3 படம் மீது மேலும் ஒரு புகார்... தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு


3 Movie
3 பட விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை வேறு ஒரு விவகாரத்தில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சகோதரி விமல கீதா, தனுஷ் குடும்பத்தாரின் பட நிறுவனமான ஆர்.கே.புரடக்ஷன்ஸ் மற்றும் சோனி மியூசிக் நிறுவனம் ஆகியோர் மீது ஹைதராபாத்தில் நட்டி குமார் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நட்டி குமார். இவர் என்.கே. தியேட்டர்ஸ் பிரைவைட் லிமிட்டெட் என்ற விநியோகஸ்த நிறுவனத்தை வைத்துள்ளார். 3 படத்தின் ஆந்திர உரிமையை இவர்தான் வாங்கியுள்ளார். இதில் தனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக நட்டி குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நட்டி குமார். அதில்,

ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் 3 படத்தை தயாரித்தது. இதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.

30.3.2012 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தம் 21.3.2012 அன்று கையெழுத்தானது.

தெலுங்கில் இப்படத்தின் ஆடியோ உரிமையும் எங்களுக்கே வழங்கப்பட்டது. இதற்கான தொகை ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டது. பின்னர் ஆடியோ உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்துவகை உரிமைகளையும் அவர்களிடமே விற்றுவிட்டோம்.

ஆனால், எங்களுக்கு தெரியாமலேயே ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வேண்டிய நிறுவனமான உண்டார் பிலிம்ஸ் நிறுவனம், 3 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அந்த நிறுவனம் 3 பட ஆடியோ சிடிக்களை தயாரித்து சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளது.

விசாரித்ததில் சோனி மியூசிக் நிறுவனம் ஆர்.கே. புராடக்ஷன்ஸ் மற்றும், உண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த உரிமையை பெற்றுள்ளது தெரிய வந்தது.

மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் எங்களை ஏமாற்றி சோனி நிறுவனத்துக்கு விற்றிருக்கிறது. நம்பிக்கை துரோகம் மோசடி மூலம் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 3 பட ஆடியோ உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் லாபம் அடைந்துள்ளனர்.

எனவே, மேற்கண்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தப் புதிய புகார் தொடர்பாக 3 பட யூனிட் மீண்டும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
Posted by: Arivalagan
 

தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் ரெடி... நிகிதா


கன்னட டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க மறுத்து விட்ட கன்னட நடிகை நிகிதா துக்ரால், தற்போது தமிழில் எடுக்குப்படும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் வித்யா பாலனின் எடுப்பான கவர்ச்சியால் பெரும் வெற்றி பெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். இப்படத்தை தற்போது தமிழிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

தமிழில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கவுள்ளார்.

முதலில் இந்த வேடத்தில் நடிக்க பூஜா காந்தி மற்றும் நிகிதாவை அணுகினர். ஆனால் இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிகிதா கூறுகையில், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக இருக்குமானால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் இது ஒரு விபச்சாரியின் கதையாக உள்ளது. இதில் நான் நடித்தால் அது சில்க்கையும், கன்னட மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் தயார் என்று திடீரென கூறியுள்ளார் நிகிதா. சில்க் ஸ்மிதா தமிழில்தான் பிரபலமானார். தமிழ் நடிகையாகவே இருந்தவர் அவர். எனவே தமிழில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நிகிதா.

ஆனால், கன்னடத்தில் படு கவர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதால்தான் நிகிதா நடிக்க மறுத்து விட்டார் என்றும், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது என்பதால்தான் தமிழில் நடிக்க விரும்புகிறார் என்றும் ஒரு டாக் உலவுகிறது.
Posted by: Arivalagan
 

நிறைய கிளாமர் கேட்கும் ரீமா சென்!


கல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.

இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.

இயக்குநர் 'சரீமா' என்று சொன்னாரா என்பது தெரியவில்லை...!
Posted by: Arivalagan
 

வி்த்யா பாலன் செம போல்ட்... புகழும் அனுஷ்கா!


வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.

வித்யா பாலன் ரொம்பவே வித்தியாசமான நடிகை. சாதாரண கேரக்டர்களில் நடிப்பதை விட வித்தியாசமான, யாரும் செய்யத் தயங்கும் வேடங்களாக தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர். இதனால் அவருக்கு செம பேராகியுள்ளது.

அவரது டர்ட்டி பிக்சர்ஸும், கஹானியும் பெரிய அளவில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. இதுதான் அனுஷ்காவை அசரடித்து விட்டதாம்.

இப்போது டர்ட்டி பிக்சர்ஸின் தமிழாக்கத்தில் வித்யா கேரக்டரில் அனுஷ்தான் நடிக்கப் போகிறார். அதேபோல கஹானி படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். அதில் வித்யா பாலன் கர்ப்பணி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து அனுஷ்கா கூறுகையில், வித்யா பாலன் மிகவும் போல்டாக நடிக்கிறார். யாருமே தயங்கும் கேரக்டர்களை அவர்தேடிப் பிடித்து நடிக்கிறார். அவரது அந்தப் பாணி என்னைக் கவர்ந்து விட்டது. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். மற்றவர்கள் செய்யத் தயங்குவதை செய்வதில் எனக்கு இயற்கையிலேயே ஆர்வம் அதிகம் என்கிறார் பூரிப்புடன்.

சீக்கிரமா 'டர்ட்டி' ஆகுங்க அனுஷ்கா...!
Posted by: Arivalagan