விவாகரத்து வழக்கு.. கண்ணீருடன் வெளியேறிய மஞ்சு வாரியர்... ஜனவரியில் விசாரணை!

எர்ணாகுளம்: மலையாள நடிகர் திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்து வழக்கு வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கேரள நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்துக்கு வந்த மஞ்சு வாரியார், முதல் கட்ட ஆலோசனை முடிவில் கண்ணீருடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.

விவாகரத்து வழக்கு.. கண்ணீருடன் வெளியேறிய மஞ்சு வாரியர்... ஜனவரியில் விசாரணை!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் திலீப்- மஞ்சு வாரியர். இருவரும் புகழின் உச்சத்தில் இருக்கும் போது 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மீனாட்சி என்ற 14 வயது மகள் உள்ளார். திருமணமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மஞ்சு வாரியரால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் திலீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய பரஸ்பரம் முடிவெடுத்தனர். கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த இருவரும் நேற்று எர்ணாக்குளம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

மஞ்சு வாரியர் தனது சகோதரர் மது வாரியருடன் வந்திருந்தார். அவர் கொடுத்த மனுவில் தனக்கு திலீப் ஜீவனாம்சம் எதுவும் தரவேண்டாம். மகள் மீனாட்சி யாருடன் இருக்க வேண்டும் என்பதை மகளே முடிவு செய்து கொள்ளட்டும். திலீப்புடன் விவாகரத்து செய்து கொள்ள நானும் ஒப்புக்கொள்கிறேன், என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இதன் மீதான அடுத்த விசாரணையை 6 மாதம் கழித்து வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். அவர்களை நிருபர்கள் பேட்டி எடுக்க முயற்சித்த போது இருவரும் பதில் அளிக்க மறுத்து காரில் ஏறி சென்றனர். மஞ்சு வாரியர் காரில் ஏறிய போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதனை கைக்குட்டையால் துடைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து பேட்டியளித்த திலீப்பின் வழக்கறிஞர், "திலீப்பும் மஞ்சுவும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துள்ளதாகவும், அதன்படி சொத்துகள் பிரித்துக் கொள்ளப்படும்" என்றும் தெரிவித்தார்.

 

ரூ 90 கோடிக்கு விலைபோன ராஜேஷ் கன்னாவின் மும்பை பங்களா!

மும்பை: பாலிவுட்டின் காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட மறைந்த ராஜேஷ் கன்னாவின் மும்பை பங்களா ரூ 90 கோடிக்கு விலை போனது.

இந்தி பட உலகின் காதல் மன்னன், வசூல் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ராஜேஷ் கண்ணா. 1960, 1970 மற்றும் 80-களில் அவர் நடித்த பல படங்கள் வெற்றிக் கொடி நாட்டின.

ரூ 90 கோடிக்கு விலைபோன ராஜேஷ் கன்னாவின் மும்பை பங்களா!

1973-ல் அன்றைக்கு முன்னணியில் இருந்த நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முதன் முதல் அதிக சம்பளம் வாங்கிய நடிகரும் ராஜேஷ் கன்னாதான். ஒரு கட்டத்தில் வயது காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனாலும் பின்னர் சில படங்களில் நடித்தார். கடந்த 2012-ல் தனது 69-வது வயதில் மரணம் அடைந்தார்.

ராஜேஷ் கன்னாவுக்கு மும்பை கார்ட்டர் ரோட்டில் 603 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட பங்களா உள்ளது. ஆசீர்வாத் என்றழைக்கப்பட்ட அந்த பங்களா பாலிவுட்டில் மிகவும் பிரபலமானது.

கடற்கரை அருகில் அமைந்துள்ள இந்த வீட்டை விற்பனை செய்ய இரு மகள்களும் முடிவு செய்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதை வாங்க மும்பையில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மோதினர். இறுதியில் தொழில் அதிபர் ஷாஜி கிரன் ஷெட்டி ரூ.90 கோடி கொடுத்து ராஜேஷ் கண்ணா பங்களாவை வாங்கினார்.

 

தன் பட ஹீரோயின் மீது கடுப்பில் இருக்கும் சிங்கம்

சென்னை: பயப்படாதவன் பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஹீரோயின் வராததால் அவர் மீது சிங்கம் கோபத்தில் உள்ளாராம்.

பயப்படாதவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு ஹீரோ சிங்கம் உள்பட அனைவரும் வந்திருந்தனர். ஆனால் ஹீரோயின் வரவில்லை. அவர் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.

பின்னர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியவில்லை என்று ஹீரோயின் தெரிவித்திருந்தார். ஆனால் விழா நடந்த மறுநாள் டிவி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுடன், ஆந்திராவில் நடந்த ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.

இதை அறிந்த சிங்கத்திற்கு நடிகை மீது கோபமாம். சிங்கம் படத்தை அடுத்து தற்போது தளபதி மற்றும் சீயான் படங்களிலும் நடிகை பிஸியாக உள்ளார்.

இந்த படங்கள் ஹிட்டானால் டோலிவுட்டை போன்றே கோலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வர திட்டமிட்டுள்ளாராம்.

அப்படின்னா, இன்னும் உஷாரா இருக்கணுமில்ல!

 

தளபதி பட்டத்தைக் குறிவைக்கும் இன்னொரு ஹீரோ!

எந்த ஸ்டாராக இருந்தாலும் அவருக்கு ஒரு பட்டத்தை கொடுக்கிற வழக்கம் ரசிகர்கள் மத்தியில் தொடர்கிறது. இதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரசிகர்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் பல நட்சத்திரங்கள்.

அப்படித்தான் புரட்சி தளபதி ஆனார் விஷால்.. சின்ன தளபதி ஆனார் பரத். ஆனால் சென்டிமென்டுக்காக பட்டங்களைத் துறக்கும் நாயகர்களும் உண்டு. அது தனி கதை.

ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் பட்டத்தை எப்படா பறிப்பது என்று நேரம் பார்த்து வேலை பார்ப்பவர்களும் உண்டு. அது தனிப் பெருங்கதை!!

தளபதி பட்டத்தைக் குறிவைக்கும் இன்னொரு ஹீரோ!

ஆர்கே அந்த மாதிரி வேலைகளில் ஆர்வம் காட்டுபவர் அல்ல. அவர் உலகம் தனி.

இருந்தாலும், அவருக்கும் ஒரு பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறகார்கள். அதுதான் மக்கள் தளபதி!

அவர் இப்போது நடித்து வரும் என் வழி தனி வழி படத்தின் தலைப்பில் அவருக்கு இந்த மக்கள் தளபதி என்ற பட்டத்தைத் தந்திருக்கிறார்களாம்.

ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தில் மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதற்க்கு முன்பு ஷாஜி கைலாஷ், ஆர் கே இணைந்த எல்லாம் அவன் செயல் பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

தற்பொழுது என் வழி தனி வழி யில் ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அத்தனை அம்சங்களும் ஆர்கேவுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது என்கிறார் இயக்குநர்.

இப்படியெல்லாம் பட்டம் கொடுக்க ஆரம்பித்தால், வேறு ஏதோ திட்டம் இருக்கு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. போகிற திசை அறிவாலயம் பக்கமா? லாயிட்ஸ் ரோடு பக்கமா? இல்லை தனி ஆவர்த்தனமா என்பதை முன் கூட்டியே சொல்லிவிட்டால், முதல் நியூசாக போடலாமே ஆர்கே சார்?!

 

நாப்பது வருஷம்.. நான் இல்லேன்னு வச்சிக்கங்க.. எப்படி இருந்திருக்கும்? - இளையராஜா

கூடலூர்: இந்த நாற்பதாண்டு காலம் நான் இல்லாமல் போயிருந்தால் இசையுலகம் எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார் இசைஞானி இளையராஜா.

கூடலூரில் உள்ள தனது லோயர் கேம்ப் இல்லத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் இளையராஜா இந்த கேள்வியை எழுப்பிய போது, இசை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும் என்று ரசிகர்கள் பதில் கூறினர். ஆனால் அதற்கு இளையராஜா சொன்ன பதில் வேறாக இருந்தது.

நாப்பது வருஷம்.. நான் இல்லேன்னு வச்சிக்கங்க.. எப்படி இருந்திருக்கும்? - இளையராஜா

அவரது பேச்சின் ஒரு பகுதி:

நல்ல இசை என்பது ஒரு மனிதனைப் பண்படுத்த வேண்டும். மனதை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.

எத்தனை படங்களில் கத்தியும் ரத்தமும் வன்முறையும் கொப்பளித்தாலும், என் சப்த ஸ்வரம் அதை சரிப்படுத்தும். அந்த வன்முறையைக் குறைத்து நல்ல மனநிலையுடன் உங்களை அந்தப் படத்துக்குள் இழுத்துப் போவதுதான் அந்த இசை.

ஆனால் நான் ஒரு சூழலுக்குரிய இசையை உருவாக்கும் பொழுது அந்த மனநிலையில் போடுவதில்லை. அது தானாக வருவது. சிந்தித்து மண்டையை உடைத்துக் கொண்டு, எதிலிருந்து திருடலாம் என்று யோசித்துப் போடப்படுவதல்ல என் இசை.

உங்க பாட்டைக் கேட்காம என்னால தூங்கவே முடியாது சார்ங்றான்... அதே போல, காலையில் உங்க பாடல்தான் சார் எங்களை எழுப்புதுங்கறாங்க.. அதே போல இங்கே பேசிய அத்தனை அன்பர்களும் அவங்களோட வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்ச இந்த இசை பத்தி சொன்னாங்க..

இது யார்ன்னால சாத்தியம்.. இந்த நாற்பது வருஷ இசை வந்து... நான் இல்லேன்னு வச்சுக்கங்க... எம்ப்டியா, ஒரு சூனியமா இருந்திருக்காது..? இதை யார் ஏற்படுத்துனது... என்னை இந்த உலகத்துக்குள்ள போடா கிடடா நாயேன்னு கடவுள் என்ன இசை உலகத்துக்குள்ளயே இருக்க வச்சிட்டான். நல்ல வேளை நான் வெளி உலகத்தில் இல்ல! சப்தஸ்வரங்களுக்குள்ளேயும், இப்படிப் பாடு, அப்படிப் பாடு, இப்படி வாசி-ன்னும் என்னை இசை உலகத்தோடேயே இருக்க வச்சிட்டான்!!"

-இவ்வாறு இளையராஜா பேசினார்.


 

ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?

சென்னை: புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டூடியோ அமைந்துள்ள இடத்தை ஸ்ரீராம் குரூப்பிற்கு ரூ.400 கோடிக்கு விற்பனை செய்ய ஏ.வி.மெய்யப்பனின் மகனான பாலசுப்பிரமணியத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை வட பழனியிலுள்ளது ஏ.வி.எம். ஸ்டூடியோ. ஏ.வி.மெய்யப்பனால் அமைக்கப்பட்டது. சிவாஜி கணேசன், கமலஹாசன் உட்பட பல நட்சத்திரங்களை தமிழ் திரையுலகத்திற்கு தந்தது ஏ.வி.எம். ஸ்டூடியோ. 6.5 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படும் ஸ்டூடியோவின் சந்தை மதிப்பு தற்போது எகிறியுள்ளது.

ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?

ஸ்டூடியோ அமைந்துள்ள பகுதியில் 7 லட்சம் சதுர அடி பரப்பில் அடுக்குமாடு குடியிருப்பு கட்ட ஸ்ரீராம் புராப்பர்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஏ.வி.எம். ஸ்டூடியோவை விலைக்கு வாங்க ரூ.400 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.வி.எம். ஸ்டூடியோவின் பாதி நிலத்தை ஸ்ரீராம் புராப்பர்டீஸ் தனித்தும், எஞ்சிய பாதி நிலத்தை மெய்யப்பனுடன் சேர்ந்தும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முதல்கட்டமாக ரூ.180 கோடி பரிவர்த்தனை நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட டீலுக்கான கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரிவர்த்தனை காரணமாக ஸ்டூடியோவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஸ்டூடியோவின் கூட்டாளிகளில் ஒருவராக ஸ்ரீராம் புராப்பர்டீஸ் மாறும் என்றும் தெரிகிறது. இந்த தகவல் குறித்து கருத்து கூற ஸ்ரீராம் புராப்பர்டீஸ் மறுத்த நிலையில், பாலசுப்பிரமணியன் வெளியூர் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.

 

பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடிக்கும் மூச்!

இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்துக்கு மூச் என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் ஜெயராஜ்.

பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினுபாரதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

நிதின் - நிஷா கோஷல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் அபி - பியா எனும் இரு குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடிக்கும் மூச்!

நடிகராக ஜெயராஜுக்கு இது இரண்டாவது படம். ஏற்கெனவே கத்துக்குட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயராஜ். மூச் படத்தில் மனோதத்துவ டாக்டராக அவர் வருகிறார்.

திகில் படமாக உருவாகி வரும் மூச் பற்றி இயக்குனர் கூறுகையில், "இரு குழந்தைகளை மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும்-பேய்க்கும் இடையே திகிலோடு நிகழும் பாசப்போராட்டமே ‘மூச்'.

திரில்லர் படமாக இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். நகைச்சுவையும் படத்தில் இருக்கும். இதன் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திக்குப்பம் என்ற இடத்திலும், சென்னையிலும் மொத்தம் 50 நாட்கள் படமாக்கியுள்ளோம்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்," என்றார்.

இப்படத்திற்கு நிதின் கார்த்திக் என்பவர் இசையமைக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பி புரொடக்ஷன்ஸ் சார்பாக பூபாலன் தயாரித்துள்ளார்.