்டு வந்தனர். அதில் 2 துப்பாக்கிகளை நடிகர் சஞ்சய்தத் சட்ட விரோதமாக வாங்கினார். மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்து மும்பை தடா கோர்ட்டு உத்தரவிட்டார்.

ஒன்றரை ஆண்டுகள் எரவாடா சிறையில் இருந்த சஞ்சய்தத் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். உச்சநீதிமன்றத்தில் தன் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார். அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது.

தண்டனை ஏற்றுக் கொள்வதாக முதலில் அறிவித்த சஞ்சய் தத், பின்னர் சரணடைய அவகாசம் கேட்டார். நான்குவார அவகாசம் அளித்தது நீதிமன்றம்.

பின்னர் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சஞ்சய்தத் மீண்டும் மனு செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் வாதத்துக்குப் பிறகு சஞ்சய்தத் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சஞ்சய்தத் இனி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வருகிற 15-ந்தேதி அவர் சரண் அடைகிறார். சரண் அடைந்ததும், அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பப்படுவார். மீதமுள்ள தண்டனை காலமான 3.5 ஆண்டுகளை அவர் சிறையில் கழிக்க வேண்டும்.

54 வயதாகும் சஞ்சய்தத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். 250 கோடி ரூபாய்க்கு மேல் அவரை நம்பி முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

சிறைக்குப் போகும் முன்பே தனது சினிமா கமிட்மெண்டுகளை பெருமளவு முடித்துவிட்டார் சஞ்சய் தத். கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் போலீஸ்கிரி இந்திப் படமும் அதில் ஒன்று!

 

ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!

Sivakarthikeyan S Gets Rs 2 Cr Now

லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சம்பளம் இப்போது கோடிகளில்.

போன பிரஸ் மீட் வரை நானா.. ஒரு கோடி சம்பளம் கேட்டேனா... என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது ரூ 2 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

அவர் நடித்து அண்மையில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களின் வெற்றிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லாமலே தெரியும் உண்மை.

இப்போது அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்திலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், லிங்குசாமி தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்ந்தமாகியிருக்கிறார்.

இந்த மூன்று படங்களில் நடிக்க சம்பளமாக தலா 2 கோடி ரூபாய் பேசப்பட்டு அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்களாம். து.

மேலும் ‘எதிர் நீச்சல்' படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், மீண்டும் தனுஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த நான்கு படங்களில் துரை செந்தில்குமார் இயக்கப் போகும் படத்திற்குதான் முதலில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் ரூ 2 கோடி சம்பளமாம்.

இந்தப் படங்களும் வெற்றி பெற்றால், அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளம் வேறு ரேஞ்ச் என்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.

 

விழுப்புரம் கலாட்டா கல்யாணத்திற்கு பிறகு திருச்சியில் இலவச திருமணம் நடத்தும் விஜய்

Vijay Conduct Mass Marriage Trichy On May 12

சென்னை: விழுப்புரத்தை அடுத்து திருச்சியில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கிறார் இளைய தளபதி விஜய்.

நடிகர் விஜய்யின் விழுப்புரம் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கராபுரம், முகையூர், சின்னசேலம், வானூர், ரிஷிவந்தியம், செஞ்சி, மேல்மலையனூர், திருநாவலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி இலவச திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் விஜய் ரசகிர்கள் அவரைப் பார்க்கும் ஆர்வத்தில் திருமண மண்டபத்தின் கதைவை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடி வர விஜய் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க என்று ஒரே கலாட்டாவாகிவிட்டது. இந்நிலையில் வரும் 12ம் தேதி திருச்சியில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார் விஜய்.

இந்த முறை விழுப்புரம் போன்று எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

 

தமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட டேம் 999-க்கு ஜகார்த்தா விழாவில் 3 டம்மி விருதுகள்!

At Last Dam 999 Gets Few Awards

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து விஷமக் கருத்தோடு எடுக்கப்பட்ட, தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட டேம் 999 படத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த திரைப்பட விழாவில் 3 நடுவர் விருதுகள் கிடைத்துள்ளன.

டேம் 999 என்ற படத்தை சோகன்ராய் என்ற மலையாள இயக்குநர் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் தமிழர்களின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையை குறி வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த அணை பாதுகாப்பற்றது, உடைந்து விடும், மக்களின் உயிருக்கு ஆபத்து என்ற பொய்ப் பிரச்சாரமே படத்தில் மேலோங்கியிருந்தது.

எனவே அந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட முடியாது என தடை செய்தது தமிழக அரசு. ஆனால் பிற மாநிலங்களில் இந்தப் படம் வெளியானபோது, படுதோல்வியைத் தழுவியது.

சொந்த மாநிலம் கேரளாவிலேயே ஒரு வாரம்தான் தாக்குப் பிடித்தது இந்தப் படம்.

அத்துடன், விருதுக்கென்று எங்கெல்லாமோ அனுப்பிப் பார்ததார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட அத்தனை விழாக்களிலும் இந்தப் படத்துக்கு எந்த விருதும் தரப்படவில்லை.

கடைசியில் பெரிதாக பேசப்படாத ஜகார்த்தா திரைப்பட விழாவில் நடுவர் விருதுகள் என்ற பெயரில் 3 விருதுகளைத் தந்துள்ளனர். இது மக்கள் தெரிவல்ல. விழாவின் நடுவர்களாகப் பார்த்து தரும் விருதுகள். இது எந்த அளவு நடுநிலையுடன் வழங்கப்பட்டது அல்லது வாங்கப்பட்டது என்பதையெல்லாம் அவரவர் கற்பனைக்கே விட்டுவிடலாம்!

 

ஜூன் 14-ம் தேதி சூர்யாவின் சிங்கம் 2!

Singham 2 Confirmed On June 14   

சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம்தான் சிங்கம் 2 என்ற பெயரிலேயே வெளியாகிறது.

முதல் பாகத்தில் நடித்த சூர்யா - அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஓராண்டு காலமாக இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டது.

ஹரியின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு அதிக நாட்கள் இந்தப் படத்துக்குத்தான் ஷூட்டிங் நடத்தப்பட்டது.

கோடை ஸ்பெஷலாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சிங்கம் 2 ரிலீஸ், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக தள்ளிப் போடப்பட்டது. இப்போது வெளியீட்டுத் தேதியை உறுதிப் படுத்தியுள்ளனர்.

வரும் ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சிங்கம் 2.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

தெலுங்கில் இந்தப் படம் யாமுடு 2 என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

 

இன்றைய ரிலீஸ்... மணிவண்ணனின் நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ!

இந்த வெள்ளிக்கிழமை ஒரேயொரு படம்தான் வெளியாகிறது. அது பொன்விழா இயக்குநர் மணிவண்ணனின் நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை 2).

1994-ல் வெளியான வெற்றிப் படம் அமைதிப்படை. சத்யராஜ் இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். குறிப்பாக அதில் அமாவாசை என்ற பெயரில் அறிமுகமாகி நாகராஜசோழன் எம்ஏ -வாக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்வார்.

அந்த வேடத்தை மிக சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் மணிவண்ணன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் படத்தின் தொடர்ச்சியாக நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ -வை உருவாக்கியுள்ளார் மணிவண்ணன்.

manivannan s nagaraja chozhan ma mla releasing today   

கோமல் சர்மா, மிருதுளா, அன்ஷிபா மற்றும் வர்ஷா இந்தப் படத்தில் முக்கிய பெண் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை முழுக்க அரசியல் களம்தான் என்றாலும், ஈழத்தில் நடந்த அவலங்களை உருவகப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளார் மணிவண்ணன். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்துக்கு கிடைத்த நல்ல பப்ளிசிட்டி மற்றும் இயக்குநர் மணிவண்ணன் மீதான எதிர்ப்பார்ப்பு காரணமாக நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது. இன்று முதல் நாளே பிரமாண்ட ஓபனிங் கிடைத்துள்ளது படத்துக்கு. அந்த உற்சாகத்துடன் மணிவண்ணன் தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.